Friday, May 27, 2011

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்;

முதல்வரின் மனநிலையில் இல்லை மாற்றம்!

முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் அமைச்சர் இல்லாமலேயே தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்தவர். ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான் என்றாலும், கருணாநிதியின் துரோகங்கள் தந்த வலியால், இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயம் ஜெயலலிதா கட்சிக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உறுதுணையாக நின்றது.

அரசியலில் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையிலிருந்த ஜெயலலிதா, மீண்டும் அரியாசனம் ஏறியவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான தனது மனநிலையை வெளிப்படுத்தினார். அவரது அமைச்சரவையில் கவுண்டர் சமுதாயத்திற்கு 8 , தேவர் சமுதாயத்திற்கு 6 , வன்னியர் சமுதாயத்திற்கு 5 என அமைச்சர் பதவிகளை வழங்கியவர், தமிழகத்தில் சுமார் 13 சதவிகிதம் உள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரே ஒரு அமைச்சர் பதவியை  வழங்கினார். அதுவும் நிதி, போக்குவரத்து, சட்டம், மின்சாரம், பொதுப்பணி போன்ற பிரபல்யமான துறைகள் எல்லாம் தமக்கு வேண்டிய சமுதாயத்திற்கு தந்துவிட்டு முஸ்லிம்களுக்கு 'சுற்றுச்சூழல்' என சுற்றலில் விட்டார்.

ஜெயலிதாவின் இந்த செயல், அவரது கடந்த கால அரசியல் தோல்வி அவருக்கு மன மாற்றத்தை தந்திருக்கும் என நம்பி வாக்களித்த முஸ்லிம்களுக்கு நெஞ்சில் நெருஞ்சியாய் குத்தியது. இருந்தாலும் 'ஆலை இல்லாத ஊருல இலுப்பைப் பூ சக்கரை' என்ற பழமொழிகேற்ப, ஏதோ ஒன்றாவது தந்தாரே என ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அல்லாஹ் அந்த அமைச்சரையும் அற்பநாளில் இறப்பெய்த செய்துவிட்டான். [இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்]

மரியம்பிச்சை மரணமடைந்த செய்தியறிந்து முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு கண்ணீர் வடித்த வேளையில், மரியம்பிச்சைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா. இது சற்றே ஆறுதலாக தெரிந்தது. மரியம்பிச்சை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது துறை ஒரு முஸ்லிமுக்கே வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த வேளையில் அந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்து இருக்கிறார் ஜெயலலிதா.
கவர்னர் பர்னாலாபிறப்பித்த உத்தரவில்  மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் துறைகள் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் சின்னய்யாவுக்கு ஒதுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

''தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின் பேரில், மறைந்த அமைச்சர் என்.மரியம் பிச்சையிடம் இருந்த சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் ஆகிய துறைகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், இனிமேல் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்கு பிரதிநித்துவம் இல்லாத ஆட்சி நடத்த ஜெயலலிதா நாடிவிட்டார் என தெரிகிறது. மேலும் இவரது கட்சியில் முஹம்மது ஜான் மற்றும் அப்துர்ரஹீம் ஆகிய முஸ்லிம் எம்.எல். ஏக்கள் இருக்கும் நிலையில் அவர்களை அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்காமல் புறந்தள்ளியிருக்கிறார். அதுமட்டுமன்றி ஜெயலலிதாவிற்கு நீண்டகாலமாக விசுவாசமாக இருக்கும் அன்வர்ராஜாவுக்கு இந்த பதவியை வழங்கியிருக்கலாம். அவரை மரியம்பிச்சை தொகுதி இடைத் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற செய்திருக்கலாம். அதையும் ஜெயலலிதா தவிர்த்துள்ளார்.

ஆக ஜெயலலிதாவின் போக்கு 'மாறாதய்யா மாறாது; மனமும் குணமும் மாறாது' என்று அவரது அரசியல் ஆசான் பாடலில் பாடியது போலவே உள்ளது. கருணாநிதியின் பக்கம் முஸ்லிம்களின் ஆதரவு இனி ஒருபோதும் திரும்பாது இன்ஷா அல்லாஹ். அதேபோல  ஜெயலலிதா முஸ்லிம்கள் விசயத்தில் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் வரும் தேர்தல்களில்  முஸ்லிம்களின் வெற்றிச்சின்னம் 49 'ஓ வாக மாறிவிடும் என்பது நிதர்சனமான தெரிகிறது.

-முகவை அப்பாஸ்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::