Sunday, May 29, 2011

மனித ஆன்மாவின் பயணத்தொடர்....

மிகமிக முக்கியமான கட்டுரை



ஆலிஃப் அலி
ஒரு விஷயத்தை ஆழமாக விளங்கி விசுவாசிக்கும்போதுதான் அதன் சுவையும் கனதியும் உள்ளத்தில் ஆழப்பதிகின்றது. அதுமட்டுமன்றி ஈமானும் பலம்பெறுகின்றது. ஆன்மா, ஆன்மிகம் சம்பந்தமாக பல மதங்களும் பேசியுள்ளன. ஆனால் இஸ்லாம் கூறும் ஆன்மாவின் உண்மைத் தன்மையோ அது மனிதனை இறைவனிடம் நெருங்கவைத்து மனிதப் படைப்பின் நோக்கத்தைப் புறியவைக்கின்றது. அந்தவகையில் மனித ஆன்மாவின் பயணத்தொடர் குறித்து இக்கட்டுரையில் சற்று விளங்க முயற்சிப்போம்.
இறைவனின் படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதன்தான். காரணம் யாதெனில் எந்தவொரு படைப்புக்கும் வழங்கப்படாத ‘ஆன்மா’ என்ற ஒரு அம்சம் மனித உடலில் காணப்படுகின்றது. இவ்வான்மா பறவைகளுக்கோ மிருகங்களுக்கோ தாவரங்களுக்கோ எம் கண்களுக்குப் புலப்படாத நுண்உயிரிகளுக்கோ வழங்கப்படவில்லை. மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அரபு மொழியில் நஃப்ஸ், ரூஹ் என்ற பதங்களில் இது அழைக்கப்படுகின்றது. ஆன்மா வல்ல நாயன் அல்லாஹ்விடமிருந்துதான் மனிதனில் ஊதப்பட்டது. அதனை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வரும் வசனங்களில கூறுகின்றான்.
﴾அவன் மனிதப் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனது சந்ததியை உண்டாக்கினான். பின்னர் அதனைச் செவ்வையாக உருவாக்கி தன்னுடைய ரூஹிலிருந்து அதில் ஊதி (மனிதனை உண்டாக்கி)னான்﴿. (அல்குர்ஆன் 32:7,8,9)
இதுபோன்ற வசனங்கள் இன்னும் குர்ஆனில் காணப்படுகின்றன. (அல்குர்ஆன் 15:29/ 38:72/ 66:12/ 21:91)
உயிரும் ஆன்மாவும் ஒன்றானவையல்ல. இரண்டும் வெவ்வேறு அம்சங்களே!
இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஒரு ஹதீஸிலிருந்து விழங்க முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். "ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்." (முஸ்லிம்)
இந்த ஹதீஸின் பிரகாரம் ஒரு ஆன்மா நான்கு மாதங்கள் வளர்ச்சியடைந்த பின்பே ஒரு சிசுவில் ஊதப்படுகின்றது. அவ்வாறெனில் அதற்கு முன்பே அச்சிசு படிப்படியாக வளர்ச்சியடைகின்றது. எப்பொருளும் உயிரின்றி வளர்ச்சியடையாது. வளர்ச்சியெய்தும் எப்பொருளுக்கும் உயிரிருக்கும். அப்படியானால் உயிரிருக்கின்ற படியால் தான் சிசு வளர்ச்சியடைகின்றது. அதற்கடுத்தபடியாக வேறு ஏதோவொன்று (ஆன்மா) உடலில் சேர்க்கப்படுகின்றது. மரங்கள் வளர்கின்றன அவற்றுக்கு உயிருண்டு ஆனால் ஆன்மா இல்லை. இதன்மூலம் உயிரும் ஆன்மாவும் வெவ்வேறு அம்ஷங்கள் என்பதை விளங்கலாம்.

மனிதன் என்ற பதப்பிரயோகம் இப்பூமியில்தான் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு முன்னுள்ள கட்டங்களிலும் பின்னுள்ள கட்டங்களிலும் "ஆன்மா (ரூஹ்)" என்றே குறிக்கப்படுகின்றது. மனித ஆன்மா ஆறு கட்ட நிலைகளைக் கடந்துதான் வேதனைமிக்க அல்லது இன்பம் சொட்டும் அழிவேயற்ற நிரந்தரமான வாழ்வை அடைகின்றது. இவ்வுலக வாழ்வென்பது ஆன்மாவின் நீண்ட பயணத்தொடரின் மூன்றாம் கட்ட நிலையாகும். இம்மூன்றாம் கட்ட நிலையை ஏனைய கட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது சொற்பகாலம்தான் என்பதை விளங்கலாம். ஆன்மாவின் அந்த ஆறு கட்டப் பயணத் தொடரை பின்வரும் வரைபின் மூலம் விளங்கலாம்.
இவ்வரைபின் ஒவ்வொரு கட்டத்தையும் சற்று விரிவாக நோக்குவோம்.
முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவருக்கு ரூஹை (ஆன்மாவை) ஊதியதன் பின்பு அவரிலிருந்து மறுமை நாள் நிகழும் வரையிருக்கும் இறுதி மனிதன் வரையுள்ள அனைவரதும் ஆன்மாக்களைப் படைத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்.
"நபியே உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களது முதுகுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தமக்கே சாட்சியாக்கி அவர்களிடம் நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று (கேட்ட) சமயத்தில்..." (அல்குர்ஆன் - அல்அஃராப்:172)
அவ்வான்மாக்கள் இருக்குமிடம் "ஆலமுல் அர்வாஹ்" (ரூஹ்களின் உலகம்) என அழைக்கப்படுகின்றது. இதுவே ஆன்மாக்களின் பயணத்தொடரின் ஆரம்பகட்டம். இதில் ஒரு ஆன்மா தங்கியிருக்கும் காலமோ மிக நீண்டது. எவ்வளவெனின் இன்றொரு குழந்தை பிறக்குமென்றிருந்தால் அதன் ஆன்மா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்ததிலிருந்து தாயின் கருவறையில் சேர்க்கப்படும்வரை எண்ணிப்பார்க்க முடியாத காலங்கள் ரூஹ்களின் உலகத்தில் தங்குகின்றது.
இரண்டாம் கட்டம் :
ஆன்மா இரண்டாம் கட்டமாக தாயின் கருவறையை அடைகின்றது. இங்கு பொதுவாக நான்கு அல்லது ஐந்து மாதங்களே தங்கியிருக்கும். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

"ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்." (நூல்: முஸ்லிம்)
மூன்றாம் கட்டம் :
தாயின் கருவறையிலிருந்து இப்பூவுலகை அடைகின்றது அவ்வான்மா. இதுதான் மிக முக்கிய இடம். ஆன்மாக்கள் எந்நோக்கத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டனவோ அந்நோக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டிய இடம் இதுதான். அல்லாஹ்விடம் ஆன்மாக்கள் ஆலமுல் அர்வாஹில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய இடம். இதில் ஆன்மா இறை வழிகாட்டலையும் அவன் தூதரின் போதனைகளையும் ஏற்றுப் பின்பற்றி வாழ்ந்தால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் சுபீட்சமானதாக அமையும். மாறாக அவற்;றைப் புறக்கணித்து வாழ்ந்தால் வேதனை மிக்கதாக அமையும்.
இவ்வுலக வாழ்க்கை என்பது இரண்டு பாதைகளைப் பிரிக்கும் ஒரு சந்தி (Junction). தொடர்ந்து ஒரே பாதையில் (One way) வந்த ஆன்மா இங்கிருந்து பிரியும் இரு பாதைகளில் ஏதாவது ஒரு பாதையின் மூலமே செல்லமுடியும். அல்லாஹ் இந்த இரண்டு பாதைகளையும் மனிதனுக்குக் காட்டித்தந்துள்ளான். அவன் கூறுகின்றான். "(நன்மை, தீமையாகிய) இரு பாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்து விட்டோம்." (அல்குர்ஆன் - அல்பலத்:10) மற்றும் ஸூரதுத்தஹ்ரின் மூன்றாம் வசனத்தில் "நிச்சயமாக, நாம் அவனுக்கு (நல்லது, தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம், (அதைப்பின்பற்றி) அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதனைப் பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்." என்று கூறுகின்றான்.

இவ்விரு பாதைகளில் ஒன்று நரகின் பாதை மற்றையது சுவனத்தின் பாதை. (மேற்குறிப்பிட்ட வரைபை அவதானிக்கவும்) எனவே இதில் நாம் சுவனத்திற்கான நேரான பாதையைத் தெரிவுசெய்யவேண்டும். மாற்றமாக இவ்வுலகை சுவனமாக எண்ணி மனம்போன போக்கில் வாழ்வது நேரெதிரான நரகின் பாதையைத் தெரிவுசெய்ததாயமையும். எனவேதான் அல்லாஹ் தனது கட்டளைகளின் பிரகாரம் உலகில் வாழுமாறும் உலகக் கவர்ச்சிகளில் மூழ்கிவிட வேண்டாமென்றும் கூறி உலக வாழ்க்கை அற்பமானது என்று கூறுகின்றான்.
"இம்மை மறுமையின் விளைநிலம்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கிணங்க; மறுமைக்கான கட்டுச்சாதனங்களை இங்குதான் தயார்செய்து கொள்ளவேண்டும். உலகம் எனும் இத்தேர்வுக் களத்தை நல்ல முறையில் எதிர்கொண்டால்தான் மறுமையில் சிறந்த பேறுகிடைக்கும்.
ஆன்மாவின் பயணத்தில் அது பூமியில் தங்கும் காலம்தான் மிகச் சொற்பமானது. இதனை ஏனைய காலகட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "எனது உம்மத்தின் வாழ்க்கை 60-70 வயதுக்கு இடைப்பட்டதாகும்" (நூல்: திர்மிதி)

