Thursday, August 18, 2011

அண்ணா ஹசாரே -2ஆம் காந்தியா????????


ஞாநி
[ அண்ணா ஹசாரே வின் உண்ணாவிரதத்தை ஆதரித்து அதனால் மனம் நெகிழ்ந்து என்னிடம் பேசியவர்கள் பலருக்கும், அவர் ஊழலுக்கு எதிராக ஏதோ கடுமையான சட்டம் வரவேண்டும் என்று கோருகிறார் என்பதற்கு மேல் விவரங்கள் கூடத் தெரிந்திருக்கவில்லை.
5 days ago
5 days ago


உண்மையில் ஏற்கெனவே ஊழலைத் தடுக்க, தண்டிக்க இருக்கும் சட்டங்கள் போதுமானவைதான். அசல் பிரச்னை சட்டம் போதவில்லை என்பதே அல்ல; அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான்.
எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் சார்பாக அரசின் மசோதா கமிட்டியில் யார் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அண்ணா ஹசாரே யார்?
மோடியைப் பாராட்டி அண்ணா பேசியிருக்கிறார். அந்த குஜராத்தில் மோடியின் அரசு ஏழு வருடங்களாக ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோகாயுக்த் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை என்பது அண்ணாவுக்குத் தெரியாதா? குஜராத் முஸ்லிம் படுகொலைகள் பற்றியெல்லாம் அண்ணா பதறியதாக எந்தச் செய்தியும் நான் படித்ததில்லை. காந்தி இருந்திருந்தால் கலவர நேரத்தில் அங்கேதான் முகாமிட்டுத் தடுக்க முயற்சித்திருப்பார்.]
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை. எனவே, இது தொடர்பான என் கருத்துகளுக்காக உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக விஷயத்தைப் பார்க்க வேண்டும்.ஊழலைக் கடுமையாக எதிர்க்கிறேன் என்பதனாலேயே அண்ணாவின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டியதில்லை. அவர் போராட்டத்தை ஏற்கவில்லை என்பதாலேயே அவரை இழிவுபடுத்துவதாக அவதூறு செய்வதாக அர்த்தமில்லை. சமூக சேவகர், சீர்திருத்தவாதி என்பதற்கு மேல் அவர் மீது எனக்குப் பெரிய பக்தியோ மரியாதையோ இல்லை.
1975லிருந்து தம் சொந்த கிராமம் ரெலகாவ்ன் சித்தியை தன்னிறைவு உடையதாக ஆக்க அவர் செய்த தொண்டு நல்ல விஷயம்தான். ஆனால், அது பெரும் பிரமிப்புக்குரியதல்ல. இப்போது சுமார் 2500 பேர் (சுமார் 400 குடும்பங்கள்) வாழும் ஊர் அது. 1975ல் இன்னும் குறைவான நபர்கள்தான் இருந்திருப்பார்கள். ஓடைகளுக்குக் குறுக்கே தடுப்பணைகள், தேக்கங்கள் அமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்தியது தான் அண்ணா அங்கே செய்த சாதனை; அதையடுத்து சூரிய ஒளியில் மின்விளக்குகள் அமைத்தார்கள். இதெல்லாம் நல்ல விஷயம்தான்.
இங்கேகூட எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல்களில் சுயேச்சையாக நிற்கும் படித்த 'நல்ல' வேட்பாளர்கள் முதலில் அண்ணாவைப் போல அவரவர் கிராமத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்ய முயற்சிக்கலாம்.ஆனால், இவையெல்லாம் அண்ணாவை இரண்டாவது காந்தி என்றோ, இரண்டாவது சுதந்திரப் போராட்டத் தந்தை என்றோ புகழ்வதற்குரிய பெரும் சாதனைகள் அல்ல. இதேபோன்ற சாதனைகளை, சென்னை அருகே குத்தம்பாக்கத்திலும் அண்ணா போல தொண்டு நிறுவனம் மூலம் செய்யாமல், பஞ்சாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்து இளங்கோ செய்திருக்கிறார். இளங்கோவுக்கு பத்மஸ்ரீ கூட கிட்டவில்லை. அண்ணாவுக்கு பத்மபூஷன் வரை அவர் எதிர்க்கிற அரசியல்வாதிகள் கொடுத்துக் கௌரவித்திருக்கிறார்கள்.
அண்ணா, காந்தியத்தில் ஆழ்ந்த அறிவு இருப்பவராகவும் எனக்குத் தெரியவில்லை. ஊழல் செய்பவர்களை, லஞ்சம் வாங்குபவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று இந்த வாரம்கூடப் பேசியிருக்கிறார். அசல் காந்தி ஒருபோதும் மரணதண்டனையை ஆதரித்ததே இல்லை. பி.ஜே.பி முதலமைச்சர் மோடியைப் பாராட்டி அண்ணா பேசியிருக்கிறார். அந்த குஜராத்தில் மோடியின் அரசு ஏழு வருடங்களாக ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோகாயுக்த் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை என்பது அண்ணாவுக்குத் தெரியாதா? குஜராத் முஸ்லிம் படுகொலைகள் பற்றியெல்லாம் அண்ணா பதறியதாக எந்தச் செய்தியும் நான் படித்ததில்லை. காந்தி இருந்திருந்தால் கலவர நேரத்தில் அங்கேதான் முகாமிட்டுத் தடுக்க முயற்சித்திருப்பார்.
அண்ணா ஹசாரே வின் உண்ணாவிரதத்தை ஆதரித்து அதனால் மனம் நெகிழ்ந்து என்னிடம் பேசியவர்கள் பலருக்கும், அவர் ஊழலுக்கு எதிராக ஏதோ கடுமையான சட்டம் வரவேண்டும் என்று கோருகிறார் என்பதற்கு மேல் விவரங்கள் கூடத் தெரிந்திருக்கவில்லை. பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர், மாநில அமைச்சர்கள், எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் போன்றோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் உள்ள லோக்பால், லோகாயுக்த் அமைப்பை ஏற்படுத்த ஒரு சட்டம் தேவை. அந்தச் சட்டத்தை வடிவமைக்கப் போடப்படும் குழுவில் யார் யார் இருக்க வேண்டும் என்பவைப் பற்றிதான் அண்ணாவின் உண்ணாவிரதம். சுமார் 42 வருடங்களாக இந்த மசோதா பார்லிமெண்ட்டில் நிறைவேற வில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. மகளிர் இடஒதுக்கீடு மசோதாகூடதான் நிறை வேறாமலே இருக்கிறது.
லோக்பால் மசோதா 1968ல் முதலில் மக்களவையில் கொண்டு வரப்பட்டு 1969ல் நிறைவேறிவிட்டது. ராஜ்யசபையான மாநிலங்களவைக்கு ஒப்புதலுக்கு வரும் முன்பு அவை கலைக்கப்பட்டுவிட்டது. எனவே மறுபடியும் 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008... என்று பல முறை திரும்பத் திரும்ப மக்களவையில் அந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் அண்ணா ஹசாரே காரணமல்ல. அவர் எதிர்க்கிற அரசியல்வாதிகளேதான் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு முறையும் மசோதாவை மேம்படுத்த ஒரு கமிட்டியிடம் அது ஒப்படைக்கப்பட்டது. உண்மையில் இப்போது அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததும், இன்னொரு கமிட்டியிடம் அதை ஒப்படைக்கத்தான்.
மன்மோகன் அரசு இந்த மசோதாவை எழுதி முடிக்கும் பணியை ஓர் அமைச்சர் குழுவிடம் ஒப்படைத்தது. அந்தக் குழு மட்டும் போதாது; அதில் சம பலத்தில் பொதுமக்கள் சார்பில் அறிஞர் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதுதான் அண்ணாவின் கோரிக்கை. அதை அவர் பிரதமருக்குப் பலமுறை எழுதியிருக்கிறார். பதில் நடவடிக்கை இல்லாததால் உண்ணாவிரதம். தொண்டு நிறுவனங்கள் சிலவற்றின் சார்பில் இன்னொரு லோக்பால் மசோதா ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஈடுபட்டவர்களை அரசுக் குழுவில் சேர்க்க வேண்டும் என்று அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் வற்புறுத்தினார்கள். இது தவிர சோனியா காந்தி தலைமையில் தேசிய ஆலோசனைக் குழு என்று ஒன்று இருக்கிறது. அதில் ஓர் உபகுழுவில் அண்ணாவின் ஆதரவாளரான சுவாமி அக்னிவேஷள்ம் இருக்கிறார். தேசிய ஆலோசனைக் குழுவும் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறது.
அண்ணாவின் நான்கு நாள் உண்ணாவிரதத்தையடுத்து மத்திய அரசு லோக்பால் மசோதாவை இறுதி செய்யும் குழுவில் அண்ணா விரும்பிய சுயேச்சையான அறிஞர்களை சம பலத்தில் சேர்த்துக் கொள்வதாக அறிவித்துவிட்டது. உண்ணாவிரதம் முடிந்தது.இது ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று மீடியாக்கள் கொண்டாடுகின்றன.இங்கேதான் என் சில கவலைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
இதேபோல மற்றவர்கள் உண்ணாவிரதம் இருந்து ஒரு கோரிக்கையை அரசின் முன் வைத்தால், அரசு ஏற்றுக்கொண்டு விடுமா?
நான்கு நாள் உண்ணாவிரதத்துக்கு அடி பணிந்த இந்திய அரசு, பத்து வருடமாக மணிப்பூரில் ஐரம் ஷர்மிளா இருந்து வரும் (இப்போதும்..) உண்ணாவிரதத்தைப் பொருட்படுத்தாதது ஏன்? நவம்பர் 2000த்தில் அசாம் ரைபிள்ஸ் என்ற இந்திய ராணுவப் பிரிவு இம்பாலில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை ஒரு கிழவி உட்பட, தீவிரவாதிகள் என்று சுட்டுக் கொன்றது. இதைக் கண்டித்தும், மணிப்பூரில் அமலில் இருக்கும் ராணுவச் சட்டத்தை விலக்கக் கோரியும் ஷர்மிளா உண்ணாவிரதம் தொடங்கினார். தற்கொலை முயற்சி என்று அவரைக் கைது செய்து மூக்குக்குழாய் வழியே கட்டாய உணவு செலுத்தி வருகிறது அரசு. தற்கொலை முயற்சிக் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையே ஒரு வருடம்தான் என்பதால், ஒவ்வொரு வருடம் முடிவதற்கு சில நாட்கள் முன்பு ஷர்மிளாவை விடுதலை செய்துவிட்டு, திரும்பக் கைது செய்யும் சடங்கை 10 வருடமாக அரசு செய்கிறது.
2004ல் ராணுவத்தால் கொடூரமாக மனோரமா என்ற பெண் கொல்லப்பட்டதும் நூற்றுக்கணக்கான மணிப்பூர் பெண்கள் ராணுவ அலுவலகம் முன்பு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரையிலான 40 பேர் முழு நிர்வாணமாக ராணுவ அலுவலகம் முன்பு நின்று 'எங்களையும் பாலியல் வன்முறை செய்து கொல்' என்று முழக்கமிட்டனர்.
மணிப்பூரும் இந்தியாதான்; ஷர்மிளாவும் இந்தியர்தான். ஆனால், ஒரு சட்ட மசோதாவை எழுதப் போகும் கமிட்டி பற்றிக் கொதித்துப் போகும் அறிவுஜீவிகளுக்கு, சொந்த நாட்டில் நடக்கும் ராணுவக் கொடுமையோ, கல்பாக்கம், கூடன்குளம் போன்ற அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பானவை என்பது பற்றியோ ரத்தம் கொதிப்பதே இல்லை. லஞ்சம் ஊழலைத் திட்டுவதுதான் இருப்பதிலேயே எளிமையானது; அரசியல்வாதியைத் திட்டுவது அதைவிட எளிமையானது.
உண்மையில் ஏற்கெனவே ஊழலைத் தடுக்க, தண்டிக்க இருக்கும் சட்டங்கள் போதுமானவைதான். அசல் பிரச்னை சட்டம் போதவில்லை என்பதே அல்ல; அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான். நடைமுறைப்படுத்தினால், நம்மிடம் உள்ள சட்டங்கள் எவ்வளவு சிறப்பானவை என்பதற்கு, தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் செயல்களே சாட்சி. தேர்தல் ஆணை யம் செயல்படுத்தும் எதுவும் புது சட்டம் அல்ல. செயல்படுத்துவோரும் பழைய அதிகாரிகளேதான். லோக்பால் மசோதாவைச் சட்டமாக்கினால் போதாது. நிறைவேற்றும் பணி அதிகாரிகளிடம்தான் இருக்கிறது.அவர்கள் யார்? படித்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஊழலுக்கு நம் நாட்டில் படிக்காத அரசியல்வாதிக்கு, ரவுடிக்கு முழு துணை புரியும் ஆடிட்டர், வக்கீல், அதிகாரி எல்லாருமே படித்த வர்க்கத்தினர்தான். இவர்களைத் திருத்தாமல் எத்தனை சட்டம் போட்டும் பயனே இல்லை.
ஏன் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் கவனிக்கப்படுவதில்லை? ஏன் அண்ணாவின் போராட்டம் கவனம் பெறுகிறது? முழுக்க முழுக்க மீடியாதான் காரணம். கிரிக்கெட் உலகக் கோப்பை முடிந்து ஐ.பி.எல். தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் செய்யாமல் இருந்திருந்தால், அவரையும் மீடியா கவனித்திருக்காது. ஒரு பரபரப்பு முடிந்ததும் அடுத்த பரபரப்புக்காகத் தயார் செய்யும் ஆங்கில சேனல்கள் செயற்கையாக அண்ணாவின் போராட்டத்தை ஊதிப் பெரிதாக்கிக் காட்டின. அண்ணாவை தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் ஆதரிக்கிறார்கள் என்று முழங்கின. அவர்கள்தான் கறுப்புப் பணத்தை உற்பத்தி செய்பவர்கள்.மீடியா அடிமைகளாக இருக்கும் நடுத்தர வர்க்கத்துக்கு ஊழலுக்கு எதிராக மெழுகு வர்த்தி ஊர்வலம் போவதுதான் சாத்தியம். லஞ்சம் கேட்கும் ரிஜிஸ்திரார், தாசில்தார், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் எதிர்க்கவும், போராடவும் அவர்களுக்கு முதுகெலும்பு கிடையாது. ஊழல் எதிர்ப்பை திருவிழாவாக, கூட்டு பஜனையாகக் கொண்டாடுவது ஆபத்தில்லாதது.
எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் சார்பாக அரசின் மசோதா கமிட்டியில் யார் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அண்ணா ஹசாரே யார்? (அவரது நிர்பந்தத்துக்குப் பணிந்து அரசு ஏற்றிருக்கும் பெயர்களில் ஒரு பெண் கூட கிடையாது. கிரண்பேடி அவர் ஆதரவாளரானபோதும்.) இந்த முன்னுதாரணம் பின்பற்றப்பட்டால், எந்த அரசுக் குழுவிலும் தாங்கள் விரும்புவோரை வலிமையான மீடியா பலம் உள்ள ஒரு சிறு குழு புகுத்திவிட முடியும். ஒரு சிலர் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மிரட்டிக் காரியம் சாதித்தால் தீவிரவாதம் என்றால், வேறு ஒரு சிலர் மீடியா செல்வாக்கு, உண்ணாவிரத மிரட்டலைக் கொண்டு காரியம் சாதிப்பது மட்டும் காந்தியமாகிவிடுமா?
ஜனநாயகத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளுக்கே சட்டம் இயற்றவும் நிர்வாகம் செய்யவும் அதிகாரம் உண்டு. அவர்களிடம் மற்றவர்கள் கோரிக்கை எழுப்பலாம்; பரிந்துரைக்கலாம். இயற்றப்பட்ட சட்டம் தவறானதென்றால், நீதிமன்றம் சென்று போராடலாம். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற அணுகுமுறை - அது காந்தியத் தடியாக இருந்தாலும், தவறுதான்.
''அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை'' ஞாநியின் ஓ பக்கங்களிருந்து...
நன்றி: குமுதம்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::