Tuesday, May 17, 2011

மூடநம்பிக்கைகள்

மூ டநம்பிக்கையின் முடிச்சுக்கள் எப்போது அவிழ்க்கப்படும்?


“மூடநம்பிக்கைகள் வளரக்காரணம் நமது மனம்தான்"


- முஹம்மட் பிறவ்ஸ்

நாம் மூதாதையர்களின் வாழ்க்கைக் கோலத்தைப் பின்பற்றுகின்றோமோ இல்லையோ… அவர்கள் விட்டுச்சென்ற மூடநம்பிக்கையினை மட்டும் பின்பற்றுகின்றோம். ஒரு காரியத்தை செய்யக்கூடாது என்றால் ஏன் ஏதற்கு என்று யோசிப்பதில்லை. அவர்கள் செய்யவில்லை அதனால் நாமும் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கின்றோமே தவிர அதன் உள்ளீட்டு விடயங்களை ஆராய்வதில்லை. அதுமட்டுமில்லை அவர் செய்த (மடத்தனமான விடயங்கள் என்றாலும் பரவாயில்லை) விடயங்களை அப்படியே பின்பற்றி ஒழுகுகின்றோம். இது அதிகமாப் பின்பற்றப்படுவது கிராமங்களில்தான். நகருக்குள் வந்த மக்கள் அதன் யதார்த்தங்களைப் புரிந்துகொண்டுள்ளார்கள். மக்கள் இதனைப் பின்பற்றுகின்றார்கள் என்றால் மூதாதயர்களைப் பழிசொல்ல முடியாது. அவர்களது காலத்தில் கல்வியறிவு குறைவு. ஆவர்கள் தங்களுக்குள் ஒரு எல்லையை நிர்ணயித்துக்கொண்டு அதற்குள் வாழ்ந்தார்கள். அதனை நாம்தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

“பூனை குறுக்கே சென்றால் பயணம் சரிவராது, காகம் வெள்ளை நிறத்தில் எச்சில் போனால் அபிவிருத்தி, மாலையில் அரிசி, பருப்புகளை கடன் கொடுக்கக் கூடாது, வியாபாரத்தில் முதலில் நல்ல கையுள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் பண்ணவேண்டும்” இப்படி கோடிக்கணக்கான மூடநம்பிக்கைகள் எம்மிடையே காணப்படுகின்றன. பூனைக்கு அவசரம் என்பதால் அது குறுக்கே செல்கிறது. அதற்கும் நமது பிரயாணத்திற்கும் என்ன சம்பந்தம்? அப்படியென்றால் தற்போது பிரயாணங்களில் ஏற்படுகின்ற அனைத்து விபத்துகளுக்கும் இந்த “அப்பாவி பூனைதான்” காரணமா? எங்கோ இருக்கின்ற பூனையை இங்குள்ள ஒரு சம்பவத்துடன் ஒப்பிடுவைப் பார்க்கையில் சிரிப்புத்தான் வருகின்றது. காக்கையின் எச்சம் தலையில் பட்டால் அபிவிருத்தி இலங்கை ஏன் அபிவிருத்திக்கு இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும். பேசாமல் காக்கைகளை வளர்த்து அதன் எச்சங்களை எம்மீது படவைக்கலாமே… என்ன உலகம் இது.

அயலவன் ஒருவன் பசித்திருக்க நாம் மட்டும் புசிப்பதற்கு மூதாதையர்கள் மேல் பழியை போட்டு மாலையில் கடன் கொடுக்கக்கூடாது என்கின்றோம். கடனில் இரவுக்கடன், பகல் கடன் என்றெல்லாம் வேறுபாடு இல்லை. வியாபாரம் பெருகவேண்டுமாயின் விற்பனை அதிகரிக்க வேண்டும் வேறொன்றும் இல்லை.

இதுபோலத்தான் ஜோசியமு;. நம்மில் பலர் ஜோசியத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம். காலை எழுந்தவுடன் இன்றைய நாள் எப்படி நமக்கு அமைகின்றது என்பதைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்தடுத்த வேலைகளைச் செய்கின்றோம். நமது எதிர்காலத்தை அல்லது ஆயுளை ஒருவரால் எதிர்வு கூறமுடியும் என்றால் ஏன் அவரால் நம்நாட்டு நடப்புகளை எதிர்வுகூறமுடியாது போகின்றது. இல்லையில்லை, எதிர்வுகூற முடியும் என்றால் நான் உங்களை ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்துவதற்கு முன்னர் அவற்றை மக்களுக்கு அறிவித்து பாரிய அழிவுகளில் இருந்து மக்களை விடுவித்திருக்கலாமே. உங்கள் எல்லோருக்கும் ஞபாகமிருக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கதான் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்றார். ஆனால், நடந்தது என்ன?

நான் ஜோசியர்களின் தொழிலுக்கு ஆப்புவைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஒருவர் ஜோசியம் சொல்கிறார் என்றால் அவர்களது கையில் ஏதோ ஒரு புராண ஏடு இருக்கும். இது காணாமல் போனால் தொழில் அம்போதான். அப்படி என்றால் நாங்கள் நினைப்பதை சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். ஒருவருடைய மனதை நாம் அறிவது ஒருவகையான கலை. இதை நீங்கள் கூட செய்யலாம். பின்னர் ஒருவருடைய எண்ணங்களை உங்களால் யூகிக்கமுடியுமானால் நீங்களும் ஜோசியர்தான். நாம் ஒருவிடயத்தைப்பற்றி யோசிக்கும்போது நமது மூளை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்னுடன் அதிருகின்றது. இதை நம்மால் உணரமுடியாது. இதை சிறந்ததொரு உதாரணம் மூலம் விளக்கலாம். நம்மில் இருவர் ஒரு விடயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது குறித்தவொரு செக்கனில் இருவரும் ஒரே விடயத்தைப் பற்றிப் பேச வாயெடுப்போம். ஒருவர் நீ என்ன சொல்ல வந்தாய் என்று கேட்க மற்றவர் பதிலளிக்கும்போது அட நான் கூட இதைத்தான் சொல்ல வந்தேன் என்பார்கள். இருவரும் ஒரு கணத்தில் ஒரே விடயத்தைப் பேச விளைந்துள்ளார்கள். அங்கு நடந்தது என்ன? இருவருடைய மூளையுமே ஒரே அதிர்வெண்ணில் அதிர்ந்துள்ளன. இது ஏனைய ஒருவரின் அதிர்வெண்களுடன் பொருந்தாது. அவ்வாறு பொருந்தினால் நாம் பைத்தியக்காரர்களாகி விடுவோம். ஓவ்வொருவருடைய மூளையும் ஒவ்வொரு அதிர்வெண்களில் அதிருகின்றன.

ஒரே இடத்தில் ஒரு விடயத்தைப் பற்றிப் பேசும்போது சிலவேளைகளில் மட்டும் இருவருடைய மூளையின் அதிர்வெண்கள் ஒருங்கிசைந்துபோகின்றன. நாம் மனதை ஒரு நிலைப்படுத்தி பலவிதமான உளவியல் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இன்னொருவருடைய மூளையின் அதிர்வெண்னுடன் நமது மூளையின் அதிர்வெண்ணை ஒருங்கிசைக்க முடியும். இதனையே ஜோசியகர் கடைப்பிடிக்கிறார்கள். நாம் தூக்கத்தில் இருந்தவாறு ஜோசியம் கேட்பதில்லைதானே. நாம் ஜோசியரிடம் செல்லும் போது நமது பிரச்சினைகள், அவர் என்ன சொல்ல வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோமோ அவற்றையும் நினைத்துக் கொண்டுதானே செல்கின்றோம். அப்போது நம் மனதில் உள்ளதை அவர் பட…பட…வென சொல்ல நமது உச்சி குளிர்ந்து போகின்றது. வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டுமானால் கடவுளிடம் கேளுங்கள். அல்லது நம்மைப் பற்றி பிறர் ஒருவர் கூறவேண்டுமானால் உங்களைப் பற்றித் தெரிந்த ஒருவரிடம் கேட்டு திருப்தியடைந்து கொள்ளுங்கள்.

