- எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
ஒருவரை சமூக தலைவராக, ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள் அவரது கொள்கை கோட்பாடுகள் மற்றும் அங்க அசைவுகளை முழுமையாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாது.
ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்ட சமூகம் அவரது போதனைகள் கொள்கைள் மட்டுமல்லாமல் அவரது குணநலன்கள அங்க அவையங்கள், நெளிவு சுளிவுகள், பேச்சு மூச்சுக்கள் என்று பலவற்றையும் கூர்மையாக கவனித்து துள்ளியமாக அடுத்த தலைமுறைக்கு அறிவித்தது. உலக வரலாற்றில் இது போன்று எந்த ஒரு தலைவரின் வாழ்க்கை குறிப்பும் பதிவு செய்யப்பட்டிருக்காது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் இரண்டரக்கலந்து சமூக வாழ்விலும் பொது வாழ்விலும் பங்கேற்று வாழ்ந்தவரகள். தனிமையை விட்டும் ஒதுங்கியவர்கள். அவரது வாழ்வு ஒரு திறந்த புத்தகமாகவே இருந்தது. ஒளிவு மறைவில்லாத அவரது வாழ்க்கையின் நிலையை பற்றி அவரது தோழர்களே விபரிக்கிறார்கள்.
இதோ நபித்தோழர்கள் நேர்முக வர்ணனையை தருகிறார்கள்,
நபி (ஸல்) அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும் பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் அதிக நெட்டையானவர்களாகவோ அதிக குட்டையானவர்களாகவோ இல்லாமல் நடுத்தர உயரமானவர்களாகவும் அழகிய உடலமைப் பையுடையவர்களாகவும் சிகப்பு கலந்த வெண்மை நிறமுடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் முகம் பவுர்ணமி இரவின் சந்திரனைப்போல் பிரகாசிக்கும், மேனி ஒளி வீசிக்கொண்டிருக்கும்.
தலைமுடி முற்றிலும் சுருண்டவையாகவோ முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை. தலையில் தற்செயலாக வகிடு படிந்து விடுமாயின் அதை அப்படியே விட்டு விடுவார்கள். தலைமுடி தோள் புஜத்தை தொட்டுக் கொண்டிருக்கும். இரு புஜங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு அதிகமாகும். இரு புஜங்களுக்கு மத்தியில் நபித்துவ முத்திரை இருந்தது.
படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களுக்கும் மத்தியில் ஒரு நரம்பு இருக்கும் கோபம் ஏற்படும் போது அது எம்பிக் கொள்ளும். முதன் முதலில் அவர்களை காண்போர் மூக்கு நீண்டதாக காண்பார். கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.
தாடி அடர்ந்திருக்கும் கன்னங்கள் மிருதுவாக இருக்கும் வாய் அகன்றதாகவும் பற்கள் இடைவெளி விட்டவையாகவும் இருக்கும். கழுத்து சுத்தமான வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப் போல் அழகாயிருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை முடியிருக்கும். அது கோடுகள் போன்று நீண்டதாயிருக்கும். நெஞ்சு (மார்பு) அகன்றிருக்கும். மார்பகத்திலும் வயிற்றிலும் முடியிருக்கும்.
வயிறும் நெஞ்சும் சமமானதாக இருக்கும். முழங்கைகள் தோள் புஜங்கள் நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும்.
அவையவங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதை பிடிப்புள்ளதாகவும் இருக்கும். இரு உள்ளங்கைகளின் மூட்டுக்களும் நீளமாக இருக்கும். உள்ளங்கை விரிந்திருக்கும். உள்ளங்கைகளும் பாதங்களும் சதை பிடிப்புள்ளதாக இருக்கும்.
கை, கால், விரல்கள் பொருத்தமான அளவிருக்கும். பாதங்கால் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை.
நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள், பாதத்தைப் பலமாக எடுத்து, மெதுவாக வைப்பார்கள். அகலமாக அடி எடுத்து வேகமாக நடப்பார்கள். நடக்கும் போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் நடை இருக்கும்.
யாராவது அழைத்தால் திரும்பும்போது முகத்தை மட்டும் திரும்பாமல் முழுமையாகத் திரும்புவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கியே (பூமியை பார்த்தே) இருக்கும். வானத்தைப் பார்ப்பதை விட பூமியைப் பார்ப்பதில் அவர்களது பார்வை அதிகமாக இருந்தது.
தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு பின்னால் வருவார்கள். சந்திப்பவர்களை ஸலாம் கூறி பேச ஆரம்பிப்பார்கள்.
வுளூச்செய்யும் போதும் தலைவாரும் போதும் செருப்பணியும் போதும் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை விரும்புவார்கள்.
அவர்களது தலைமுடியிலும் தாடியிலும் சில முடிகள் நரைத்திருந்தன. சுமார் இருபது முடிகளே நரைத்திருந்தன.
இஸ்மித் என்ற சுர்மாக்கூடு ஒன்று இருந்தது. ஒவ்வொரு இரவிலும் இரு கண்களிலும் மூன்று தடவைகள் சுர்மா இட்டுக் கொள்வார்கள்.
இஸ்மித் சுர்மா இடுங்கள் அது பார்வையைக் கூர்மையாக்கும் இமைகளின் முடியை வளரச்செய்யும் எனவும் கூறுவார்கள்.
போர்வையும், சட்டையும் அவர்களது ஆடைகள். சட்டையை அதிகமாக விரும்புவார்கள்
அவர்கள் அணியும் காலணி (செருப்பு)களுக்கு இரு வார்ப்பட்டைகள் இருந்தன. வெள்ளியிலான மோதிரம் செய்து வலது கரத்தில் அணிந்திருந்தார்கள். அதில் முஹம்மது என்று ஒரு வரியும், றஸூல் என்ற ஒரு வரியும், அல்லாஹ் என்ற ஒரு வரியும் செதுக்கப்பட்டிருந்தது. கடிதங்கள் எழுதும் போது இதனை முத்திரை யாக பயன்படுத்துவார்கள்.
பெரும்பாலான சிரிப்பு புன்னகையாக இருக்கும், பேசும் போது அடுத்தவர்கள் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளியிட்டு தெளிவாக பேசுவார்கள் அவசியமில்லாமல் பேசமாட்டார்கள். அன்போடு பேசுவார்கள் அடுத்தவர்களை வெருண்டோட செய்யமாட்டார்கள். அறையிலிருக்கும் கன்னியரை விட அதிகமாக வெட்கப்படுவார்கள்.
கடுகடுத்த முகத்துடன், அடுத்தவர்களை இழிவாக மதிக்கும் குணத்துடன் இருந்ததில்லை. தமக்கு கிடைக்கும் பொருள் அற்பமானதாக இருந்தாலும் பெரி தாக மதிப்பார்கள்.
அன்பளிப்புக்களை ஏற்றுக் கொள்வார்கள். நறுமனத்தை மறுக்கமாட்டார்கள். தர்மமாக வழங்கும் பொருட்களை தனக்கும் தனதுகுடும்பத்திற்கும் தடுத்து கொண்டார்கள். தமக்காக அடுத்தவர்களை பழிவாங்கியதில்லை. கோபப்பட்டதுமில்லை அல்லாஹ்வின் வரம்புகளை மீறும்போதே நடவடிக்கை எடுப்பார்கள. அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருப்பதற்கு இரவிலும் (தஹஜ்ஜுத்) நின்று வணங்குவார்கள்.
இஸ்லாத்திறகு முரண்படாத கவிதையை ரசித்தார்கள். இஸ்லாத்திறகு முரண்பட்டவர்கள் கவிதையால் சாடும் போது கவியால் பதிலடி கொடுப்பதற்காக ஒருவரை நியமித்தார்கள்.
தனக்கு ஐந்து பெயர்கள் இருப்பதாக குறிப்பிட்டாரக்ள். முஹம்மத் அஹ்மத் அல்மாஹி(என்னை கொண்டு அல்லாஹ் இறை நிராகரிப்பை அழிப்பான்), அல்ஹாஷிர்(என் பாதத்தின் கீழ்-மறுமையில்-மக்கள் எழுப்பப்படுவார்கள், அல்ஆகிப்(இறுதியானவன்-எனக்குப்பின் எந்த நபியும் இல்லை.
குர்ஆன் ஓதும் போது அழுவார்கள். அப்போது வயிற்றில் ஒரு சட்டி கொதிப்பது போன்று சப்தம் கேட்கும். உண்ண உணவில்லாமல் பல இரவுகள் குடும்பத்தோடு பட்டினியுடன் இருப்பார்கள். பெரும்பாலும் வாற்கோதுமையும் ரொட்டியும் உணவாக இருக்கும்.
வாற்கோதுமையை இடித்து பிறகு அதனை எடுத்து ஊதுவார்கள். அதிலுள்ள உமிகள் நீங்கிய பிறகு அதில் தண்ணீரை ஊற்றி குழைத்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள் ஒரு நாளில் இரு தடவைகள் ரொட்டியும் இறைச்சியும் வயிறாற உண்டதில்லை. சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவார்கள்.
சாய்ந்து கொண்டு சாப்பிடுவதையும் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதையும் தடுத்தார்கள். உணவு இல்லாத சந்தர்ப்பத்தில் நோன்பு நோற்பார்கள்.
வீட்டுக்குள் நுழைந்தால் மனைவியுடன் வீட்டு வேளைகளில் ஈடுபடுவார்கள். தனது வேளைகளை தாங்களாகவே செய்து கொள்வார்கள். பாங்கு சொல்லி விட்டால் தொழுகைக்காக புறப்படுவார்கள்.
தூங்கும் போது வலது உள்ளங்கையை வலது கண்ணத்தின் கீழ் வைத்து இறைவனை துதித்து (துஆ ஓதி) விட்டு தூங்குவார்கள். பேரீத்த மரத்தின் நார்களால் நிரப்பப்பட்ட தோல்பை அவரது தலையணையாக இருந்தது. மிருதுவான படுக்கையை விரும்பியதில்லை.
தன்னை அல்லாஹ்வின அடிமை, அவனது தூதர் என்று போற்றுவதையே விரும்பினார்கள். தனது மரணத்திற்கு பின் தனக்கு சமாதி வழிபாடு செய்வதையும் எச்சரித்தார்கள்.
ஒட்டுப்போட்ட ஒரு போர்வையும், கடினமான ஒரு வேட்டியும் அணிந்திருந்த வேளையில் திங்கட்கிழமை மரணித்தார்கள். மூன்று வெள்ளை துணிகளால் கபன் செய்யப்பட்டார்கள். செவ்வாய் கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்படடார்கள்.
தனது குடும்பத்திற்காக சில போர் கருவிகள் ஒரு கோவேறு கழுதை தர்மம் செய்து விட்டு போன நிலம் இவற்றை தவிர வேறு எதையும் விட்டுச்செல்லவில்லை.
(மேலும் பல செய்திகளுக்கு பார்க்வும் நூல் : ஷமாஇல் திர்மிதி)
நன்றி:::இஸ்லாம் கல்வி.காம்
அபு நபிலா
Thursday, April 1, 2010
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment