Thursday, August 18, 2011

தலைபிரசவம்!!!!!!!!

ஆண், பெண் என்ற இரு பிரிவினரில் தங்கள் வாழ்வில் அதிக கஷ்டத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக பெண்களை நாம் காண முடியும்.

ஏன் என்றால் ஆண்களினால் சுகத்துக்காக பயன்படுத்தப் படும் மனைவி அந்த சுகத்தின் மூலம் பிரசவம் என்ற வலியை அனுபவித்தே தீரவேண்டும். கணவனுக்காக தனது வாழ்வை அர்பனம் செய்யும் ஜீவனின் உண்மை வேதனையில் ஆண்கள் எந்தளவுக்கு பங்கெடுத்துக் கொள்கிறார்கள்?
அதிலும் தனது குழந்தையை அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் போது ஆண்களில் எத்தனை பேர் அந்தப் பெண்ணுக்குறிய அனைத்துக் காரியங்களிலும் உதவியாக இருக்கிறோம்?
பெண் என்றால் போதைக்குறியவள். ஆணின் அடிமை. உணர்ச்சிகளே அற்ற ஜடம். மனிதனாக மதிக்கப்படத் தேவையற்றவள் என்ற மடமையின் சித்தாந்தத்தை உடைத்து எறிந்த இஸ்லாமிய மார்க்கம் பெண்களின் பிரசவ காலம் தொடர்பாகவும் மிக அழகிய வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.
தலைப் பிரசவம் தாய் வீட்டிலா?
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டால் அவளுடைய 07வது அல்லது 08 வது மாதத்தில் அந்தப் பெண்ணின் பிரசவத்திற்காக அவளுடைய தாய் வீட்டிற்கு அனுப்பிவிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.
இப்படி அனுப்புவது பற்றிய மார்க்கத்தின் நிலைபாட்டை சரியாக நாம் விளங்கிக் கொண்டால் அதைப்பற்றிய சரியான புரிதலுடன் நாம் செயல்பட முடியும்.
தாயின் இடத்தை மாமியார் நிறப்ப முடியாது.
உண்மையில் தாய் பாசம் என்பது மற்றவர்களின் பாசத்தை விட பன்மடங்கு உயர்ந்தது. அதிலும் மாமியார் வீட்டில் ஒரு பெண் இருப்பதற்கும் தாயின் வீட்டில் இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு தாய் கவணிப்பதைப் போல் எந்த மாமியாரும் தனது மருமகளை கவணிக்க மாட்டார்கள்.
பிரசவ காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வின் மிக சங்கடமான ஒரு கால கட்டம் அந்த நேரத்தில் அவளுடைய நிலையை கருத்தில் கொண்டு தாயின் வீட்டில் அவள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை இஸ்லாம் வகுத்துந் தந்துள்ளது.
இன்றைய கால கட்டத்தில் தலைப் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பப் படும் பெண்களில் அதிகமானவர்கள் தாய் பாசம் தேவை இந்தக் காலத்தில் தாயுடன் இருந்தால் நல்லது என்பதற்காக அனுப்பப்படவில்லை.
இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்தால் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு மகளாக வருவது என்பது வேறு, ஆனால் நிறைய குடும்பத்தில் மாமியார், கணவர்களினால் பலவந்தமாக தாய் வீட்டிற்கு மனைவிமார் அனுப்பப்படுகிறார்கள்.
இன்னும் சில இடங்களில் மாமியார் கொடுமை தாங்க முடியாமல், தாயின் வீட்டிற்கு மருமகள் தலைப் பிரசவத்திற்காக வந்துவிடுகிறாள்.
இப்படி அனுப்பி பிரசவம் செய்யவதென்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதன்று.
பெண்ணின் அனைத்து செலவுகளுக்கும் கணவன் தான் பொருப்பாளி.
குடும்பத்திற்காக செலவு செய்யும் பொருப்பை இறைவன் ஆண்கள் மீதுதான் சுமத்தியுள்ளான். ஆண்கள் தான் தங்கள் மனைவியருக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிட்டுள்ளான்.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல்குர்ஆன் 4 : 34)
ஆண்கள் தங்கள் உழைப்பின் மூலம் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களுக்கு இந்த சிறப்பு வழங்கப்படுகிறது.
இன்று நமக்கு மத்தியில் தலைப் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு மனைவியை அனுப்பும் கணவர்களில் பலர் இதை நடைமுறைப்படுத்துவதில்லை.
தங்கள் சுமை குறைய வேண்டும் என்பதற்காகத்தான் தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.
இப்படி நடந்து கொள்பவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் சிறந்த கணவர்களாக எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.'' (புகாரி 2554)
தாய் வீட்டிற்கு சென்றால் மன நிம்மதியாக தனது பிரசவ காலத்தை மனைவி செலவு செய்ய முடியும், என்ற சிறந்த எண்ணத்தில் அவளை தாய் வீட்டிற்கு யாராவது அனுப்பினால் கூட அவளின் அனைத்து செலவீனங்களையும் கணவன் தான் பொருப்பெடுக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலையாக இருக்கிறது.
மறுமை நாளில் பொருப்புகள் பற்றிய விசாரனையின் போது இதைப்பற்றிய விசாரனையும் நம்மிடம் உண்டு என்பதை நாம் தெளிவாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
தலைப் பிரசவம் தாய் வீடாக இருந்தாலும், அதன் செலவு கணவனுக்குறியதாக இருக்கட்டும்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::