ஒருவருடைய மூளையின் அதிர்வெண் இன்னொருவின் மூளையின் அதிர்வெண்ணுடன் ஒருங்கிசைவதால் ஒருவருடைய எண்ணங்களை மற்றவர் புரிந்து கொள்ளலாம் என்பதை நம்புவதற்கு மறுப்பவர்களுக்கு சிறியதொரு சம்பவத்தைக் கூறுகின்றேன். வானொலிகள் எவ்வாறு இயங்குகின்றன என நீங்கள் சிந்தித்ததுண்டா? வானொலிப்பெட்டியை நீங்கள் கழற்றிப் பார்த்தால் தெரியும். வானொலியில் அலைவரிசையை மாற்றும் (வுரநெ) பொத்தான் இறுதியாக ஒரு சதுர வடிவிலான சிறிய பெட்டி ஒன்றுடன் தொடர்புபட்டிருக்கும். அந்தப் பெட்டியை உன்னிப்பாக அவதானித்தால் அவற்றில் மெல்லிய பொலித்தீன் போன்ற ஒரு பொருள் பல பல தட்டுக்களாக அடுக்கப்பட்டிருக்கும். வானொலி அலைவரிசையை மாற்றும் போது அவற்றுக்கிடையிலான தூரம் வேறுபடுவதை நீங்கள் அவதானிக்கலாம்.


வானொலி நிலையங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அலைவரிசையில் தமது நிகழ்ச்சிகளை ‘ஒலி’ வடிவில் அனுப்புகின்றது. அவை காற்றில் அந்தந்த அலைவரிசைகளுக்கேற்ப அதிர்ந்து செல்கின்றன. இவை மெகாஹேட்ஸ் அளவுகளில் இருப்பதனால் அதை நம்மால் உணரமுடியாது. மனிதனால் குறிப்பிட்ட அளவான அதிர்வெண்ணுடைய அலைகளை மட்டுமே உணர (கேட்க) முடியும். வானொலி நிலையங்களில் அலைவரிசை தொடர்சியாக சென்று கொண்டிருக்கும் போது நாம் வானொலிக்பெட்டியை இயக்கினால் அலைவரிசையை மாற்றும் ஆளியின் திரும்பலுக்கேற்ப அலவரிசை மாறுபடும். இந்த இரு அலைவரிசைகளும் ஒரே அதிர்வெண்ணில் இருக்கும் போது வானொலிப்பெட்டி பாட ஆரம்பிக்கின்றது. அலவரிசையை மாற்றும் உபகரணத்திலுள்ள மெல்லிய இழைகளின் தூரம் மாறுபடும் போது அவற்றின் அலைவரிசை (அதிர்வெண்) களும் மாறுபடுகின்றன. இது உதாரணமாக 94.5 மெகாஹேட்ஸ் எனும் அதிர்வெண்ணுடன் அதிர்ந்தால் அந்த அலைவரிசையில் எந்த வானொலி அப்பிரதேசத்தில் தனது அலைகளை வெளிப்படுத்துகின்றதோ அந்த வானொலி ஒலிபரப்பும் வானொலி நிகழ்ச்சிகளை நம்மால் கேட்கக் கூடியதாகவுள்ளது.


