Saturday, September 21, 2013

தமிழக - கேரள நட்பு!


  தமிழக - கேரள நட்பு!  ''சேரன் பிறன் என்று செந்தமிழ் சொன்னதா''? ''அன்னவன் நாட்டை அயல் நாடென்றதா?'' - கேரள நாடாண்ட மன்னன் சேரனை வேறு தேசத்தவன் என்று தமிழ் மொழி சொன்னதா? அவன் ஆண்ட பூமி கேரளாவை வேற்று நாடு என்றதா? பாடியிருக்கிறார் பாரதிதாசன்.
மண்ணில் வேலி. விண்ணில் வேலி. கடலில் வேலி. கரையில் வேலி. மலையில் வேலி. மனத்துள் வேலி. விஞ்ஞானம் ஏற்படுத்திய அஞ்ஞானம். மனிதம் நெம்புகோல் கொண்டு மனங்களுக்குள் தோண்டிய நிரப்பவியலா பள்ளங்கள்.
நிஜத்தில், ''முற்றத்து வேம்பின் முறுக்கிப் பிணைந்த வேர்கள்'' போல் தமிழக & கேரள நட்பு தொழில் ரீதியாக, வணிக ரீதியாக, வாழ்க்கைப்பட்ட கொள்வினை, கொடுப்பினை மூலமாக நிரம்பிய நேசங்களிருக்க புறத்தில் போலித்தனம் வடிவமைக்கப்படுகிறது.
ஹிந்தியை எதிர்ப்பதாகக் குடிமகனுக்குப் போக்குக் காட்டி அவன் வாரிசுகள் கும்மிடிப்பூண்டி தாண்டவியலா நிலையேற்படுத்தி தமது வாரிசுகள் கள்ளத்தனமாக ஹிந்தி பயில வைத்த திராவிடக் கட்சிகள் போன்ற போலித்தனங்களை மலையாளிகள் செய்வதில்லை. எல்லா மொழியையும் ஏற்றுள்ளனர். கற்றுள்ளனர். உபயோகிக்கின்றனர். தாய் மொழிக்கு பிரதனாவிடம் தந்துள்ளனர். தமிழராக இருந்து இல்லத்தில் ஆங்கிலம் பேசுவது போன்று அவர்கள் எந்நிலையிலும் அத்தவற்றை செய்வதில்லை. ஆங்கிலம் தெரியும். தேவைக்கு, தொழிலுக்கு மட்டும் பயன்படுத்துவர். ஹிந்தி தெரியும். தேவையறிந்து பேசுவர். மற்றவர் முன் பெருமை காட்ட பேசுவதில்லை. தமிழருக்கும், மலையாளிக்கும் உள்ள கசப்பான வேறுபாடு.
''கந்தையானாலும் கசக்கிக் கட்டு.'' ''கூழானாலும் குளித்துக்குடி'' தமிழ்த் தொன்மை அறிவுரையை ஏற்புரையாகக் கடைப்பிடிக்கின்றனர், கேரள மக்கள். அழுக்க உடை, பிசுக்கேறிய உடல் காணவியலாது. அகச் சுத்தம். புறச்சுத்தம். இல்லங்களில் தூய்மை. கடை நிலை மக்கள் வரை காண முடியும்.
''கிலோ என்ன விலை கேரட்? கொறச்சுப் போடுப்பா'' பேச்சு, பேரம் அங்கில்லை. 20 ரூபாய்க்கு காய் கேட்டால் பல வகைக்காயிலும் ஒவ்வொரு துண்டு அறுத்துத் தருகின்றார் கடைக்காரர். நம்மூர் கவலை மீன் முள்ளுமீனுக்கு அவர்கள் இட்டுள்ள பெயர் 'மத்தி'. மற்றொரு மீன் 'சாலா' இவைகள் அம்மக்களுக்கு பிடித்தமான உணவு. 20 ரூபாய்க்கு 10 மீன் கிடைக்கும். இரண்டு வகையாக காரம், புளிப்பு குழம்பு வைக்கின்றனர். குறைவான செலவு. எளிமையான உணவு. கிலோ 600/& ரூபாய்க்கு வஞ்சிரம் மீன் அவர்கள் வாங்குவதில்லை.
மரவள்ளிக்கிழங்கை மசிய வேகவைத்து தேங்காய் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் கலந்து செய்து, சோற்றுடன் சேர்த்து மீன் குழம்பு ஊற்றி பிசைந்து உண்கின்றனர். முஸ்லிம், கிறிஸ்துவர், இந்து மூவின மலையாளிகளுக்கும் பிடித்தமான உணவு.
பச்சைப் பலாக்காய் சிறு துண்டாக நறுக்கி வேகவைத்து மேற்கூறியுள்ள மசாலா பொருட்கள் சேர்த்து செய்து அவியல் என்கின்றனர். இதே பாணியில் பலாக்கொட்டையையும் செய்கின்றனர்.
பலாப் பழத்துடன் வெல்லம், அரிசி மாவு சேர்த்து கொழுக்கட்டை செய்கின்றனர். வாழைப்பழ பஜ்ஜி போன்று, நேந்திரம் வாழைப்பழத்துடன் மைதா மாவு சேர்த்து பொறித்தெடுக்கின்றனர். ''ஏத்தக்காய் பொறிச்சது'' என்று பெயரிட்டுள்ளனர். இவ்வுணவை வடநாட்டினர் தத்தெடுத்துக் கொண்டனர். வட இந்திய இரயில்கள் பலவற்றிலும் ஏத்தக்காய் பொறிச்சது விற்பதைக் காணலாம். அதிகம் செலவு பிடிக்காத உணவு வகைகளே மலையாளிகளுடைவை. பெரும்பாலும் தங்களுக்கருகில் விளையக் கூடியவற்றிலிருந்தே சமைக்கின்றனர். இயற்கையோடு இணைந்து வாழ பழகிக் கொண்டுள்ளனர்.
வேந்தனுக்குத் தேவை நாடு.
வர்த்தகனுக்குத் தேவை வாங்கும் திறனாளி.
வைத்தியனுக்குத் தேவை தேவை நோயாளி.
மலையாளிக்குத் தேவை அவர் மொழி.
இந்திய மொழிகளில் 22 மொழிகள் பிரதானமானவை. அதிலொன்று மலையாளம். 35 மில்லியன் மக்கள் மலையாளம் பேசுவோர். இலட்சத்தீவு மக்கள் மொழியும் மலையாளமே!
கேரள மக்களில் 2வது பெரிய சமூகம் முஸ்லிம்கள். 24.7 சதம் உள்ளனர். கேரள வட பகுதிகள், மலப்புரம் மாவட்டம், கண்ணனூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய பகுதிகள் முஸ்லிம்கள் திரட்சியாக வாழக்கூடிய இடங்கள். 19 சதம் கிறிஸ்தவர் உள்ளனர். இவர்கள் எர்ணாகுளம் பகுதிகளில் திரட்சியாக வாழ்கின்றனர். மலப்புரம் மாவட்டத்தில் குறைவாக வசிக்கின்றனர்.
300 குடும்பங்கள் வாழக்கூடிய தமிழகக் கிராமங்களில் அதிகபட்சம் ஐந்து நாளிதழ்கள் வாங்கப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் தமிழக முஸ்லிம் ஊர் நியூஸ் பேப்பர் கடையில் ஆங்கில நாளிதழ்கள் இல்லை என்று கூறியதையும் கள ஆய்வில் கண்டிருக்கிறோம்.
கேரள தென் பகுதி மக்கள் முஸ்லிம்கள் உள்பட தினசரி பேப்பர் வாசிக்கின்றனர். தம் மொழிப் பேப்பருக்கு மட்டுமே பிரதானவிடம் தருகின்றனர். 60 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் காலை பேப்பர் தவறாது படிக்கின்றார். 10ஆவது வரை படித்திருப்பதாகக் கூறுகிறார். இவர் போன்று பலர் உள்ளனர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தோர் 45 வருடங்களுக்கு முன்னமே 10ஆம் வகுப்பு முடித்திருப்பதாக கூறுவது அவர்கள் கல்வி மீது கொண்டுள்ள பிடிப்பு அக்கறையைக் காட்டுகின்றது.
மலையாளத்தில் 170 செய்தித்தாள்கள். 235 வார இதழ்கள். 550க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள் வெளியாகுகின்றன. மாநிலங்கள், நாடுகள் தாண்டியும் விநியோகம் நடக்கின்றன. மலையாள மொழி சேனல்கள் மட்டும் பதினைந்து ஒளிபரப்பாகின்றன.
முஸ்லிம் திருமண விருந்துவிழா, இரண்டு நாட்கள் நடக்கின்றன. மணவிழா முதல்நாள் மாலை 6 மணிக்கு துவங்கும் விருந்து வைபவத்தில் பரோட்டா, கறித்தொக்கு, பொறித்த கோழிக்கறி, பாலில்லாத கட்டன் காபி பறிமாறுகின்றனர். இவ்விருந்து இரவு 12 மணி வரை நடக்கின்றது. மறுநாள் நிகழ்வில் கலந்து கொள்ளவியலாதவர்கள். முதல்நாள் விருந்தில் கலந்து கொண்டு மொய் வைத்துச் செல்கின்றனர். மதபேதங்களைத் தாண்டி சகோதரப் பாசத்துடன் வாஞ்சையுடன் உறவினர் போல் அளவளாவி மகிழ்கின்றனர்.
ஏழைப் பெண்களுக்கு இருநாள் விருந்தில் கிடைக்கும் மொய் கைகொடுக்கிறது. ஆபரண நகை வியாபாரியிடம் 25லிருந்து 50 சவரன் வரை கடனாகப் பெற்று திருமணம் முடிக்கின்றனர். மொய்ப் பணத்தை அன்று மாலையே வியாபாரியிடம் கொடுத்து கணக்கு முடிக்கின்றனர். குறையேற்பட்டால் குறைவான நாட்கள் கெடு பெற்று கடன் தீர்க்கின்றனர். மொய் வைப்போர் குறைந்தது 250/& ரூபாய்க்குக் குறைவாகத் தருவதில்லை. அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வரை எழுதுகின்றனர். 5,000/&, 10,000/-&, என்று உறவுகள் எழுதுதல் தனி.
தமிழ்நாட்டு மக்களுக்கு மெல்லிய அரிசி சோறு விருப்பம். நேர்மாறானவர்கள் மலையாளிகள். சன்னமான அரிசி ஐந்து மடங்கு கனமாகவிருந்தால் எப்படியிருக்கும்! கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவு கன அரிசி சோறுதான் பிடிக்கும். உறவினர்களைக் காண தமிழகம் வரும் மலையாளிகள் சன்ன அரிசி சோறு தின்றால், சாப்பிட்ட திருப்தியில்லை என்று கூறுகின்றனர்.
-சோதுகுடியான்
முஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2013
source:http://jahangeer.in/?paged=2

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.