அழகிய தோடா நகரிலிருந்து ஸ்ரீ நகர் நோக்கி வேன் புறப்பட்டது. சினாப் பள்ளத்தாக்கிலிருந்து மெல்ல... மெல்ல... மலைகளில் ஏறிக்கொண்டிருந்தோம். மூன்று நாட்கள் தோடாவில் தங்கியிருந்த நாட்கள் அழகானவை. காஷ்மீரின் கதைகள் தான் எங்களை எழில்மிகு காட்சிகளை ரசிக்க விடாமல் வதைத்துக் கொண்டிருந்தது. எங்களை அனுப்பி வைத்த தோடா சகோதர்கள் இரவு 10 மணிக்கெல்லாம் நீங்கள் ஸ்ரீ நகர் சென்று விடலாம் என சொல்லியிருந்தார்கள்.
எங்கள் வாகன ஓட்டி திறமையானவராக இருந்தார். நாங்கள் புறப்படும் போது இடையில் வந்த அவரது உறவுக்கார பெண் அவரிடம், ஸ்ரீ நகர் போவதால் மலைகளில் பார்த்து போ என தாய்மையுனர்வோடு அறிவுறுத்தியதை பார்தோம். தாய்மையும், கவலையுடன் கூடிய எச்சரிக்கை உணர்வும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. நமது வீடுகளில் கூட தூரத்திற்கு பயணிப்பதாக இருந்தால் நம் வீட்டுப் பெண்களும் இப்படித் தானே அக்கறை காட்டுவார்கள்.
அந்த பெண்மனி இவ்வளவு அக்கறையாக நமது வாகன ஓட்டுனரிடம் ஏன் கூறினார் என்பது நாங்கள் பயணிக்கும் போது தான் உணர்ந்தோம்.
வண்டி சென்றுக் கொண்டிருந்த 1/2 மணி நேரத்தில் ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பினோம். பொதுவாக ஜம்மு & காஷ்மீரில் சாலைகள் எந்த அளவுக்கு மோசமோ அதே அளவுக்கு டிரைவர்களின் நடவடிக்கைகளும் மோசமாகவே இருக்கின்றது.
பயணிகளை பீதியில் ஆழ்த்தும் உடண் பயணிக்கும் பயணிகளை பீதியில் ஆழ்த்தும் வகையில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
ஆனால் இப்போது எங்களுடன் பயணிக்கும் அந்த டிரைவர் நிதானமானவராகவும், பண்புள்ளவராகவும் இருந்தார்.
ஆயினும் இவர் மலை மீது ஏறும்போது எதிரே ஒரு லாரியை 'ஓவர்டேக்' செய்து ஒரு டேங்கர் லாரி முன்னேறி வர, அதைப் பார்த்த நாங்கள் அனைவரும் திகிலடைந்தோம்.
நல்லவேளையாக, எங்களது டிரைவர் வண்டியை மிக லாவகமாக மலையோரம் நகர்த்தி விபத்திலிருந்து காப்பாற்றினார். வண்டியில் வலப்புறமாக உட்கார்ந்திருந்த O.U.R, J.S.R, ஹாருன் போன்றவர்களை நினைத்து ஒரு கணம் பதறிவிட்டோம்.
ஆனால், எங்களின் ஓட்டுனர் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், இது போன்ற நிகழ்வுகளை அவர்கள் அன்றாடம் எதிர்கொள்கிறார்கள். எனவே இது அவர்களுக்கு சகஜமாக தெரிகிறது.
இப்படி திகில் பயணம் போய்கொண்டிருந்த போது இடையில் ஒருவர் எங்கள் வண்டியை வழிமறித்து, பட்டோட் நகர் வரை செல்ல வேண்டும் ஏறிக்கொள்ளவா? என்றார். சரி என்றோம்.
விசாரிக்கும்போது, அவர் ராணுவ வீரர். மேற்கு வங்கத்தை சேர்ந்தவராம். எங்களுக்கு அவர் கொண்டு வந்த பேரிக்காயை கொடுத்தார். நாங்கள் பிஸ்கட்டுகளை கொடுத்தோம்.
இடையில் ஓரிடத்தில் சுனைநீர் ஊற்றிக் கொண்டிருந்தது. அதை ஒரு குழாய் அமைத்து ஒழுங்குப்படுத்தியிருந்தார்கள். உடனே நாங்கள் வண்டியைவிட்டு இறங்கி, அதை பருகினோம்.
குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருந்தது. அதில் முகம் கழுவிவிட்டு, வண்டியில் ஏறி மீண்டூம் பயணித்தோம்.
இதுபோன்று ஆங்காங்கே ஊற்றெடுத்து வரும் சுனை நீரைத்தான் மக்களும், ராணுவத்தினரும் பயன்படுத்திகிறார்கள் என்பதை பார்த்தோம். பட்டோட் வந்ததும், அந்த ராணுவ வீரர் இறங்கிகொண்டு, தனது வாடகையாக 100 ரூபாயை கொடுத்தார். ஜம்மு&காஷ்மீரில் இப்படிப்பட்ட ஒழுக்கம் உள்ள ராணுவ வீரர்களும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
ஆறு மணியளவில் ஒரு டீக்கடையில் நிறுத்தி டீ குடித்தோம். அருகில் சினாப் நதி வேகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு ஷியா பள்ளிவாசல் இருந்தது.
மீண்டும் புறப்பட்டபோதுதான் எங்கள் பயணத்தில் நாங்கள் எதிர்பார்த்திடாத மலைப்பாதைகள் எங்களை வரவேற்றது.
நான் என் கல்லூரி காலத்தில் வட கிழக்கு இந்தியாவில் பயணம் செய்து இருக்கிறேன். டார்ஜிலிங், கேங்டாக் (சிக்கீம்) மலைப் பகுதிகளில் கூட இவ்வளவு மோசமான உயரங்களையும், வளைவுகளையும் பார்த்ததில்லை.
ஆனால் இங்கே மலைத்தொடர்களும், பாதைகளும் பயங்கரமானவை. இமயமலையில் பீதியூட்டும் பகுதிகள் இவை. ஒழுங்கான சாலை தடுப்புகள் இல்லை. எந்த நேரமும் மலைச்சரிவு ஏற்படலாம் என்பது போன்ற சாலை அமைப்புகள் இருந்தது.
மேலிருந்து கீழே பார்த்தாலே மரணபயம் ஏற்படும் போல. அந்த பாதைகளில்தான் வாகன ஓட்டிகள் மிக மோசமாக வண்டிகளை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்.
கனரக லாரிகளும், டீசல் டேங்கர்களும், ராணுவ வண்டிகளும் தான் அதிகமாக பயணிக்கின்றன. இந்த வாகனங்களுக்கு மத்தியில்தான் பயணிகளும் பேருந்துகளும், கார்களும் மரண பீதியிலேயே பயணிக்கின்றன.
அண்ணாந்துப் பார்த்தால் உயர்ந்த மலைகளில் ஆங்காங்கே தனித் தனியாக வீடுகள். அபாயகரமான இடங்களில் மின்கம்பிகள். அந்த மலைகளில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? குழுந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள்? அவசர நிலையில் எப்படி நகருக்கு வருகிறார்கள்? என்பதெல்லாம் முக்கிய கேள்விகளாக மனதிற்குள் எழுந்தது.
சூரியன் மறைந்து 8 மணி அளவில் இருட்டியதும் ஒன்றும் தெரியவில்லை. மோசமான மலைப் பாதைகளை கடந்து வந்தபோது 2கி.மீ நீளமுள்ள நீண்ட குகைப் பாதை வந்தது. ஜஹவர்லால் நேருவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இருவழிப்பாதைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு கிலோமீட்டருக்கு சற்று கூடுதலாக அப்பாதை முடிகிறது.