சரி, சம்பவத்துக்கு வருவோம். உங்களுக்குத் தெரியும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. அலைவரிசை குறிப்பிட்ட அளவுக்குள் (89.5-108 மெகாஹேட்ஸ்) வரை மட்டுப்பட்டிருப்பதால் ஒவ்வொரு, இடங்களும் ஒவ்வொரு அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வானொலியின் அலைவரிசைகள் அருகருகே சிறியளவிலான மாற்றங்களுடன் இயங்குகின்றன. அது மட்டுமல்லாது ஆறு, யுஆ, அலைவரிசைகளிலும் வானொலிகள் இயங்குகின்றன. அங்கு மிகக்குறைந்த அலைவரிசைகளில் வானொலி நிலையங்கள் தங்களது ஒலிபரப்புக்களை மேற்கொள்கின்றன. இவ்வாறானதொரு வானொலி குறைந்த அலைவரிசையில் தனது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் சமயத்தில், அந்த ஊரில் உள்ள ஒரு வீட்டில் தேநீர் தயாரிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் நீரைக்கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அது கொதிக்கத் தொடங்கியதும் கொதி நீராவியின் மேலீட்டால் பாத்திரம் மூடப்பட்டுள்ள மூடி அதிரத் தொடங்கியது. அந்த அதிர்வெண் அந்த வானொலி நிலையத்தின் அதிர்வெண்ணுடன் ஒத்துப்போனதால் அந்தப் பானை பாடத்தொடங்கிவிட்டது. நம்மவர்கள் கண்டால் அடடா என்ன அதிசயம் என்று நினைத்து சடங்கே நடத்தியிருப்பார்கள். நமது சுண்டுவிரலை காற்றில் அதே அதிர்வெண்ணுடன் அசைக்க முடியுமென்றால் நமது விரல் கூட பாட ஆரம்பித்துவிடும். இது உயிருள்ள எந்த ஜீவராசிகளாலும் முடியும் என்றால், எங்கு திரும்பினாலும் பாட்டுச்சத்தமாகவே இருந்திருக்கும். கடவுள் எம்மைக் காப்பாற்றி விட்டார். அதற்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

மூட நம்பிக்கைகள் வளரக் காரணம் நமது மனம்தான். நம் மனதில் ஒரு விடயத்தை ஆழமாகப் பதிந்துவிட்டால் யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம். அது அந்தளவுக்கு ஊறிப்போய் விட்டதுதான் காரணம். நமக்கு பாட்டி ஒரு பேய் கதை சொன்னால் நாம் இரவில் கூட வெளியேற மாட்டோம். அந்த இரவு பேய் வரும் என்றில்லை. இரவானால் பேய் வரும் என்ற நம்பிக்கை தான் காரணம். இவ்வாறுதான் அதிகமானவர்களுக்கு மனவியாதிகள் ஏற்படுகின்றன. இவற்றைப் பரிகாரிகள் தான் குணமாக்குவார்கள் என்றொரு நம்பிக்கை தொன்றுதொட்டு வருகின்றது. நாம் அவர்களிடம் போனால்தான் அவை குணமும் ஆகின்றது. இதற்கு என்ன காரணம் வேறொன்றுமில்லை, நமது நம்பிக்கைதான் காரணம். நாம் குணமாகும் என்று நம்பிக்கை வைக்கின்றோம். அவை குணமாகின்றது. பிரச்சினை நம் மனதில்தான் இதற்கு பின்வரும் சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமையும்.

ஒரு பெண்மணி தான் பலகாரம் சாப்பிடடுக் கொண்டிருக்கும்போது அதன் வன்மைத்தன்மை காரணமாக பலகாரம் கடிபடும் போது பல்லும் உடைந்துவிட்டது. உடைந்த பல்லைக் காணவில்லை. வெளியே வந்து வாயில் இருந்ததை உமிழ்ந்து பார்த்தார். அங்கும்காணவில்லை. அப்பெண்மணி வைத்தியர்களைவிட பரிகாரிகளையே அதிகமாக நம்புபவராக இருந்தமையினால் தனது பிரச்சினையை ஒரு பரிகாரியிடம் முன்வைக்கின்றார். அப்பரிகாரி என்ன செய்கின்றார் தெரியுமா? தான் வெற்றிலை பாக்கை மென்று கொண்டிருக்கும்போது தனது வாய்க்குள் ஒரு செயற்கைப் பல்லையும் வைத்துக்கொண்டு அவற்றை “படிக்கம்” என்றழைக்கப்படும் ஒரு பாத்திரத்தினுள் உமிழ்கின்றார். பின்னர், அப்பெண்மணிக்கு ஏதோ மந்திரம் (என்ன பாஷை என்று தெரியவில்லை) ஒன்றை ஓதி ஒரு தண்ணீர் கிளாசைக் கொடுத்து அதில் வாயைக் கொப்பளிக்குமாறு கூறுகின்றார். அப்பெண்மணியும் அதை நம்பி அப்படியே செய்கின்றார். பின்னர், அப்பாத்திரத்தை வெளியே சென்று கழுவி வருமாறு கூறவே, அப்பெண்மணி பாத்திரத்தை கீழே கொட்டும் போது அதில் ஒரு பல் விழுந்து கிடப்பதைக் காண்கின்றார். உடனே, அதைக் கழுவி எடுத்துக்கொண்டு அவரிடம் கொடுக்கின்றார். அப்பெண்மணிக்கு பல்லைக் கண்டதுமே மூன்று நாளாக இருந்துவந்த வயிற்று வலியும் நீங்கிவிட்டது. நோய்க்கு நிவாரணம் கிடைத்தாயிற்று, பிறகென்ன பணத்தைக் கட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.

மேற்படி, சம்பவத்தை நாம் ஆராயும் போது சில விடயங்கள் நாம் உற்று நோக்கினால் அது எந்தளவுக்கு மூடத்தனமானது என்று விளங்கும் பரிகாரி தான் வாய்கொப்பளித்த பாத்திரத்தையே ஏன் கொடுக்கவேண்டும்? அது வெற்றிலை பாக்கு சுவைத்த வாயை கழுவிக் கொப்பளிக்கின்றார். வெறுமையான தண்ணீர் பாத்திரம் என்றால் அதுதான் காட்டிக்கொடுத்துவிடுமே. அதுவும், உடனேயே பரிகாரம் பண்ணாமல் பிரிதொரு தினத்தில் வரச்சொல்லுவது எதற்காக? பெண்ணின் பக்கம் சென்று பார்த்தால் வீட்டிலே எவ்வளவோ வாய்கொப்பளித்தும் பல்லைக் காணாததால் வயிற்றுவலி நிற்கவில்லை. ஆனால் பரிகாரியிடம் சென்றபின் பல்லைக் கண்டவுடனேயே வயிற்றில் இருந்து ஏதோ ஒன்று வெளியேறியது போல பிரமிப்பு, வயிற்று வலியும் குணமாகிவிடுகின்றது. நடந்தது என்ன? அதிசயம் எதுவுமே நிகழவில்லை. பெண்மணி பரிகாரியை நம்பினார். பரிகாரி தனது தந்திரத்தை நம்பினார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் இது ஒரு கட்டுக்கதை என்று நினைத்தவிடாதீர். அந்த பரிகாரியிடம் பணியாற்றிய சிஷ்யன் ஒருவர் பகிரங்க விளக்கக்கூட்டம் ஒன்றில் கூறிய சம்பவமே இது…. நம் மனதை எது ஆளுகின்றதோ அதற்கு நாம் இலகுவாக கட்டுப்பட்டு விடுகின்றோம். இதுதான் யார்த்தமான உண்மை.


சம்பவம் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் அஸ்லம் பாபாவுக்கு நடந்த சம்பவம் உங்களில் அனேகமானவர்களுக்கு தெரிந்திருக்கும். இறைச்சிக்கடை வைத்திருந்த ஒருவர் பரிகாரியான கதை. ஆங்கில வைத்தியமுறைகளால் தீர்க்கமுடியாமல் போன நோய்களும், கைவிடப்பட்ட நோயாளிகளுக்கும் தன்னால் பரிகாரம் வழங்கமுடியும் எனக் கூறி பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி வந்தான். நடக்கவே முடியாத நோயாளிகளுக்கு கதிரைகளால் அடித்தான், அவர்கள் வைத்திருந்த தடிகளைப் பிடுங்கி அடித்தான். இதனால், நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்களும் அதனைத் தாங்கிக் கொண்டனர். நோயாளிகளின் வயிற்றில் உள்ள கட்டிகளை எந்தவிதமான கீறல்களும் இல்லாமல் வெளியே எடுத்தான். அவனிடம் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போனார்கள் அவனது புகழ் சர்வதேச மட்டத்தில் கூட சென்றுவிட்டது. இதன் உள்ளக விடயங்களை அறியும் பொருட்டு விஜய் ரிவியின் “குற்றம் நடந்தது என்ன?” எனும் நிகழ்ச்சிக்குப் பொறுப்பானவர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து அவனது கொடுமைகளையும், தந்திரங்களையும் விடியோ எடுத்து அம்பலமாக்கினார்கள் பின்னர், அவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டான்.

அங்கு நடந்தது இதுதான் காயமில்லாமல் வயிற்றுக்குள் கட்டியை எடுக்கின்றேன். ஏன்று கூறி தனது மடியின் கீழுள்ள இறைச்சித்துண்டுகளை யாருக்கும் தெரியாமல் லாவகமாக வெள்ளைக் கடதாசியினுள் எடுத்துக் கொண்டு, கட்டி எடுக்கவேண்டிய இடத்தில் அதை வைத்துக்கொண்டு கத்தரிக்கோலினால் கடதாசியைக் குடைந்து அந்த இறைச்சித்துண்டை வெளியே எடுத்து இதுதான் உங்களிடம் இருந்த கட்டி என்கிறான். இதை அறியாத அப்பாவிப் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அவனிடம் வைத்தியம் பார்த்தனர். இக்காட்சி விஜய் ரிவியின் கமராவுக்குள் அகப்படவே அவனது பிழைப்பு நாறிப்போனது.

அண்மைய சூரிய கிரகணத்தின்போது சுனாமி வரும் அல்லது பாரியளவிலான இயற்க்கை அனர்த்தம் வரும் என்று பல ஜோசியர்கள் எதிர்வு கூறினார்கள் குறிப்பாக அனர்த்தம் நிகழும் காலத்தை தெளிவுபடுத்திக் காட்டியிருந்தார்கள். இவர்களை நம்பிய பல அப்பாவிப் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டும் குடியகழ்ந்து சென்றனர். ஈற்றில் நடந்தது என்ன? தேவையில்லாத மனப்பீதிகளை கட்டிவிட்டதுதான் மிச்சம் மனிதன் நினைப்பது எல்லாம் நடந்தால், அதுவும் அந்த காலகட்டத்திலேயே நடந்தால் கடவுள் என்றொருவர் தேவையில்லைத்தானே? நாம் எதிர்பாராதநேரத்தில் எதிர்பாராத சம்பவம் நடப்பதுதான் கடவுள் நம்பிக்கைக்கு அத்திவாரம்.


நான், மனதில் எதை நினைக்கின்றோமோ அதுதான் மூடநம்பிக்கை வளரக் காரணமாகின்றது. உதாரணமாக சிறுவயதில் நமக்குப் பாட்டி பேய்க்கதை சொன்னால் இரவில் வெளியே செல்லமாட்டோம். ஏனென்றால், காண்பதெல்லாம் பேய் போலத்ததன் இருக்கும் நம்மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் அதை மனதிலிருந்து அழிக்காதவரை அதற்கான பரிகாரத்தை தேடமுடியாது. நமது மனம்தான் நமக்குத் தெரியும், நண்பனும் நமது மனதை நம்மால் ஆளமுடியுமானால் நாம்தான் மேம்பட்ட மனிதர்கள்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::