Sunday, August 21, 2011

காஷ்மீரும் மறைக்கப்படும் உண்மையும்!!!!!!!5


நடுங்கும் குளிர் இல்லை. அந்த சினாப் பள்ளத்தாக்கு இரவு நேர அமைதியுடன், இதமாக இருந்தது. நாங்கள் விடுதிக்கு வந்த கொஞ்ச நேரத்தில், அரசுசாரா அமைப்பைச் சேர்ந்தவர்களும், சில மனிதஉரிமை ஆர்வலர்களும் எங்களை சந்தித்தனர்.


காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்கள், மனிதஉரிமை மீறல்கள், மக்களின் வாழ்க்கை, அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள், ஹூரியத் அமைப்பின் செயல்பாடுகள் என பல விஷயங்களைப் பேசினோம்.

இறுதியாக காஷ்மீரின் உண்மை வரலாறு குறித்தும், இந்திய - பாகிஸ்தான் நாடுகளின் அரசியல் சதுரங்களத்தில் காஷ்மீர் பகடைக்காயாக பயன்படுத்துவது குறித்தும் உணர்வுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பேசினார்கள்.

குறிப்பாக இந்திய ராணுவத்தின் மீது கடும் கோபத்தையும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ மீதான வெறுப்பையும் அவர்கள் வெளிக்காட்டினார்கள்.

எங்களை இந்தியர்களாகவும், தங்களை காஷ்மீரிகளாகவும் கருதியப்படிதான் அவர்களது உரையாடல் இருந்தது. ஜம்மு - காஷ்மீரில் ஆளும் கட்சியாக இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி ஊழலில் திளைப்பதாகவும், உமர் அப்துல்லாவுக்கு நிர்வாகத் திறன் இல்லை என்றும் காஷ்மீரிகள் கருதுவதாக கூறினார்கள்.

அவர்கள் தொடர்ந்து சொன்ன செய்திகள் வாய்விட்டு கதறிஅழ செய்யக்கூடியவை. தமிழ் ஈழத்தில் சிங்கள ராணுவமும், பங்களாதேசில் பாகிஸ்தான் ராணுவமும் செய்திட்ட அட்டூழியங்களுக்கு நிகரானவை. அவர்கள் சொன்ன செய்திகளை அதே வார்த்தைகளில் உங்களுக்கு சொல்கிறோம். அது......,,,,

திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள். அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள். போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின் ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?

ராணுவத்தினர் எல்லா அநியாயங்களையும் செய்து முடித்து நகர்ந்த பிறகு அக்குடும்பத்தின் ஆண்களும், பெண்களும் கட்டிப்பிடித்து அழும் சோகத்தை எப்படி எங்களால் சொல்ல முடியும்? அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தூக்கத்தை தொலைத்து விட்டு அழும் குழந்தைகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் எத்தனையோ இரவுகள் கழிகிறது.

ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இதை செய்யும் துணிச்சல் இந்திய ராணுவத்திற்கு இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இது தினமும் நடக்கிறது. துணிச்சல் மிக்க சில குடும்பத்தினர் அதை வெளியே கொண்டு வரும் போது அவை பரபரப்பு செய்தியாகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி பெண்கள் தங்கள் கற்பை இழந்தும் கூட தங்கள் பிள்ளைகளுக்காக உயிருள்ள பிணங்களாய் துயரங்களை மூடிமறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?

நீங்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றதாக செய்தி ஊடகங்களில் அறிவீர்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்களில் 95 சதவிகிதம் பேர் அப்பாவிகள் என்று?

ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை பெறும்பாலும் ராணுவம் நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கும். அதில் இறப்பவர்கள் தான் ஆயுதங்களோடு போராடுபவர்களாக இருப்பார்கள். மற்றபடி அரசு படைகள் சுட்டுக்கொண்டதாக அடிக்கி வைக்கப்படும் இளைஞர்களின் பிணங்களெல்லாம் போலி எண்கவுண்டர் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

அதிகமானோரை சுட்டுக்கொன்ற வீரர் என்று விருதுகளையும், பதக்கங்களையும் பெறுவதற்காக இப்படி எங்கள் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொன்று கணக்கு காண்பிக்கிறார்கள். இப்படி விருதுளை பெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை ஏராளம்.

இவ்வளவு அநீதிகளையும், துயரங்களையும் நாங்கள் காஷ்மீரில் சுமக்கிறோம். குறைந்த பட்சம் எங்களின் நியாயங்களை, எங்கள் தரப்பு வாதங்களை இந்திய ஊடகங்கள் பேசாதது எங்களை மேலும் அந்நியப்படுத்துகிறது. அருந்ததிராய் போன்ற ஒரு சிலர் மட்டுமே எங்களுக்கு ஆறுதலாக பேசுகிறார்கள்.

நாங்கள் பாகிஸ்தானை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், எங்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இந்தியாவில் பா.ஜ.க சார்பு அமைப்புகள் சித்தரிக்கின்றன. உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அரசியல் விளையாட்டுகளிலிருந்து விடுதலை கேட்கிறோம். இங்கு நடப்பது மத போராட்டம் அல்ல. எங்கள் மண்ணின் விடுதலைக்காக மக்களே நடத்தும் போராட்டம். இதை காஷ்மீரில் உள்ள சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை மக்களும் புரிந்திருக்கிறார்கள்.
இப்படி அவர்கள் பேசிக்கொண்டே சென்றார்கள். நாங்களும் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தோம்.

இரவு மணி 12 மணிவரை பேசிவிட்டு அவர்கள் விடை பெற்றார்கள். எங்களுக்கு வேதனையாக இருந்தது. நியாயங்களும், உரிமைகளும் மறுக்கப்பட்டு, உண்மை வரலாறு புறக்கணிக்கப்பட்டு காஷ்மீர் குறித்து தவறான வரலாறு பரப்பப்படுவதை எண்ணி வருந்தினோம். எங்களோடு வந்த வழக்கறிஞர் வாசுதேவனும், புகைப்பட நிபுணர் சந்திரனும் அதே உணர்வில் பேசினர்.

அந்த இரவு 1 மணியை தாண்டியும் துக்கம் தொடர்ந்தது... தூக்கம் வராமல்! கண்ணீர் பெருகியது... காஷ்மீரை நினைத்து!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::