Monday, October 1, 2012

அந்தரங்கம்.....அவசியம்...!

கணவன் மனைவியின் அந்தரங்கங்களை யாரிடமும் வெளியிடக்கூடாது!
மனைவியின் அந்தரங்கத்தை மற்றவர்களிடம் சொல்லும் கணவனும், கணவனின் அந்தரங்கத்தை மற்றவர்களிடம் சொல்லும் மனைவியும் மனிதர்களிலேயே மோசமானவர்கள் என்கிறது இஸ்லாம்.
திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள். ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும்.
மணவாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.
திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே 'இவர் இப்படித்தான்' என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்துவிட்டு 'எனக்கு இவர் வேண்டாம்' என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.
அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டிவிடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.
திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.
குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.
நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண 'ஜோக்கு'களும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். 'இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்' என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.
மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் 'அவர் எனக்காக மாற வேண்டும்' என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர்தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.
கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். மனைவியின் அந்தரங்கத்தை மற்றவர்களிடம் சொல்லும் கணவனும், கணவனின் அந்தரங்கத்தை மற்றவர்களிடம் சொல்லும் மனைவியும் மனிதர்களிலேயே மோசமானவர்கள் என்கிறது இஸ்லாம். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம்விட்டு பேசுங்கள்.
இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்துகொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டுவேலைகளை அதிகம் சுமத்துவது, குறைகூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜ வாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.
வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.
திருமணம் என்பது 'நீயா நானா' போட்டியல்ல. கணவன்- மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.உடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறைவேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினைகளுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.
தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::