குகைப்பாதையிலிருந்து வெளியேறியதும் TOLL GATE அமைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் நிறைந்திருந்த அப்பகுதியில் முதியவர்கள் காஷ்மீர் சால்வைகளையும், பிளம்ஸ் பழங்களையும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
அதன் பிறகு இரவு 9மணி இருக்கும் காஸிகோட் என்ற பகுதி வந்தது. இதுதான் மிக முக்கியமான பகுதி. ஜம்முவில் தொடங்கும் மலையேற்றப் பாதைகள் ஏற்ற, இறக்கங்களுடன் இங்குதான் முடிவு பெறுகிறது.
இங்கிருந்துதான் காஷ்மீர் பள்ளத்தாக்கு தொடங்குகிறது. நாங்கள் அங்கே ஒரு ரெஸ்ட்டாரண்டில் சாப்பிட போனாம்.
தொடர்ந்து சைவம் சாப்பிட்டதால், இம்முறை அசைவம் தேடிப்போனோம். ஒரு கடையில் விசாரித்தோம். அக்கடை ஊழியர் தமாஷாக பேசினார். சிக்கன், மட்டன் இல்லையெனில் காஷ்மீரே இல்லை என இந்தியில் ஜோக் அடித்து எங்களை சிரிப்பூட்டினார்.
தந்தூரி ரொட்டியுடன் இறைச்சி மற்றும் காஷ்மீரின் புகழ்பெற்ற இறைச்சி கோலா உருண்டைகளையும் தந்தனர்.
மிகுந்த உற்சாகத்தில் சாப்பிட தொடங்கினோம். ஆனால் எங்கள் உற்சாகம் நீடிக்கவில்லை. காரணம், ஒரே உப்பு ! அப்படியே வைத்துவிட்டு, சாட்பிட்டும் & சாப்பிடாமலும் கடையிலிருந்து வெளியேறி பக்கத்தில் இருந்த பள்ளிவாசலில், மஹ்ரிப் & இஷா தொழுதுவிட்டு புறப்பட்டோம்.
சமவெளிப் பகுதி ஆதலால் பயமின்றி எமது பயணம் தொடர்ந்தது. இடையிடையே எங்களை டாக்டர். அஜ்மலும், முசாபரும் எந்த இடத்தில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று விசாரித்த வண்ணம் இருந்தனர். அவர்கள் நாளைக்குதான் ஸ்ரீநகர் வருகிறார்கள்.
அவர்களின் நண்பர் ஷாநவாஸ் என்பவர் ஸ்ரீநகரில் எங்களுக்கு லாட்ஜ் ஏற்பாடு செய்து வைத்திருப்பதால், அவரும் எங்களை தொடர்பு கொண்டபடி இருந்தார்.
காஸிகோட்டிலிருந்து 1 மணி நேர பயணத்தில் ஸ்ரீநகர் வந்தோம். நகரின் நுழைவாயிலெங்கும் ராணுவ முகாம்களும், CRPF படையின் முகாம்களுமாகவே இருந்தது.
எங்கள் டிரைவர் வாடகை கார்கள் நிற்கும் பகுதியில் வண்டியை நிறுத்தினார். இரவு மணி 11 1/2 இருக்கும். எங்களுக்கு தெரிந்த ஆபித் அலி என்பவர் டவேரா காரை வாடகைக்கு அனுப்பியிருந்தார்.
நாங்கள் அதில் ஏறி லால் சவுக் அருகில் இருந்த ஹோட்டல் சாஹிலுக்கு வந்தோம். இதற்கு அருகிலேயே EXIBITION ROAD, ALSFA மார்க்கெட் மற்றும் முக்கிய சந்தைகள் இருக்கின்றன.
அந்த விடுதியின் உரிமையாளர் எங்களை வரவேற்று தங்க வைத்தார். மூன்று அறைகளில் எல்லோரும் தங்கினோம்.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment