முன்விளையாட்டும் ஓர் சுன்னத்தே! அலட்சியப்படுத்த வேண்டாம்.
முன் குறிப்பு: இங்கு
குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் பற்றி சிலருக்கு "இதெல்லாம் எழுத்தில்
தேவையா?" எனும் எண்ணம் எழலாம். ஆனால் இவற்றிலுள்ள சில ஆகுமான காரியங்களை
உணர்ச்சிமேலீட்டில் செய்துவிட்டு; பாவம் செய்துவிட்டோம்,
தவறுசெய்துவிட்டோம் என்று தவறுதலாக பலர் கருதக்கூடும். அவ்வாறு கருதுவது
ஹலாலை ஹராமென்று எண்ணுவதற்குச் சமமாகும். எனவே சரியான கருத்து எதுவென்பதை
எடுத்துச்சொல்ல விழையும்போது அனைத்தையும் சொல்லவேண்டிய அவசியம் கருதியே
இங்கு இடம்பெறச்செய்துள்ளோம். அல்லாஹ் போதுமானவன்.
[ ''ஒரு முஸ்லிம் விளையாடும் எல்லா விளையாட்டுக்களும்
வீணானவையே - அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன்
மனைவியுடன் விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள்.''
(ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத்
17433).]
தம்பதியர்களுக்கிடையே தாம்பத்ய உறவுக்குமுன் முன் விளையாட்டு
மிகவும் அவசியம். இதில் உடற்சேற்கைக்குமுன் நிகழும் அனைத்துப் பாலுறவுச்
செயல்பாடுகளும் அடங்கும். இதில் தம்பதியர் ஒருவருக்கொருவர்
பரிமாறிக்கொள்ளும் அன்பு, இச்சையான ஆசை வார்த்தைகள் எல்லாம் அடங்கும்.
முன் விளையாட்டில் ஈடுபடுவது மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மிகத்
தேவையானதாகும். முன்விளையாட்டு இல்வாழ்வின் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாகவும்
விளங்குகிறது. எனவே எத் தம்பதியரும் முன்விளையாட்டை அலட்சியப்படுத்த
வேண்டாம்.
தம்பதியர் இருவருக்கும் முன்விளையாட்டு முக்கியமானது
என்றபோதிலும், கணவன் உடலுறவுக்குமுன் தன் மனைவிக்கு கிளர்ச்சியூட்டுவது
அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் பொதுவாக பாலியல்
கிளர்ச்சியடைவதற்கு ஆண்களைவிட கூடுதல் நேரம் பிடிக்கும் என்பதால், அவள்
தயாராக இல்லாதபோது கணவன் உடலுறவு கொள்வானெனில், அவனுடைய தேவை பெயருக்கு
நிறைவடையலாமே தவிர, அவள் நிறைவடைய மாட்டாள். இதன் விளைவாக, மனைவிக்கு
அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டு மணவாழ்விற்கே குந்தகம் ஏற்படலாம்.
முன்விளையாட்டுக்கள் மூலம் மனைவியை கிளர்ச்சியுறச்செய்து
அவளும் ஆயத்தமாகவும், தயார்நிலைக்கு வந்த பிறகுதான் உடலுறவில் ஈடுபட
வேண்டும். கணவன் தன் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு, மனைவியை
அதிருப்தியிலும் நிறைவின்மையிலும் விட்டுவிடுவது, அவனுடைய தன்னலத்தையும்
ஆணவத்தையும் தான் காட்டும். இதுபோன்ற கணவன்மார்கள் உண்மையில் தங்கள்
மனைவிமார்களை உண்மையாக நேசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். தங்கள் இச்சையை
தீர்த்துக்கொள்வதிலேயே அக்கறையுள்ளவர்களாய் இருப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்
முன்விளையாட்டை ஊக்குவித்துள்ளார்கள் என்பதை நபிமொழிகள் நமக்கு
எடுத்துக்கூறுகின்றன. ஹளரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்;
"நான் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வினவினார்கள், 'உமக்குத்
திருமணமாகிவிட்டதா?' அதற்கு நான் 'ஆம்' என்றேன். '(அவள்) கன்னிப்பெண்ணா
ஏற்கனவே மணமானவளா?' எனக் கேட்டார்கள். 'ஏற்கனவே மணமானவள்' என்றேன். "ஏன்
கன்னிப்பெண்ணை மண முடித்திருக்கக்கூடாதா? அப்போது நீ அவளுடன் விளையாடலாம்,
அவள் உன்னுடன் விளையாடலாம், அல்லவா?" எனக் கூறினார்கள். (ஆதாரம் ஸஹீஹுல்
புகாரி 1991)
இமாம் திர்மிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை செல்லும் ஒரு சுய அறிவிப்புத் தொடர்
மூலம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகத்
தெரிவிக்கிறார்கள்;
"ஒரு முஸ்லிம் விளையாடும் எல்ல விளையாட்டுக்களும் வீணானவையே -
அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன் மனைவியுடன்
விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள். (ஆதாரம்:
ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத் 17433) இங்கு
திர்மிதீயின் சொற்களே இடம்பெற்றுள்ளன.
பல விளையாட்டுக்களை வீணானவை என்று சொல்லும் மார்க்கம்
மனைவியுடன் விளையாடுவதை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் அதை ஊக்குவிக்கவும்
செய்கிறது என்பதை அறியும்போது தாம்பத்ய வாழ்க்கையை செழித்தோங்கச்செய்யும்
அத்தனை வாசல்களையும் இஸ்லாம் திறந்து விட்டிருக்கிறது என்பதை சொல்லவும்
வேண்டுமோ!.
புகழ்பெற்ற சட்டமேதை இமாம் இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி
அவர்கள் குறிப்பிடும் ஒரு வாசகத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் இவ்வாறு கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "நீர் அனுபவிக்கும் ஆசையை
அவளும் அனுபவிக்கும் வரை புணர்ச்சியைத் தொடங்காதீர். ஏனெனில், அவளுடைய ஆசை
நிறைவேறுமுன் உம்முடைய ஆசை நிறைவேறிவிடக்கூடும்." (ஆதாரம்: அல்-முக்னீ
:136)
மேற்கூறிய சில அறிவிப்புகள் தம்பதியருக்கு இடையில் நிகழும் முன்விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்:
"புணர்ச்சிக்குமுன் முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும்
வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது
விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)". (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ்
அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)
முன்விளையாட்டு தொடர்பான பழக்கங்களை, சரியானவையல்ல, மார்க்க
ஒழுங்குக்கு முரணானவை என்று சிலர் கருதுவது தவறாகும். அவர்கள், இச்செயலை
துறப்பது இறைபக்தி என எண்ணுகின்றனர். ஆனால், இது முழுக்க முழுக்கத்
தவறாகும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட
இறைபக்தியும், தூய்மையும், இறையச்சமும் கொண்டவர் உண்டோ!. ஆயினும், நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்விளையாட்டை ஊக்குவித்தது
மட்டுமின்றி, தம் மனைவியருடன் அதில் ஈடுபடவும் செய்தார்கள். எனவே இதுபோன்ற
செயல்களைத் துறப்பது இறைபக்தியின் அடையாளமல்ல. ஆம், இஸ்லாத்தில்
துறவறத்திற்கு வேலையில்லை. இஸ்லாம் ஓர் நடைமுறை மார்க்கம். அது தன்னைப்
பின்பற்றுவோர் தங்களின் பாலியல் தேவைகளை நியாயமான முறையில்
நிறைவுசெய்துகொள்ள அனுமதிக்கிறது.
முன்விளையாட்டு பல வடிவங்கள் எடுக்கலாம். ஒவ்வொரு தம்பதியரும்
வேறுபட்டவர்கள் என்பதால், தங்களுக்கு எவை கிளர்ச்சியூட்டும் விதமாக உள்ளன
என்பதை தம்பதியரே கண்டறிந்துகொள்ள விட்டுவிடுவதே சிறந்ததாகும்.
முத்தத்தைக் கொண்டு முன்விளையாட்டை துவங்குங்கள் :
முன்விளையாட்டின் துவக்கம் முத்தமாக இருக்கட்டும். ஒருவர்
தம் துணைவரை முத்தமிடுவது முன்விளையாட்டின் மிகவும் அவசியமானதும்,
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியுமாகும்.
ஆயிரமாயிரம் தரம்
எழுதியோ - சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை. .... முத்தம்!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக
அறிவிக்கப்படுகிறது: "உங்களில் எவரும் மிருகத்தைப் போன்று தன் மனைவியை
அணுகக்கூடாது. அவர்களுக்கு இடையில் தூது அனுப்புதல் வேண்டும். "அல்லாஹ்வின்
தூதரே! (இங்கே) தூது என்பது யாது?" என வினவப்பட்டதற்கு நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள், "முத்தமும், இன்சொற்களும் (கொண்ட முன்விளையாட்டு)
என பதிலளித்தார்கள்." (ஆதாரம்: இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின்
இத் ஹாஃப் அல்-ஸாதாத் அல்-முத்த்கீன் பிஷரஹ் இஹ்யா உலூம் அல்-தீன் 6:175)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிரார்கள்: "அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை
முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு
அன்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், "நான் ஆயிஷாவிடம்
'அது நீங்களாகத்தான் இருக்கும்?' என்றேன். அதற்கு அவர்கள்
புன்னகைத்தார்கள்:." (ஆதாரம் ஸுனன் திர்மிதீ 86, ஸுனன் அபூதாவூத் 181,
சுன்பன் அந் நஸாஈ 170)
இந்த ஹதீஸிலிருந்து, ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது
விரும்பத்தக்கது என விளங்குகிறது. மேலும் அது, ஒருவர் தம் வீட்டிற்கு
வரும்போதும், வெளியே போகும்போதும் தம் மனைவியை முத்தமிடுவதன்
முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இது அல்லாஹ்வின் அன்புத் தூதரின்
வழிமுறையாகும்.
இங்கே, இல்லறத்தம்பதிகளிடம் நாம் ஒரு வினா எழுப்ப வேண்டிய
அவசியமிருக்கிறது. உங்களில் எத்தனைப் பேர் வீட்டைவிட்டு வெளியில்
செல்லும்போது தனது துணைக்கு முத்தமிட்டுச் செல்லும் பழக்கத்தை வழக்கமாகக்
கொண்டுள்ளீர்கள்? புதிதாக திருமணமான சில காலங்களுக்கு கணவன் வீட்டைவிட்டு
வெளியில் புறப்படும்போது கதவருகில் எவரும் பக்கத்தில் இருக்கிறார்களா என்று
பார்த்துவிட்டு அவசர அவசரமாக முத்தமிட்டு விடைபெறும் இந்த வழக்கம் மிகவும்
சுவையானதுதான், இல்லறத்தின் சுவையை இன்னும் கூட்டக்கூடியதுதான். ஆனால்
வெளியில் செல்வதற்கு முன்னும், வீட்டிற்கு வந்த பின்னும் தனது துணைக்கு
முத்தமிடுவது சுன்னத்தான ஒரு செயல் என்பது நம்மில் எத்தனைப்பேருக்குத்
தெரியும்?! இதுவும்கூட நபிவழிதான் என்பதை இப்போதாவது தெரிந்து
கொண்டுவிட்டீர்களா? அல்ஹம்துலில்லாஹ்.
இந்த IN - OUT முத்தமிடும் சுன்னத்தை தம்பதிகள் ஃபாலோ
பண்ணிக்கொண்டு வருவார்களானால் "தலாக்" தலைதெறிக்க ஓடாதா...! நபிவழி
எனும்போது நன்மையைப்பற்றிக் கேட்பானேன். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
கரும்புத்திண்ணக்கூட கூலி கொடுக்கின்ற மார்க்கம் தான் இஸ்லாம்.
இல்வாழ்க்கையை இன்பமயமாக்கும் அத்தனை விஷயங்களுக்கும் இஸ்லாம் இனிதாக வழி
காட்டுவதைக் கண்டு பூரித்துப்போகிறீர்களா? ஆம்! இவையனைத்தும் இறைவன்
வழங்கியிருக்கும் அனுமதியெனும்போது; தம்பதியர்கள் தங்களுக்குள் இன்பத்தைப்
பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிய அல்லாஹ்வுக்கு அதிகமதிகமாக நன்றிசெலுத்தக்
கடமைப்ட்டுள்ளார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கரும்பு திண்பதற்கும் கூலி
அந்த வாய்ப்பை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது அதற்கும்
அதிகமதிகமான கூலி... ஸுப்ஹானல்லாஹ். எவ்வளவு அற்புதமான மார்க்கத்தை அந்த ஏக
இறைவன் மனித வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறான்! நன்றி செலுத்துவோம் நன்றி
செலுத்துவோம், அந்த அருளாளனுக்கு நன்றி செலுத்துவோம்! கரும்பாக இனிக்கும்
விஷயங்களைத் தொடர்வோம்....
முழு அம்மணமாக இருப்பதற்கும் அனுமதியுண்டா?
துணையின் உடலுறுப்புக்களை தடவி விடுவதும், வருடிவிடுவதும்
முன்விளையாட்டின் ஒரு பகுதியே. அதுபோன்று மனைவியின் மார்பை கரங்களாலும்
உதடுகளாலும், வாயாலும் விளையாடுவதும் அனுமதிக்கப்பட்டதே. மனைவியை
ஒருவரையொருவர் நிர்வாணமாகப் பார்த்துக்கொள்வதுகூட தவறான செயலல்ல.
இதுவும்கூட தம்பதிகளின் உணர்ச்சிகளைத்தூண்டும் முன்விளையாட்டின் ஒரு
அங்கமாகக்கொள்ளலாம்.
தம்பதியர் இருவரும் முழு அம்மணமாக இருப்பதற்கும் அனுமதியுண்டு
என்கின்றனர் சம கால அறிஞர்கள். அறிஞர், ஷெய்கு முஹம்மது கன்ஆன் தம்முடைய
நூல், அல்-ம் ஆஷரா அல்-ஸவ்ஜிய்யாவில் எழுதுகிறார்; "இருவரும் உடையணிந்த
கோலத்திலேயே கணவன் தன் மணைவியுடன் உடலுறவு கொள்வது சரியல்ல. மாறாக,
உடலுறவுக்கு முன் தம்பதியர் இருவரும் - முற்றிலும்கூட அம்மணமாக இருப்பதே
சிறந்தது. ஏனெனில், இது அவர்களுக்குச் சிறந்த விஷயம்..." (பக்கம் 64)
ஹனஃபி அறிஞர்களை மேற்கோள்காட்டி அல்-ஃபதாவா
அல்-ஹிந்தியாவிலும் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. உடலுறவின்போது தம்பதியர்
அம்மணமாக இருப்பதற்கு அனுமதியுண்டு. ஒரே நிபந்தனை, அவர்கள் அறைக்குள்
இருக்க வேண்டும். (வேறு எவரும் அவர்களைப் பார்க்கும்படி இருக்கக்கூடாது)
(அல்ஃபதாவா அல்-ஹிந்தியா 5:328)
வேறு சில அறிஞர்கள் ''தம்பதியர் தங்களைப் போர்வையால்
மறைக்காமலே முழு அம்மணமாக இருப்பது சற்று விரும்பத்தகாதது என்ற போதிலும்,
அது அனுமதிக்கப்பட்டதே என்று கருத்து கொண்டுள்ளனர். எனினும் அவர்கள்,
தங்களை ஒரு போர்வையால் மூடிக்கொண்டால் அவர்கள் எல்லா ஆடைகளையும்
சுழற்றிவிட்டாலும் அதில் எவ்விதத்தவறும் இல்லை'' என்கின்றனர். ஆனால் இது
நடைமுறையில் (கணவன் மனைவி உடலுறவு கொள்ளும் அந்தரங்க வேளையில் போர்வையை
போர்த்திக்கோன்டு செயல்படுவதெல்லாம்) சாத்தியமா என்பதை அவர்கள் கருத்தில்
கொண்டார்களா என்று தெரியவில்லை.
மறைவான பகுதிகளைப்பாத்தல் :
தம்பதியர் ஒருவர் மற்றவரின் பாலுறுப்பைப் பார்க்கும் விஷயத்திலும், பெரும்பாலும் எல்லா சிந்தனாவழிகளும் அனுமதி அளிக்கின்றன.
திருமண இணைவு மூலம் கணவன்,
மனைவி இருவரும் ஒருவரையொருவர் உடலின் பாலுறுப்புக்கள் உட்பட எந்தப் பகுதியை
வேண்டுமானாலும் பார்ப்பதற்கு ஷரீஆ அனுமதிக்கிறது.
பஹ்ல் இப்னு ஹகீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தம்
பாட்டனாரிடமிருந்து (முஆவியா இப்னு ஹய்தா) தம் தந்தை தம்மிடம்
அறிவித்ததாகக் கூறுகிறார். நான் (முஆவியா) கேட்டேன், "அல்லாஹ்வின் தூதரே!
எங்களின் மறைவு பாகங்களில் எவற்றை வெளிக்காட்டலாம், எவற்றைக் குறித்து
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?" இதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்கள் மறைவு பாகங்களை (அவ்ரா)
காத்துக்கொள்ளுங்கள். உங்களின் மனைவி அல்லது அடிமைப் பெண்களைத் தவிர... "
என்று கூறினார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2769, ஸுனன் இப்னு மாஜா 1920)
இமாம் அப்துர் ரஸ்ஸாக் அல்ஸன ஆனி ரஹ்மதுல்லாஹி அலைஹி தம்
அல்-முஃஜம் அல்-கபீரிலும், ஸஅத் இப்னு மஸ் ஊத் அல்-கிந்தி ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் அறிவித்த ஹதீஸைப்பதிவு செய்துள்ளார்கள்.
உஸ்மான் இப்னு மஃஸூன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்
மனைவி என் மறைவு பாகங்களைப் பார்ப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது'
என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்: 'ஏன் அப்படியிருக்க(வெட்கப்பட) வேண்டும்? அல்லாஹ்தான் உங்களை
அவர்களுக்கு ஆடையாகவும், அவர்களை உங்களுக்கு ஆடையாகவும் ஆக்கியுள்ளானே!..."
(நூல்: அல்-முஸன்னஃப் 6:85, அல்-ம்ஃஜம் அல்-கபீர் 9:37)
ஹனஃபி சிந்தனாவழியைச்சார்ந்த இமாம் புர்ஹானுத்தீன் அவர்கள்
அல்-மர்கினானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தம்முடைய நூலான அல்-ஹிதாயாவில்
இவ்வாறு கூறுகிறார்கள்:
''ஒருவர் தம் மனைவியின் மறைவுப் பாகங்களைப் பார்க்கலாம்.
