Thursday, July 14, 2011

மக்கள் பிரதிநிதி!!!!!!!

யாநிதி!!!!




சாதாரண தமிழக அரசியல்வாதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றம். தமிழன் என்பதை ஓங்கி உரைக்கும் அடையாளங்கள் எதுவுமில்லை. கட்சிக் கொடியின் நிறத்தில் கரைவேட்டி, கதர் சட்டை, தோளில் ஒரு துண்டு சகிதம் முறுக்கிய மீசையுடன் தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாமல் நாடாளுமன்ற அவைகளின் இருக்கையில் முழித்து கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் எந்த கெட்டப்பும் இல்லாத மேனரிசம்.
சரளமாக நுனி நாக்கிலிருந்து வெளிப்படும் கான்வெண்ட் இங்கிலீஷ். அதுவும் ஆக்ஸ்ஃபோர்ட் ஆக்ஸண்டில்.கோட்டும், சூட்டும் கூடவே வெளிநாட்டு மூக்கு கண்ணாடியும் அணியும் பாணி. முடியை அழகாக வகுந்தெடுத்து சீவிய தோற்றம். ஆக மொத்தத்தில் ஒரு பிசினஸ்காரனின் லுக். மைக்ரோஸாஃப்டின் தலைவர் பில்கேட்சுடன் நெருக்கம். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் சீஃப் எக்ஸ்க்யூடிவ் ஆஃபிஸரோ? என எண்ணத்தோன்றும். ஒட்டுமொத்தமாக நடை, உடை, பாவனைகளில் கவர்ந்திழுக்கும் ஆளுமைத்தன்மை. வடநாட்டின் வெள்ளைத்தோலையும், ஹிந்தியையும், ஆங்கிலத்தையும் எதிர்கொள்ளும் திராணி பெற்ற தி.மு.கவின் டெல்லி பிரதிநிதி.
அவர்தான் தயா நிதி.
இந்த அடைமொழிகளையெல்லாம் கூறி என்ன பயன்? அதிர்ஷ்டம் வேண்டும்! கேரள பத்மனாபாசுவாமி கோயில் நிதியை (புதையல்) போலத்தான் தயாநிதியின் நிலைமையும். புதையலை கண்டுபிடித்தது தான் இப்பொழுது பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமாம். 2ஜி என்ற புதையல் ரகசியத்தை சி.ஏ.ஜி(comtroller and audit general of india) கண்டுபிடித்த பிறகு வந்த தொல்லைகள் தானே இதுவெல்லாம்.
தயாநிதியால் தி.மு.க-வுக்கு என்ன கதி ஏற்பட போகிறதோ? என்பது தமிழக மக்களின் உள்ளங்களை அலைக்கழிக்கும் கேள்வியாக மாறிவிட்டது. ஆனால் தி.மு.கவினர் தயாநிதியை சுமையாகத்தான் கருதுகிறார்களாம். பிசினஸையும் கவனித்து டிஸ்கோத்தே கிளப்புகளில் ஆனந்தமடைந்து துள்ளித்திரிந்த இளைஞனை பிடித்து அரசியலில் நுழையவைத்தவர் தாத்தா கலைஞர்தான். முதலில் வாரி வழங்கியது பொன்முட்டையிடும் வாத்து என கருதப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தி ஒலிபரப்பு துறை.
நாடு தகவல் தொழில்நுட்ப புரட்சியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் மாறனுக்கு யோகமும் அடித்தது. ஒரு சாதாரண பிசினஸ்காரன் என்ற நிலையிலிருந்து கோட்டும், சூட்டும் தரித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி பன்னாட்டு குத்தகை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் ஒரு ஃப்ரொபசனல் மினிஸ்டர் என்ற நிலையை அடைய தயாநிதிக்கு ரொம்ப காலம் தேவைப்படவில்லை. அதைப்போலவே அவருடைய வீழ்ச்சிக்கும் அதிக கால அவகாசம் தேவைப்படவில்லை.
பெயரும், புகழும் வளர்ச்சியடைந்தாலும் வீழ்ச்சியும் எளிதில் உருவானது. முன்பும் முழுமையாக 5 ஆண்டுகள் அதிகாரத்தை அனுபவிக்க முடியாமல் தயாநிதிக்கு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம், குடும்பத்தில் பதவியை போட்டியை கிளறிவிட்டது. இப்பொழுது இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவைலிருந்தும் இரண்டு ஆண்டுகளின் முடிவில் பதவியை பறிகொடுக்க வேண்டிய சூழல் தயாநிதிக்கு ஏற்பட்டுள்ளது. பதவியை முழுமையாக அனுபவிக்கும் தலைவிதி தயாநிதிக்கு இல்லைபோலும்!
ஆண்டி முத்த ராசா திகார் சிறையில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கும் போது கனிமொழி கவிதை வடிக்கிறாராம். இடையே கலைஞர் சென்று கனியை கண்டவுடன் கண்ணீரும் வடித்தார். தி.மு.க வை முன்னேற்றுவதற்காக கோடிகளை சம்பாதித்தது தான் இவர்கள் செய்த தவறு. தயாநிதி ஐ.டி அமைச்சராக பதவி வகிக்கும் பொழுதுதான் பன்னாட்டு குத்தகை நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முகாமிட்டன.
பிற மாநிலத்தவர்கள், சொந்த மாநிலத்தை ரொம்பவே கவனிக்கிறார் என அங்கலாய்த்த பொழுது தயாநிதி கூலாக கூறினார் ‘நான் தமிழகத்தின் அமைச்சர் அல்லவா’ என. மலையாள மாஃபியாக்கள் டெல்லியில் அதிகாரத்தை சுகித்து வாழும் பொழுது தமிழன் என்ன ஏமாளியா? தயாநிதி கோடிகளுடன் விளையாடினார். தயாநிதியின் குடும்பத்திற்கு நெருக்கமான அனந்தகிருஷ்ணன் என்ற தொழிலதிபர் சகோதரர் கலாநிதியின் நிறுவனத்தில் முதலீடு செய்தது 800 கோடி ரூபாய்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அவருக்கு உதவினார் என்பது தற்போதைய குற்றச்சாட்டு.கோடிகளுக்கு குறைவான பரிவர்த்தனை கிடையாது. 2004-ஆம் ஆண்டு தயாநிதி வெளியிட்ட சொத்து மதிப்பு 1 கோடியே 60 லட்சமாகும். தகவல் தொழில்நுட்பம் புரட்சியை நடைமுறைப்படுத்தி பதவியிலிருந்து விலகிய வேளையில் போதுமான அளவு சம்பாதித்திருப்பார். இப்பொழுது கோடிகளின் சாம்ராஜ்ஜியத்தை மாறன் சகோதரர்கள் ஆளுகிறார்கள்.
பதினான்கு ஆயிரம் கோடிகளின் நிறுவனங்கள் மாறன் சகோதரர்கள் வசம் உள்ளதாக கூறப்படுகிறது. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் கலாநிதியும் இடம்பெற்றார். பல்வேறு மாநிலங்களில் சன் நெட்வர்கின் கீழ் 25 தொலைக்காட்சி அலைவரிசைகள் செயல்படுகின்றன. ஒரு விமான நிறுவனம், இரண்டு நாளிதழ்கள், நான்கு மாத இதழ்கள், 45 எஃப்.எம்.ரேடியோ நிலையங்கள், ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம், டி.டி.ஹெச் சேவை, 27 நாடுகளில் பரந்துவிரிந்த கார்ப்பரேட் தொடர்புகள். இத்தகையதொரு வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் உச்சத்தில் இருக்கும் நபருக்கு கவனமெல்லாம் அந்த சாம்ராஜ்ஜியத்தை வலுவாக கட்டியெழுப்புவதில் தான் கண்கொத்தி பாம்பாக இருக்கும்.
மக்கள் சேவை, மக்கள் பிரநிதி என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள் தாம். இதுதான் தயாநிதிக்கும் நிகழ்ந்தது.
1966 டிசம்பர் ஐந்தாம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் பிறந்தார் தயாநிதி. கலைஞரின் பேரமருமகன் (மருமகனின் மகன்). அதாவது சகோதரி மகனின் மகன். எழும்பூர் டான் போஸ்கோ பள்ளிக்கூடம், லயாலோ கல்லூரி என தயாநிதியின் படிப்பு தொடர்ந்தது. பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூலில் பிரசிடெண்ட் மேனேஜ்மெண்ட் புரோக்ராமில் பங்கேற்றுள்ளார்.
