Thursday, September 15, 2011

இஸ்லாமும்-அடிமைகளும்!

'எனக்கு சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் பல நேரங்களில் பொய் சொல்கிறார்கள். கொடுத்த வேலையைச் செய்யாமல் ஏமாற்றுகிறார்கள். ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசுகிறார்கள்'

இது புகார் அல்ல. முகமது நபி அவர்களிடம் சந்தேகம் கேட்க வந்த ஒரு நபித் தோழர் கூறிய வார்த்தைகள்.


அடிமைகளுடன் தனக்குள்ள பிரச்னையை அவர் நபியிடம் எடுத்துக் கூறினார். தன்னுடைய அடிமைகளுடன் கடினமாக நடந்து கொள்வதால் அவர் அமைதியின்றி தவித்தார். அவர் முகமது நபியிடம தொடர்ந்தார்:
'அவர்களிடம் கடுமையாகப் பேச வேண்டி இருக்கிறது. சில சமயங்களில் வரம்பு மீறிய வார்த்தையையும் நான் கூறி விடுகின்றேன். கட்டுப் படுத்த முடியாத கோபம் வரும் போது அடிக்கவும் செய்வேன். நான் இப்படி நடந்து கொள்வது சரியா?”

ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் சந்திக்கும் இது போன்ற நிகழ்வுகள் அவரது மனதை பாதித்ததனால் முகமது நபியிடம் விளக்கம் கேட்க வந்திருக்கிறார். இதற்கொரு மாற்றம் வேண்டும் என்று கருதித்தான் அவர் நபியைக் காண வந்தார்.

இறைவனின் தூதர் அந்த தோழருக்கு பின் வருமாறு அறிவுரை கூறினார்கள்:
'நாளை மறுமையில் இறுதித் தீர்ப்பு நாளில் உங்களுக்கும் அடிமைகளுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கணக்கெடுக்கப்படும். அடிமைகள் உங்களை ஏமாற்றி மோசடி செய்ததும், பொய் சொன்னதும், உங்களுக்கெதிராக வேலை செய்ததும், தராசின் தட்டில் வைக்கப்படும். 

தாங்கள் அவர்களிடம் நடந்து கொண்டதும், ஏசியதும், பேசியதும், அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்ததும் இன்னொரு தட்டில் வைக்கப்படும். இரண்டும் சமமாக இருந்தால் யாருக்கும் ஒன்றும் இல்லாமல் பிரச்னை சுமூகமாக தீரும்.

நீங்கள் அளித்த தண்டனை அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால் அவர்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுத்து உங்களுக்குத் தரப்படும். தண்டனை அதிகம் என்றால் உங்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும்.'

அந்த நபித் தோழருக்கு அச்சம் தோன்றி விட்டது. அந்த இடத்தை விட்டகன்ற அவர் அழ ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட இறைத் தூதர் அவர்கள் அவரிடம் சென்று கீழ்க் கண்ட இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

'மீண்டும் உயிர்த்தெழும் நாளில் நீதியின் தராசை நாம் முன்பு வைப்போம். யாரும் ஒரு சிறிது கூட அநீதம் செய்யப்பட மாட்டார்கள். கடுகு போல் ஒரு சிறிய நன்மை செய்திருந்தாலும் அன்று நாம் அதனை வெளியே கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நான் போதுமானவனாகவே இருக்கிறேன்.'
-குர்ஆன் 21:47

இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபித் தோழர் பிரச்னைக்குரிய அடிமைகளை விடுதலை செய்வதே தனக்கும் அவர்களுக்கும் நல்லது என்று எண்ணலானார்.
----------------------------------------------------------------------------------------------------------------------
30. 'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார். 
Volume :1 Book :2

97. மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். 
"இதை எந்தப் பகரமும் இல்லாமல் உமக்கு நாம் வழங்கி விட்டோம். முன்னர் இதை விடச் சின்னப் பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு" என்று (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்டு வந்தவரிடம்) ஆமிர் கூறினார். 
Volume :1 Book :3


வேலை ஆட்கள் விஷயத்தில் இஸ்லாம் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்க ஒரு சில சவுதிகள் பணிப் பெண்களை நடத்தும் விதம் மிகவும் அருவறுக்கத்தக்கதாக உள்ளது. நம்மிலே கூட பலர் வேலையாட்களை நடத்தும் விதத்தில் நேர்மையாளர்களாக இருப்பதில்லை. ஐந்து வேளை தொழுகிறார்கள். நோன்பு வைக்கிறார்கள். ஆனால் வேலை ஆட்களை சரி சமமாக நடத்துவதில்லை. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பாதிப்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. 

இறைவனின் கேள்விகளுக்கு பயந்து நமக்கு கீழுள்ள வேலையாட்களை முடிந்த வரை சமமாக நடத்தும் மன வலிவை இறைவன் உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::