Tuesday, April 26, 2011

தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு

தா யத்து...தாயத்து....

தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு
ஒரு ஹஜரத் கருப்பு கயிற்றை எடுத்து அதில் திருமறை வசனங்களை படித்து உஃப், உஃப் என ஊதிவிட்டு இந்த கயிறு மகத்துவமிக்கது இதை கழுத்திலோ, இடுப்பிலோ கட்டிக் கொண்டால் துன்பம் விலகும், சூனியம் நீங்கும், காத்து கருப்பு அண்டாது என்று கூறுவார்! மற்றொருபுறம் தர்காஹ்வில் ரெடிமேடாக கருப்பு, சிகப்பு, மஞ்சள் நிற கயிறுகளுடன் சில அரபு வசனங்கள் எழுதப்பட்ட காகிதங்களை சயனைடுகுப்பி போன்ற வடிவத்திலோ உள்ள தாயத்தில் சுருட்டியோ அல்லது கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் கழுத்தில் கட்டும் பச்சைநிற தலையைனை போன்ற பொருளில் சொருகிவிட்டோ மக்களை நோக்கி மகத்துவமிக்க இந்த தாயத்தை கட்டிக்கொள்ளுங்கள் என்று விற்பனை செய்வார்! இவர் மக்களை தேடி செல்லமாடடார் மக்கள் இவரை நாடி வருவார்கள் உலகிலேயே மார்க்கெட்டிங் தேவைப்படாத பிஸினஸ் தாயத்து பிஸினஸ்!

அடிப்படை அறிவுகூட இல்லாத பெயர்தாங்கிகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர்கள் மந்தரித்து கொடுக்கும் தாயத்து கட்டுவதால் துன்பம் விலகுமா? அப்படி விலகுவதாக இருந்தால் மாற்றுதத்தவர்களுடைய கோவிலில் மந்தரித்து கொடுக்கும் காப்பு கயிற்றில் கூட மகத்துவம் இருக்குமே! அப்போ அந்த கோவிலில் மகத்துவம் கொட்டுகிறது என்ற நீங்கள் மறைமுக நம்பிக்கை வைத்துள்ளீர்களா?


திருக்குர்ஆனை எவ்வாறு அணுகுவது 
மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அருளிய அருள்மறை வேதத்தை பொருள் உணர்ந்து படித்தால் நேர்வழி கிடைக்குமா அல்லது அதன் வசனங்களை கழுத்தில் மாட்டிக்கொண்டால் நேர்வழி கிடைக்குமா? இது எவ்வாறு உள்ளது என்றால் இதோ உதாரணம்:

உங்களுக்கு தலைவலி ஏற்படுகிறது உடனே மருத்துவரை அணுகுகிறீர்கள் அவரும் நோய் குணமாகுவதற்காக மருந்துச் சீட்டு எழுதி அதில் உள்ள மருந்தை சாப்பிட வலியுறுத்துகிறார் ஆனால் நீங்கள் அந்த மருந்துகளை வாங்காமல் மருந்துச்சீட்டை சுருட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு நோய் குணமாகிவிடும் என்று நினைத்தால் நீங்கள் முட்டாள்தானே! ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டை உங்களால் உணர முடிகிறது அல்லாஹ் கொடுத்த அருள்மறை குர்ஆனை உங்களால் உணர முடியவில்லை!

குர்ஆனை படித்து அதன்படி நடக்க முற்பட்டால் நேர்வழி கிடைக்குமா? அல்லது அதன் வசனங்களை தங்கத் தகட்டில் எழுதி கரைத்து குடித்தாலோ அல்லது கழுத்தில் எழுதி மாட்டிக்கொண்டாலோ நேர்வழி கிடைக்குமா?

சிந்தித்துப்பாருங்கள்  
ஒருவன் கயிறு திரிக்கிறான் அதன் மீது கருப்பு சாயம் ஏற்றுவதற்காக சாயப்பட்டறையில் கொடுக்கிறான் பிறகு அந்த கயிற்றுக்கு சாயம் ஏற்றப்பட்டு வெயிலில் காய வைக்கிறான்! வெயிலில் காய்ந்துக் கொண்டிருக்கும் சாயம் ஏற்றப்பட்ட கயிற்றின் மீது யார் யாரோ நிற்பார்கள், பறந்துக்கொண்டு காக்கை கூட மலம் கழித்திறுக்கும்! சாக்கடையிலிருந்து வெளியேறும் எலி கூட உணவு என எணணி நக்கிப் பார்த்திருக்கும் இப்படிப்பட்ட கயிற்றில் ஏதாவது மகத்துவம் ஏற்றப்பட வாய்ப்பு உள்ளதா?

மந்தரிக்கும் ஹஜரத்துகள் செல்போனில் சார்ஜ் ஏற்றித்தருவது போன்று சாதாரண கயிற்றில் மகத்துவத்தை ஏற்றி தருகிறார்களே  இதற்கு மாறாக மகத்துவமிக்க வசனங்களை பட்டுத்துணியால்  நெய்யப்பட்ட கயிற்றில் ஏற்றித்தரளாமே! விற்பனையாகாது என்ற பயமா? அல்லது அவர்கள் ஓதும் வசனங்கள் அதில் ஏறாதா?

தாயத்தும் மடத்தனமும்
  • புத்தக வடிவில் இருக்கும் இறைவேதத்தை கழிவரைக்கு எடுத்துச் செல்வீர்களா இல்லையே ஆனால் அதையே காகிதத்தில் எழுதி, அதை தாயத்தில் சொருகி கழுத்திலோ இடுப்பிலோ கட்டிக்கொண்டு அதனுடன் கழிவரைக்கு செல்கிறீர்களே இது அசிங்கமாக தெரியவில்லையா?
  • ஒயின் ஷாப்புக்குள் இறைவேதத்தை எடுத்துச் செல்வீர்களா இல்லையே ஆனால் அதே ஒயின் ஷாப்புக்கள் தாயத்து கட்டிய எத்தனை தடியர்கள் செல்கிறார்கள் அப்போ அந்த இறைவசனங்களுக்கு மதிப்பில்லையா?
  • குழந்தைகளுக்கு இடுப்பில் தாயத்துகளை கட்டுகிறீர்களே அதற்குள் இறைவேத வசனங்கள் இருக்கின்றதே ஒருவேளை அந்த குழந்தை இரவில் படுத்து சிறுநீர் கழித்துவிட்டால் அந்த அசுத்தம் இறைவசனங்களில் தெளிக்குமே இது உங்களுக்கு அருவருப்பாக தெரியவில்லையா?
  • உங்களுடைய பள்ளிச் சான்றிதழுக்கு தரப்படுகின்ற மதிப்பு கூட இந்த இறைவசனங்கள் நிறைந்த காகிதங்களுக்கு தரமாட்டீர்களா?
  • அழகாக திருமறையை பச்சை துணியில் கட்டி கைகள் படாத இடத்தில் வைத்து ரசிக்கிறீர்கள் ஆனால் அதன்  வசனங்களை காகிதங்களில் எழுதி அதை குழந்தைகளுக்கு இடுப்புக்கு கீழே தொங்கவிட்டு ரசிக்கிறீர்கள் உங்கள் செயல்கள் உங்களுக்கு புரிய வில்லையா?
சயனைடு குப்பியும் தாயத்தும் ஒப்பீடு
இதோ கீழ்கண்ட நபிமொழிகளையும் திருமறை வசனங்களையும் ஆராய்ந்து பாருங்கள் தெளிவு பிறக்கும்!
  நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-
‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்)  அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)” என்று கூறினார்கள். [நூல்-புஹாரி எண் 2653 ]

இந்த இறைவசனத்திற்கு என்ன அர்த்தம் 
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன்)

தீன்குலத் தாய்மார்களே
உங்கள் குழந்தைக்கு சிறு துன்பம் நேர்ந்தவுடன் சமாதிகளை வணங்கி, ஹஜரத்துகளிடம் தாயத்து வாங்கி கட்டுகிறீர்களே இது நியாயமா?

உங்கள் குழந்தைக்கு நேர்ந்த துன்பத்தை அல்லாஹ்விடம் முறையிடமாட்டீர்களா? அல்லாஹ்வுக்கு சிறு உறக்கமோ ஆழந்த உறக்கமோ ஏற்படாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறதே இதை உங்களால் உணர முடியவில்லையா?

அல்லாஹ்வுக்கு உங்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை சூழ்ந்து அறிகிறவன் என்பதை உங்களால் உணர முடிய வில்லையா?

மறைவானவற்றை அல்லாஹ்வைத்தவிர யாரும் அறிந்துக் கொள்ளமுடியாது என்று திருமறையில் அடிக்கடி கூறப் பட்டுள்ளதே அதை உங்களால் உணர முடியவில்லையா?
நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 46:4)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

  அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186)

  நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: ‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு!’ (திர்மிதி)
அல்லாஹ் மிக அறிந்தவன்
 அல்ஹம்துலில்லாஹ்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::