Saturday, March 30, 2013

இஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள்வது?தற்காலத்தில் இஸ்லாமிய விரோத வலைத் (Anti- Islamic sites) தளங்கள் தாராளமாக மலிந்துவிட்டன. இஸ்லாமிய விரோத பிரசாரம் என்பது இன்று நேற்று துவங்கியதொன்றன்று, இஸ்லாம் தோன்றிய காலம் முதல் இந்த செயற்பாடுகளும் துவங்கிவிட்டன. ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இந்த இஸ்லாமிய விரோத சக்திகளின் செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
சாதாரண ஈமானிய உணர்வு உள்ளவனே கொதித்தெழுகின்ற அளவுக்கு இவர்களது செயற்பாடுகள் வியாபித்து விட்டன. அந்த வகையில் தற்காலத்தில் சமூக வலைத் தளங்களில் (குறிப்பாக Facebook) இத்தகைய இஸ்லாமிய விரோத பக்கங்களைத் (Anti- Islamic Pages) தாராளமாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
ஒரு இஸ்லாமிய உணர்வுள்ளவனாக இத்தகைய இஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள முடியும்? என்பது பற்றி சில ஆலோசனைகளை இங்கு முன்வைக்க முனைகிறேன்.
  1. நிதானம் தவறாதீர்கள் : 
இஸ்லாமிய விரோத தளங்களைப் பார்க்கும் போது எந்த ஒரு முஸ்லிமுக்கும் கோபம் வருவது இயல்பு. அவ்வாறான உணர்வு கட்டாயம் வர வேண்டும், அது நல்லதே! ஆனாலும் அந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். சாதாரணமாக Cool ஆக இருக்க வேண்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையான வீரன் என கூறியிருப்பதை ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன.
உணர்ச்சிவசப்பட்டு அடுத்த மதத்தைச் சார்ந்த கடவுள்களையோ அல்லது அவர்களது மதக் கோட்பாடுகளையோ நிந்திப்பது இஸ்லாத்தில் எந்த விதத்திலும் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல, இவை கடுமையாக தடை செய்யப்பட்ட அணுகுமுறைகளாகும். எனவே இத்தகைய வலைத் தளங்களுடன் தொடர்புபடும்போது பொறுமை என்பது அவசியமானதாகும்.
  02. உரிய தயார்படுத்தலின்றி பதிலளிக்காதீர் : 
நம்மில் சிலர் கண்மூடித்தனமாக இத்தகைய வலைத்தளங்களில் வரும் பொய்யான பிரசாரங்களுக்கு ஆயத்தங்கள் ஏதும் இன்றி பதில் அளிக்க முற்படுகின்றார்கள். இதுவும் ஒரு தப்பான அணுகு முறையாகும். ஏனெனில் இத்தகைய இஸ்லாமிய விரோத வலைத் தளங்களை கொண்டு நடாத்துபவர்கள் பூரண அறிவுடனேயே குறிப்பிட்ட பதிவுகளை இடுகின்றார்கள். அவர்களுக்குத்தெரியும் தாம் பொய்யான பிரச்சாரம் தான் செய்கின்றோம் என்று. அவ்வாறிருக்க விரைவாக வரும் பதில்களுக்கு மறுமொழி கொடுப்பதற்கும் தயாராக இருப்பார்கள்.
எனவேதான் இடும் பதில் கருத்து தொடர்ந்தும் வாதாடுவதற்கு ஏற்றாற் போன்று இருக்க வேண்டும். சரியாக தயாராகி பதில் வழங்க வேண்டும். இல்லையெனில் முதல் பதிலிலேயே தோற்றுவிட வேண்டி வரும். இவ்வாறு நாம் தோற்றுப்போவதை முழு இஸ்லாமிய சமூகத்தினதும் தோல்வி என அவர்கள் வர்ணிக்கவும் தவறமாட்டார்கள். எனவே ஒழுங்கான ஆயத்தமில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு இத்தகைய இஸ்லாமிய விரோத தளங்களுக்கு பதில் அளிப்பது தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகும்.
  03. தடை செய்ய முனையாதீர் :   
குறிப்பிட்ட இஸ்லாமிய விரோத பக்கங்களை Block, or Report பண்ண முயற்சிப்பது காலத்தை வீணடிக்கும் செயலாகும். தொழில் நுட்ப வளர்ச்சியுடன் புதிய இணைய பக்கங்களை உருவாக்குவது மிகவும் இலகுவான விடயமாகும், எனவே Block, Report பண்ணுவதால் எந்த பலனையும் நாம் அடைந்து விடப்போவதில்லை.
  04. இலவச விளம்பரம் வழங்காதீர் :  
குறிப்பிட்ட இஸ்லாமிய விரோத தளங்களை அடுத்த நண்பர்களுக்கு பகிர்வதிலிருந்து (Share) கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஆனாலும் நம்மில் சிலர் குறிப்பிட்ட தளங்களை அடுத்த நண்பர்கயோடு பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நோக்கம் இதனைத் தெரியப்படுத்தி குறித்த தளங்களுக்கு எதிராக அவர்களை செயற்படத் தூண்டுவதாக இருந்தாலும் மறைமுகமாக குறித்த தளத்துக்கு நாம் செய்யும் இலவச விளம்பரமாக மாறிவிடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே இத்தகைய வலைத் தளங்கள் தொடர்பில் இயன்றளவு அடுத்தவர்களுக்கு தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை தவிர்ந்து கொள்வது சிறந்ததொரு அணுகுமுறையாகும்.05. புதிய தளங்களை தொடங்குவோம்:
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும், அது போல் இத்தகையை இஸ்லாமிய விரோத வலைத்தளங்களுக்கு எதிராக நாமும் தளங்களை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு மாற்றமாக இஸ்லாத்தின் அழகிய முன்மாதிரிகளையும் அதன் சிறப்பியல்புகளையும் வெளிக்காட்டுபவையாக நமது தளங்கள் அமைய வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட இஸ்லாமிய விரோத தளங்களில் பரப்பப்பட்டு வருகின்ற பொய்யான தகவல்களுக்கான சிறந்த விளக்கத்தை அளிக்கக்கூடியதாகவும் நமது தளங்கள் அமைய வேண்டும்.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் இஸ்லாமிய விரோத தளங்களை தரிசித்து விட்டு ஒரு குழப்பமான நிலையில் இருக்கும் அந்நிய சகோதரர்களுக்கு ஒரு சிறந்த தெளிவினை வழங்க துணை புரியும். அது மட்டுமன்றி எமது சகோதரர்களுக்கும் இத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு சிறந்த அறிவினை வழங்கவும் முடியும்.வலைத்தங்களையோ, Facebook பக்கங்களையோ ஆரம்பிப்பதில் சிரமங்கள் இருப்பின் குறைந்த பட்சம் இது தொடர்பான ஆக்கங்களை தயாரித்து நடைமுறையில் இருக்கின்ற இஸ்லாமிய தளங்களுக்கு வழங்கலாம்.
அடுத்தவர்கள் செய்யும் வரை பார்த்துக்கொண்டிராமல் நாங்களே இந்தப் பணியைத் தொடக்கி வைப்போம்.இறுதியாகக் குறிப்பிட்டுருக்கும் அணுகுமுறையே இஸ்லாமிய விரோத தளங்களுக்கு எதிராக எங்களால் செய்ய முடியுமான மிகச் சிறந்த பதிலடியாகும்.மேலே குறிப்பிட்டுள்ள சகல நடைமுறைகளும் இஸ்லாமிய விரோத தளங்கள் பிரபல்யம் அடைவதையும்,வளர்ச்சி அடைவதையும் நிச்சயம் தடுக்கும், இன்ஷா அல்லாஹ்!   source: www.vidivelli.lk


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.