Thursday, January 2, 2014

திருப்புமுனை...!

இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை!
ஆம்! அல்-குர்ஆன் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன அமைதியை தேடிய யுவனுக்கு அந்த இஸ்லாமே சிறந்த அமைதியை கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில திரையுலக நண்பர்கள்.
அதற்கு முன் யுவன் பற்றி...
மிக இளம் வயதிலேயே இசைஞானியின் பெயரை காப்பாற்றப்போகும் வாரிசு இவர்தான் என்று அடையாளம் காணப்பட்டவர் யுவன். வெஸ்டர்ன் இசை என்றாலும் சரி, அப்பாவை போல கிராமிய இசை என்றாலும் சரி. யுவனுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம் என்கிற அளவுக்கு மனதை மயக்கிவிடுகிற வல்லமை வந்தது.
இசையில் கொடிகட்டி பறந்தார் யுவன். நிற்க நேரமில்லாமல் உறங்க நேரமில்லாமல் எந்நேரமும் இசை ஒலித்துக் கொண்டிருந்தது அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில். இந்த நேரத்தில்தான் எல்லா வாலிபர்களுக்கும் வருவதை போல அவருக்கும் அது வந்தது... காதல்!
மகனின் சந்தோஷமே நமது சந்தோஷம் என்று கருதிய அப்பா இசைஞானி எவ்வித முணுமுணுப்பும் காட்டாமல் சம்மதம் தெரிவிக்க, சந்தோஷமாக இல்லறத்தில் அடியெடுத்து வைத்தார் அவர். இந்த பந்தம் நெடுநாட்கள் நிலைக்காமல் போனது பூர்வ ஜென்ம பூஜ்யமா, அல்லது நிகழ்கால ஜோசியமா தெரியாது. இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதற்கப்புறம் தனிமை யுவன்சங்கர்ராஜாவை கவலைப் படுகுழியில் தள்ளவில்லை. மிக மிக உற்சாகமாகதான் இருந்தார். மீண்டும் ஒரு காதல் முளைக்கக் கூடாது என்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா? முளைத்தது. இந்த முறை ஊரை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் யுவன்.
இந்த நேரத்தில் மிக கசப்பான அதே நேரத்தில் துடிப்பான உண்மையை சொல்ல வேண்டும். ஜோதிடம் பொய் என்பவர்கள் கூட சிலரது குடும்ப வாழ்க்கையும் அவர்கள் படுகிற பாட்டையும் பார்த்தால், அட ஈஸ்வரா என்று கவலை கொள்வார்கள். யுவனுக்கும் திருமண கட்டத்தில் எந்த பூதம் வந்து அமர்ந்திருக்கிறதோ, தெரியவில்லை. இந்த திருமணத்திலும் சிக்கலாம். அவரது இரண்டாவது மனைவியையும் அவர் பிரிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு அருகில் இல்லாவிட்டாலும் அவரை நோட்டமிடுகிற சினிமாக்காரர்கள்.
இதில்தான் அதிகம் உடைந்தாராம் யுவன். இருந்தாலும் மனதை தேற்றிக் கொண்டு இசையோடு பயணித்துக் கொண்டிருந்தார். அன்பான அம்மா இருந்தார்கள் அவருக்கு. எந்த நேரத்தில் அவர் வந்தாலும் பாசத்தோடு அரவணைத்துக் கொள்கிற அளவுக்கு ராஜாவின் இல்லம் இருந்தது.
அதற்கும் கொடுத்து வைக்கவில்லை யுவனுக்கு. அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும் உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங் தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை என்று கூறப்படுகிறது. நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர். மனமே அமைதி கொள்... என்று விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென கேட்டுவிடுமா அது?
இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர், முஸ்லிம்களின் வேத புத்தகமான குர்ஆன் புத்தகத்தை கொடுத்து ‘இதை படி. மனம் அமைதியடையும்’ என்றாராம். உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன். மனம் விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை. மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார் யுவன். ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாராம்... அதற்கப்புறம் அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம் முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது அவருக்கு.
இதற்கப்புறம் அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் யுவன். அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.
-ஆர்.எஸ்.அந்தணன்


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.