ஹெல் ஃப்ரீஸஸ் ஓவர் (ஹெச்.எஃப்.ஒ) என்ற சென்னையில் செயல்படும் பிரசித்தி பெற்ற டிஸ்கோத்தே கிளப்பின் உரிமையாளர்களில் ஒருவர். அங்கிருந்து 2004 ஆம் ஆண்டு தேசிய அரசியலுக்கு தாவினார். படி படியான முன்னேற்றம் ஒன்றும் தயாநிதிக்கு இல்லை.தி.மு.க வின் உடன்பிறப்புகளைப் போல போராட்டங்களில் கலந்துக்கொண்ட அனுபவங்களும் இல்லை. மருமகன் மாறனின் மறைவிற்கு பிறகு அவரது வாரிசாக கலைஞர் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
தயாநிதியிடம் அரசியல் பிறப்பெடுத்தது மத்திய சென்னை நாடாளுமன்ற தேர்தலில் ஆகும். திக்கி திணறி தமிழ் பேசிய தயாநிதிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் உதவியவர் மாமா மு.க.ஸ்டாலின் ஆவார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார் தயாநிதி. கலைஞரின் தயவில் மூத்த தி.மு.க தலைவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கேபினட் அமைச்சரானார். தேசிய அரசியலில் விரைவாகவே முன்னேறினார்.
தயாநிதியின் அரங்கேற்றத்தில் டி.ஆர்.பாலு போன்ற மூத்த தி.மு.க தலைவர்கள் காணாமல் போயினர்.தி.மு.க வின் இரண்டாவது தலைவராக கருதப்படும் மு.க.ஸ்டாலினை விட டெல்லியில் செல்வாக்கையும், நம்பிக்கையும் பெற்றார் தயாநிதி. காங்கிரசுடனான நெருக்கம், ஊடகங்களில் அடிக்கடி இடம்பெற்றது இவையெல்லாம் தி.மு.கவினரே பொறாமையுடன் பார்த்தனர். மூத்த தலைவர்களையெல்லாம் தயாநிதி மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை. கட்சியின் தொண்டர்கள் தயாநிதியை ஒரு அந்நிய நாட்டை சார்ந்தவர் போலவே பார்த்தனர்.
2007 மே மாதம் தினகரன் நாளிதழில் வெளியான சர்வே ரிப்போர்ட் வினையாக மாறியது. ஸ்டாலின் முதல்வராக 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிப்பதாகவும், கலைஞரின் மூத்த மகன் அழகிரி முதல்வராக 2 சதவீதம் பேரே ஆதரவு அளிப்பதாகவும் அந்த சர்வே கூறியது. சொந்த மகன்களிடையே மோதலை ஏற்படுத்திட பேரமருகன் நடத்தும் நாடகம் என்பதை கலைஞர் புரிந்து கொண்டார். அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை தினகரன் அலுவலகத்தை தாக்கினர். தீவைத்து கொளுத்தினர். அப்பாவிகள் சிலர் பலியாகினர்.
தி.மு.கவின் நிர்வாக குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 143 பேரும் தயாநிதியின் ராஜினாமாவை கோரினர். இதனைத் தொடர்ந்து 2007 மே மாதம் 13-ஆம் தேதி பதவி விலக வேண்டிய நிர்பந்தம் தயாநிதிக்கு ஏற்பட்டது. கட்சியிலிருந்து வெளியான பொழுது அவருக்கு ஆதரவாக எந்த தி.மு.க தொண்டனும் முன்வரவில்லை. 2008 டிசமபர் மாதம் கலைஞருக்கும், மாறன் சகோதரகளுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டது. கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞரின் வீட்டில் மாறன் சகோதரர்கள் வந்த பொழுது ஒன்றரை ஆண்டுகால இறுக்கமும், வெறுப்பும் தணிந்தது.
மத்திய சென்னையில் மீண்டும் போட்டியிட்டார் தயாநிதி. வெற்றி பெற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சராக பதவியேற்றார். 600 கோடி ரூபாயை கருணாநிதிக்கு அளித்துவிட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என புரட்சி தலைவி(?) ஜெயலலிதா குற்றம் சாட்டினார். தயாநிதிக்கு கோடிகள் எட்டா கனி அல்லவே!
உலகமயமாக்கலின் வாய்ப்புகளை பயன்படுத்தி ஐ.டி துறையில் முதலீடுகளை கொண்டு வந்த கார்ப்பரேட் தரகு நிறுவனங்களின் உற்ற தோழன் என்பதால் அவர் மீது மிதமான நடவடிக்கைகள் மட்டுமே எதிர்பார்க்கலாம். தயாநிதியை விட குறைந்த குற்றங்களுக்காகத்தான் ஆண்டி முத்த ராசா சிறையில் வாடுகிறார். தொலைத்தொடர்பு துறை உண்மையான ராசா வெளியேத்தான் உள்ளார். நீதி நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் தயாநிதிக்கு பிசினஸ் போக மீதமுள்ள நேரத்தை இனி மீண்டும் டிஸ்கோத்தே கிளப்பிலேயே கழிக்கலாம்.
அ.செய்யது அலீ
thanks to : thootuonline

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::