ஏனெனில், அவர் அவளுடைய முழு உடலையும் இச்சையுடனோ, இச்சையின்றியோ
பார்ப்பதற்கு அனுமதியுண்டு.'' இந்தச் சட்டத்திற்கு ஆதாரமாக அவர் பின்வரும்
ஹதீஸைக் குறிப்பிடுகிறார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
"உங்கள் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளுங்கள், உங்கள் அடிமைப்பெண் அல்லது
மனைவியைத் தவிர". மேலும் மனைவியின் மறைவுப்பாகங்களைத் தொடுதல், உடலுறவு
கொள்ளுதல் இரண்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, வெறுமனே அதைப் பார்ப்பதற்கு
இன்னும் கூடுதல் அனுமதியுண்டு எனும் அடிப்படையையும் அவர்
முன்வைக்கிறார்கள். (நூல்: அல்-ஹிதாயா 4:461)
அல்-ஃபதாவா அல் ஹிந்திய்யாவில் அப்துல்லாஹ் இப்னு உமர்
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.
"உடலுறவின் போது கணவன் தன் மனைவியின் பாலுறுப்பை பார்ப்பது சிறந்தது.
ஏனெனில், அதனால் முழு இன்பமும் நிறைவும் கிடைக்கும்.". (நூல்: அல்-ஃபதாவா
அல் ஹிந்திய்யா 5:328)
அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ‘அதா’வு என்பவர்
இதுபற்றி நேரடியாக கேட்டபோது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக
உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை மேற்கொள் காட்டி ஹாபிழ் இப்னு ஹஜர் இஸ்கலானி இமாம்
அவர்கள் "ஆண் தன் மனைவியின் மர்மஸ்தலங்களையும் பெண் தன் கணவனின்
மர்மஸ்தலங்களையும் பார்க்கலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும் என்று
குறிப்பிடுகிறார்கள். (பத்ஹுல் பாரி, பாகம்-1, பக்கம்-290)
"மறைவுப் பாகங்களைப் பார்ப்பதால் கண்கள் குருடாகிவிடும்"
எனும் ஹதீஸ் பலவீனமானது அல்லது புணையப்பட்டது ஆகும் என இமாம் இப்னு
ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் இப்னு அல்-ஜவ்ஸி ரஹ்மதுல்லாஹி
அலைஹி போன்ற ஹதீஸ் அறிஞர்கள் கருதியுள்ளனர். (ஆதாரம்: முக்னி அல்-முஹ்தாஜ்
3181)
முன்விளையாட்டின் ஒருபகுதியாக, முழுமையான உடலுடன் உடல்
சேர்தலுக்கும் அனுமதியுண்டு. அதாவது, ஒருவர் தம் துணைவரின் உடலைத் தம்
உடலோடு முழுமையாக இணைக்கலாம். இதில் கட்டியணைத்தல், மோகமாகப்பிடித்து
நீவுதல், கொஞ்சுதல், ஒருவர் மீது ஒருவர் புரளுதல், துணைவரின் உடலோடு தன்
உடலைத் தேய்த்தல், முற்றிலும் துணைவர் மீது ஏறிப்படுப்பது ஆகிய எல்லாம்
அடங்கும். இவற்றை ஆடையுடனோ, ஆடையின்றியோ செய்வதற்கு அனுமதியுண்டு.
திருமணம் மூலம் ஒன்றுசேர்வதன் வாயிலாக தம்பதியர்
ஒருவருக்கொருவர் இன்பம் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு எனும்
கோட்பாட்டின்படி தம்பதியர் இருவரும் தங்கள் பாலுறுப்புகளை ஒருவர் மற்றவரின்
உடல் மீது தேய்த்து பரவசநிலை அடைந்துகொள்ளவும் அனுமதியுண்டு. எனினும்
அதற்கான தேவை இல்லாதிருப்பின், அதைத் தவிர்ப்பது மேன்மையானது.
அடுத்து கணவனும் மனைவியும் நெறுக்கம் பெருவதற்காகவும்
முன்விளையாட்டுக்காகவும் ஒன்றுசேர்ந்து குளிப்பதும், நீராடுவதும்
அனுமதிக்கப்பட்டதே. ஒன்றுசேர்ந்து நீராடுவதை அனுமதிக்கிறது எனும்பொழுது
இதுபற்றிய மற்ற விஷயங்களை இன்னும் விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை
என்றே கொள்ளலாம்.