Sunday, May 20, 2018

இல்லறத்தின் இயக்குனர்கள் ஆண்கள்! இல்லறத்தின் இதயங்கள் பெண்கள்!

Image result for இயற்கையும் இல்லறமும்!
https://marhum-muslim.blogspot.in/
இல்லறத்தின்   இயக்குனர்கள் ஆண்கள்! இல்லறத்தின்    இதயங்கள் பெண்கள்!
[ வாழ்க்கை என்பது நிலவு! சிலசமயம் இருட்டும், சிலசமயம் முழுமையான ஒளியைத்தரும். இருட்டைக்கண்டு இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டால் வாழ்க்கையில் முழுமையான ஒளியைக் காணமுடியாது.
வாழ்க்கை என்பது ஒரு இருட்டறை! அதில் அன்பும், காதலும் இரண்டு ஒளி விளக்குகள். இந்த விளக்குகள் இல்லையானால் அந்த வாழ்க்கையில் பயன் இல்லை, ஒளியில்லை.
வாழ்க்கை என்பது விளைநிலமாகும். மண்வளத்தையும், அது பராமறிக்கப்படும் விதத்தைப் பொருத்தே பயிர்கள் வளர்ந்து பலன் தருவதுபோல் மணவளத்தைப் பொருத்தே இன்பம் உண்டாகிறது.
வாழ்க்கை என்பது இரண்டு கயிறுகளால் இணைத்துக் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ள ஊஞ்சல். அது தானாக ஆடாது. நாம் உந்தித்தள்ளினால்தான் ஆடும். அதிலே ஆடும்போது நம் உள்ளமெல்லாம் இன்ப ஊஞ்சலாடும்.]
Image result for இயற்கையும் இல்லறமும்!இல்லறத்தின் இயக்குனர்கள் ஆண்கள்! இல்லறத்தின் இதயங்கள் பெண்கள்!
மணம்புரிந்து மாறாத இன்பம் காணத்துடிக்கும் மணமக்களே!
வாழ்க்கை என்பது வசந்தகாலப் பூங்கா. அன்பிலே பிறந்து அறத்தால் வளர்ந்து, பண்பிலே சிறந்து பாரில் உயர்ந்தது இல்லற வாழ்க்கை. இந்த இல்வாழ்க்கை வானிலும் விரிந்தது, தேனிலும் இனிமை மிக்கது, தென்றலிலும் சுகமானது, நிலவினும் குளிர்ச்சியானது, நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பது.
இல்லறத்தின் தலைவர்கள் ஆண்கள் - இல்லறத்தின் இதயங்கள் பெண்கள்.
தன்னந்தனியாக ஆடிக்கொண்டிருந்த முல்லைக்கொடிக்கு ஒருகோல். நேற்றுவரை தனித்திருந்த கன்னிக்கு ஒரு கணவன்! கொடியைத் தாங்கும் கோலுக்கு ஒரு இன்பம்! குமரியைத் தழுவும் கணவனுக்கோ பேரின்பம்!
சூழ்ந்து வீசிக்கொண்டிருக்கும் இனிய காற்றிலே ஆடிக்கொண்டிருக்கும் நறுமலரைப் பாருங்கள். அந்த நறுமலர் இனிய மணத்தை அள்ளி வீசுகிறதல்லவா! அந்த நறுமணந்தான் இல்லற வாழ்க்கையின் இனிய மணம்.
பரந்து விரிந்து கிடக்கும் நீலப்பெருங்கடலிலே, பேரிரைச்சலிட்டுக்கொண்டு பொங்கி எழும் அலைகள், அந்தப் பேரலைகள் கரையைக் கண்டதும் அமைதியாகச் சென்றவிடுகிறதல்லவா! அந்த அமைதி தான் அடுக்கடுக்காகத் துன்பங்கள் ஆர்ப்பரித்து வந்தாலும் அதை அடக்கி ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லற வாழ்க்கைக்கு உண்டு என்பதைக்கூறும் பேரமைதியாகும்.
Image result for இயற்கையும் இல்லறமும்!உயர்ந்த மலையிலிருந்து உருவெடுத்து உருண்டோடி வரும் நீர்வீழ்ச்சியைப் பாருங்கள். எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் தெளிந்த நீரோடையாகச் செல்கிறதல்லவா! அந்தத் தெளிவுதான் மனிதன் எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் கலங்கக்கூடாது என்பதை உணர்ந்து கொள்வது இல்லற வாழ்க்கையின் தெளிவாகும்.
வானமண்டலத்திலிருக்கும் மேகக்கூட்டங்களைப் பாருங்கள்! அவை ஒன்றோடு ஒன்று இணையும்போது ஏற்படுகின்ற இடியோசையையும் கேளுங்கள். இன்பமும் துன்பமும் ஒன்றோடொன்று மோதும்போது ஏற்படுகின்ற நிலையை உங்களுக்கு உணர்த்தும். அதைக்கண்டு கலங்கிவிடாதீர்கள். இடிஇடித்து மழை பெய்யும் என்பார்கள். ‘துன்பம் வந்தல் துணிந்துநில், இன்பம் பிறக்கும்’ என்பதைத்தான் இது உணர்த்துகிறது.
வளைந்து வளைந்து தோன்றும் மலைத்தொடர்கள், நெளிந்து நெளிந்து செல்லும் சிற்றாருகள், வானமண்டலத்தில் மிதந்து செல்லும் மேகக்கூட்டங்கள், வண்ண ஒளியை வாரி வாரி வழங்கும் நிலவு, கூடுகின்ற மேகம், கொட்டுக்கொட்டென்று கொட்டுகின்ற மழை, பூங்காவில் பூத்துப்பூத்துச் சொரியும் மலர்கள், பளிங்குப் பாறைகள், பாலைவனக் காட்சிகள், இருண்ட இரவுகள், இருளகற்றும் ஞாயிறு, இவையெல்லாம் வாழ்க்கையின் தத்துவங்களை மனிதர்களுக்கு வாரி வாரி வழங்குவதை கவனியுங்கள்.
உயர்ந்த மலைபோல் உள்ளம் வேண்டும். நெளிந்து செல்லும் சிற்றருவிபோல் அவ்வுள்ளம் தெளிவோடு இருக்க வேண்டும். தெளிவோடு இருக்கும் உள்ளத்தில் மேகக்கூட்டம்போல் கருணை தோன்ற வேண்டும். கருணை பிறரை வாழ வைக்கத் தொண்டு என்னும் மழையைப் பெய்யவேண்டும்.
Image result for இயற்கையும் இல்லறமும்!தொண்டு செய்யும் உள்ளத்தில் காரிருளை விரட்டும் வண்ணநிலவைப்போல் ஒளி மிகுந்திருக்க வேண்டும். ஒளிசிந்தும் உள்ளம் பிறருக்கும் வாழவழி காட்ட வேண்டும். இதனால் பாலைவனம் போன்றிருக்கும் பலர் உள்ளத்தில் பசுமை உண்டாக்கப் பாடுபட வேண்டும். கயவர்களுக்குப் பாறையாகத் தோன்றும் இல்லற வாழ்க்கை தம்பதிகளுக்கு கவினுறுசோலையாகத் திகழ வேண்டும்.
இதைத்தான் இயற்கை மனிதர்களுக்கு உணர்த்தி நிற்கிறது. இன்பத்திற்கும் துன்பத்திற்கும், காதலுக்கும் மோதலுக்கும், தன்னலத்துக்கும் பொதுநலத்துக்கும், செல்வத்துக்கும் வறுமைக்கும், முதலுக்கும் முடிவுக்கும் இல்லறத்துக்கும் துறவறத்துக்கும், இயற்கை கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம் ஏராளம்! பாடத்தை நன்கு கற்றுத் தெளிந்து விடை எழுதிவிட்டால் வாழ்க்கைத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம்.
நல்ல விதைகளை ஊன்றினால் நல்ல மரங்கள் தோன்றி நல்ல கனிகளைத் தரும். நல்ல எண்ணங்களை உருவாக்கினால் நலமான வாழ்க்கை அமைந்து இன்பத்தைத் தரும்.
Image result for இயற்கையும் இல்லறமும்!நல்ல வாழ்க்கையை உருவாக்குவதும் மனிதர்கள்தான். குருவிக்கூட்டைப்போல் பிய்த்து எறிபவர்களும் மனிதர்கள்தான். மனிதர்கள் அறிவுக்கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது அவர்களின் அகத்தில் துன்பம் பேயாட்டம் போடும். தூங்கிவழிந்து கொண்டிருக்கும்போது துன்பம் அவர்களை மூட்டைப்பூச்சிபோல் துன்புறுத்தும். மூடிய கண்ணைத் திறந்து அகன்ற விழிகளால் அறிவை அரவணைத்து சோர்வை உதறித் தள்ளிவிட்டால் துன்பங்கள் எங்கோ பறந்துவிடும்.
வாழ்க்கை என்பது நிலவு! சிலசமயம் இருட்டும், சிலசமயம் முழுமையான ஒளியைத்தரும். இருட்டைக்கண்டு இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டால் வாழ்க்கையில் முழுமையான ஒளியைக் காணமுடியாது.
வாழ்க்கை என்பது ஒரு இருட்டறை! அதில் அன்பும், காதலும் இரண்டு ஒளி விளக்குகள். இந்த விளக்குகள் இல்லையானால் அந்த வாழ்க்கையில் பயன் இல்லை, ஒளியில்லை.
வாழ்க்கை என்பது விளைநிலமாகும். மண்வளத்தையும், அது பராமறிக்கப்படும் விதத்தைப் பொருத்தே பயிர்கள் வளர்ந்து பலன் தருவதுபோல் மணவளத்தைப் பொருத்தே இன்பம் உண்டாகிறது.
வாழ்க்கை என்பது இரண்டு கயிறுகளால் இணைத்துக் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ள ஊஞ்சல். அது தானாக ஆடாது. நாம் உந்தித்தள்ளினால்தான் ஆடும். அதிலே ஆடும்போது நம் உள்ளமெல்லாம் இன்ப ஊஞ்சலாடும்.
www.nidur.info

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::