Thursday, May 9, 2013

இஸ்லாம் கூறும் பாலியல்...!


அன்பிற்கினிய வாசக நேயர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும். இருவரில் ஒருவர் திருப்தியடையாவிட்டாலும்கூட, அவர் தன் பாலுணர்வுகளை வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ள அதிகமாகத் தூண்டப்படலாம்.
பலநேரங்களில் தம்பதியரூள் ஒருவர் ஓர் உடலுறவுச் செயல்வடிவை விலக்கப்பட்டது என்று தவறுதலாக எண்ணி அதில் ஈடுபட மறுக்கக்கூடும். இதனால் அவர்களுக்கிடையில் உறவுப்பிரச்சனை ஏற்படலாம். ஆகவே, தம்பதிகள் உடலுறவு நடத்தை குறித்த இஸ்லாமிய போதனைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். ஏனெனில், ஆரோக்கியமான பாலியல் வாழ்வு மேற்கொள்வதுடன் தாம்பத்ய மோதலையும் தவிர்த்துவிடலாம்.
பொதுவாக பாலியல் குறித்த எந்தவொறு கலந்துரையாடலும், மார்க்க நன்னடத்தைக்கும் (அதப்), நாண உணர்வுக்கும் (ஹயா) பங்கம் ஏற்படுத்தும் செயல் என்று சிலர் கருதக்கூடும். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பாலியலைக்குறித்து விரிவாக விளக்கியுள்ளார்கள் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.
இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலியல் செய்திகளை எப்படியெப்படியெல்லாம் கற்பித்தார்கள் என்பதுபற்றி ஏராளமான நபிமொழிகள் (ஹதீஸ்கள்) உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உடலுறவு தொடர்பான கேள்விகளைக் கேட்பதிலிருந்து நபித்தோழர்கள் வெட்கி ஒதுங்கவில்லை. பிரபலமான ஒரு சம்பவத்தில், உமர் இப்னு அல்-ஃகத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ஒருவர் தம் மனைவியைப் பின்புறமிருந்து, அதாவது ஆசனவாயில் அல்லாமல், பெண்குறியில் புணர்வது அனுமதிக்கப்பட்டதா? என்பது பற்றி வினவினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் இதை அவமரியாதையான கேள்வி என்று கண்டிக்கவில்லை. மாறாக, இந்தக் கேள்வியின் பதிலை குர்ஆனிய வசனங்களாக அல்லாஹ்வே இறக்கி வைக்கும்வரை காதிருந்தார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2980)
இன்னும் சோல்லவேண்டுமானால், பெண்களும்கூட பாலியல் தொடர்பான கேள்விகளைத் தயக்கமோ வெட்கமோ இன்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்கத்துணிந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்ற்றுக்கெல்லாம் பதில் உரைப்பதிலிருந்து வெட்கி ஒதுங்கவில்லை. இத்தனைக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையிலேயே நாணம் மிக்கவர்கள்.
ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்; உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதரிடம் வந்து கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண் ஈரக்கனவு கண்டபின் குளிப்பு அவள் மீது கடமையா?" அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! திரவம் வெளிப்பட்டிருந்தால்" என பதிலளித்தார்கள்.
ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா தம் முகத்தை மறைத்துக்கொண்டு கேட்டார்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுக்கு(கும் கூட) திரவம் வெளிப்படுமா?" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! உம் வலக்கை மண்ணைப்பற்றிக் கொள்ளட்டுமாக (இது ஒருவரின் கூற்றோடு முரண்படும்போது அவரிடம் நளினமாகக் கூறப்படும் அரபுச் சொற்றொடராகும்) பிறகு எப்படி மகன் தாயின் சாயலில் பிறக்கின்றான்?" என்றார்கள். (நூல்: புகாரி 130)
இங்கு நாம் கவனிக்கவேண்டியது அந்த ஹதீஸை மட்டுமல்ல, ஈரக்கனவு போன்ற பாலுறவுச் செய்திகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்பதிலிருந்துகூட ஒரு பெண்ணுக்குத் தயக்கவுணர்வு இல்லை, அக்காலத்தில்!
"அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை" எனும் ஹளரத் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாசகத்திலிருந்து, தீன் - மார்க்க விஷயங்களைக் கற்பதில் வெட்க உணர்வு என்பது கிடையாது எனும் தெளிவான செய்தி நமக்கு கிடைக்கிறது.
உண்மையில், இறைவனின் போதனைகளிலிருந்தும், அவனுடைய தூதரின் போதனைகளிலிருந்தும் வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொள்வது தவறானது - அது பாலியல் விஷயங்கள் குறித்தவையாக இருப்பினும் சரியே.
முஜாஹிதிடமிருந்து இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்: "வெட்கப்பட்ட ஒரு மனிதராலும், ஆணவமுடைய ஒரு மனிதராலும் தூய அறிவை (இல்ம்) பெற்றுக்கொள்ள இயலாது" (நூல்: ஸஹீஹுல் புகாரி 1:60)
நாணம் இஸ்லாத்தின் ஓர் அடிப்படைக்கூறு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும், மார்க்க விஷயங்களைக் கற்பது என்று வரும்பொழுது அது தடைக்கல்லாக இருக்கக்கூடாது. நவீன உலகில் பாலியல் குறித்த கேள்விகள் வெளிப்படையாகக் கலந்துரையாடப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் அநாகரிகமான விதத்தில்! எனவே, பாலியல் குறித்த விஷயங்களை ஒழுக்க நாகரிகம் கொண்ட இஸ்லாமிய போதனைகளை சரியான முறையில் கற்பதில் நாம் ஏன் வெட்கப்படவேண்டும்?
இப் பகுதியில் (ஆண்-பெண் பாலியல்) வெளியாகும் கட்டுரைகள், செய்திகள் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக உணர்வோர், இறைவனின் சொற்களை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
"நிச்சயமாக அல்லாஹ் உண்மை(யை விளக்கும்) விஷயத்தில் வெட்கப்படுவதில்லை" (அல்குர்ஆன் 33:35)
இதையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அண்ணலாரின் தோழர்களும் எதிரொலித்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி 130, ஸுனன் இப்னு மாஜா 1924).
எனவே, தம்பதியருக்கு இடையிலுள்ள பாலியல் பிரச்சனையே மணவாழ்வின் விரிசலுக்கு காரணமாக அமைதல், நவீன காலத்தில் பாலியல் மீதான தீராத மோகத்தினால் முஸ்லிம்கள் மீது அது ஏற்படுத்தும் கடுமையான தாக்கம் ஆகியவற்றால் பாலியல் குறித்த இஸ்லாமிய வழிகாட்டுதல் முஸ்லிம்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றன.
மேலும், முஸ்லிம்களில் பலர் உடலுறவு குறித்த இஸ்லாமியச் சட்டங்களையும் ஒழுங்குகளையும் பற்றி அறவே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் புணர்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதுகூட சிலருக்குத் தெரியாது. மேலும் பலர், தங்கள் வாழ்வை இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர்; கற்பதற்கோ ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். ஆனால், அறிஞர்களிடம் நேரடியாகக் கேட்பதற்கு சங்கடப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்காகவும் இப்பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


(ஒவ்வொரு ஆக்கமும் சிறப்பான முறையில், மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் அமைய அல்லாஹ்விடம் "துஆ"ச் செய்யுங்கள்.)

thanks//adm., www.nidur.info


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.