Saturday, April 9, 2011

இந்தியாவை வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றி!

ந்தியா வெற்றி


30.03.2011 நடந்த ICCI கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் விளையாடின (கவனிக்கவும்: மோதின அல்ல - விளையாடின). இருநாடுகளின் பிரதமர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கண்டு 'களித்தனர்'. வழக்கம்போலவே, மற்ற எந்த விளையாட்டுகளுக்கும் இல்லாத பரபரப்பும் அரசியல் முக்கியத்துவமும் நேற்றைய அரையிறுதி ஆட்டத்திற்கும் கொடுக்கப்பட்டது.

பெரும்பாலும் பாகிஸ்தானுடனான அணுகுமுறைகளை விமர்சிக்கும் பாஜகவின், மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானியை கிரிக்கெட் பார்க்க அழைத்ததற்குப் "பாஜகவுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை" என NOC (No Objection Certificate) கொடுத்ததிலிருந்து கிரிக்கெட் - அரசியல் வலைப்பின்னலின் வலிமை எந்தளவு விரிவடைந்துள்ளது என்பது புரியவரும்.

சோனியா காந்தி(!), ராகுல் காந்தி(!) ஆகிய காந்தேயரும் குடும்ப சகிதமாக வந்து உட்கார்ந்து கிரிக்கெட்டைக் கண்டுகளித்ததோடு, இந்தியா வெற்றி பெற்றவுடன் சோனியா எழுந்து நின்று மகிழ்ச்சி ததும்ப இரு கைகளையும் உற்சாகத்துடன் தூக்கிக் காட்டியது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இரட்டிப்பு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில், இறுதிப் போட்டியினை மிஞ்சும் வகையில் அதிகப்படியான விளம்பரம் கிடைத்த இப்போட்டியினால் கிரிக்கெட் வியாபாரிகள் இதைவிடப் பலமடங்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

நம்மை இருநூற்றாண்டுகள் அடிமையாக்கிய இங்கிலாந்தின் அணியையும் தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கையின் அணியையும்கூட ஆதரிக்கலாம்.ஆனால் பாகிஸ்தான் அணியை மட்டும் எக்காரணம் கொண்டும் ஆதரித்துவிடக்கூடாது. ஏனெனில் பாகிஸ்தான் அணி என்பது முஸ்லிம்களின் அணி என்றளவு நமது நாட்டில் மட்டும் கிரிக்கெட்டில் மதவெறியும் கலந்தே இருப்பது கவலையளிக்கிறது!


உலகெங்கும் எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டின் பின்னணியில் முதலாளித்துவ அரசியலும் அதையொட்டிய வர்த்தக லாப நோக்கங்களுமே அதிகம் பொதிந்துள்ளன. எதிரெதிராக விளையாடுபவர்கள் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளைச் சார்ந்தவர்கள் என்பதால் தேசபக்தி என்ற பெயரில் மதவெறி அளவுக்கதிகமாக ஊட்டப்படுகிறது.

காதில் விழுந்த கொடுமைகளில் சில ...
  • 250 ரூபாய் டிக்கெட் 25,000 ரூபாய்க்கு பிளாக்கில் விற்கப்பட்டதாம்.
  • டிக்கெட்டுக்குப் போதிய பணம் இல்லாத ஒரு தேசபக்தித் தொண்டர், தனது கிட்னிகளில் ஒன்றை மேட்ச் பார்ப்பதற்காக விலை பேசினாராம்.
  • 30.03.2011 அன்று மருத்துவர்களால் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்ட 15 நோயாளிகள், தொலைக்காட்சியில் மேட்ச் பார்ப்பதற்காகத் தங்கள் அறுவை சிகிச்சையைத் தள்ளி வைக்கும்படிக் கோரிக்கை வைத்து வெற்றி பெற்றனராம்.
  • மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த இரு பாகிஸ்தானியர் தம் நாட்டு அணி தோற்றதைத் தாங்கிக் கொள்ளாமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனராம்.
இதற்குப் பலியாகும் விதத்தில் முஸ்லிம்களில் ஒரு சிலரும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களின்போது பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி வெளிப்படுத்தி தங்களின் முட்டாள்தனத்தை அவ்வப்போது பறைசாற்றுகின்றனர்!

விளையாட்டின்மீதான வெறியில் ஒருசிலர் இவ்வாறு செய்தால் மற்றும் சிலர், பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது முஸ்லிம்கள் மீதான தார்மீகக் கடமை என்பதுபோல் தவறாக விளங்கிக் கொண்டுள்ளனர். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எதிராகச் செயல்படாதவரை அவரவர் தாய்நாட்டிற்கும் அதன் சட்டத்திற்கும் கட்டுப்படவேண்டியதே முஸ்லிம்களின் கடமை. மேலும், பாகிஸ்தானை முஸ்லிம்களின் முன்மாதிரி நாடாகக் கொள்ளுமளவுக்கு அங்கு இஸ்லாமிய விழுமியங்கள் எதுவும் முழுமையாகப் பேணப்படவுமில்லை.

சக பாகிஸ்தானியைக்கூட முஸ்லிம் என்றும் பாராமல் மஸ்ஜித்களிலும் தர்காக்களிலும் வெடிகுண்டு வைத்துக் கொல்லுமளவுக்கு இஸ்லாமிய மாண்புகளுக்கும் சகோதரத்துவத்துக்கும் எதிரான அரசியல்/மார்க்க மேதை(?)களைக் கொண்ட நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் வருமளவு இஸ்லாத்தின் அடிப்படைகளைக்கூட சரியாக விளங்காத முஸ்லிம் நாடாகவே இன்றளவும் பாகிஸ்தான் இருந்து வருகிறது. இந்நிலையில், 'இஸ்லாமிய நாடு' என்ற எண்ணத்தில் தங்கள் ஆதரவை முஸ்லிம்கள் கொடுக்கும் தகுதியில் பாகிஸ்தான் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.

கூடவே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியினைத் தேசபக்தியின் அடையாளமாக, ஆக்கி அந்நாட்டை வீழ்த்தியது போன்ற மாயை இந்திய ஒட்டுமொத்த அரசியல்வியாதிகளாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறதோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

சாதாரணமாக, தனது நாடு போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த நாடுகளின் குடிமக்களிடம் இருப்பது எதிர்பார்க்கத் தக்க இயல்பு. அதேபோல் தனக்குப்பிடித்த விளையாட்டு வீரர் சாதனை படைக்கும்போது மகிழ்சியை வெளிப்படுத்துவதும்கூட மனித உணர்வுகளின் ஓர் அங்கமே! என்றாலும், இந்தியாவில் மட்டும் தேசபக்தியை அளவிடும் கருவியாக கிரிக்கெட் சிலரால் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய-பாகிஸ்தான் போட்டிகளில் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசுவதும் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் மட்டுமே தேசபக்தியின் அடையாளம் எனில், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து போன்ற நாட்டு அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும்போதெல்லாம் பிறநாட்டு அணிகளின் விளையாட்டை இந்தியர்கள் ரசிக்கும்போது தேசபக்தி பெவிலியனில் ஓய்வு எடுக்கும் போலிருக்கிறது!

நியூஸிலாந்தையோ, ஆஸ்திரேலியாவையோ, இலங்கையையோ அவற்றின் ஆட்டத்திறமையின் அடிப்படையில் ஆதரிக்கும் ரசிகர்கள் எவரையும் மேற்சொன்ன நாடுகளுக்குப் போய்விடும்படிச் சொல்லி யாரும் கோஷம் எழுப்புவதில்லை; ஆனால் விளையாட்டில் திறமையின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு ரசிகன் குரல் கொடுத்தாலோ உடனடியாக அவனைப் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தச் சொல்லும் பால்தாக்கரேக்களும் தொக்காடியாக்களும் நம்நாட்டில் நிறைய உண்டு.

வேறெந்த விளையாட்டையும்விட சர்வதேச அளவில் ஊழலும் மேட்ச் ஃபிக்ஸிங் மோசடியும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில் நிறைந்திருப்பது அவ்வப்போதைய செய்திகளில் வெளிப்பட்டாலும், அவையெல்லாம் பின்தள்ளப்பட்டு (முன் கூட்டிய தீர்மானித்தின்படியான) வெற்றி தோல்விகள் மட்டும் செய்தியாக்கப்பட்டு நாட்டையே ஆட்டிப் படைக்கும் வகையில் கிரிக்கெட் போதை தலைவிரித்தாடுகிறது.

மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய-பாகிஸ்தான் உறவுகள் சிதைந்துள்ள நிலையில், இருநாடுகளின் ராஜதந்திர நட்புறவை வளர்க்கும் கருவியாக கிரிக்கெட் விளையாட்டையும் நமது பிரதமர் மன்மோகன்சிங் பயன்படுத்த முனைந்தது பாராட்டத்தக்கது! என்றாலும், கிரிக்கெட்டை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவதன் பின்னணியில் வணிக நோக்கமே காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

இந்திய நாட்டுப் பாரம்பரிய விளையாட்டான கபடியில் இதே பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும் விஷயம் எத்தனை கோடி இந்திய மக்களுக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால், கிரிக்கெட்டால் இலாபம் கொய்வது வர்த்தகர்களும் ஹிந்துத்துவாக்களுமே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!

சுனாமி-பூகம்பம் போன்ற சர்வதேசப் பேரிடர்கள், சக நாடுகளின் மக்கள் புரட்சிகள், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற மனித வாழ்வைச் சீர்குலைக்கும் விஷயங்களெல்லாம் புறந்தள்ளப்பட்டு, கிரிக்கெட்டிற்காக பிரதமர் முதல் கீழ்தட்டு குடிமகன்வரை தொலைக்காட்சி, இணையத்தின் முன்பு அமர்ந்து நேரவிரயம் செய்து இந்திய கிரிக்கெட்அணி வேண்டுமானால் வென்றிருக்கலாம். ஆனால் சர்வதேச முதலாளித்துவ வர்த்தகர்களிடம் இந்தியா தோற்றுப் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.


- அபூஅஸீலா

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::