Sunday, August 21, 2011

காஷ்மீரும் மறைக்கப்படும் உண்மையும்!!!!!!!6


அடுத்தநாள் காலையில் எழுந்து தொழுதுவிட்டு இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு புறப்பட்டோம்.
எங்களைப் போலவே, நிகழ்ச்சிக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகைதந்த பேராளர்கள் மாடியில் இருந்த அறைகளில் தங்கியிருந்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியும் கூட காவல்நிலையத்தில் நடைபெறும் விசாரணை மரணங்கள், மனிதஉரிமை மீறல்கள் குறித்த நிகழ்வுகளாகவே இருந்தது.

மிக முக்கியமாக மணிப்பூரில் இந்திய ராணுவத்தின் கற்பழிப்புகள் மற்றும் மனிதஉரிமை மீறல்களை கண்டித்து 10வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளாவை ஆதரித்து மணிப்பூரிலிருந்து டெல்லிவரை 15நாள் யாத்திரை நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துக் கொள்ளக் கூடியவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்வுகளுக்கிடையில் உத்தம்சிங் என்ற இளம்பெண் பேசினார். தோடா நகரிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். நான் இரண்டு மணிநேரம் எனது கிராமத்திலிருந்து நடந்து வந்தேன். வழியெங்கும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை என்று பேசியதும் அரங்கமே கைதட்டலில் ஆழ்ந்தது.
காஷ்மீர் பிரச்சனைகளை முன்வைத்து ஏராளமான பாடல்களை பலரும் மேடையில் ஏறி பாடினர். அவை ஒவ்வொன்றும் உணர்வுப்பூர்வமாய் அரங்கத்தை உசுப்பியது.

சுட்டுக்கொல்லப்பட்ட தன் அப்பாவி சகோதரனை, கற்பழிக்கப்பட்ட தன் தாயை, முடமாக்கப்பட்ட தன் நண்பனை பற்றிய கொடும் துயரங்கள் அவை.

இந்தியா முழுவதிலிமிருந்தும் வந்திருந்த 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மத்தியில் அவை புதிய எண்ண அலைகளை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது.

அன்று மாலை சிறப்பு விருந்தினராக டோடா நகரின் டெபுடி கமிஷனர் வந்திருந்தார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அனைவருக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

அத்தோடு இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. அதன் பிறகு இரவு உணவுக்கு பிறகு டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ஒரு குறும்படம் ஒளிபரப்பானது.

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் பகுதியில் ஒரு முஸ்லிம் முதியவரைப் பற்றிய படம் அது. ஐந்துவேளை தொழுகை நடத்தும் அப்பெரியவர் பைசாபாத் மற்றும் சர்ச்சைக்குரிய அயோத்தி பகுதிகளில் அனாதைப் பிணங்களை கண்டெழுத்து தனது தட்டு ரிக்ஷாவில் அவற்றை எடுத்து சென்று அடக்கம் செய்து வருகிறார்.

முஸ்லிம் பிணமாக இருந்தால், அதை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்கிறார். இந்து பிணமாக இருந்தால் அதை எரியூட்டுகிறார். சாதாரண சைக்கிள் கடை வைத்திருக்கும் அந்த முதியவரின் சமூகசேவை மனிதாபிமானத்தை நினைவூட்டுகிறது. அந்த அரைமணி நேர குறும்படம் மாபெரும் கருத்தியலை முன் வைத்தது.

நிகழ்ச்சியின் இறுதி நாளன்று பரபரப்பாக இருந்தது. நிகழ்ச்சிகளை மதியம் 1 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டுமென்ற பரபரப்பு ஒருபுறம். மறுபுறம் வருகையாளர்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கு ஜம்மு சென்றால்தான் ரயிலோ, வாகனங்களோ கிடைக்கும்.

ஏறத்தாழ 6 மணி நேரமாகும். எனவே ஊருக்கு திரும்பும் பரபரப்பும் நிலவியது. விறுவிறுப்பாக தொடங்கிய நிகழ்ச்சிகளில் பல்வேறு மாநில பிரதிநிதிகளும் உரையாற்றினர். எங்களில் இருவருக்கு ஆரம்பத்தில் பேச அனுமதி தந்திருந்தார்கள். நான் ஆங்கிலத்திலும், ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இந்தியிலும் உரையாற்றுவோம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவித்து இருந்தோம். கடைசி நாள் அன்று நேரப்பற்றாக்குறையினால் ஒரு அமைப்பிற்கு ஒருவர் மட்டுமே பேசுங்கள் என்றனர். காரணம் முதல் நாள் வழக்கறிஞர் ஜைனுல்ஆபிதீன் மாணவரனி சார்பில் பேசி விட்டார். மேலும் இருவருக்கு வாய்ப்பு தருவது சிரமம் என்றனர். அதனால் மூத்த நிர்வாகி என்ற அடிப்படையில் என் உரையையும் சேர்த்து ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இந்தியில் பேசினார். அவரது இந்தி மொழியின் ஆளுமையை கண்டு நாங்கள் வியந்தோம்.

நமது இயக்கத்தை பொறுத்த வரை வடஇந்தியாவில் முழக்கம் எழுப்ப பலரும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.

தனது உரையில் காஷ்மீரில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து கவலைப்பட்டவர், அங்கு அமைதியை நிலைநாட்டுவது நமது கடமை என்றும் குறிப்பிட்டார்.

கடைசியாக ஏற்புரை நிகழத்தியவர் சகோதரி மணிமாலா. அவர்தான் Gandhi Smriti & Darshan Samiti அமைப்பின் அகில இந்திய இயக்குனர் இவர்தான்.

காஷ்மீர் மக்களுக்கு, ஆறுதலாக பேசியஅவர், அவர்களின் உயர்ந்த பண்புகளையும் பாராட்டி பேசினார். காந்தியின் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் அடுத்ததாக ஸ்ரீநகரில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

நிகழ்ச்சியின் முடிவாக "நமது மண்ணை நேசிப்போம் ஒருநாள் வெற்றி பெறுவோம்" என்ற கருத்து கொண்ட ஒரு காந்திய பாடலை ஒரு முஸ்லிம் முதியவர் இந்தியில் பாட, அவரோடு ஏழெட்டுப் பேர் சேர்ந்து "கோரஸாக" பாடினர்.

பிறகு அனைவரையும் ஒருவருக்கொருவர் கைக்கொடுத்துக் கொண்டு பிரிவுக்கு தயாராகினர்.
நாங்கள் மேடைக்கு சென்று சகோதரி மணி மாலாவிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். தமுமுகவின் பணிகளை சுருக்கமாக விவரித்ததும், உடனே தனது முகவரி அட்டையை கொடுத்து தொடர்புக் கொள்ளுமாறு கூறினார்.

மதியம் சாப்பிட்டுவிட்டு ஸ்ரீநகர் செல்ல தயாரானோம். ஒரு டெம்போ வேனை 4200 ரூபாய்க்கு வாடகைக்கு பேசினோம். 3.30 மணிக்கு புறப்பட்டோம். அமைதியும், அழகும் சூழ்ந்த சினாப் பள்ளத்தாக்குதலிருந்து பிரிய மனமின்றி புறப்பட்டோம்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::