கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் கண்டனம் செய்திருந்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சி பதில் அறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.
யாசின் மாலிக் காஷ்மீர் பயங்கரவாதி என்றும், பாரதத்திற்கு எதிராக செயல்படுபவர் என்றும், அவர் இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்றும் வர்ணித்துள்ள இராம.கோபாலன், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிக்கு தமிழ்நாட்டில் இடம்கொடுப்பதா என்றும் கேட்டுள்ளார்.
யாசின் மாலிக் தலைவராக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. இந்திய நாட்டின் குடிமகனான அவருக்கு இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச அரசமைப்பு சட்ட ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது என்பதை இராம கோபாலானுக்கு கூறிக்கொள்கிறோம்.
காஷ்மீர் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக போராடி வருபவர் காஷ்மீர் பயங்கரவாதியா? அப்படியானால், இந்துக்களுக்காக மட்டுமே இந்திய நாட்டில் பேசிவரும் இராம கோபாலன் போன்றவர்கள் இந்து பயங்கரவாதிகள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
காஷ்மீர் மக்களுக்காக போராடினால் அது பாரதத்திற்கு எதிரானது என்று கூறுகிறார். இந்திய நாட்டில் எல்லா மதத்தினரும் வாழ்கின்றனர். ஆனால், இந்து மக்களுக்காக மட்டுமே பேசுகிறீர்களே? இந்த நாட்டில் தொன்று தொட்டு வாழ்ந்துவரும் இஸ்லாமிய, கிறித்தவ மக்களெல்லாம் இந்தியர்களாக இருந்தும் அவர்களுக்கு எதிராக பேசி, துவேஷத்தையும், மத மோதலையும் ஏற்படுத்தி, நாட்டில் இரத்தக்களறியை ஏற்படுத்தி வருகிறீர்களே, உங்கள் செயலபாடுகள் பாரத நாட்டிற்கும், அதன் ஒற்றுமைக்கும், சமூக இணக்கத்திற்கு எதிரானது இல்லையா?
பயங்கரவாதம் என்று பேச உங்களுக்கு எந்த வகையிலாவது அருகதை இருக்கிறதா? இறைவனின் பெயரால் அரசியல் நடத்தி, அதிகாரத்தைக் கைப்பற்ற போராடும் நீங்கள் பயங்கரவாதியா? அல்லது தனது மக்களின் உரிமைக்காக போராடும் யாசின் மாலிக் பயங்கரவாதியா?
யாசின் மாலிக் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி என்றால், அவருடன் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதும், இன்றுள்ள மன்மோகன் சிங் அரசும் எதற்காக பேசுகின்றன? மத்திய அரசுகள் யாசின் மாலிக் போன்றவர்களுடன் பேசுகின்றனர் என்றால் அவர்கள் காஷ்மீர் மக்களின் உண்மையான தலைவர்கள் என்கிற காரணத்தினால்தான் என்பதை இராம.கோபாலன் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்காக யாசின் மாலிக் நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறும் இராம.கோபாலன், தமிழின மக்கள் சிங்கள பெளத்த இனவாத அரசு இனப்படுகொலை செய்தபோது அதனைக் கண்டித்து ஒரு போராடத்தையாவது நடத்தியது உண்டா? இலங்கைத் தமிழர்கள் வழிபட்டுவந்த இரண்டாயிரம் கோயில்கள் இடித்துத்தள்ளப்பட்டதே, அதற்குக் காரணமான ராஜபக்சவை எதிர்த்து பேசியதுண்டா?இந்துக் கோயில்களை இடித்துவிட்டு, புத்த விகாரைகளை நிறுவிவரும் ராஜபக்ச, திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அதனை எதிர்த்து அறிக்கை விடாதது ஏன்? சிங்கள கடற்படையினரால் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டார்களே, அவர்கள் இந்துக்கள் இல்லையா? அவர்களுக்காக இப்படி அறிக்கை போர் நடத்தியதுண்டா?
பாரத தேசத்தின் ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள், காவிரியிலும், முல்லைப் பெரியாற்று அணையிலும் கர்நாடக, கேரள அரசுகள் தமிழ்நாட்டின் உரிமையை மறுத்தபோது என்றைக்காவது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறீர்களா?
தமிழ்நாட்டில் இருந்து கேரளத்தில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு வழிபடச் சென்ற சாந்தவேலு என்ற பக்தர், கொதிநீரைக் கொட்டிக் கொல்லப்பட்டாரே, அதனைக் கண்டித்து இராம கோபாலன் ஒரு அறிக்கை விட்டதுண்டா? அவர் ஒரு இந்து, ஏன் அவரை கொதி நீர் ஊற்றிக் கொன்றீர்கள் என்று கேள்வி கேட்டீரா? அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டு மெளன விரதம் அனுஷ்டித்த நீங்கள், யாசின் மாலிக் எங்களுக்காக பேச வரும்போது மட்டும் கண்டனக் குரல் எழுப்புவது பச்சை மதவாத அரசியல் என்பதன்றி, வேறென்ன?
இன்றைய உலகில் தம் இனத்திற்காகவும், மக்களின் உரிமைக்காகவும் போராடும் தலைவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தும் ஒரு ஆட்சி, அதிகார மமதை சர்வதேச அளவில் இருக்கிறது. ஆனால், பயங்கரவாதி யார்? விடுதலைப் போராளி யார் என்பதை நமக்கு பின் வரும் சந்ததிகள் முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் முன்னெடுக்கும் தமிழின அரசியலும் தெரியும், நீங்கள் முன்னெடுக்கும் மதவாத அரசியலும் புரியும், யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: http://www.newindia.tv/tn/tamilnadu/891-naam-thamizhar-party-answer-to-ramagopalan-condemned