பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை பாதுகாக்க எந்த விதமான முயற்சிகளையும் அத்வானி மேற்கொள்ளவில்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் அரசு தரப்பு சாட்சியுமான அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, அரசு தரப்பு சாட்சியாக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட சங்கப்பரிவார் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது குப்தா, அத்வானியின் மெய்க்காவலராகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா இன்று ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
தற்போது டெல்லியில் 'ரா' பிரிவில் பணியாற்றி வரும் அஞ்சு குப்தா, பாபர் மசூதி இடிப்பு சம்பவ நாளுக்கு முன்பும் பின்பும் அத்வானியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் எங்கெல்லாம் சென்றார் யாரை எல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
'சர்ச்சைக்குரிய இடத்தில் சுமார் 100 பேர் (கர சேவகர்கள்) கூடியிருந்த நிலையில் அங்கு அத்வானி சென்றார். கூட்டத்தினர் மத்தியில் அவர் பேச ஆரம்பித்தார்.
ஆக்ரோஷமாகவும், உணர்ச்சி வசப்பட்டும் அவர் பேச பேச கூட்டத்தினர் மத்தியில் உணர்ச்சி வேகம் அதிகரித்து பதட்டமான நிலை உருவானதை உணர முடிந்தது' என்று அஞ்சு குப்தா தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்வானியோடு, இதர பாஜக தலைவர்களான வினய் கட்டியார், பிரமோத் மகாஜன், உமா பாரதி, சாத்வி ரிதாம்பரா, கல்ராஜ் மிஸ்ரா, ஆச்சார்யா தர்மேந்திரா, விஷ்ணு ஹரி டால்மியா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இருந்ததாக அஞ்சு குப்தா குறிப்பிட்டுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தனது வாழ்நாளில் மிகவும் துயரமான சம்பவம் என்றும், பாபர் மசூதி இடிப்பு கட்டுப்படுத்த முடியாதபடி, இயல்பாக வெடித்த ஒரு கலவரம் என்றும் அத்வானி கூறி வந்தார்.
ஆனால் அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்த சாட்சியங்கள் அத்வானி தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் அஞ்சு மேலும் சாட்சியம் அளிக்கையில், 'அத்வானி மற்றும் அவருடன் இருந்த தலைவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தார்கள்.
கரசேவகர்கள் மசூதியை இடிக்கும்போது அது இடிக்கப்படாமல் பாதுகாக்க அத்வானி உட்பட அவருடன் இருந்த தலைவர்கள் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
மாறாக மசூதி இடிந்து விழுந்த போது மேலே குறிப்பிட்ட எட்டு தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்' என்று கூறியுள்ளார்.
நன்றி : தட்ஸ்தமிழ்
அபு நபிலா
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment