பாக்கிஸ்தானிலிருந்து கடல்வழியாகப் பயணித்து மும்பைக்கு வந்துசேர்ந்து மும்பையில் பேயாட்டம் போட்ட 10 பயங்கரவாதிகளுள் 9 பேரை நமது கமாண்டோ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். எஞ்சிய ஒருவனான அஜ்மல் கசாப், உயிருடன் பிடிக்கப்பட்டு, மும்பை ஆர்தர் சாலையிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டான். அந்தச் சிறை வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டாண்டு காலம் விசாரணை நடைபெற்றது. தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்தவன், ஒருமுறை (டிசம்பர் 2009) "சினிமாவில் சேர்ந்து நடிப்பதற்காக மும்பைக்கு வந்தேன்" என்று நீதிபதிகளை முட்டாளாக்க முயன்றான். கடந்த 6.5.2010இல் அவனுக்கு மரண தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்துக்கு அஜ்மல் கசாப் செய்த முறையீட்டைத் தள்ளுபடி செய்ததோடு, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவான மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்து, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் அஜ்மல் கசாப் முறையீடு செய்திருந்தான். அவனுக்கான மரண தண்டனை உத்தரவை நிறுத்தி வைத்திருந்த உச்ச நீதிமன்றம் அவனது வழக்கு விசாரணையை 25.4.2012இல் முடித்துக்கொண்டு இறுதித் தீர்ப்பை வெளியிடாமல் தள்ளி வைத்திருந்தது.
அஜ்மல் கசாப்பின் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளான அப்தப் ஆலம் மற்றும் சி.கே. பிரசாத் ஆகிய இருவரும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை உத்தரவை உறுதி செய்து 29.8.2012இல் தீர்ப்பு வெளியிட்டனர்.
அந்த இறுதித் தீர்ப்பு வெளியான அன்றே ஊடகங்களுக்குப் பேட்டியளித்த உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, "குடியரசுத் தலைவருக்கு அஜ்மல் கசாப் கருணை கோரி மனு அனுப்பினால் முடிந்தவரை வெகு குறுகிய காலத்தில் (மறுதலித்து) பதிலளிப்போம்" என்று குடியரசுத் தலைவரது குரலாகவே கூறியிருக்கின்றார். "தண்டனையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.
"அஜ்மல் கசாபுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டும்" என்று இந்திய முஸ்லிம் எவரும் குரல் கொடுக்கமாட்டார். இந்த மிருகத்தைப் பிடித்த கையோடு துரித விசாரணை மேற்கொண்டு, நடுவீதியில் வைத்துத் தலையை வெட்டியிருந்தால்,
- மும்பை ஆர்தர் சாலை சிறைக்கான சிறப்புப் பாதுகாப்பு, அரசு நியமித்த சிறப்பு வழக்கறிஞர், நீதித்துறை அலுவலர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கான சிறப்புப் பாதுகாப்புச் செலவினங்கள் மட்டும் 43 கோடி ரூபாய்.
- நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆலோசனையின்படி கட்டப்பட்ட சிறப்புச் சிறைக்கான செலவு 8 கோடி ரூபாய்.
- கைதி கசாபுக்கு மருத்துவம் செய்யப்படாத ஜே ஜே மருத்துவ மனையின் சிறப்பு வார்டுக்கான செலவு 1.5 கோடி ரூபாய்.
- சிறையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனங்களுக்கு 1 கோடி ரூபாய்.
- நீதிமன்றத்துக்கான சில்லரைச் செலவுகள் 50 லட்சம் ரூபாய்.
ஆக மொத்தம் 53.5 கோடி ரூபாய் நாட்டுக்காவது மிச்சமாகியிருக்கும்.
அப்பாவிப் பொதுமக்களை எந்த விதக் காரணமும் இன்றி சரமாரியாகச் சுட்டுக் கொன்ற அந்தக் கயவனுக்குத் தூக்குத் தண்டனை சரியே!
அப்பாவிப் பொதுமக்களை எந்த விதக் காரணமும் இன்றி சரமாரியாகச் சுட்டுக் கொன்ற அந்தக் கயவனுக்குத் தூக்குத் தண்டனை சரியே!
ஆனால், அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுள் முக்கியமானதான "இந்தியாவின் மீது போர் தொடுத்தான்" எனும் குற்றச்சாட்டுக்கு அவன் உரியவனல்லன்.
மும்பைத் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு, பத்திரமாக அமெரிக்காவுக்குப் பறந்த டேவிட் ஹெட்லி அங்குக் கைது செய்யப்பட்டபோது எஃப் பி ஐயிடம் அளித்த வாக்குமூலம், "நான் இந்தியாவின் மீது போர் தொடுத்தது எப்படி? How I waged war on India" எனும் தலைப்பில் ஸீ நியூஸில் இரு பாகங்களாக வெளியானது. அதில் அவன் தெளிவாகக் கூறுகிறான்: "நான் LeT அமைப்பின் இயக்குநர்களுள் ஒருவனும் இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட போரில் பங்காற்றியவனும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை - There is no doubt I am an LeT operative who was a part of the conspiracy to wage war against India"
அந்நிய நாட்டிலிருந்து நம் நாட்டுக்குள் ஊடுருவிய பயங்கரவாதக் குழுவினருள் அஜ்மல் கசாப் தனியோர் ஆளாக மட்டும் 6 அப்பாவிகளைக் கொன்றதாகத் தகவல் வெளியானது. தெளிவான எண்ணிக்கையான மொத்த அப்பாவி இந்தியர்கள் 166 பேரையும் அஜ்மல் கசாப்பே சுட்டுக் கொன்றதாக வைத்துக் கொள்வோம். அவனை ஒரு தடவை தூக்கிலிட்டுக் கொன்றால் 2,500 அப்பாவிகளை குஜராத்தில் கொன்று குவித்த நரேந்திர மோடியை எத்தனை தடவை தூக்கிலிடுவது?
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment