ஓ துவோம் வாருங்கள்
இப்னு மர்யம்
உமறுப் புலவரின் சீறாவுக்கு மட்டுமல்ல. இன்னும் பல கவிதைகளுக்கும் கூட நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியதாக கதைகள் பல உண்டு. அவற்றில் உள்ள தவறுகளை நியாயப்படுத்தி உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மக்கள் போற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இப்படிக் கதைகள் விடப்படுகின்றன.
காசிம் புலவர் என்பவர் நபி(ஸல்) அவர்களின் பெயரில் திருப்புககழ் பாட எண்ணிய போது எப்படித் துவக்குவது என்று அவருக்குத் தோன்றவில்லையாம்! அவரது கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி “பகரும்” என்று முதலடியைத் துவக்கி கொடுத்தார்களாம்! உடனே அவர் “பகருமுருவிலி அருவிலி வெருவிலி” என்று தன் திருப்புகழைத் துவக்கினாராம்!
இவ்வாறு பாடிக் கொண்டு வரும்போது, ஒரு செய்யுளின் இறுதியடியில் “மக்கப்பதிக்கும்” என்று சொன்னாராம்! அடுத்த வார்த்தை அவரது நாவில் வரவில்லையாம்! திரும்பத் திரும்ப “மக்கப்பதிக்கம் மக்கப்பதிக்கும்” என்று புலம்பிக் கொண்டே ஒரு குளத்தில் இறக்கி விடுகிறாராம்! தண்ணீர் தொண்டை அளவுக்கு வந்துவிட்டதால் இனி ஓரடி எடுத்து வைத்தால் அவர் மூழ்கி விடுவார் என்ற நிலையில் நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்கி “மக்கப்பதிக்கும் உணர் சொர்க்கம் பதிக்கும் மா இரசூலே” என்று அதனை முடித்துக் கொடுத்தார்களாம்!
இது உமறுப் புலவரின் பெயரால் கூறப்படும் பொய்யைவிட பயங்கரப் பொய்யாகும். உமறுப் புலவருக்கு கனவில் மட்டும் தான். நபி(ஸல்) அவர்கள் வந்ததாக கதை விடப்பட்டது. இவருக்கு கனவில் தோன்றி ஆரம்பித்துக் கொடுத்ததோடு நேரடியாகவும் நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்கினார்கள் என்று பச்சைப் பொய் சொல்லப்படுகிறது.
நபி(ஸல்) அவர்கள் நேரடியாகவே இவருக்குத் திருக்காட்சி நல்கியதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்குவார்கள் என்றால், இந்த சமுதாயத்தில் பல பிளவுகள் போர்க்களங்கள் ஏற்பட்ட போது திருக்காட்சி நல்கி சமுதாய ஒற்றுமைப் படுத்தி இருக்க மாட்டார்களா? (“நபி(ஸல்) அவர்கள் எவருக்கும் நேரடியாக திருக்காட்சி நல்க மாட்டார்கள்” என்பதற்கு விரிவான ஆதாரங்களுடன் இதே தொடரில் பின்னர் நாம் விளக்கினோம்.)
கொஞ்சம் சிந்தித்தாலே இது பச்சைப் பொய் என்பதை எவரும் உணரலாம்! இவர் நபி(ஸல்) அவர்களை “மக்கப்பதிக்கு ரசூல்” என்கிறார். ஆனால் அல்லாஹ், தன் திருமறையில் “உலக மக்கள் அனைவருக்கும் ரசூல் என்கிறான்.
(உலக) மக்கள் அனைவருக்குமே நாம் உமமைத் தூதராக அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 34 : 28) அகில உலகுக்கும் அருட்கொடையாக உலக மாந்தர் அனைவருக்கும் அல்லாஹ்வின் திருத்தூதராக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் மக்கப்பதிக்கு மட்டும் தூதர் என்று ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?
அடுத்து “சொர்க்கம் பதிக்கும் ரசூல்” என்கிறார். சொர்க்கத்தில் ஏவல், விலக்கல் எதுவும் கிடையாது. உள்ளம் விரும்பக் கூடியதெல்லாம் சொர்க்கத்தில் உண்டு (அல்குர்ஆன் 43 :71) அல்லாஹ்வை நேரடியாகவே காணுகின்ற பெரும் பேறு சுவனத்தில் உண்டு (அல்குர்ஆன் 75 : 23) என்பது திருக்குர்ஆன் மூலம் நிருபணமாகின்றது. அங்கே ஏவல், விலக்கலைச் சொல்லித்தர தூதர்கள் இல்லை. விரும்பியபடி நடந்து கொள்ளலாம்! இவரோ “சொர்க்கப் பதிக்கும் இரசூலே” என்கிறார். ‘மக்கப்பதிக்கு ரசூல்’ என்று சொன்னதன் மூலம் நபி(ஸல்) அவர்களைக் குறுகிய வட்டத்துக்குத் தூதராக்குகிறார் “உயர் சொர்க்கப் பதிக்கும் இரசூல்” என்று இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுகிறார். அந்தப் புலவர், தானே இப்படிப் பாடியதாகக் கூறப்பட்டால், அவரது அறியாமை என்று ஒதுக்கி விடலாம். அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்களே இந்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய பழியை நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்துகிறார்.
அதே திருப்புகழில், இவர் செய்த விபச்சாரத்துக்கும், மது அருந்தியதற்கும், கொலை செய்ததற்கும், களவு செய்ததற்கும். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்ட இவர், அக்குற்றங்களையெல்லாம் மன்னிக்கும்படி அல்லாஹ்வின் தூதரிடம் வேண்டுகிறார்.
வறுமையென்னும் படர் தீயாலே
எனதுடலினுறும் பிணி நோயாலே – பசி
வலியடுமின் சுவை ஊணாலே – இடை
புனையாடை வகையது ஒன்றும் இலாதாலே
கொலை களவு பொய் குண்டுணி கோளாலே -தினம்
வறிதில் நிறைந்திடு தாழ்வாலே – விலை
மடமானார் உறவு செய்தின்புறுமாலாலே
கொடுமறநெறி வஞ்சனை சூதாலே -தனி
உலகில் உழன்று அவமே வாழ்நாளில்
உறைவேனோ உறுபகையின் கொடியேனானாலும்
நின்னடிமையை நின்கைவிடாதோமா மனம்
உருகி இரங்கிவினோர்மேல் வீடினி – அருள்வாயே!
என்று பாடி அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கருத்தை உதிர்க்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை எப்படி அங்கீகரித்திருப்பார்கள்? எந்த ஷிர்கை வேரறுக்க அனுப்பட்டார்களோ அதே ஷிர்கை ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்க மாட்டார்கள்.
இதுபோல் ஆலிப்புலவர் என்பவர் ‘மிராஜ் மாலை’ என்று ஒரு காப்பியம் இயற்றி அதைக் கோட்டாறு என்ற ஊரில் அரங்கேற்றினாராம். பாடிக் கொண்டே பின்வரும் வரிகளைச் சொன்னாராம்!
நாலாம் வானமிலங்கும் ஞானரத்ன மஃமூரில்
வாலாயமாய் வீற்ற வான்பரியை – கோலத்தூண்
தான் துளைத்துக் கட்டியரோ தாஹா
சென்றாரைந்தாம் வானகத்தின் உள்ளே மகிழ்ந்து
என்ற வெண்பாவைப் பாடினாராம்.
(கருத்து :- புராக் வாகனத்தின் மிஃராஜ் செல்லும் போது மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியில் உள்ள ஒரு தூணில், தம் விரல்களால் துளையிட்டு அதில் புராக் வாகனத்தைக் கட்டிவிட்டு ஐந்தாம் வானம் சென்றார்கள்.)
இதைப் பாடியபோது நபி(ஸல்) அவர்கள் உடனே விஜயம் செய்து “புலவரே! அந்தச் செய்தி எனக்கும், என்னுடன் வந்த ஜிப்ரீலுக்கும் தானே தெரியும்! உமக்கெப்படித் தெரிந்தது?” என்று கேட்டார்களாம்; அதற்கு அவர் “அண்ணலே! இயல்பாகவே, என்வாயில் அப்படி வந்து விட்டது” என்று சொல்லி உடனே மூர்ச்சை யுற்று கீழே விழுந்து விட்டாராம்.
இதற்கு என்ன ஆதாரம்? என்று நம்மில் எவரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக முன் ஜாக்கிரதையாக அணை போடுகின்றனர். இந்தப் பொய்யை அல்லாஹ்வின் தூதர் அவர்களே அங்கீகரித்து விட்டதாகச் சொல்லி விட்டால் எல்லோருடைய வாயையும் அடைத்து விடலாம் என்று திட்டமிட்டு இப்படிக் கதை கட்டியிருக்கிறார்கள்.
இன்றவளவும் கோட்டாறு மக்களில் சிலர் “நபி(ஸல்) அவர்கள் கோட்டாறுக்கு விஜயம் செய்ததாக நம்புகின்றனர். மிஃராஜ் மாலையைப் புனிதமாகக் கருதி, அங்கே விழாக்களும் நடத்தி பக்திபரவசமாகப் பாடுகின்றனர்.
ஆக, கடந்த காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம் கவிஞர்களில் விரல்விட்டு எண்ணப்படும் சிலரைத்தவிர, பெரும்பாலோர் தங்கள் கற்பனையில் தோன்றியதை எல்லாம் இஸ்லாத்தின் பெயரால் கவிதைகளாகத் தந்துள்ளனர்.
அந்தத் தவறுகளை மக்களும் மார்க்க அறிஞர்களும் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக, நபி(ஸல்) அவர்களே இவற்றை அங்கீகரித்து விட்டதாகச் சொல்லி வாயடைத்தனர்.
இந்தக் கவிதைகளின் கருத்துக்களைக் காணும்போது, நபி(ஸல்) இவற்றைக் கனவிலோ நேரிலோ அங்கீகரித்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு. நபி(ஸல்) அவர்களுக்குக் கவிபாடத் தெரியாது என்று குர்ஆன், ஹதீஸ் மூலம் நாம் ஏற்கனெவே நிரூபித்ததன் அடிப்படையிலும் இவை பொய்யேயன்றி வேறில்லை என்று உணரலாம்.
மவ்லிதுகள், கவிதை என்ற காரணத்துக்காக மறுக்கப்படவில்லை என்பதை இதுவரைக் கண்டோம். இனி மவ்லிது மறுக்கப்படுவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். (வளரும்)
அந்நஜாத்: ஏப்ரல், 1987 – ஷாஃபான், 1407
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment