சொர்க்கம் இன்னும் படைக்கப்படவில்லை என்ற தோரணையில் சகோதரர் பிஜே ஒரு கேள்விக்கு வின்டிவியில் பதிலளித்தார். இது பற்றி உங்கள் கருத்தென்ன? aalimway@gmail.com
--------------------------------------------------------------------------------
சொர்க்கமும் நரகமும் இதுவரைப் படைக்கப்படவில்லை. மறுமையில் தான் படைக்கப்படும் என்ற கருத்தை சகோதரர் பிஜே முன் வைத்துக் கொண்டிருக்கிறார். இது அறிஞர்களுக்கு மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது கருத்தை ஒரு மார்க்க ஆய்வாளரின் கருத்தாக நாம் பார்க்கிறோம். எந்த அறிஞராக இருந்தாலும் அவர்களின் கருத்துக்களில் தவறுகள் ஏற்படத்தான் செய்யும். நமது ஆய்வுக்கும் அறிவுக்கும் எட்டிய வரை சகோதரர் பிஜேயின் இந்தக் கருத்து ஆதாரங்களுக்கு முரணாக அமைந்துள்ளது. அதன் விபரத்தை காண்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விண்வெளி பயணம் மேற்கொண்ட போது சுவர்க்கம் நரகம் போன்றவற்றை பார்த்து விட்டு வந்ததாக சொல்லப்படும் சம்பவங்கள் அனைத்தும் நாம் அறிந்ததே...
இந்த சம்பவங்களில் 'எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது' என்ற வார்த்தையை நபி(ஸல்) சில இடங்களில் பயன்படுத்துகிறார்கள். 'எடுத்துக்காட்டபட்டதிலிருந்தே நபி(ஸல்) நேரடியாக அவற்றைப் பார்க்கவில்லை. பின்னர் வரும் நிகழ்வுகளை இறைவன் அவர்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளான்' என்றெல்லாம் பிஜே விளக்குகிறார்.
சொர்க்கமும் நரகமும் படைக்கப்பட்டு விட்டது இவை இன்றைக்கும் நிலைப் பெற்றுள்ளது என்பதற்கு மிஃராஜ் சம்பவங்களை மட்டும் ஆதாரமாக கொள்ளவில்லை. இன்னும் பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே மிஃராஜ் சம்பவம் குறித்து விளக்கிக் கொண்டிருக்காமல் மற்ற ஆதாரங்களைப் பார்ப்போம்.
ஒன்று.
3:169
وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ اللّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاء عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
الزبير عن سعيد بن جبير عن ابن عباس قال
قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر ترد أنهار الجنة تأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب معلقة في ظل العرش فلما وجدوا طيب مأكلهم ومشربهم ومقيلهم قالوا من يبلغ إخواننا عنا أنا أحياء في الجنة نرزق لئلا يزهدوا في الجهاد ولا ينكلوا عند الحرب فقال الله سبحانه أنا أبلغهم عنكم قال فأنزل الله
ولا تحسبن الذين قتلوا في سبيل الله سنن أبي داود 2158
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று நினைக்காதீர்கள். அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் உயிருடன் இருக்கிறார்கள். உணவளிக்கப்படுகிறார்கள் என்ற இந்த வசனம் அருளப்பட்டவுன் போரில் இறந்து அடக்கம் செய்யப்பட்டவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும் என்ற சந்தேகம் நபித்தோழர்களுக்கு எழுகின்றது. இது குறித்து அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கின்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள். அந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது. "அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உயிர்களை இறைவன் பச்சை நிற பறவைகளின் உடலில் புகுத்தி அந்த பறவைகளை சுவர்க்கத்தில் நுழைப்பான். அவை விரும்பியவாறு பறந்து சென்று உண்டு மகிழும்...." என்று நீண்ட விளக்கம் கொடுக்கின்றார்கள். முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அபூதாவூத் என்று பல நூல்களில் இந்த செய்தி ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பச்சை நிறப் பறவைகளும் அதில் ஷஹீத்களின் உயிர்களும் இருக்கின்றதென்றால் அவை சுற்றித்திரியும் சுவர்க்கமும் அன்றிலிருந்து இருக்கின்றது. இல்லாத சுவர்க்கத்தில் பறவைகள் எப்படி சுற்றித்திரியும் என்று சிந்திக்க வேண்டும்.
