Thursday, June 9, 2011

பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!!!

ண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!!!

து ஜனநாயகப் படுகொலை” என்று கூவுகின்றன இந்திய ஊடகங்கள். யோகாசனம் பயிலும் மேன்மக்களுக்கு பாதிப்பு வந்து விட்டதே என்று கண்ணீர் வடிக்கிறது தினமணி. பாபா ராம்தேவ் ஒரு ஆன்மீக சுப்பிரமணியசுவாமி என்கிற உண்மையை ஒப்புக் கொள்ளும் ஒரு சில ஊடகங்களும் கூட போலீசாரின் நடவடிக்கைகளை பாசிசம் என்கிறார்கள்.
போலீசும் இராணுவமும் இந்தப் போலி ஜனநாயக அமைப்பைக் காக்கும் பாசிசக் கருவிகள் என்பதில் நமக்கும் கூட கருத்து வேறுபாடு இல்லை தான். ஆனால், இந்த மாபெரும் இரசியம் எந்த நேரத்தில் இவர்களுக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது எந்த நேரத்திலெல்லாம் நினைவுக்கு வரவில்லை என்பதில் இருந்து தான் இவர்கள் எதற்காக அக்கறை கொள்கிறார்கள் என்பதையே விளங்கிக் கொள்ள முடியும்.
அண்ணா ஹாசாரே வாழும் இதே தேசத்தில் தான் ஐரோம் ஷர்மிளாவும் வாழ்கிறார். பாபா ராம்தேவின் உடலில் ஒரு சிறிய கீறல் கூட விழாமல் பத்திரமாக விமானம் ஏறிச் செல்ல அனுமதித்துள்ள அதே தேசத்தில் தான் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாய் ஒரு பெரும் மக்கள் கூட்டமே அகதிகளாய் மத்திய இந்தியாவெங்கும் அலைந்து திரிகிறார்கள்.
ஒரு கோடீசுவர கார்ப்பொரேட் சாமியாரை ஒன்றுமே செய்யாமல் பத்திரமாக திருப்பியனுப்பியதற்கே காங்கிரசு கட்சித் தலைவரை நோக்கி செருப்பை வீசத் துணிகிறார்கள் அவரது பக்தர்கள். திக்விஜய சிங்கின் வீடு மீது கல்லெறிகிறார்கள். இந்த சில்லுண்டிச் சில்லறை சமாச்சாரத்தையெல்லாம் ஏதோ மாபெரும் மக்கள் கிளார்ச்சி போல் சித்தரிக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் அவற்றைப் பெருமை பொங்க விவரிக்கின்றன.
ஆனால், அரை நூற்றாண்டு காலமாக காஷ்மீரத்திலும் வடகிழக்கிலும் இந்தியாவின் கொலைகார இராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்து வீதியிலிறங்கிப் போராடி வருவதை மட்டும் இவர்கள் யாரும் போராட்டமாகக் கருதுவதில்லை.
கோழைத்தனம் என்பது சந்தர்பவாதத்தின் உடன்பிறவாச் சகோதரன். அண்ணா ஹாசாரே மற்றும் பாபாராம்தேவின் பின்னே ‘போராளிகளாக’ அவதரித்து அணிதிரண்டு நிற்கும் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கு போராட்டம் என்பது இன்னொரு பொழுதுபோக்கு. அவர்களைப் பொருத்த வரையில் போராட்டம் என்பது தங்களது மனசாட்சியை ஆறுதல் படுத்த அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் உயிருக்கோ உடலுக்கோ உடைமைகளுக்கோ எந்த வகையிலும் பாதிப்பு வராமல் தலையைக் காட்டி விட்டுப் போகும் பொழுபோக்கு நிகழ்வு தான்.
அண்ணாவின் பின்னும் பாபா ராம்தேவின் பின்னும் பாதுகாப்பாக நின்று கொண்டு மெழுகுவர்த்தியும் ஊதுவர்த்தியும் ஏந்திக் கொண்டு பஜனை பாடுவதையே பயங்கரமான போராட்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ராம் லீலா மைதானத்தில் வைத்து ஒரு சிறிய முன்னுரையை அரசு கொடுத்திருக்கிறது. நாடெங்கும் விவசாயிகள் இழவு வீட்டு சோகத்திலிருந்த போது ஊடகங்கள் ஜெஸ்ஸிகா லாலுக்குக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததைப் போல – இப்போது இந்த நடுத்தரவர்க்க அச்சத்தையும் கோழைத்தனத்தையும் டி.ஆர்.பி ரேட்டிங்குகளாக மாற்றிக் கொள்ள கூடுமானவரை முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய இந்தியாவின் கோண்ட் இன மக்களைப் போன்றோ, காஷ்மீரிகளைப் போன்றோ, வடகிழக்கு மக்களைப் போன்றோ, அல்லது நாடெங்கும் தங்கள் வாழ்வுரிமைகளுக்குப் போராடும் உழைக்கும் மக்களைப் போன்றோ ராம்லீலா மைதானத்து மான்கராத்தே வல்லுனர்களுக்கு இந்தப் போராட்டம் என்பது வாழ்வா சாவா போராட்டமன்று. இதோ இந்த மண்குதிரைகளை நம்பி களத்திலிறங்கிய இந்துத்துவ கும்பல் தன்னந்தனியே ரோட்டோரத்தில் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் – சத்தியாகிரமாம்!
வினவில் நாம் இந்த அற்பர்களின் போலித்தனங்களை தோலுரித்துக் காட்டிய போதெல்லாம் தவறாமல் ஆஜராகும் சில அன்பர்கள், ‘யாருமே போராடாமல் இருக்கும் நிலையில் இதுவாவது நடக்கிறதே; தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள்’ என்று உருகுவதைக் கண்டிருக்கிறோம். அந்த உருகல் உணமையான அறவுணர்ச்சியின் பாற்பட்டதே என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான் – தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் வாழ்வுரிமை இழந்து பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களும் விவசாயிகளும் இழந்த தங்கள் வாழ்க்கையை மீட்க நாடெங்கும் போராடியே வருகின்றனர்.
மக்களுக்காகப் போராட வேண்டும் என்கிற உங்கள் உணர்ச்சி உண்மையானதென்றால் நீங்கள் மக்களோடு தான் கைகோர்க்க வேண்டும் – கார்ப்பொரேட் சாமியார்களின் குடுமிக்குள் முகம் புதைத்துக் கொள்ளக் கூடாது. போராடும் மக்களோடு நீங்கள் நிற்கும் போது தான் போராட்டம் என்பது மகிழ்ச்சி என்கிற மார்க்சின் முழக்கத்திற்கான மெய்யான பொருள் என்னவென்பது உங்களுக்கு விளங்கும். அதற்கு நீங்கள் தயாரா?
-நன்றி வினவு!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::