Friday, September 20, 2013

முன்னாள் முதல்வரும் -முஸ்லீம்களும்...!

கருணாநிதிக்கு பள்ளிச்சிறுவனாக இருந்த போதே சக மாணவர்களைக் கூட்டி வைத்து நாத்திகக் கருத்துக்களை விவாதிப்பதில் அலாதி ருசி. வறுமையின் வாட்டம் அவரை முடக்கிப் போட்டுவிடவில்லை. படிக்கும் காலத்திலேயே முரசொலிப் பத்திரிகையை கையெழுத்துப் பிரதியாக எழுதி நடத்தும் உழைப்பு மற்றும் ஆற்றலின் வளர்ச்சி பின்னர் தமிழகத்தை பலமுறை ஆளும் நிலைக்கு அவரை உயர்த்தியது.
முன்னாள் முதல்வரும் -முஸ்லீம்களும்...!கருணை ஜமால் என்ற பெயருடைய திருவாரூர் நண்பரை துணைக்கு சேர்த்துக் கொண்டு தலையில் முரசொலி பத்திரிக்கை கட்டுகளை ஆற்றை நீந்திக் கடந்த கருணாநிதிக்கு வாழ்க்கைக்  கடலில் எதிர்நீச்சல் போடுவது கஷ்டமாகிவிடவில்லை. 
இங்கே குறிப்பிட்ட கருணை ஜமால் என்பவர் திருவாரூரில் கருணாநிதி அச்சகம் என்ற பெயரில் நடத்தியவர். கருணாநிதியுடன் இளமைக்காலம் அல்ல பால்ய காலம்தொட்டே பாசத்துடன் பழகியவர். கருணை- கருணா இந்த சொற்களின் தாக்கத்தை அன்பர்கள் சிந்தித்து அவர்களின் உறவின் அல்லது நட்பின் வலிமையை அறியலாம்.
இந்திராகாந்தியின் ஆட்சி அறிமுகப் படுத்திய அவசரகால அடக்குமுறை நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே வராத கருணாநிதி கருணை ஜமால் வீட்டுத்திருமனத்துக்கு வந்தது மணமக்களை வாழ்த்திய கருணாநிதி வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் திரும்பிச்சென்றார்.
இங்கே கருணை ஜமால் அவர்களுடைய பெயரை குறிப்பிடக் காரணம், இன்று கருணாநிதி இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் இவரை வடிவமைத்த இவருடைய உயர்வுக்கு வித்திட்ட இவருக்கு உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து வளர்த்தவர்கள் பலர்.
இவர்களில் தம்பிக் கோட்டை கீழக்காடு ஆர். எம். எஸ். என்கிற சோமுத்தேவரிலிருந்து, அதிராம்பட்டினத்தின் அன்றே கோடீஸ்வர குடும்பத்தைச் சார்ந்த என். எஸ். இளங்கோவில் இருந்து, அன்பில் தர்மலிங்கத்தில் இருந்து பலரும் அடங்குவர். ஆனால் மரம்  வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பவன் மற்றவன் என்கிற முறையில்தான் கருணாநிதி வளரக் காரணமானவர்களும் அவர்களின் சந்ததியினரும் அந்த வளர்ச்சியின் பயனை அடைய முடியாத வலை வாழ்க்கை வலை அது பாச வலை.
மேடைப் பேச்சில் சோடை போகாமல், அல்லும் பகலும் அரசியலில் அதுவும் நாத்திகம் கலந்த அரசியலில்- சுயமரியாதை இயக்கம் சார்ந்த பிரச்சாரக்கூட்டங்களில் தனது நாட்டத்தை செலுத்தினார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் காரைக்காலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிராமண சமூகத்தினரைப் பற்றியும் அவர்களது கடவுள்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கோபம்  கொண்ட அந்த சமூகத்தார். ஆட்களை ஏவி கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டு இருந்தவரை வழிமறித்து வன்முறையாகத் தாக்கினர்.  கருணாநிதி இரத்த வெள்ளத்தில் மிதந்து உணர்வற்று விழுந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு விரைந்தது அடியாட்கள் கூட்டம்.
பகலவன் எழுவதற்கு வாழ்த்துக் கூறி பறவைகள் கீதம் பாடத்தொடங்கிய நேரத்தில் படைத்தவனின் பள்ளியிலில் இருந்து பாங்க்கொலி  கேட்டு பஜ்ர் தொழ வந்த முஸ்லிம்கள் சிலரின் காதுகளில் நடுஇரவில் சாக்கடையில் தூக்கிப் போடப்பட்ட கருணாநிதியின் முக்கல் முனகல் கேட்டது. மூச்சு மட்டும் ஓடிக கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம் பெருமக்கள் உடனே முனைப்புடன் செயல்பட்டு மருத்துவம் செய்து குளிப்பாட்டி உடைமாற்றி உணவளித்து உயிர் காப்பாற்றினர்.
காலையில் போட்ட இடத்தில் உடல் தேடி வந்த பிராமண அடியாட்கள் தவித்தனர். கருணாநிதி தப்பினாரா இல்லையா என்று சந்தேகம் கொண்டு அலசினர். ஆனால் கருணாநிதியோ காரைக்கால் முஸ்லிம்களால் தொப்பி, சால்வை ஆகியவை அணிவிக்கப்பட்டு பத்திரமாக பாண்டிச்சேரி கொண்டு போகப்பட்டு அங்கு வந்திருந்த பெரியாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அங்கிருந்து பெரியாரால் பத்திரிகையில் பணியாற்ற பின் ஈரோடு சென்றார்.
-முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc.,
  கண்ணதாசன்  vs   கருணாநிதி   
மு.க. பற்றி கண்ணதாசன் கூறிய மற்றொரு நிகழ்வு உண்டு. அதை நினைக்கும்போது எவ்வளவு திட்டமிட்டு ஒரு மனிதன் தன்னை முன்னிலைப் படுத்தி வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை அறியலாம்.
சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் வந்தது. திமுக மக்கள் மத்தியில் வளர்ந்து வந்த காலம். திமுக கூட்டங்களுக்கு எக்கச்சக்க கூட்டம். ஆதரவு. அந்த தேர்தலில் தி மு க பெற்ற வெற்றி திமுகவின் சரித்திரத்தில் முக்கியக் கட்டம். ஒரு வளர்ந்து வரும் கட்சி தலைநகரின் மாநகராட்சியைக் கைப்பற்றுவது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி/ நிகழ்ச்சி.ஊக்கம். ஊட்டம்.
திமுகவின் அனைத்துத் தலைவர்களும் மூலைக்கு மூலை ஊடியாடி/ ஓடியாடிச்சென்று பாடுபட்டு அந்த வெற்றிக் கனியப் பறித்தனர். முகவின் உழைப்பும் கணிசமானது.
மேயருக்கு பாராட்டுவிழா வெற்றிவிழா நடைபெற்றது.
அண்ணா பேசினார் - பேசும்போது ஒரு மோதிரத்தைக் கூட்டத்தினருக்குக் காட்டினார்.
"என் மனைவிக்குக் கூட தங்கம் வாங்குவதற்கு நான் இவ்வளவு சிரமப் பட்டது கிடையாது. அப்படி கடைகளில் ஏறிப்போய் இந்த ஒரு பவுன மோதிரத்தை வாங்கினேன். இந்த சென்னை மாநகராட்சியில் கழகத்தின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அருமைத்தம்பி கருணாநிதிக்கு உங்கள் சார்பாக இதனை சூட்டி மகிழ்வதில் பெருமைப் படுகிறேன்."
என்று அண்ணா பேசி மோதிரத்தை கருனாநிதியின் விரலில் அணிவித்தார். கூட்டம் கைதட்டி மகிழ்ந்தது.
மறுநாள் கோபத்துடன் அண்ணாவை சந்தித்தார் கண்ணதாசன்.
"என்ன வேடிக்கை அண்ணா? கருணாநிதி மட்டுமே உழைத்துப் பாடுபட்டு வெற்றிக்கனியைப் பறித்ததாக நீங்கள் மோதிரம் போட்டீர்கள்? மற்றவர்கள் எவரும் உழைக்க வில்லையா ?" என்று கேட்டார்.
அண்ணா நமுட்டு சிரிப்புடன் சொன்னார்.
"எல்லோரும் உழைத்தீர்கள். ஆனால் சொந்தக் காசில் மோதிரம் வாங்கித் தந்து கூட்டத்தில் பாராட்டி அணிவிக்கச்சொன்ன அறிவு கருணாநிதிக்கு மட்டும்தானே இருந்தது? நீயும் அதுபோல் ஒன்றை வாங்கித்தந்து இருந்தால் அணிவிப்பதில் எனக்கென்ன தயக்கம்" என்றாராம்.
எப்படி இருக்கிறது கதை?
  கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம்  vs  சுயநலம்! 
கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் அவரை எப்படி அரசியல் உச்சாநிக்கொம்புக்கு கொண்டு சென்றதோ, அதே கலைஞரின் குடும்ப பாசமும், குடும்ப அரசியலும் அவரின் அரசியலுக்கு அவ்வப்பொழுது சாட்டையடி கொடுக்கத்தான் செய்தது.
இருப்பினும் இன்றுவரை அவரின் நிர்வாகத்திறமை, மற்றும் ஞாபக சக்தி , தமிழகத்தை பொருத்தவரை வேறெந்த அரசியல் வாதிக்கும் இருந்ததாகத்தெரியவில்லை.
சுய நலம் இல்லை என்றால்
இவரைவிட ஒரு சிறந்த அரசியல் வாதி இந்தியாவிலேயே இல்லை எனலாம்
சுயநலமே ஒரு நடிகரிடம் தோற்க வைத்தது .
சுயநலமே ஒரு நடிகையிடம் தோற்க வைத்தது.
சுயநலமே ஒரு பண்பட்ட பெருந்தலைவரை (காம ராஜர் ) தோற்கடிக்க ஒரு மாணவனை நிற்க வைத்தது.
இவரைப்போல சிறந்த அரசியல்வாதியும் இல்லை.
இவரைப்போல சிறந்த சுயநலவாதியும் இல்லை.
-நேற்று! இன்று! நாளை! - 7, தொடரில் இருந்து ஒரு பகுதி.
source: http://adirainirubar.blogspot.in/2013/07/7.html


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.