இரண்டு
ஃபிர்அவ்ன் மற்றும் கொடுமைக்கார அவனோடு இருந்த அவனது சிந்தனைவாதிகள் குறித்து - அவர்களுக்கு வழங்கப்பட்டவரும் தண்டனைக் குறித்து - இறைவன் திருக்குர்ஆனில் சுட்டிக் காட்டும் நிகழ்வில்,
40:46
النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் "ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்" (என்று கூறப்படும்).
சுவர்க்கம் நிலைப்பெற்று இருப்பது போலவே நகரமும் நிலைப் பெற்றுள்ளது என்பதற்கு இந்த வசனம் தெளிவான சான்றாகும்.
இந்த வசனம் கப்ரு வேதனையை குறித்து வரவில்லை. கப்ரு வேதனை என்பது எழுப்பப்படும் கியாமத் நாள் வரை நீடிக்கக் கூடியதாகும். 'காலையிலும் - மாலையிலும் நெருப்பின் முன்' என்று இறைவன் குறிப்பிட்டுள்ளதிலிருந்து நரகத்தின் அகோரத்தை உணர்த்தப்படுகின்றது. கப்ரு வேதனை என்பது காலை - மாலை என்ற இருவேளைக்குரியதல்ல. கப்ரு வேதனையுடன் சேர்த்து இன்னும் கொடுமையான வேதனையை அவர்கள் மறுமைமுதல் சுவைக்க இருக்கின்றார்கள் என்பதையே இங்கு இறைவன் சுட்டிக் காட்டுகிறான். நரகம் படைக்கப்படவில்லை என்றால் இந்த வசனத்தின் கருத்தும் பொருந்தாமல் போகும்.
மூன்று
கடும் கோடையில் ளுஹர் தொழுகையை பிற்படுத்தித் தொழ அனுமதியுள்ளது. வெயில் சாய்ந்து தொழலாம். இது பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும் போது,
حدثنا قتيبة حدثنا الليث عن ابن شهاب عن سعيد بن المسيب وأبي سلمة عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن شدة الحر من فيح جهنم سنن الترمذي
ளுஹரைப் பிற்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றாகும் (மற்றொரு அறிவிப்பில் நரகத்தின் மூச்சுக்காற்றாகும்) என்று குறிப்பிட்டுள்ளார்கள். الحر من فيح جهنم
(புகாரி முஸ்லிம் உட்பட பல்வேறு நூல்களில் இந்த செய்தி பதியப்படுள்ளது)
நரகம் என்ற ஒன்று நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் வரை படைக்கப்படாமல் இருந்தால் அவர்கள் இப்படி வழிகாட்டி இருப்பார்களா.... இன்றைக்கும் நாம் கொடுமையான வெப்பத்தை அனுபவித்து தவிக்கிறோம். இதற்கும் நரகத்துக்கும் சம்பந்தமில்லை என்று முடிவு செய்ய முடியுமா... எனவே நரகம் நிலைப்பெற்றுள்ளது என்பதற்கு இந்த ஹதீஸும் தக்க சான்றாக உள்ளது.
நான்கு
நபி(ஸல்) அவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு சமூகத்திற்கு இறைத்தூதுடன் வந்த நபிமார்களின் செய்தியை இறைவன் சூரத்து யாஸினில் விளக்குகிறான்.
இரு இறைத்தூதர்களுக்கு உதவுவதற்காக மற்றொருவரை அனுப்பிவைக்கிறான். அந்த மக்கள் அவரை கொன்று விடுகின்றனர். அவர் கொல்லப்பட்டவுடன் இறைவன் புறத்திலிருந்து அவருக்கு சொல்லப்பட்ட வார்த்தையை குர்ஆன் குறிப்பிடுகின்றது
36:26
قِيلَ ادْخُلِ الْجَنَّةَ قَالَ يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ
(செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) "நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக' என்று (அவரிடம்) கூறப்பட்டது. "என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்."
கொல்லப்பட்டவுடன் 'நீர் சொர்க்கத்தில் நுழைவீராக' என்று இறைவன் கூறுகிறான். இனிதான் சொர்க்கம் படைக்கப்படும் என்றால் இந்த வார்த்தையின் பொருள் என்ன? இல்லாத சொர்க்கத்தில் நுழைந்துக் கொள் என்று இறைவன் கூறிவிட்டானா...
எனவே குர்ஆன் சுன்னா தெளிவாக முன் வைக்கும் கருத்து சொர்க்கமும் - நரகமும் படைக்கப்பட்டு இன்றளவும் உள்ளது என்பதேயாகும்.
அப்படியானால் இந்த வசனங்களின் பொருள் என்ன?
14:48
يَوْمَ تُبَدَّلُ الأَرْضُ غَيْرَ الأَرْضِ وَالسَّمَاوَاتُ وَبَرَزُواْ للّهِ الْوَاحِدِ الْقَهَّارِ
இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்
21:104
يَوْمَ نَطْوِي السَّمَاء كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ
எழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக நாம் இதனை செய்வோம்.
39:67
وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّماوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.
இந்த வசனங்களில் வானங்கள் பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு விடும், இறைவன் சுருட்டி விடுவான் என்றெல்லாம் வருவதால் சொர்க்கம் - நரகம் இன்றைக்கு இருக்க வாய்ப்பில்லை என்ற சிந்தனைத் தோன்றினால் அது நம் சிந்தனையின் தவறாகும்.
ஏனெனில் நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஆதாரங்களில் சொர்க்கமும் - நரகமும் அன்றுமுதல் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அவற்றிர்க்கு முரணில்லாத வகையில் தான் இந்த வசனங்களையும் விளங்க வேண்டும்.
1 இன்றைக்கு இருக்கும் பூமியை அழித்து விட்டுதான் இறைவன் மீண்டும் படைக்கிறான்.
2) இன்றைக்கு இருக்கும் வானங்களை அழித்து விட்டுதான் இறைவன் மீண்டும் உருவாக்குகிறான்.
3) இன்றைக்கு இருக்கும் மனிதர்களை அழித்துதான் மீண்டும் படைக்கிறான்.
அதே போன்று இன்றைக்கு இருக்கும் சொர்க்கத்தையும் - நரகத்தையும் அழித்து விட்டு அவற்றை மீண்டும் உருவாக்கும் சக்தி இறைவனுக்கு உண்டு. அவ்வாறே உருவாக்குவான்.
21:104 வது வசனத்தில் 'முதலில் படைத்தது போன்றே மீண்டும் கொண்டு வருவோம்" أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ என்ற வார்த்தை கவனிக்கத்தக்கது. முதலில் இருந்தது போன்று மீண்டும் படைப்பு உருவாகும் என்றால் முதலிலிருந்த மனிதர்கள் வருவார்கள் என்றால் அதே போன்று முதலிலிருந்த சொர்க்கமும் - நரகமும் மீண்டும் கொண்டுவரப்படும்.
இப்படி விளங்கினால் எந்த ஆதாரத்துக்கும் முரண்பாடில்லாமல் விளங்க முடியும்.
எனவே சொர்க்கமும் - நகரமும் படைக்கப்பட்டு இன்றளவும் உள்ளது என்பதும், ஷுஹாக்கள் சொர்க்கத்தில் இன்பம் அனுபவித்துக் கொண்டு இருப்பது போல ஃபிர்அவ்ன் போன்ற கொடியவர்கள் நரக தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். (இறைவன் மிக்க அறிந்தவன்)
Saturday, February 13, 2010
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment