Sunday, December 30, 2012

சிதையும் உறவுகள்...!

இந்த கட்டுரை நமக்கு உணர்த்துவது ஒன்றே ஓன்று தான்! படியுங்கள் பகிருங்கள்.
ஒரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் கள்ளக் காதல் பற்றிய செய்திகள் வரும். இன்று அப்படியல்ல. கள்ளக் காதல் அதனால் ஏற்படும் கொலைகள், ஆள்கடத்தல், பணம் – நகை கொள்ளை போன்ற செய்திகள் முன்பைவிட பன்மடங்கு அதிகமாக வெளிவருகின்றன.சிதையும் உறவுகள்...!
கள்ளக் காதல் விவகாரத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஈடுபடுவதால், பெண் தரப்புக் குடும்பமும் ஆண் தரப்புக் குடும்பமும் அவமானத்தில் தலை குனிகின்றன.
பல இடங்களில் கள்ளக்காதலனுடன் பெண் சென்று விடுவதால் குடும்பமே தற்கொலை செய்து கொள்வதும், ஆண்கள் கள்ளக் காதலில் சிக்கும் போது அவனைச் சார்ந்த குடும்பம் சிதைவதும், இந்தச் சமூகத்தில் நடந்தபடிதான் உள்ளன.
ஆண்டுதோறும் தேசிய குற்றவியல் புள்ளி விவரங்களில் முதலிடம் பிடித்துள்ள விவரமாக விளங்குவது. கள்ளக் காதலால் நிகழ்ந்த கொலைக் குற்றங்கள்தான். இருவேறு ஆயுதக் குழுக்களாக மோதிக் கொள்ளும் ரௌடிகள் கொலை 316 தான். ஆனால், காதல் + கள்ளக் காதலால் நடந்த கொலை மட்டும் 237.
சில இடங்களில் கள்ளக் காதல் மற்றும் காதலில் ஈடுபட்டதுபோல் நடித்துப் பெண்களைக் கடத்திச் சென்று விபச்சார விடுதிகளில் சேர்க்க முனையும் போது எதிர்க்கும் பெண்கள் மட்டும் 464 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கள்ளக் காதலன் தலைமறைவு, காதல் தோல்வி, காதலி வேறொருவரை மணமுடித்ததால் போன்றவற்றால் மட்டும் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு மட்டும் 61 பேர் இறந்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் கள்ளக் காதல், காதல் கொலைகளை அங்குள்ள சட்டங்கள் "பார்ட்னர் வயலன்ஸ்" என்று குறிப்பிடுகின்றன.ஒரு கணவனுக்கோ, மனைவிக்கோ போலித்தனமான வாழ்க்கை அல்லது தன் கணவன், தன் மனைவியைத் தாண்டி வேறு ஆணுடனோ, வேறு பெண்ணுடனோ ஏன் ஈர்ப்பு ஏற்படுகிறது? இந்த இருவரின் ஈர்ப்பால் விளையப் போகும் விளைவுகளை அவர்கள் அறியாததா?
அவர்கள் கள்ளக் காதலில் மட்டும் கைதேர்ந்தவர்களாக இல்லாமல், தங்கள் தவறு பிறருக்குத் தெரியா வண்ணம் மறைப்பதிலும் புத்திசாலிகள். ஆம், படிப்பில்லாத ஊர்களில் நிகழ்ந்த இதுபோன்ற குற்றங்கள்தான் கணக்கில் இதுவரை வந்துள்ளன. தர்மபுரி – 38, கிருஷ்ணகிரி – 27, நாகை – 24, வேலூர் – 20, தேனி – 14 என இந்த கல்வியறிவோ, படிப்பறிவோ இல்லாத மாவட்டக் கள்ளக் காதல் கொலைகள்தான் வெளித் தெரிந்துள்ளன. ஆனால், படித்த வசதியுள்ள, நடுத்தர பிரிவினரின் கள்ளக் காதல் கொலையானால்தான் இந்தப் பட்டியலில் சேரும்.
30 ஆண்டுகள் நெறியோடு வாழ்ந்த பெண்மணி ஒருவரை இந்தக் கட்டுரைக்காக தேடிப் பிடித்தோம். அவர் பத்தாண்டு ஆயிரக்கணக்கான பெண்கள் பணி புரிந்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அத்துடனில்லாமல், பல பெண்களுக்கும் நல்லதொரு ஆலோசனைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்தியவரும்கூட.அவரிடம் கள்ளக் காதல் என்பது ஏன் ஏற்படுகிறது. இது முழுக்க ஒழுக்கக் கேடான ஒன்றாயிற்றே. இது தவறு என்பது தெரிந்தும் ஏன் நிகழ்கிறது என்று மட்டும்தான் கேட்டோம்.
கள்ளக் காதல் என்பது தவறு. ஒழுக்கக் கேடான ஒன்று என்பது தெரிந்ததுதான். ஆனால், அவ்வாறு அது நிகழ யாரெல்லாம் காரணம், எது காரணம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். வேண்டுமென்றே எந்தப் பெண்ணும் திமிர் பிடித்து கள்ளக் காதலில் ஈடுபடமாட்டாள். எனினும் சில விதிவிலக்கு உள்ளது. எல்லா வசதிகளும் வாழ்க்கைத் தேவையும் நிறைவாக இருந்தும் சிலர் இதுபோன்ற இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஒன்று அந்தப் பெண்ணின் கணவன் தகுதியற்றவனாக சதா சர்வ காலமும் பணம் பணம் என்று அலைபவனாக இருக்கலாம். அல்லது எல்லா வசதி தந்த பின்னரும் அவனின் முணுமுணுப்புகள் பெண்ணின் சுயமரியாதைக்கு எதிரான நடவடிக்கைகள், சந்தேகப் பார்வை, பலவும் அவளை அன்றாடம் மனதளவில் கொல்லும் போது அவள் அவனை எதிர்ப்பதாக நினைத்து அவனிடம் பெற முடியாத நிம்மதியைத் தரும் இன்னொரு துணையை நாடுகிறாள். இந்தப் புதிய உறவு ரகசியமாக நீடிக்கிறது. காலப் போக்கில் வெளிப்படும் போது எரிமலையாய் வெடித்து எரிமலைக் குழம்பு போகும் பாதையெல்லாம் பொசுக்குவது போல் அவர்கள் தொடர்பான அனைவரின் கௌரவமும் பொசுங்குகிறது. சில நேரங்களில் சிலர் இதனை உணர்ந்து விலகுகிறார்கள். விலக இயலாதவர்கள் இடையூறாக இருக்கும் ஆணையோ பெண்ணையோ கொன்று விடுகின்றனர்.
கண் நிறைந்த கணவன்தான். ஆனால், குழந்தைகள் படிப்புச் செலவு, குடும்பச் செலவுக்கு போதாத நிலை, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழத் தெரியாத கணவனின் சம்பாத்யத்திற்கு ஈடுகொடுக்கத் தெரியாத நிலையில் பொருளாதாரம் சரிக்கட்ட சோரம் போகிறாள்.
நாலு பேரைப் போல் நாமும் வாழ வேண்டும் என்ற மட்டரகமான சிந்தனை அப்பெண்ணுக்குள் சாத்தானாக புகுந்து விடுகிறது. நுகர்வுக் கலாச்சாரம் படோடபமான வாழ்க்கை வாழ அவள் நினைக்கும் போது அதற்காக வசதியான ஆணை அவன் அழகனோ, நோயாளியோ, கருப்போ, சிவப்போ அவளுக்குக் கவலை இல்லை. அவனிடம் உள்ள செல்வம்தான் அவளின் குறிக்கோள். அதனால் உறவில் நாட்டமில்லாமல்தான் கள்ளத் தொடர்பில் ஈடுபடுவாள். பல இடங்களில் கள்ளத் தொடர்புக்கு இதுதான் பெருங் காரணமாக உள்ளது.
இவர் யார்? அடிக்கடி வருகிறாரே? கேட்டால், தூரத்து உறவு என்பாள் சொந்தக் குடும்பத்திடமே! சில இடங்களில் கணவன் தன் வருமானத்திற்கும் மேலாக வீட்டில் சேரும் பொருட்களைப் பற்றி சந்தேகம் கொண்டு கேட்டாள். சீட்டு கட்டுகிறேன், சுயஉதவிக் குழு எனச் சொல்லிப் பார்ப்பாள். அவை கணவனின் விசாரணைக்கு உட்படும் போது சந்தேகம் அகலமாகும். அறிவுரை சொல்லிப் பார்ப்பான், அடித்தும் பார்ப்பான், அவளால் கணவனையும் இழக்க முடியாது, கள்ளக் காதலையும் மறுக்க இயலாமல் புழுங்குவாள். எல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போலவே தன் பிள்ளைகளும் வளர வேண்டும் என்ற நினைப்பால் வந்தது.
சகிப்புத் தன்மையுள்ளவன் பேரளவுக்கு கணவனாக அவனுக்குள்ளேயே மனம் புழுங்கி பைத்தியமாவான். அல்லது முரட்டுத்தனம் உள்ளவன் குடும்ப வன்முறையில் ஈடுபடுவான். இன்னொரு நிலையுள்ள எதனையும் கண்டு மிரளும் மனநிலையுள்ள ஆண் குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல முற்படுவான். இது போன்ற ஆண்களால் அவளுக்கு கள்ளத்தனமானவன்தான் கதி என்று ஆகும்.
இன்னொரு ரகம் புடவை நகைகளுக்காக கணவன், பிள்ளைகள் வீட்டை விட்டுச் சென்றவுடன், தன் ஆசைக்கான பொருளை வாங்கித் தரும் பசையுள்ளவனை பிடித்துக் கொள்வது. அவனுடன் ஊர் சுற்றுவது. வீட்டிற்கு எல்லோரும் வரும் முன்பு வந்து விடுவது.இன்னொரு ரகம் ஒதுக்குப்புறமான வீடு, தனிமை, கணவன், பிள்ளைகள் அவரவர் வேலை பார்க்க வெளியே சென்றவுடன், பிற ஆண்களை வீட்டிற்கே வரவழைத்து கள்ள உறவு கொள்வது இவர்கள் வழக்கம். இந்தத் தவறுக்கு தனிமைதான் பெரிய காரணம். பெரும்பாலான கள்ளக் காதல் கொலைகள் இந்த ரகத்தினால்தான் நடக்கிறது.
விதவைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழும் போது தனிமை அவர்களை வாட்டுகிறது. உடல் ரீதியான தொடர்புகளை விட ஒரு ஆண் துணை தனக்கு தேவை என்று நினைக்கிறாள். சிலர் சில சமூகங்களில் விதவைத் திருமணம் மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள். இதனால், விதவை வெளிப்படையாக இல்லாமல் ஒரு ரகசிய வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறாள். கூடவே அவளுக்கு பிள்ளைகள் இருந்து விட்டால் கூடுதல் பாதுகாப்பாக கட்டாயம் ஒரு ஆண் துணை தேவை என்பதை உணருகிறாள். சில இடங்களில் பிள்ளைகள் அங்கீகரிக்கின்றன. சில இடங்களில் எதிர்க்கின்றன. ஒரு பெண் அன்னிய ஆடவருடன் எச்சரிக்கையுடன் பேசுவது முக்கியம். பேச்சிலேயே சந்தேகம் வந்தால் தவிர்க்க வேண்டும். இது ஆண்களுக்கும் அவ்வாறே பொருந்தும். பிறன் மனை நோக்கான் என்பது ஒரு பொதுவான இருபாலர்க்கும் உரிய ஒழுக்க நெறியாகும்.
எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான். ஒரு பெண்ணின் மனம் ஒழுக்க நெறியோடு இருந்தால், எந்த ஆணும் அவளை நெருங்க இயலாது. தவறான பேச்சு, சமிக்ஞைகள், தேவையற்ற அரட்டை, மூன்றாம் நபரிடம் தன் குடும்ப நிலைகளைப் பகிர்ந்து கொள்வது முதலானவை நல்ல பெண்மணி தவிர்ப்பாள். நல்ல ஆணும் இது போன்ற இயல்புடன் உள்ள பெண்களை விட்டு விலகி இருப்பார்கள். தவிர்ப்பார்கள். ஆனால், மனம் ஒரு குரங்கு என்பதால், தாவ நினைக்கும். அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாடு மட்டுமே.
எவர் எந்த சமயத்தைப் பின்பற்றுகிறவர்களோ அதன் வழியில் மனதை செலுத்துவது சிறந்தது. அதிலும் ஓர் சிக்கல் என்னவென்றால், தங்கள் சந்தேகங்களை நூல்கள் வழியாகவே கூடுமானவரை பெற முயல வேண்டும். நேரில் சென்று எவரிடம் விளக்கம் கேட்கும் போதும் அங்கும் கோளாறுள்ளவர்கள் இருந்தால் சிக்கல்தான். வழிபாட்டு இடங்களிலும் வில்லன்கள் உண்டு. சில குடும்பம் இதுபோன்ற வழிகளிலும் சிலரால் சிதைக்கப்பட்டுள்ளன.
கணவன் என்பவன் வெறுமனே ஒரு ஏ.டி.எம். எந்திரம் போல் வேண்டிய பணம் தந்து விட்டால் போதும் மற்றவை சரியாகும் எனக் கருதக் கூடாது. குடும்பத்தில் அனைவர் மீதும் அக்கறை உள்ளவனாக, அன்புள்ளவனாக விளங்க வேண்டும். தினசரி குறைந்தபட்சம் சில மணி நேரங்கள் மனைவி மக்களுடன் அமர்ந்து பேச வேண்டும். உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூடுமானவரை நேரம் ஒதுக்கி குடும்பத்துடன் சென்று வரவேண்டும்.
மனைவி என்பவள் தனக்கு உடமை மட்டுமல்ல, தன் நேசத்துக்கும் அன்புக்கும் உரியவள் என்று மதிப்புடன் வைத்திருக்க வேண்டும். அன்பு செலுத்துவது என்பது அது ஓர் ஆயுதம்! எந்தக் கேட்டையும் அந்தக் குடும்பத்தைத் தாக்குவதிலிருந்து தடுக்க வல்லது. மனைவியிடம் பொய் சொல்லக் கூடாது. மறைவு என்பது கூடவே கூடாது.
பெரும்பாலான அமைதி தவழும் குடும்பத்திற்குள் கணவன் மனைவி நல்ல முறையில் வாழ்க்கை நடத்தினாலும் பிள்ளைகள் மேல் கவனக் குறைவு ஏற்பட்டாலும் அவர்கள் வழியாக தேவையற்ற வம்பு வரும். இன்றைக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பலவும் குழந்தைகள் மனதை சிதைக்கும் காரணியாக உள்ளன. பல காதல் திருமணங்கள் குடும்பத்தில் பட்ட துன்பத்தைக்கூறும் போது மதிப்புமிக்க உறவினரா? அப்படிச் செய்தார் இருக்காது,'' என நீங்களே தீர்மானித்து குழந்தை தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூற விடாமல் வாயடைக்கின்றனர்.
சிறு வயதில் மறைவாக உறவுகளால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகள் அது சரியா? தவறா? சொந்தமான இவர் செய்ததையும் தாயிடம் தந்தையிடம் கூற முற்படும் போது காது கொடுத்து கேட்க வேண்டும். தன் பிள்ளை தானே ""அப்படிச் சொல்லாதே, வாயை மூடு! இத வேற யார்கிட்டயும் சொல்லாதே'', என அதட்டக் கூடாது. குழந்தை சொன்னதைக் கேட்ட பின்பு பக்குவமாக எடுத்துச் சொல்லி சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு காண வேண்டும். ஏனெனில் பெரும்பாலான காதல் கத்தரிக்காய் எல்லாம்.
ஒரு பெண் அல்லது ஆண் தங்களுக்கு தங்கள் குடும்பத்தில் பாதுகாப்பு இல்லாதவர்களாக தங்கள் உணர்வைப் புரிந்து கொள்ளாதவர்களாக பெற்றோர் உள்ளனர் என நினைக்கும் போது அதற்கு வடிகாலாகத்தான் மன ஆறுதல் தரும் மாற்றம் தேடும் நிலைக்குச் செல்கிறார்கள். இந்த வழி காதலாகிறது.
மனம், மனத்திருப்தி, ஆறுதல், அன்பான உபசரிப்பு, தேவைகள், ஆடம்பரம், சொகுசு, அதிகமான உறவில் நாட்டம் அதற்கு வழி இல்லாமை, சந்தேகம், அடி-உதைகள், பாதுகாப்பு, வசவுகள், நோயாளி, கணவன் மனைவி குடும்பச் சண்டை, உறவினர் கொடுமை, மகப்பேறின்மை என்பன பல காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காக அது கிடைக்கும் இடத்திற்கு தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இதுபோன்ற சமயத்தில் சுற்றி இருக்கும் குடும்பத்தினர் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ, பழிகள் சூழும் என்பது குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் தேவை தற்காலிக நிவாரணம். பின்னர் இதுவே சூழலைப் பொறுத்து நிரந்தரமாகின்றன. சிக்கல் உருவாகிறது.
இவ்வாறான இவர்களின் தேடலுக்கு வழி காட்டும் வடிகாலாக இருப்பது. நண்பர்கள் மற்றும் ஊடகங்கள், இதுபோன்ற சமூக சீரழிவுக்கு ஊடகங்கள் கடந்த இருபதாண்டுகளாக பெருங் காரணமாக உள்ளன. காதல், ஆடம்பரம், முறைகேடான உறவுக்கு நியாயம் கூறும் கதைகள் இல்லாமல் ஒரு தொடரோ, சினிமாவோ எடுக்கப்படுவதில்லை. ஒரு பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிய சினிமா, தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளத்தின் சாட்டிங் முதலானவை. தவறு செய்யத் தூண்டும் காரணிகளாக உள்ளன. செல்போன்கள் வந்த பின்னால் கள்ளக் காதல்கள் அதிகம் நடப்பதை வலுப்படுத்தியுள்ளன!
கூட்டுக் குடும்பம் என்ற கட்டமைப்பு சிதைந்து தனிக்குடும்பம் என்ற நிலையில் தேவைகள் அதிகரித்தன. அதை எதிர்கொள்ள முயலும் போது, குறிப்பாக பெண்கள் தேவைகளை எந்த வழியிலும் பெறலாம் என்ற நிலைக்கு பொருளாதார காரணிகளால் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நிலைக்கு ஆண்களும் தேவை அறிந்து அதை சரி செய்வதற்குப் பதில் அமைதியாகும் போது பெண் மாற்று சிந்தனைக்கு தள்ளப்படுகிறாள்.
இன்றைக்கு மனித மனங்களை வர்த்தக ரீதியாக சுரண்டும் போக்கு அதிகரித்துவிட்டது. குடும்ப வாழ்க்கையை பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. அவர்கள் இதனை சாதிக்க ஊடகங்களை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இந்த விளம்பரங்கள் நல்ல குடும்பத்தையும் கூட நுகர்வு வெறியுள்ள குடும்பமாக மாற்றி விடுகின்றன.
சமூக பேரழிவுகளுக்கு தொலைக்காட்சி சனியன்கள்தான் 90% காரணம். இதை கண்டுபிடித்த மேற்குலகம் 'இடியட் பாக்ஸ்' என்றே டிவியை குறிப்பிடுகிறது. ஆபாசமான காட்சிகள், வசனங்கள், பாடல்கள், இரட்டை மொழி சிரிப்புகள் என மலிந்துள்ளன. இவைகள் பொழுது போக்கு என்ற பெயரால் ஒளிபரப்பப்படுகின்றன.
அதேவேளை பல சேனல்கள் தாங்கள் தொலைபேசி வழியாக பணமீட்ட ஆபாசமான குறுஞ்செய்தியை ஒளிபரப்புவது போன்ற கேவலத்திலும் ஈடுபட்டுள்ளன.
இவைகளுக்கு சென்சார் எதுவுமில்லாததால் கட்டுப்பாடற்ற ஆபாசத்தை வெளிப்படுத்துகின்றன. இவை குடும்பச் சீரழிவுக்கும் வழிகாட்டிகளாக விளங்குகிறது.
இன்று கள்ள உறவுகள் அதிகரிக்க சினிமா தியேட்டர்களும் டிவிக்களும் பெரும் பங்குவகிக்கின்றன.
இப்படித்தான் பல இடங்களிலும் கள்ள உறவுகள் உருவாகின்றன, தொடங்கப்படுகின்றன, தொடங்கி வைக்கிறார்கள், தூண்டப்படுகிறார்கள் ஊடகங்களால்.
கள்ள உறவுக்கான காரணங்கள் எவை எவை, கொலைகள் ஏன் நிகழ்கின்றன என்பதெல்லாம் தெரிந்த விவரங்களைக் கொண்டுதான் நாம் பரிமாறிக் கொள்ள இயலுமே தவிர, தீர்வு என்ன என்ற வினாவிற்கு ஒரே பதில். ஒழுக்கமான வாழ்வின் உன்னதத்தை வளரும் தலைமுறைக்கு பக்குவமாகக் கூறுவதும், அவர்கள் பிரச்சனைகளைக் காது கொடுத்து பெற்றோர் கேட்பதும்தான் ஒரே தீர்வு.
அர்த்தமுள்ள, புரிதலான, ஈடுபாடுள்ள குடும்ப வாழ்க்கைதான் நம்மையும், நம் குடும்பத்தையும் காக்கும். சமூக நோக்குள்ள ஊடகங்கள் தங்களுக்குள் சுய கட்டுப்பாட்டை வளர்த்து, இதுபோன்ற செய்திகளைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
குடும்பங்களில் இதுபோன்ற தொடர்கள் வரும் போது தவிர்ப்பதும் நல்லதுதான். அதைப் போலவே பொருட்கள் விளம்பரம் வரும் போதும் சேனலை மாற்றுவதும் நல்லதுதான். நம் மனம் கெடாமல் இருக்க கூடுமானவரை என்னென்ன வழிமுறை உண்டோ, புனித பயணம், சுற்றுலா, நல்ல நூல்களைப் படிப்பது என நம் நேரத்தை நாமே மேலாண்மை செய்தால் எந்த சாத்தானும் நம்மை அணுகாது.
நன்றி: முகநூல்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.