Wednesday, February 9, 2011

ஓதுவோம் வாருங்கள்


இப்னு மர்யம்

நமது முன்னோர்கள்

“பெரிய, பெரிய மேதைகள் எல்லாம் செய்திருக்கிறார்களே” என்ற பதில் சரியானதன்று என்பதை நாம் தெரிந்து கொண்டோம். குறிப்பாக நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் எனப்படுவோரில் பெரும்பாலோர் அறிஞர்களாக, குர்ஆன் ஹதீஸை அறிந்தவர்களாக இருந்திருக்கவில்லை. மாறாக அரபுத்தமிழ் படித்துவிட்டுத் தங்களை அறிஞர்கள் என்று காட்டிக் கொண்டனர். தெளிவான சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதனால்தான் “ஆங்கிலம் படிப்பது ஹராம்” என்று ‘பத்வா’ வழங்கினார்கள். முழுக்கால்சட்டை (பேண்ட்) அணிவது கூடாது என்று கூறினர். றபி(ஸல்) அவர்கள் முடி வளர்த்திருக்க, நபித்தோழர்களில் மிகப் பெரும்பாலோர் முடி வளர்த்திருக்க, இவர்கள் மொட்டை அடிப்பதை மார்க்கமாக்கினார்கள். பல இளைஞர்கள் நாத்திகத்தை நோக்கிச் செல்வதற்கு இது போன்ற ஆதாரமற்ற தீர்ப்புகளே காரணங்களாயின.

“முஸ்லிம்களில் பலர் கோவில்களுக்குச் செல்லத் துவங்கிவிட்டனர்” என்று காரணம் காட்டி சமாதிகளைக் கோவில்களாக்கினர். “கோவில்களுக்கு முஸ்லிம்கள் செல்வதைத் தடுத்துவிட்டோம்” என்று கூறிக் கொண்டனர். இஸ்லாத்திற்குள்ளேயே பல தெய்வ வணக்கத்தை ஏற்படுத்தியதை அவர்கள் உணரவில்லை.

தேர்த்திருவிழாக்களுக்கு முஸ்லிம்களும் சென்று தேர் இழுக்கத் துவங்கி விட்டதைக் கண்ட அந்த முன்னோர்கள், “நீங்கள் அங்கே செல்ல வேண்டாம்! இங்கேயே நாம் தேர் இழுப்போம்!” என்று தர்ஹாக்களில் தேர்களைப் பவனிவரச் செய்தனர் – அந்தக்காலத்து அறிஞர்கள். (?)

கடவுள் சிலைகளுக்குப் பால் அபிஷேகம் செய்வதைக் கண்டவர்கள், இங்கே சமாதிகளுக்கு சந்தன அபிேஷகம் செய்யத்தூண்டினர்; அங்கே ‘துவஜாரோகனம்’ என்ற பெயரில் கொடியேற்றினால் இங்கேயும் கொடியேற்றம்.

அங்கே கதாகலேட்சேபம், வில்லுப்பாட்டு என்று நடந்து கொண்டிருக்க, இங்கே அதே அமைப்பில் நூறுமஸாலா அப்பாஸ் நாடகம் என்ற பெயர்களில் இஸ்லாத்திற்குச் சம்பந்தம் இல்லாத கட்டுக் கதைகள் அரங்கேற்றினார்கள். இதற்கெல்லாம் காரண கர்த்தாக்கள் இந்த முன்னோர்களே.

சாவு வீட்டில் திதி, திவசம் என்று பணம் பறிக்கும் மோசடியை மூன்றாம், ஏராம், நாற்பதாம் பாத்திஹா என்ற பெயரில் இங்கே உருவாக்கினர். தங்கள் தொப்பையை அதன்மூலம் வளர்த்துக் கொண்டனர்.

திருனீறு, விபூதி என்று அங்கே வழங்கப்பட்டால், இங்கே அதே பக்தி சிரத்தையுடன், காய்ந்து போன பூக்களையும் சாம்பிராணிச் சாம்பலையும் ‘தப்ரூக்’ என்ற பெயரில் வழங்கத் துவங்கினர், அன்றைக்கு அறிஞர்கள் என்று பெயர் வாங்கியவர்கள்.

அங்கே இறந்து போனவர்களுக்காகப் பலவிதமான உணவு பொருட்களை வைத்துப் படையல் செய்யப்படுவதற்கு ஈடாக இங்கே பாத்திஹா என்ற பெயரில், படையலை உண்டாக்கியவர்களும் அன்றைய அறிஞர்களே!(?)

அவர்கள் தெய்வங்களுக்குப் பூ, பழம், தேங்காய், சூடம் என்று காணிக்கை செலுத்தப்படுவதற்குப் பதிலாக இங்கே சர்க்கரை ஊதுபத்தி என்று ஏற்படுத்தினார்கள். அங்கேயும் உண்டியல் இங்கேயும் உண்டியல்!

தாயத்துக் கட்டுவதையும், தகடுகள் எழுதுவதையும், நூல் முடிவதையும் அங்கிருந்து கற்றுக் கொண்டனர். பெயர் சூட்டுவதும் திருமணம் நடத்துவது, மரணச் சடங்குகள் நடத்நதுதல், கட்டிடங்களுக்கு அஸ்திவாரம் இடுதல், நிலை வைத்தல், புதுமனை புகுவிழா மற்றும் பெண்கள் பருவம் எய்துதல், வெளியூர்ப் பயணம் செல்லல் போன்றவற்றுக்குச் சில சடங்குகளை உருவாக்கி, “புரோகிதர்கள் இல்லாமல் அவற்றைச் செய்ய முடியாது” என்று அங்கே உள்ளது போல் இங்கேயும் புரோகிதர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டவர்களும் இந்த அறிஞர்களே.

இப்படி எல்லாம் தங்கள் மார்க்கத்தைப் புரோகிதர்களிடமிருந்து கற்றுக் கொண்டு அதனை இஸ்லாம் என்ற ‘லேபிளி’ல் பரவச் செய்தனர். குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் இவர்கள் தங்கள் மார்க்கத்தைக் கற்றிருக்கவில்லை.

அதனால் தான், சில பைத்தியக்காரர்களைக் கூட ‘மஸ்தான்கள்’ என்று பட்டம் சூட்டி மக்கள் வழி தவறும்போது மவுனம் சாதித்தனர். அங்கே தீட்சை வழங்குவது போல், இங்கே முரீது வியாபாரத்தைச் சிலர் துவக்கியபோது, மவுன விரதத்தை மேற்கொண்டனர். எத்தனையோ கிஸ்ஸாக்கள் இஸ்லாத்தின் பெயரால் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது அதற்கு எதிராக, வாய் திறவாமல் இருந்தனர். அவ்லியாக்களின் வாரிசுகள் என்று, கஞ்சா அடித்துக் கொண்டு பக்கிரிசாக்கள் ஊர்ஊராக வலம் வந்து மக்களை ஏமாற்றியபோதும் அதைப் பற்றி வாய் திறந்ததில்லை இவர்கள்.

தமிழ் மக்கள் இஸ்லாத்தை முழுமையாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, குர்ஆனையும் நபிமொழிகளையும் தமிழில் தராமல் மறைத்ததும் நமது முன் அறிஞர்களே.

ஆண்களும், பெண்களும் கலந்து, ஒட்டி உரசிக் கொள்ளும் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்குத் தன் மனைவி மக்களை அழைத்துச் சென்ற மிகப் பெரிய அரபிக் கல்லூரி முதல்வர்களும் இருந்திருக்கிறார்கள். கந்தூரியன்று நடக்கும் பல தீமைகளில் தாமும் இரண்டறக் கலந்து கொண்ட மிகப்பெரும் (?) அறிஞர்களும் இருந்திருக்கின்றனர். அவர்களை இன்றைக்குக்கூட “பெரிய ஹஜ்ரத்” என்ற லேபிளில் தான் மக்கள் குறிப்பிடவும் செய்கின்றனர்.

கப்ருக்களுக்குக் கட்டிடம் கட்டும் விழாவுக்கும் அதன் திறப்பு விழாவுக்கும் தலைமை தாங்கிய ஆலிம்களும் இருந்திருக்கின்றனர்; இருக்கின்றனர். தங்கள் வயிறு நிறைவதற்காக எது செய்யவும் தயாராக இருந்தவர்கள் கடந்த காலத்தில் அறிஞர்கள் என்ற பெயரில் உலா வந்தவர்களில் பெரும்பாலோர்.

இத்தகையவர்களைப் பின்பற்றினால் எப்படி நேர்வழி அடைய முடியும்? எனது சொந்த ஊரில் நடந்ததாகப் பெருமையோடு மக்கள் பேசிக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவுபடுத்துகிறேன். பள்ளிவாசலும் ஒரு சமாதியும் அருகருகே இருக்கின்றன. சமாதியில் ஒரு கந்தூரி விழா! அதில் மவ்லிது நடந்ததாம். அதில் ஒரு அவ்லியா கலந்து கொண்டாராம். மாலை நான்கு மணிக்குத் துவங்கிய மவ்லிது இரவு ஒன்பது மணிக்கு முடிந்ததாம். அதுவரை அந்த அவுலியா மவ்லிதில் லயித்திருந்தாராம். இடையில் எழுந்திருக்கவே இல்லையாம். இதைப் பெருமையாக எனது ஊர் மக்கள் இன்றளவும் பேசுகின்றனர். அருகே இருக்கின்ற பள்ளியில் அஸர் அதொழுகை நடக்கின்றது! அவுலியா வரவில்லை; பின்னர் மஃரிபு தொழுகை நடக்கின்றது! அவுலியா வரவில்லை; இஷாஜமாஅத் நடக்கிறது! அவுலியா அதில் கலந்து கொள்ளவில்லை. அவர் மவ்லிதில் லயித்துப் போய் இருக்கிறார். இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களைத்தான் நாம் மகான்கள், மேதைகள் என்று ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறோம். தொழுகையை விட, ஒருவன் மனதைப் பாடல்கள் கவருமானால் அவன் எப்படி இறை நேசனாக இருக்க முடியும்?

நான் எல்லா ஆலிம்களையும், ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டவில்லை. மிகப் பெரும்பாலோர் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். தங்கள் வருவாய் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு மார்க்கத்தைச் சீரழித்த இந்த முன்னோர்களைப் பின்பற்றுவதால் எப்படி நேர்வழி அடைய முடியும்? எண்ணிப் பாருங்கள்.

அவர்கள் நரகவாதிகளா?

சதகத்துல்லா அப்பா போன்ற ஞான மேதைகள் தானே இதனை இயற்றினார்கள். அவர்கள் நரகவாதிகளா என்ற ஒரு கேள்வியும் இங்கே கிளம்புகிறது. ஒரு மனிதர் இறந்து போய்விட்டால், அவர் பெயரால் சில மோசடிக்காரர்கள் கதைகளைச் கட்டிவிடுவார்கள். அப்போதுதான் அவர்கள் வியாபாரம் நடக்கும் நல்லவர்கள் இதனைச் செய்திருக்கமாட்டார்கள்.

அப்படியே செய்திருந்தாலும் அவர்கள் நரகவாதிகளா? சொர்க்கவாதியா, என்று நாம் முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவன் நாடினால் மன்னிக்கலாம்! அல்லது தண்டிக்கலாம்! “நாம் நரகவாதியாக ஆகாமல் இருக்க என்ன சேய்ய வேண்டும்” என்பதைத் தான் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:-

அந்த சமூகத்தினர் சென்று விட்டனர். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே! நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தததைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். -அல்குர்ஆன் 2:134,141.

இந்தத் திருவசனத்திலிருந்து “முன்னோர்களில் தனிப்பட்ட நபர்களைப் பற்றி நாம் எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று இறைவன் உணர்த்துகிறான்.

நமது காரியங்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் அமைத்துக் கொண்டு செல்ல வேண்டியது தான் நமது கடமை. முன்னோர்கள் நல்லவைகளைச் செய்திருந்தால் அதற்கான பரிசுகள் நமக்குக் கிடைக்கப் போவதில்லை; அவர்கள் தீமையைச் செய்திருந்தால் அதற்கான தண்டனைகளையும் நாம் அனுபவிக்கப் போவதில்லை. நமது செயல்களை நாம் திருத்திக் கொள்வோம். இதுவரை நாம் எழுதியவற்றிலிருந்து , “முன்னோர்” என்ற மாயை தவறானது என்று புரிந்து கொண்டோம். -(வளரும்)

ஆந்நஜாத்: ஆகஸ்ட், 1986

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::