ஒற்றுமையே தீர்வு!
Islam - islamic artcles
உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும்.
விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?
80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.
இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.
இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.
முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.
இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.
கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.
கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.
அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.
1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.
அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.
மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.
அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.
தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.
இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.
இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.
ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.
மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.
எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.
வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!
Friday, February 12, 2010
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment