ஓதுவோம் வாருங்கள்
இப்னு மர்யம்“சீறா” என்ற புராணம் பாடிய உமறு என்பவரின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி, அவரது புராணத்திற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரண்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய “சீறாவுக்கு” ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க மாட்டார்கள். மாதிரிக்கு “சீறா”வின் சில கருத்துக்களைக் காண்போம்.
புலவர் உமறு, நபி(ஸல்) அவர்களின் அருமைமகள் பாத்திமா(ரழி) அவர்களுக்கும். அலி(ரழி) அவர்களுக்கும் திருமணம் செய்து வைத்ததைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
அந்தத் திருமணச் செய்தி மதீனா நகரெங்கும் முரசறைந்து அறிவிக்கப்படுகிறதாம்! இதைச் செவியுற்ற மதீனா நகரத்து மக்கள்! தங்கள் வீடுகளையும், மாடங்களையும் அலங்கரித்தார்களாம்! தங்கள் வீடுகளின் சுவர்களில் கோலமிட்டார்களாம்! ஒவியம் வரைந்தார்களாம்! தோரணம் கட்டினார்களாம்! பந்தல்கள் போட்டார்களாம்! அந்தப் பந்தல்களில் தொங்கவிடப்படாத பொருட்களே இல்லையாம்! தரை தெரியாத அளவுக்கு மலர்கள் தூவினார்களாம்! தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் அறுசுவை உணவுகளைச் சமைத்தார்களாம்!
பெண்கள் புத்தாடை அணிந்து குயில் போல் பாடினார்களாம்! இளைஞர்கள் வீதிதோறும் வாழ்த்துப்பா பாடினார்களாம் முதியவர்கள் தெருத் தெருவாய் குர்ஆனை உரத்த குரலில் ஓதிக்கொண்டு வலம் வந்தனராம்! பின்னர் அலி(ரழி) அவர்கள் குதிரை மீது ஏறி பவனி வந்தார்களாம்! உலகத்தில் உள்ள எல்லா இசைக்கருவிகளும் வரவழைக்கப்பட்டு விண்ணும் மண்ணும் அதிர இசைக்கப்படுகிறதாம்! அலி(ரழி) அவர்களின் பேரழகை கன்னிப் பெண்கள் தம் கடைக்கண்களால் பருகினார்களாம்! அடைந்தால் இவரைப் போன்ற அழகரை அடைய வேண்டும்; இல்லாவிட்டால் செத்து மடிய வேண்டும் என்று எண்ணி ஏங்கினார்களாம்! இவருடைய அழகை பாத்திமா(ரழி) ஒருவர் தானா அடைய வேண்டும் என்று பொறாமைப்பட்டார்களாம்!
இப்படி எல்லாம் கதைவிடுகிறார் உமறுப்புலவர். எந்த வரலாற்று நூலில் இதைப் படித்தாறோ நாமறிவோம். மார்க்கம் அனுமதிக்காத தங்கம், வெள்ளிப் பாத்திரங்களை மதீனா மாநகர மக்கள் (அதாவது சஹாபாக்கள்) பயன்படுத்தியதாக பழி சுமத்துகிறார். கடைக்கண்களால் அன்னிய ஆடவரின் அழகைப் பருகியதாக சஹாபாப் பெண்மணிகள் மீது களங்கம் கற்பிக்கிறார். இசைக் கருவிகளைத் தடை செய்த இஸ்லாத்தில், சஹாபாக்கள் விண்ணும் மண்ணும் அதிர இசைக்கருவிகளை முழங்கச் செய்ததாகக் கூறுகிறார். இந்தக் கருத்துக்களை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பார்களா? தம் வாழ்நாளில் எந்தத் தீமைகளை ஒழிக்க நபி (ஸல்) அவர்கள் பாடுபட்டார்களோ அந்தத் தீமைகளை நபி(ஸல்) அவர்களின் பெயராலேயே அரங்கேற்றம் செய்கிறார்.
“தமிழ்க் கலாசாரத்தைக் தழுவி இப்படிப் பாடிவிட்டார்” என்றெல்லாம் சிலர் சமாதானம் கூறலாம். கற்பனைக் கதைகளில் வரும் கதாநாயகர்களைப் பற்றி அவர் இப்படிப் பாடி இருந்தால் இந்த சமாதானத்தை ஏற்கலாம்! கற்பனை என்று ஒதுக்கி விடலாம், பாதுகாக்கப்பட்டட வரலாறாகத் திகழ்கின்ற அல்லாஹ்வின் திருத் தூதரின் வரலாறு தானா இவரது கற்பனைக்கு வடிகாலாக வேண்டும்? நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை முஸ்லிம் சமுதாயம் முழுவதும் பின்பற்றி நடக்கக் கடமைப்பட்டு உள்ளனர்.
அவர்களின் பெயரால் இப்படி எல்லாம் கதைவிடுவதை ஒரு முஸ்லிம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
நல்ல வேளை! அவர் இருபதாம் நூற்றாண்டில் வாழவில்லை. இப்போது இருந்திருந்தால் அந்தத் திருமண நிகழ்ச்சியை வீடியோவில் பதிவு செய்து உலகில் உள்ள எல்லாத் தொலைக்காட்சி நிலையங்களும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பியதாகவும் பாடி இருப்பார். குதிரையில் பவனி வரச் செய்திருக்க மாட்டார், சொகுசுக் காரில் பவனி வரச் செய்திருப்பார். உலகின் பல பாகங்களிலிருந்தும் மன்னர்கள் விமானம் மூலம் வந்து மதீனாவில் நடைபெற்ற திருமணத்தைக் கண்டு மகிழ்ந்தனர் என்று பாடி இருப்பார். உலகின் எல்லா நாளிதழ்களும் அந்த திருமணச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன என்றும் பாடி இருப்பார்.
இதை விடவும் மோசமான பல கவிதைகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் கவிதைகளை நபி(ஸல்) அவர்களே அங்கீகரித்துள்ளனர் என்று கூறி இந்தத் தவறுகள் நியாயப்படுத்தப் படுகின்றன. சொன்னதைச் செய்து காட்டிய நபி(ஸல்) இந்தப் பொய் புராணத்தை ஒரு போதும் அங்கீகரித்திருக்க மாட்டார்கள் என்பதே திண்ணம்.
சில தமிழ்க் கவிஞர்கள் இந்த இடத்தில் நம்மீது ஆத்திரப்படலாம். நாம், உமறுப் புலவரின் தமிழறிவையோ, அதன் இலக்கியத் தரத்தையோ விமர்சனம் செய்யவில்லை. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, அவர்கள் போதித்த போதனைகளுக்கு மாற்றமாக சித்தரித்துக் காட்டியதைத்தான் நாம் விமர்சிக்கிறோம். நபி(ஸல்) அவர்களின் வாழ்வ கூடுதல், குறைவின்றி உள்ளபடி மக்கள் முன் வைக்கப்பட வேண்டும், அவ்வாறு வைக்கப்படவில்லை என்கிறோம். (இன்னும் வரும்)
அந்நஜாத்: மார்ச், 1987 – ரஜப், 1407
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment