Thursday, June 9, 2011

ஹசாரேவா, ராம்தேவா - யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!

சாரேவா?, ராம்தேவா?
ண்ணா ஹசாரேவின் பின் திரண்டுள்ள மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்குப் போராட்டம் என்பதெல்லம் வெறும் நேரப்போக்கிற்காக மெழுகுவர்த்தியோடு நடத்தப்படும் பேஷன் பெரேடு தான் என்று முன்பு சொன்ன போது நம்பாதவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?
ராம்லீலா மைதானத்தில் கருப்புப்பண விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த கார்பொரேட் பரதேசி ராம்தேவின் பக்தர்களை போலீசு அப்புறப்படுத்தியதைக் கண்டித்து அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவினர் நேற்று (6/6/2011) நடந்த ஜன்லோக்பால் முன்வரைவுக் கமிட்டிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த முன்வரைவை ஒழுங்கு செய்வதற்காகக் கூடும் கமிட்டிக் கூட்டங்களை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் அப்படிச் செய்யாவிட்டால் எதிர்வரும் கூட்டங்களையும் கூட புறக்கணிப்போம் என்றும் அண்ணாவின் குழுவிலிருக்கும் சாந்தி பூஷன் அறிவித்துள்ளார்.
முதலில் ராம்தேவ் விவகாரம் கருப்புப் பணம் சம்பந்தப்பட்டது – இவர்கள் செல்வதோ ஊழல் எதிர்ப்புக்கான ஒரு சட்ட முன்வரைவை ஒழுங்கு செய்யும் கூட்டம். அதற்காக இதைப் புறக்கணிக்க வேண்டிய தேவை எங்கேயிருந்து எழுந்தது? நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒரு கோரிக்கையை முன்வைத்து அந்த அலோசனைக் கூட்டத்தை இவர்கள் தவிர்க்கிறார்கள் என்றால் அதன் மேல் இவர்களுக்கே இருக்கும் உண்மையான அக்கறை குறித்து மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும், இவர்களின் புறக்கணிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கபில் சிபல், அண்ணாவின் குழுவில் இருப்பவர்கள் தங்களை திருடர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் பொதுவெளியில் குற்றம் சாட்டுவதாகவும், இது போன்ற வரைமுறை மீறிய பேச்சுகள் குழுவின் நடவடிக்கைகள் சுமூகமாக நடக்க ஏதுவானதல்ல என்றும் தெரிவித்துள்ளார். மட்டுமல்லாமல், அண்ணாவின் குழுவினர் வராமல் போனாலும் கூட தாங்களே ஜூன் 30-க்குள் இந்த சட்ட முன்வரைவை இறுதி செய்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம் என்றும் அறிவித்துள்ளார்.
இது போன்ற கூத்துகளுக்கு அடிப்படையாய் இருப்பது இவர்களுக்குள் நிலவும் ஜனநாயகமற்ற தன்மையும் என்.ஜி.ஓ அரசியலின் ஆன்மாவாக இருக்கும் துரோகத்தனமும் கைக்கூலித்தனமும் தான். அண்ணாவோடு மேடையிலிருந்த ராம்தேவ், தன்னையும் ஜன்லோக்பால் வரைவுக் கமிட்டியில் இணைத்துக் கொள்ளாததை அப்போதே எதிர்த்திருந்தார். மேலும் அவரே சாந்தி பூஷனை சேர்த்துக் கொண்டதைப் பற்றி வெளிப்படையாகவே விமர்சித்தார். அப்போது ஊடகங்களில் அண்ணாவுக்குக் கிடைத்திருந்த ஸ்டார் அந்தஸ்தையும் நடுத்தர வர்க்கத்து மக்களிடையே அவருக்கு ஊடகங்களால் ஏற்பட்டிருந்த நற்பெயரையும் கணக்கில் கொண்டு உடனேயே தனது விமரிசனத்தை வாபஸ் பெற்றிருந்தார்.
அப்போது ராம்தேவுக்கு உண்டான பொறாமையும் காய்ச்சலும் தான் அவரைத் தன்னிச்சையாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் அமரச் செய்தது. எங்கே இந்தப் பய குறுக்கே புகுந்து தான் ஐந்து நாட்கள் சோறு தண்ணியில்லாமல் டிராமா போட்டு சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரை அபேஸ் பண்ணி விடுவானோ என்று அஞ்சியதாலேயே அண்ணா ஹசாரே ராம்தேவை ஆதரித்திருந்தார். இவர்களுக்கு யார் பெரியவர் என்கிற குத்துபிடி சண்டை எந்த ஒளிவு மறைவுமில்லாமல் ஊடக ஒளியில் கனஜோராக நடந்து வந்தது.
அரசை விமரிசிப்பதில் தான் பின்தங்கி விட்டால் எங்கே தனக்குப் பெயர் கிடைக்காமல் போய் விடுமோ என்று அஞ்சிய அர்விந்த் கேஜ்ரிவால், தொலைக்காட்சி சேனல்களில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார். சாந்தி பூஷனும் தன் பங்குக்கு எந்தக் குறையும் வைக்காமல் இதே போன்ற நாடகத்தை தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் நடத்திக் கொண்டிருக்க, இக்குழுவின் இன்னொரு உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டே ‘எனக்கு அழுவாச்சியா வருது.. விடுங்க நான் வூட்டுக்குப் போறேன்’ என்று போன மாதம் தனி டிராக்கில் இன்னொரு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
இது தான் இவர்கள் மக்களுக்காக போராடிய லட்சணம். இதே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு குழுவாக இருந்திந்தால் அவர்களுக்கு மக்களிடம் பதில் சொல்ல வேண்டுமே என்கிற குறைந்தபட்ச பயமாவது இருந்திருக்கும். ஆனால், இவர்களோ தன்னிச்சையாக தங்களைத் தாங்களே சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். தங்களை நியமித்துக் கொண்டதிலோ, தமது குழுவிற்குள்ளோ மருந்துக்குக் கூட ஜனநாயகத்தை அனுமதிக்காதவர்கள். அண்ணா ஹசாரே தனது குழுவினரை நியமித்துக் கொண்டதும் ஒரு ஆண்டி மடத்தில் சீனியர் ஆண்டி தனக்கு ஜூனியர்களை நியமித்துக் கொள்வதற்கும் சாராம்சத்தில் வேறுபாடே இல்லை.
அடுத்து என்.ஜி.ஓ அரசியலுக்கென்றே இருக்கும் ஒரு குணாம்சமான மக்களை அரசியலற்ற மொக்கைகளாகவும், ஓட்டாண்டிகளாகவும் ஆக்கும் துரோகத்தனமும் இதில் துலக்கமாக வெளிப்படுகிறது. சமீப வருடங்களாக மக்களை அடுத்தத்த ஊழல் செய்திகள் ஒரு சுனாமி போல தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், அவற்றுக்கெல்லாம் ஊற்றுமூலமாய் இருக்கும் தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி மக்களின் ஆத்திரமும் கோபமும் திரும்பி விடாமல் போராட்டம் என்பதையே பிக்னிக் சென்று வருவது போன்ற ஒரு இன்பமான நிகழ்வாக மாற்றியமைத்துள்ளது, அண்ணாவின் பின்னேயிருந்து இவை மொத்தத்தையும் இயக்கும் என்.ஜி.ஓ கும்பல்.
இது மக்களின் ஆத்திரத்தையும் இயல்பாகவே மாற்றத்தை விரும்பும் அவர்களின் அபிலாஷைகளையும் அவர்கள் மொழியிலேயே பேசி கூட இருந்தே கருவறுக்கும் செயலாகும். இப்போது ஜன்லோக்பால் கமிட்டியினுள் அரசாங்க உறுப்பினர்களுக்கும் அண்ணாவின் குழுவினருக்கும் இடையே எழுந்திருக்கும் முரண்பாடுகளை ஏதோ மக்களுக்கே நடந்து விட்ட துரோகம் போலச் சித்தரித்து ஒட்டுமொத்தமாக இந்தச் சட்டம் ஏற்படாமலே போக வைக்கும் வேலையைத் தான் அவர்கள் கவனமாகச் செய்து வருகிறார்கள்.
ஊழலே சட்டபூர்வமாகிவிட்ட ஒரு சூழலில் ஜன்லோக்பால் சட்டம் மட்டுமே ஊழலை ஒழித்து விடக்கூடிய தீர்வு என்று யாராவது கருதமுடியுமா? ஊழல் என்பது மறுகாலனியாக்கத்தில் கருக்கொண்டிருக்கிறது – ஆனால் இவர்களோ வெறும் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் மட்டுமே கடல் அலைகளைக் கைகளால் தடுத்து விட முடியும் என்று நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால், எதார்த்தத்தில் இவர்களின் ஆன்மாவாக இருக்கும் என்.ஜி.ஓ அரசியலோ அதைக் கூட உருப்படியாய் நிறைவேறாமல் தடுக்கும் வேலையைச் செய்கிறது. அதைத் தான் இவர்களுக்குள் நடக்கும் குத்துபிடி சண்டைகளும் ஈகோ மோதல்களும் மெய்பித்துக் காட்டுகின்றது.
இவர்களுடைய ஓட்டாண்டித்தனங்களை முன்பே வினவில் அம்பலப்படுத்தி எழுதிய போது அறவுணர்ச்சி பொங்க கூத்தாடிய நண்பர்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? ஊழல் முறைகேடுகளை எதிர்க்கும் உங்களின் நியாயமான கோபத்தையும் உணர்ச்சியையும் இவர்களிடம் தானா நீங்கள் அடகுவைக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்; உண்மையாகப் போராடும் உலகமும் போராட்டக் களங்களும் இவர்களுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் அத்தகைய களங்களுக்குள் வரவேண்டும். மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணிக்க வேண்டும்.
-நன்றி வினவு

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::