Thursday, August 4, 2011

பெண்கள்-பயணம் ஜாக்கிரதை!!!!!

அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்
...அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை
என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.
இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர்
உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி. அந்த நோயாளிப் பெண்
அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல்
பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம்.
அதுபோலத்தான் அன்றும் நடந்தது.
இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு
மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது.
உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக்
கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சை
பழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற
பரபரப்பில் இருந்தனர். அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்தது
போல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் ஏற்கனவே
ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும்.
கணவன் மனைவி போலத் தோன்றியது. ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக
இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக்
கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து "நீங்கள்
எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க, அதற்கு அவர்கள் "பழைய பேருந்து நிலையம்
செல்ல வேண்டும்" என்று சொன்னவுடன், "சரி ஏறுங்கள்" என்று ஓட்டுனர் சொல்ல,
ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்த
முஸ்லிம் பெண்களைப் பார்த்து "வாங்க, வாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்"
என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்க,
அடுத்த சில வினாடிகளில் தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி
உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும்
உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பென
அறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர். ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது.
மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல
5 நிமிடம் கூட ஆகாது. ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 10 நிமிடங்களாகியும்
நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறு
எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில்
சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகு
தூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது. என்ன
செய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!"
என்று கதறியழ ஆரம்பித்தனர். உடனே, உள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில்
மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில்
வைத்து "சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்" என்று
மிரட்ட, அவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கக்
கரியமணியைப் பறிக்க ஆரம்பித்தாள். முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்க
முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே, முஸ்லிம் பெண் நிலை குலைந்து
போனாள். உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும்
செய்ன்கள், தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு, இருவரையும்
ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர். அந்த
அதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூர்ச்சையுற்று விழ, உடன்
சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள்.
அல்ஹம்துலில்லாஹ். பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை
அடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு
ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர்
அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்து
அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார்.
மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக்
கொண்டது. அதில் சில ஆயிரம் ரூபாய்களும், செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன.
நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள்.
இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
1. ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
2. வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்
பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள்.
3. தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்.
4. செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின்
மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும். ( உ-ம் ப்ளவ்ஸ் உள்ளே)
5. ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின்
எண்ணை குறித்து வைத்துக் கொள்ள மறவாதீர்கள்.
6. அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். அவர்களைக்
கொஞ்சம் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.
7. தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள்
கை வசம் வைத்துக் கொள்ளவும். ( இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்.)

அன்புடன்,
அ.பஷீர் அஹமது,
ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி இஞ்சினீயர்,
மஞ்சக்கொல்லை.
செல்: 9442014288.

( தயவு செய்து இந்தச் செய்தியை தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி வைகக மறவாதீர்கள்)

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::