ஓ துவோம் வாருங்கள்
இப்னு மர்யம்
நபி(ஸல்) அவர்கள் கவி பாடினார்களா?
நபி(ஸல்) அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்குக் கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக் கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர்.
‘புர்தா’ போன்ற அரபிக் கவிதையையும், ‘சீறா’ போன்ற தமிழ்க் கவிதையையும் அந்தந்தக் கவிஞர்கள் பாடியபோது நபி(ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அதை அங்கீகரித்ததாகவும், அந்தக் கவிஞர்கள் கவிதை இயற்றும் வேளையில் அடுத்து எப்படிப் பாடுவது என்று தடுமாறிய போதும் நபி(ஸல்) அவர்கள் அடுத்த அடியை எடுத்துக் கொடுத்ததாகவும் கதைகள் பல உண்டு. அந்தக் கவிதைகளில் எவரும் குறை கண்டு விடக்கூடாது என்று திட்டமிட்டு இப்படி ஒரு பொய்யைச் சொல்லி அதற்கு மிகப்பெரும் மதிப்பை ஏற்படுத்தி விட்டனர். காசிம் புலவர் “திருப்புகழ்” பாடும்போது, ஓரிடத்தில் தடுமாறும் போது, நபி(ஸல்) அவர்கள் “நேரடியாகவே தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தனர்” என்று கூட நாம் எழுதி வைத்துள்ளனர். (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கவில்லை, அது அவருக்குத் தகுமானதுமல்ல. (அல்குர்ஆன் 36 : 69)
திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே நபி(ஸல்) அவர்களுக்கு கவிதை தெரியாது என்றும், அவர்களுக்கு அது தகுதியானதுமல்ல என்றும் சொல்கின்றது. அல்லாஹ் அவர்களுக்கு கவிதையைக் கற்றுத்தரவில்லை என்று தெளிவாகச் சொல்லி இருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் கவிதைக்குத் திருத்தம் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது குர்ஆனுக்கு முரண்பட்டதாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமாகக் கவிதை இயற்றத் தெரியாது என்பது மட்டுமின்றி பிறர் கவிதைகளை உதாரணத்துக்குக் கூறும் நேரங்களில் கூட முறையாகக் கூற மாட்டார்கள். எதுகை, மோனைகளைக் கவனிக்க மாட்டார்கள்.
“பிறர் கவிதையில் எதையாவது நபி(ஸல்) அவர்கள் உவமையாகக் குறிப்பிடுவதுண்டா?” என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. “கவிதை அவர்களுக்கு மிகவும் பிடிக்காததாகும். சில சமயங்களில் ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துச் சொல்லும்போது, அதன் ஆரம்பத்தைக் கடைசியிலும், கடைசியை ஆரம்பத்திலும் ஆக்கிவிடுவார்கள். அப்போது அபூபக்ரு(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே!” அந்தக் கவிதை அவ்வாறு இல்லை” என்று சுட்டிக் காட்டினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நான் கவிஞனல்ல. அது எனக்குத் தகுதியானதுமல்ல.” என்று குறிப்பிட்டார்கள் என அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: இப்னுஜரீர், இப்னு அபீஹாதம்
அப்பாஸ் என்ற கவிஞரின் கவிதை ஒன்றை முன் பின்னாக மாற்றிச் சொல்லி, “நீர் தான் இந்தக் கவிதையை இயற்றியவரோ?” என்று அந்தக் கவிஞரிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் அப்படி இயற்றவில்லை” என்று கூறி கவிதையை முறையாகச் சொல்லிக் காட்டினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “எல்லாம் ஒன்று தான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்பாஸ்(ரழி) நூல்: பைகஹீ (தலாயில)
பிறர் கவிதையை எடுத்துச் சொல்லும்போது கூட, “யாரப்பிலக்கண” அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் கூற மாட்டார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. அப்பாஸ் என்ற கவிஞர் பற்றிய ஹதீஸில் கருத்தை அடிப்படையாகக் கொண்டே “எல்லாம் ஒன்று தான்” என்று கூறினார்கள். ஆனால் யாப்பிலக்கணப்படி அந்தக் கவிஞர் கூறியதே முறையானது. இவைகளெல்லாம், “நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கவிதை இயற்றும் தன்மையை அறிவித்துக் கொடுக்கவில்லை” என்ற குர்ஆன் வசனத்திற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டாகும்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் ஓரிருவரிகள் பாடியதாக வந்துள்ளவை தற்செயலாக கவிதை அமைப்பில் அமைந்தது என்றே முடிவு செய்ய வேண்டும். திட்டமிட்டு கவிதை இலக்கண விதிகளின்படி இயற்றினார்கள் என்று கருதக் கூடாது.
கிராமப் புறத்தில் உள்ள மொழியிலக்கணம் அறியாத சிலரது பேச்சுக்கள் கூட சில சமயங்களில் கவிதை அமைப்பில் அமைந்துவிடுவதை இன்றும் நாம் காண்கிறோம். அதனால் அவருக்குக் கவிதை ஞானம் உண்டு என்ற முடிவுக்கு வரமுடியாது. இதை நபி(ஸல்) அவர்களே தெளிவு படுத்தியுள்ளனர்.
நான் என் புறத்திலிருந்து அடிப்படையில், நபி(ஸல்) அவர்கள் சில கவிஞர்களுக்குக் கவிதையைச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் என்று அறியலாம்.
இது கனவில் தானே நடந்துள்ளது. கனவில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே! என்ற ஐயம் சிலருக்கு இங்கே தோன்றலாம். அது உண்மை என்றாலும், கனவில் எது வேண்டுமானாலும் தோன்றலாம். நபி(ஸல்) அவர்கள் இதிலிருந்து விலக்குப் பெற்றவர்கள் என்பதற்கு ஆதாரமுண்டு.
“யார் கனவில் என்னைக் கண்டானோ அவன் என்னையே கண்டான். என் வடிவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான்” (நபிமொழி)
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரழி) நூல்: புகாரி: முஸ்லிம்
மற்றவர்கள் தோற்றத்தில் ஷைத்தான் விளையாடுவது போல் நபி(ஸல்) அவர்களுடைய தோற்றத்தில் விளையாட முடியாது. நபி(ஸல்) அவர்கள் வாழும் போது எந்த போதனைகளைச் சொன்னார்களோ, அதற்கு மாற்றமாகக் கனவில் சொல்ல மாட்டார்கள் என்று இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.
அந்த அப்பா பாடலில் அடியெடுத்துக் கொடுத்தார்கள் என்பதும், இந்த இமாமுடைய கவிதையில் பிழைதிருத்தம் செய்தார்கள் என்பதும் வடிகட்டிய – உண்மை கொஞ்சமும் கலக்காத பச்சைப் பொய்களாகும்.
கவிதைகள் பொதுவாக இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்பதையும், இஸ்லாத்தின் எந்த போதனைக்கு முரண்படாத கவிதைகளுக்கு அங்கீகாரம் உண்டு என்பதையும் இதுவரை நாம் கண்டோம். அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இதை இரத்தினச் சுருக்கமாக சொல்லி விடுகிறார்கள்.
கவிதையில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. நல்லதை எடுத்துக் கொள்! கெட்டதை விட்டுவிடு!”
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: புகாரி இமாமின் அல்அதபுல் முஃபரத்
மேலும் எந்தக் கவிஞர்களின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி அடி எடுத்துக் கொடுத்தார்கள் என்று கூறப்படுகிறதோ அந்தக் கவிஞர்களின் கவிதைகளில் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் முரணானவை காணப்படுகின்றன. இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரண்பட்ட, இத்தகைய கவிதைகளை நிச்சயம் நபி(ஸல்) அங்கீகரித்திருக்கவே மாட்டார்கள் என்று நாம் உணரலாம்.
அவற்றை அடுத்த இதழில் காண்போம். (வளரும்)
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment