Saturday, February 13, 2010

செய்... சொல்.. சகோதரி. திருச்சி. பரீதா - ஃபுஜைரா – ஐக்கிய அமீரகம்

எல்லை இல்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன் அல்லாஹ் உந்தன் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்..!

நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் அன்றாடம் நாம் காணும், செய்யும் ஓர் செயலைப்பற்றி தான் நாம் இங்கு காண போகிறோம். ஆம்.. பெரியவர் முதல் சிறியவர் வரை படித்தவர் முதல் பாமரர் வரை பேச்சாளர் முதல் கேட்பவர்கள் வரை அனைத்து தரப்பினரும் செய்யும் செயல் அது - என்னவென்றால் ஒரு செயலை செய்யும் படி ஏவுவது ஆனால் அதை தன் வாழ்க்கையில் செய்யாமல் இருப்பது. நுன்மையை ஏவுவது ஆனால் தீமையிலிருந்து தன்னை தடுத்துக் கொள்வதில்லை.

தொ(ல்)லைக் காட்சியின் முன் அமர்ந்து கொண்டு பிள்ளையை படம் பார்க்காதே.. என்று திட்டும் பெற்றோர்(கள்), சிகரெட் துண்டை வாயில் வைத்துக்கொண்டு புகைப்பிடிக்காதே என்று சொல்லும் நடிகர்கள், ஃபாரின் சரக்கை குடித்துக்கொண்டு பட்டை சாராயத்தை குடிக்காதே என்று சொல்லும் படித்தவர்கள், விபச்சாரத்திற்கு லைசன்ஸ் கொடுத்து விட்டு பால்வினை நோயினை தடுக்க பல நடிகைகளின் கொண்டு பற்பல விளம்பரங்களையும், அழகிப்பே(ா)ட்டிகளை வீணாக செய்யும் அரசாங்கம், நன்மை செய்தால் நரகம் நரகம் இல்லை என்று கூறிவிட்டு பாதக செயலுக்கு பாலம் கட்டும் பேச்சாளர்கள்.. இவர்கள் எல்லாம் செய்ய நினைப்பது என்ன..?..! யாரை சீர் திருத்த முயற்சி செய்கிறார்கள்..? புரியாத கேள்விகளும் அறியாத புதிர்களும் தான் மேலோங்கி நிற்கும்..

மறுமையை நம்பும் ஒவ்வொவருக்கும் தெரியும் இறைவனிடம் முதல் கேள்வி தன்னை பற்றி தான் இருக்கும் என்பது, தெரிந்தும் சொல்வதை செயல் படுத்த ஏன் தாமதம்..?..! ஏன் இந்த தடுமாற்றம்..?..! ஏன் இத்தனை தயக்கம்..?..!

எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான நல்ல அமல்கள் செய்து சத்தியத்தைக்கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுரமயைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்தில் இல்லை).திருக்குர்ஆன் 103: 3

இவ்வசனத்தை ஆழ்ந்து சிந்தித்து படித்தால் நமக்கு புரிவது ஈமான் கொண்டவர்கள் முதலில் நல்ல அமல்களை செய்வார்கள் பிறகு தான் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் நஷ்டமடைய மாட்டார்கள். ஊருக்கு உபதேசம் செய்து விட்டு நாம் செய்யாமல் இருந்தால் என்ன நிலை ஏற்படும்..??

நபி (ஸல்) அவர்கள் கூறிகிறார்கள்:

ஒரு மனிதன் இறுதித்தீர்ப்பு நாளில் கொண்டு வரப்பட்டு நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். பிறகு அக்குடலை எடுத்துக்கொண்டு அவன், கழுதை தன் செக்கில் சுற்றுவதைப் போல் நரகத்தைச் சுற்றுவான். இதைப் பார்த்து மற்ற நரகவாசிகள் அவனிடம் ஒன்று கூடி.. உனக்கு இந்த நிலை ஏன்..? ஏற்பட்டது..? நீ நன்மைகள் புரியும் படி உலகில் எங்களுக்கு போதித்துக் கொண்டிருக்கவில்லையா? தீமைகளை விட்டு எங்களை தடுத்துக் கொண்டு இருக்கவில்லையா? இப்படிப்பட்ட நற்செயலைப் புரிந்தும் கூட நீ எப்படி இங்கே வந்து விட்டாய்..? என்று கேட்பார்கள். அந்த மனிதன் அதற்கு, நான் உங்களுக்கு நன்மை புரியும்படி போதித்துக் கொண்டு இருந்தேன், ஆனால் நானோ அதன் அருகில் கூடச் செல்லாமலிருந்தேன்.. தீமைகளை விட்டு உங்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன்..! ஆனால் நானோ அந்தத் தீமைகளைப் புரிந்துக்கொண்டிருந்தேன்.. என்று பதிலளிப்பான். அறிவிப்பவர் : உஸாமா பின் ஜைத் (ரலி) ஆதாரம் : புகாரி , முஸ்லிம்

இன்னும் சிலர் பிறருக்கு உபதேசம் செய்வதையும், அறிவுரை செய்வதையும் மட்டுமே பழக்கமாகக் கொண்டு அதை தான் செய்ய வேண்டும் என்பதையே மறந்து விடுகிறார்கள். அந்த மறதி அவனது மரணம் வரை தொடர்ந்து தனது செயல்பாடுகளை மாற்றாமல் இருந்தால் அவரின் நிலையை பற்றி,

நபி (ஸல்) அவர்கள் கூறிகிறார்கள்.

நான் மிஃராஜ் இரவில் சிலரைப் பார்த்தேன். அவர்களுடைய உதடுகள் நெருப்புக் கத்தரிகளால் கத்தரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. நான் ஜிப்ரீலியிடம்.. இவர்கள் யார்? என்று வினவினேன். ஜிப்ரீல் கூறினார்.. அவர்கள் தங்களை பின்பற்றும் குழவினரை சேர்ந்தவர்கள். அவர்கள் சொற்பொழிவாளர்களாக இருந்தார்கள். இவர்கள் மக்களுக்கு நற்செயலையும், இறையச்சத்தையும் போதித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் தம்மை மறந்து விட்டிருந்தார்கள். அதாவது அதனைத் தாம் பின்பற்றுவது குறித்து அக்கறை கொள்ளாமல் இருந்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) ஆதாரம் : மிஷ்காத்

எனவே நாம் ஏவும் எந்த ஒரு செயலையும் மறந்தும் நாம் செய்யாமல் இருந்துவிடக் கூடாது. இன்னும் நமக்கு ஊக்கமாகவும், உற்சாகமாகவும் இருக்கும் ஒரு விஷயம் நாமே சிறந்த உம்மத் என்பது தான். ஏனென்றால் நாம் தான் நன்மையை ஏவி, தீமையை தடுக்கின்றோம என்பதால்.. இதனை பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் போது:

மனிதர்களுக்காக தோற்றுவிக்கபட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். திருக்குர்ஆன் 3: 110

இவ்வசனத்தில் அடிப்படையில் நன்மையை ஏவி, தீமையை தடுத்தால் மட்டும் சிறந்த உம்மத்தாக நாம் ஆக மாட்டோம். மாறாக அதற்கடுத்த படியாக இறைவன் கூறியபடி திடமாக மூஃமின்களாக இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்றால் நன்மையை ஏவுதலும், தீமையை தடுத்தலும் மட்டும் போதாது என்றும் மேலும் ஒரு சிறப்பு வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான்.

அவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். நல்லதை ஏவுகிறார்கள், தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும் நன்மை செய்வதற்கு விரைகின்றனர். இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள். திருக்குர்ஆன் 3:114

இந்த வசனத்தின் படி, நன்மையை ஏவி, தீமையை தடுத்தால் மட்டும் போதாது அதனை செய்ய நாம் முதலில் விரைவு காட்ட வேண்டும். ஆனால் நாமோ சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் சொல்லுக்கும் செயலுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இருப்பதில்லை. சொல் என்பது சிறந்த பேச்சாளர் என்ற சிறப்பிற்கும், செயல் என்பது நல்லவர்.. வல்லவர்.. என்ற சிம்மாசனத்திற்கும் தான் உள்ளது. அண்ணனாக இருந்தாலும், ஆசானாக இருந்தாலும் வரையறுக்கப்பட்ட வட்டத்தை விட்டு வெளியே சென்றால் விளைவு என்ன என்பதை நாம் முன்பே அறிந்துக் கொண்டோம்.

மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது என்பது மிகவும் சிறந்த பணி. தனி மனிதனுக்கு மார்க்கம் கற்பிப்பவரும் ஒரு அழைப்பாளர் தான். ஒரு கூட்டத்திற்கு மார்க்கம் கற்பிப்பவரும் ஒரு அழைப்பாளர் தான். ஆனால் இப்பணியை செய்ய விரும்பும் ஒவ்வொரும் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவெனில்..

ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'நான் நன்மை புரியுமாறு ஏவுதல், தீமையை விட்டு தடுத்தல், மார்க்கத்தின் பால் மக்களை அழைத்தல் ஆகிய பணிகளைச் செய்ய விரும்பகிறேன்' என்றார்.

இப்னு அப்பாஸ் (ரலி) : இத்தகைய அந்தஸ்தை நீர் அடைந்து விட்டீரா..?

வந்தவர்: அடைந்திட விரும்புகிறேன்..

இப்னு அப்பாஸ் (ரலி) : அப்படியாயின் திருக்குர்ஆனில் உள்ள மூன்று வசனங்கள் மூலம் கேவலப்படுத்தப்படும் எனும் அச்சமும் உமக்கு இல்லையெனில் நீர் அவசியம் அழைப்புப்பணி செய்யலாம்.

வந்தவர்: அவ்வசனங்கள் யாவை..?

இப்னு அப்பாஸ் (ரலி): முதல் வசனம் இது.. 'பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவிவிட்டு அங்களை நீங்கள் மறந்து விடுகிறீர்களா..? திருக்குர்ஆன் 2:44

இந்த வசனத்தின்படி நீர் நல்ல முறையில் செயல்புரிந்து விட்டீரா..?

வந்தவர் : இல்லை..

இப்னு அப்பாஸ் (ரலி): இரண்டாவது வசனம் இது.. 'நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கிறீர்கள்..'
திருக்குர்ஆன் 61:2

இதன் படியாவது நல்ல முறையில் நீர் செயல்புரிந்து விட்டீரா..?

வந்தவர் : இல்லை..

இப்னு அப்பாஸ் (ரலி): மூன்றாவது வசனம் இது..

ஷுஐப் (அலை) தம் சமூகத்தாரிடம் கூறினார்கள் : 'மேலும் எவற்றை செய்ய வேண்டாம் என்று உங்களை நான் தடுகின்றேனோ அவற்றை நான் செய்வதற்கு ஒரு போது விரும்புவதில்லை, என்னால் முடிந்தவற்றை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகிறேன். திருக்குர்ஆன் 11:88

இந்த வசனத்தின்படியாவது நல்ல முறையில் செயல் புரிந்துள்ளீரா..?

வந்தவர் : இல்லை..

இப்னு அப்பாஸ் (ரலி): நன்மை புரியவும் தீமையிலிருந்து விலகி இருக்கவும். முதலில் நீர் உமக்கே கட்டளையிடுவீராக..! இதுவே ஓர் அழைப்புப்பணியாளனுக்குரிய முதல் கட்டமாகும்.

இச்சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வாக இருந்தாலும் இது தரும் பாடம் மிகவும் முக்கியமானது. ஆம்.. தன்னை சீர் திருத்தம் செய்யாதன் ஒரு போதும் மக்களை திருத்தம் செய்யும் பணியின் பயனை அடையமாட்டான். இன்னும் நம்மில் சொல்வதை செய்யாதவர்கள் சிலர் இருந்தாலும், உலக புகழ் பெற வேண்டி செய்யாததை சொல்பவர்கள் பலர் உண்டு.

அவர்களை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது..

பிறருக்கு மார்க்க அறிஞராகவும், போதகராவும் இருந்த இன்னொரு மனிதன் இறை நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவான். அவன் திருக்குர்ஆனை கற்றுத் தெரிந்து காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள் நலன்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவரிடம் கேட்பான்.. இந்த அருட்கொடைகளை பெற்ற நீர் என்ன நற்செயல் புரிந்தாய்..?

இறைவா.. நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறருக்கு கற்பித்தேன். உனக்காகத் தான் திருக்குர்ஆனை ஓதினேன்.. என்று அம்மனிதன் கூறுவான், 'நீ பொய்யுரைக்கிறாய்.. மக்கள் உன்னை அறிஞர் எனக்கூற வேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்.. திருக்குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னைப்புகழ வேண்டும் என்பதற்காகத் தான் திருக்குர்ஆனை ஓதினாய்.. அதற்கான வெகுமதி உலகிலேயே உமக்குக் கிடைத்து விட்டது.. பிறகு அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் ஏறியுங்கள்..' என கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் ஏறியப்படுவான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
ஆதாரம் : முஸ்லிம்

இது நீண்டதொரு ஹதீஸின் ஒரு பகுதி..படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி சிலவற்றை எடுத்து நான் உள்ளேன்.

இந்த கட்டுரையின் மூலம் அறிவது நன்மையின் ஏவுதலை மட்டும் செய்து விட்டு அதனை செயல்படுத்தாமல் இருந்தாலும் நரகம் தான். ஏவுலோடு விடாமல் அதனை செயல்;படுத்தி அதன் மூலம் உலக புகழை தேடினாலும் அப்போதும் நரகம் தான். ஆகையால் எந்தவொரு செயலையும் சொல்வதற்கு முன் நாம் அதை செய்கின்றோமா..? என்றும், அதனை செய்யும் போது இறைவனின் திருப்தியையும் நாடி செய்கின்றோமா என்பதையும் சுய பரிசோதனை செய்தால்..

'நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான நல்ல அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்'. திருக்குர்ஆன் 98 : 7

படைப்புகளில் மிகவும் மேலானவர்களாகவும், அவனது திருப்தி மற்றும் பொருத்தம் பெற்ற நல்ல அடியார்களாகவும் ஆவோம். இறைவன் நம்மை அவ்வாறே ஆக்கி அருள்வானாக.. ஆமீன்.. ஆமீன்.. யா.. ரப்பில் ஆலமீன்..

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::