இந்த ஹதீஸ் குறிப்பிடும் இவ்வுலகில் ஆன்மாவின் வயதெல்லையையும் அது தங்கும் ஏனைய கட்டங்களின் கால அளவையும் ஒப்பிடுகையில் இது குறுகிய காலம்தான். எனினும் மனிதன் இங்குதான் தவறிழைக்கின்றான். இறைவனது அருட்கெடைகளையெல்லாம் பூரணமாக அனுபவித்துவிட்டு செருக்குக்கொள்கின்றான். ஆடம்பரத்தில் ஆடுகின்றான். இறைவனையும் நிராகரிக்கின்றான். அவனது பார்வையில் உலகம் என்பது வெறுமனே இன்பமனுபவித்துவிட்டுச் செல்லும் ஓர் இடம். ஏனெனில் நிரந்தரமான உயர்ந்த மறுமையின் சுவன வீட்டை அவன் மறுக்கிறானல்லவா? அதனால்தான் இது அற்பமானதென்பதை விளங்காதிருக்கின்றான்.
நான்காம் கட்டம் :
உடலைவிட்டுப் பிரியும் ஆன்மா அடுத்து ஆலமுல் பர்ஸகை அடைகின்றது. ஆலமுல் பர்ஸக் என்பது மரணத்திற்கும் மறுமைக்கும் இடைப்பட்ட வாழ்க்கை. மரணித்த ஒருவரது ஆன்மா நல்லதாக இருந்தால் அது இல்லிய்யீனிலும் அதுவே கெட்டதாக இருந்தால் ஸிஜ்ஜிய்யீனிலும் பதியப்பட்டதன் பின்பு பர்ஸகிலே சேர்க்கப்படும்.

இங்கும் ஆன்மாக்கள் நீண்டகாலம் தங்கியிருக்கும். எவ்வாறெனில் ஆலமுல் அர்வாஹிலிருக்கும் ஆன்மாக்கள் அனைத்தும் பூமியை அடைந்து, பின்பு பூமியை அடைந்தவையெல்லாம் மரணித்து ஆலமுல் பர்ஸகை அடைந்து மறுமை நாளாகும்வரை ஏற்கனவே பர்ஸகை அடைந்த ஆன்மாக்கள் நீண்டதொரு கால இடைவெளியில் தங்கியிருக்கும். இங்கு நல்ல ஆன்மாக்கள் இன்பத்தையும் கெட்ட ஆன்மாக்கள் வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும்.
ஐந்தாம் கட்டம் :
ஆலமுல் பர்ஸகில் இருந்த ஆன்மாக்கள் அடுத்தகட்ட நகர்வாக மஹ்ஷர்வெளியை அடையும். பூவுலகில் செய்த நன்மைக்கும் தீமைக்குமேற்ப கூலிவழங்கப்படும் தீர்ப்பு நாள்தான் மஹ்ஷருடைய நாள். அது ஒரு மாபெரும் திடல். முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து பூவுலகில் வாழ்ந்த இறுதி மனிதன்வரை அனைவரும் அங்கு திரண்டிருப்பார்கள். அனைத்து ஆன்மாக்களும் மீண்டும் அவற்றுக்கான புதிய உடல்களில் நுழைவிக்கப்பட்டிருக்கும். அவ்வுடல்கள் மறுமையின் வேதனையையோ அல்லது இன்பத்தையோ அனுபவிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும். அல்லாஹ் கூறுகின்றான். "ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு)ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்போது." (அல்குர்ஆன் - அத்தக்வீர்: 07)
இங்கும் ஆன்மாக்கள் மிக நீண்டகாலம் தங்கியிருக்கும். அது இத்துனை வருடங்கள்தான் என்று குறிப்பிட்டுக்கூற முடியாது. அதனை அல்லாஹ்தான் அறிவான். எனினும் இது தொடர்பாக இரண்டு குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம்.

1. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 1000 வருடங்களுக்குச் சமன்.
"நிச்சயமாக உம் இரட்சகனிடத்தில் ஒரு நாள் நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்." (அல்குர்ஆன் - அல்ஹஜ்: 47)
2. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 50, 000 வருடங்களுக்குச் சமன்.
"மலக்குகளும் ஜிப்ரீலும் இவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள். அதன் அளவு ஐம்பதாயிரம் வருடங்களாகும்." (அல்குர்ஆன் - அல்மஆரிஜ்: 04)
இவ்விரு வசனங்களும் வித்தியாசமான கால அளவைக் காட்டினாலும் தப்ஸீர் அறிஞர்களின் கருத்துப்படி ஒரு முஸ்லிமுக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஆயிரம் வருடங்களுக்குச் சமனாகவும் ஒரு காபிருக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமனாகவும் இருக்கும் என ஒரு கருத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு காலம் என எமது குறுகிய அறிவால் சரியாகக் குறித்துக் கூற முடியாது. ஆனாலும் ஒரு கணிப்பீட்டுக்காக ஒரு முஸ்லிம் மஹ்ஷர் வெளியில் ஐந்து நாட்கள் தங்குவதாகக் கொண்டால் அது இப்பூமியின் ஐந்தாயிரம் வருடங்களுக்குச் சமன். இதுகூட பூவுலக வாழ்வைவிட நீண்டதே!
ஆறாங்கட்டம் :
ஆன்மாவின பயணத் தொடரின் இக்கட்ட வாழ்வுதான் நிரந்தரமானது. ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் எவ்வகையான வாழ்க்கையை வாழ்ந்தனவோ அதற்கு ஏற்றதான வாழ்கையை இங்கு பெற்றுக்கொள்ளும். உலகில் இஸ்லாம் கூறிய பிரகாரம் வாழ்ந்து நன்மைகள் புரிந்து இறைதிருப்தியைப் பெற்றிருந்தால் அந்த ஆன்மா சுவனத்தை அனந்தரமாகக்கொள்ளும். இதற்குப் புறம்பான வாழ்வை வாழ்ந்தால் வேதனைகள் மிகுந்த நரகை ஒதுங்குமிடமாகப் பெற்றுக்கொள்ளும். இங்கு வாழும் வாழ்க்கைக்கு முடிவே இல்ல

ஆக ஆன்மாவின் இந்த ஆறு கட்ட பயணங்களையும் எடுத்து நோக்கினால் மிகக் குறைந்த கால வாழ்க்கை பூமியிலேயே அமைகின்றது. இந்த சொற்பமான வாழ்க்கை அற்பமானதுதான். ஆரம்பத்தில் கூறியதுபோன்று மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு பாதைகளும் இரண்டு விருப்பு, வெறுப்புகளைக் கொண்டது. ஒன்று இறை விருப்பு, வெறுப்பு. மற்றையது மனித விருப்பு, வெறுப்பு. இதில் மனித விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமையளித்தவன் நரகின் பாதையைத் தெரிவு செய்வான். இறை விருப்புக்கும் வெறுப்புக்கும் முன்னுரிமையளித்து அதன்படி வாழ்ந்தவன் சுவனப் பாதையைத் தெரிவுசெய்தவனாவான். அல்லாஹ் கூறுகின்றான்:
"எவர் வரம்புமீறிவிட்டாரோ மேலும் இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாரோ நிச்சயமாக நரகம் அதுவே (அவர்) ஒதுங்குமிடமாகும். மேலும் யார் தனது இரட்சகனின் சந்நிதியைப் பயந்து தனது விருப்பு வெறுப்புகளிலிருந்தும் தனது உள்ளத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் ஒதுங்குமிடம் நிச்சயமாக (நிரந்தர இன்பங்கள் நிரைந்த) சுவனம்தான்" (அல்குர்ஆன் 69:37- 41)
எனவே நாம் இந்த உலகினதும் மனித வாழ்வினதும் யதார்த்த நிலையை விளங்கவேண்டும். உண்மையில் உலக வாழ்க்கை வீணும் வேடிக்கையும் நிறைந்தது. அற்பமும் சொற்பமும் விளைந்தது. ஆனால் இதுதான் மனித ஆன்மாவின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு சந்தி. எனவேதான் இந்த உலக வாழ்வில் மனிதனை ஒரு வழிப்போக்கனைப்போல் வாழுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "நீங்கள் உலகத்தில் ஓர் அன்னியனைப்போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் வாழுங்கள்." (நூல்: புகாரி)
ஆக மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப்போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாக அவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் எமது பணி என்ன என்பதை விளங்கவேண்டும். அதன்படி செயற்பட்டு நிரந்தர சுவனபதியை அனந்தரமாகக்கொள்வோம


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::