Friday, May 27, 2011

என் மகனுக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை

பி ரான்ஸில் கைதான பொறியாளரின் தாயார் கண்ணீர்!
தீவிரவாதிகளுக்கு ஆள் சேர்த்து அனுப்பியதாக சந்தேகத்தின் பேரில் பிரான்ஸில் கைதாகியுள்ள, மதுரை மேலுரைச் சேர்ந்த பொறியாளர் முகமது நியாஸ், எவ்விதமான குற்றச் செயலிலும்   ஈடுபட்டது இல்லை என்று அவரது தாயார் பாத்திமா தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு ஆள் சேர்த்து அனுப்பியதாகவும், சிமி இயக்கத்துடன் தொடர்புடையதாகவும் சந்தேகத்தின் பேரில், மதுரை மேலுரைச் சேர்ந்த பொறியாளர் முஹம்மது நியாஸ், பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் காவல்துறையினர் கொடுத்த தகவலின் பேரில், மத்திய தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் சந்தைப்பேட்டை தெருவில் வசித்துவரும் முகமது நியாஸின் தாயார் பாத்திமா, நேற்று  புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: "என் கணவர் அப்துல் ரஷீத், மதுரையில் உள்ள தனியார் நூற்பாலையில் துணை மேலாளராகப் பணிபுரிந்தவர். இப்போது கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார்.
எங்கள் மகன் முஹம்மது நியாஸ், மதுரை மேலப்பொன்னகரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பின்னர் கீழக்கரை பாலிடெக்னிக்கில் படித்தார். திருச்சி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியாளர் பட்டம் பெற்றார். பின்னர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுவிட்டார்.
அவருக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது சரியல்ல. அவருக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருந்தால் நாங்களே காவல்துறையிடம் ஒப்படைத்து இருப்போம். எவ்விதமான குற்றச் செயலிலும் என் மகன் ஈடுபட்டது இல்லை.
ஏற்கெனவே, மத்திய புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் கடந்த ஜனவரி மாதம் எங்களிடம் விசாரித்தனர். குடும்ப அட்டை, பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்தனர். அவருக்கு தீவிரவாதிகளுடன்  தொடர்பு இருப்பதாகத் தெரிந்திருந்தால் அப்போது வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்திருக்குமா?
புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் விசாரித்தபோது, என் மகன் இங்குதான் தங்கியிருந்தார். அப்போது, இன்டர்நெட் மூலம் ஹபீப்புன்னிஸா என்ற பெண்ணை பார்த்ததாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார். ஆனால், நாங்கள் மறுத்துவிட்டோம்.
எந்தவிதமான குற்றச் செயலிலும் தொடர்பு இல்லாத என் மகனை பிரான்ஸ் காவல்துறையினரிடமிருந்து மீட்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்”  இவ்வாறு ஃபாத்திமா கூறியுள்ளார்.
-நன்றி இந்நேரம்.காம்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::