வழிகள்!
நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்
உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?
உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?
உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?
ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!
மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.
இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.
தயாரா நீங்கள்?
1. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்
முஸ்லிம்களாகிய நமக்குப் பல கட்டாயக் கடமைகள் உண்டு. உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் நிறைவேற்றுதல், ரமலானில் ஒரு மாதகாலம் நோன்பு நோற்றல், ஜக்காத் கொடுத்தல், ஜமாஅத்தாக இருத்தல், தலைமைக்குக் கட்டுப்படல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் ஆகியன. ஹஜ்ஜைப் பொருத்தவரை பெரும்பாலான வசதியுள்ளவர்கள் நினைப்பதுபோல், "வயதான பின்னர் செய்வேன்" என்று தள்ளிப் போடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு விரைவான முக்கியத்துவம் கொடுங்கள். விட்டுப்போன தொழுகைகளுக்காகக் குற்றம் பிடிக்கப்படாமல் இருக்க, இயன்றவரை சுன்னத்-நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்துங்கள். அத்தோடு, "இனிமேல் எந்த ஒரு கடமையான தொழுகையையும் விட்டு விடமாட்டேன்" என்று இப்பொழுதே உறுதி மொழி எடுப்பதோடு, அதனை இந்நிமிடத்திலிருந்தே செயல்படுத்த ஆரம்பியுங்கள். "தொழாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்" என்பதும் "தொழாதவன் காஃபிராகி விட்டான்" என்பதும் "முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான வித்தியாசம் தொழுகை" என்பதும் எம்பெருமானாரின் அமுதவாக்கு என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.
2. கனவை நனவாக்குங்கள்
நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய துவங்குங்கள். சீனப்பெருஞ்சுவரை நடந்து கடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!
3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!
நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: "பெற்றோர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அல்லாஹ்வும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது கோபமாக இருந்தால், அல்லாஹ்வும் நம் மீது கோபமாகவே இருப்பான்" என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் அல்லது நிறைவேற்ற நினைத்து முடியாலாகி விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.
4. உலகைப் பாருங்கள்
நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் ஃபாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, எகிப்து, மக்கா போன்ற இஸ்லாமிய வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, அல்லாஹ்வின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.
5. இஸ்லாத்தைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்!
இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின் பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரழப்பாக முடியும். ஆகவே இஸ்லாத்தைப் படியுங்கள். இறைமறையைத் திறந்து அதனை அர்த்தத்துடன் படியுங்கள். எம்பெருமானாரின் வாழ்வைப் படியுங்கள். இஸ்லாம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்பதை உறுதிபடுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே உங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.
6. திருப்பிக் கொடுங்கள்
ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக் கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்..... இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவுகூரப்படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில் எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை உங்களுக்கான நன்மைகள் உங்கள் ஏட்டில் பதியப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை மறுமைநாள்வரை உங்களுக்குப் பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.
7. திருமணம்
இது நபிவழியாகும். எனவே திருமணம் செய்வதன் மூலம் ஒரு நபிவழிக்கு உங்கள் மூலமாக உயிர் கொடுங்கள். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும் நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக் காணும் நல்ல மக்களாகவும் அவர்களை வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.
8. மன்னிப்பு கேளுங்கள்
உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து, உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள். ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப்படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, அல்லாஹ் உங்களை மன்னிப்பதில்லை! வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த தவறுகளையும் மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில், நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
9. கடன்களை அடையுங்கள்
நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்! கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறைவேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். நினைவில் வையுங்கள்: நீங்கள் ஹஜ் செய்திருந்தால்கூட, நீங்கள் யாருக்காவது கடனாளியாக இருந்தால் உங்கள் ஹஜ் ஏற்றுக் கொள்ளப் படாமல் போகலாம். எம்பெருமானார், கடனாளியின் ஜனாஸாவுக்குத் தொழ வைக்க முன்வராததை எப்போதும் நினைவில் வையுங்கள்.
10. முன்னுதாரண மனிதராகுங்கள்
ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, முஸ்லிம்களுக்கு, முஸ்லிமல்லாதோருக்கு என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும் நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவுகூரும்படியான நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.
இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது; எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள். நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும் செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.
எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை!. இவற்றை இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.
(நன்றி: www.therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் முஸ்லிம் சகோதரி ஒருவர் எழுதிய "Ten Things To Do Before You Die" என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)
- தமிழாக்கம் சகோ. அல்-அமீன்
- நன்றி சத்தியமார்க்கம்.காம்
Thursday, February 4, 2010
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment