நபிகள் நாயகம் ஸல் அவர்களை தம் உயிரினும் மேலாக நினைப்பதில் எந்த முஸ்லிமுக்கும் இரண்டாம் கருத்து கிடையாது. முஸ்லிம் அல்லாத யாராவது ஒருவர், குறிப்பாக அமெரிக்க, யூத சார்புடைய யாராவது ஒருவர் நபிகள்
நாயகம் ஸல் அவர்களைப் பற்றி தப்பாக , இழிவாக , பிழையாக ஏதும் சொன்னால், உணர்ச்சி வசப்பட்டு முஸ்லிம்கள் கொதித்து எழுவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அகில உலகத்துக்கும் அருட் கொடையாக வந்த அண்ணல் நபிகளாரை பழித்தால் எப்படி பொறுக்க முடியும் ? இப்படித்தான் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொல்லிக் கொடுக்கபடுகிறது !நபிகள் நாயகம் ஸல் அவர்களை பின்பற்றி வாழ்வதுதான் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதற்கு முஸ்லிம் கூறும் சாட்சியாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்களை பின்பற்றி நடப்பதுதான் அவரை மதிப்பதற்கு அடையாளம். அதே சமயம் பெரும்பாலான முஸ்லிம்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களை பின்பற்றாமல், வாழ்வதை வழக்கமாக்கி வைத்துள்ளனர். அப்படிப் பார்த்தால், பெரும்பான்மை முஸ்லிம்கள்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு மாறு செய்துகொண்டு, அவரை இழிவுபடுத்துகிறார்கள். தயவு செய்து கோபப்படாமல் மேலே படியுங்கள். நபிகள் அவர்கள் ௫ நேரம் தொழ சொல்லியுள்ளார். பெரும்பான்மை முஸ்லிம்கள் செய்வது இல்லை. நாள் நட்சத்திரம்,நல்ல நேரம் , கேட்ட நேரம் பார்ப்பது தவறு என்று நபிகள் சொல்லியுள்ளார்.பல முஸ்லிம்கள் நபி கருத்துக்கு மாறு செய்கிறார்கள். மது அருந்துதல், அன்னியப் பெண்களை இச்சையுடன் பார்த்தல் , பொய் சொல்லுதல், அண்டை வீட்டுக் காரருடன் சண்டை போடுதல் இவைகள் எல்லாம் நபிகளார் கண்டித்த, தடுத்த பெரிய பாவச் செயல்கள். இவைகளில் இன்றைய முஸ்லிம்களின் நிலை என்ன ? யோசியுங்கள். நபிகளாருக்கே பிறந்த நாள் கொண்டாடி நபிகளாரை இழிவுபடுத்தும் தவறை முஸ்லிம்கள் உலக அளவில் செய்கிறார்கள். இஸ்லாம் என்பதை வாழ்வியல் வழிகாட்டியாக நபிகளார் இவ்வுலகில் வாழ்ந்துகாட்டி விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த வாழ்வியல் முறையை மதமாக மாற்றி இஸ்லாத்திற்கே தவறான அடையாளமாக விளங்கும் பெரும்பான்மை முஸ்லிம்கள்தான் நபிகளாரை இழிவு படுத்தும் செயலில் முன் நிற்கிறார்கள். இந்த எம் முஸ்லிம் சகோதர சகோதரிகள், தாம் செய்வது தவறு என அறியாமலேயே நபிகளார் மீது புகழ் பாடும் பாடல்களையும் பாடுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் தமது வாழ்நாளில் தம் மீது நடத்தப் பட்ட தனி மனித தாக்குதல் அனைத்திலும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் தலை குனிந்து சென்றுள்ளதை வரலாறு சொல்கிறது. எண்ணற்ற சந்தர்ப்பங்களில் கை கட்டியே நின்றார்கள் என்பதை அவரின் வாழ்வு சொல்கிறது. ஏன் ஊரை விட்டு ஓடும் நிலைக்கும் தள்ளப்பட்டதை ஹிஜ்ரத்தும், எதிர் அணிக்கே பல விசயங்களை விட்டுக் கொடுத்த ஹுதைபியாவையும் வரலாறு பதிவு செய்துள்ளது. காரணம் இஸ்லாத்திற்கு எந்த களங்கமும் வருவதை அதுவும், முஸ்லிம்கள் அல்லாத மக்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொள்ளும் நிலை வருவதையும் நபிகளார் கவனமாக கையாண்டுள்ளார்கள்.
அன்பார்ந்த முஸ்லிம் சமூகமே, அறிவுபூர்வமாக பதிலடி கொடுக்க நாம் ஏன் ஹலாலாக பல படங்களை எடுக்க கூடாது ? நபிகளார் வாழ்வு - உலகின் சிறந்த முன் உதாரணம் என்ற நூல்களை ஏன் வீதி வீதியாக விநியோகிக்க கூடாது ? மார்க்கத்தை விளங்கியவர்களுக்கு ஓர் வேண்டுகோள்: இனி வரும் காலத்திலாவது நபிகளாரை எப்படி வாசிக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுங்கள். இன்ஷா அல்லாஹ், பெரும்பாலான பிரச்சினைகள் மறையும்
அன்புடன்
பஷீர் அகமது
தமிழ் முஸ்லிம் கல்வி மையம்
புதுக்கோட்டை
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment