Sunday, May 12, 2013

இஸ்லாம் கூறும் பாலியல்4...!

எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு? 
இஸ்லாம் கூறும் பாலியல்4...!ஒரு தம்பதியர் எத்தனை நாளுக்கு ஒருமுறை அல்லது பலமுறை உடலுறவில் ஈடுபடலாம் என்பதைப்பற்றி ஒரு குறிப்பிட்ட அளவையோ வரைமுறையையோ ஷரீஅத் நிர்ணயம் செய்ய்யவில்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் இயல்புணர்ச்சி, உடல்வாகு, பாலுணர்வு ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, தங்களுக்கு மிகப் பொருத்தமான அளவை தம்பதிகளே ஒருவருக்கொருவர் முடிவுசெய்துகொள்ள வேண்டியதுதான்.
எனினும், இஸ்லாம் எல்லாவற்றிர்க்கும் வழிகாட்டும் மார்க்கமல்லவா? வாழ்வின் அனைத்துக்கூறுகளிலும் சமநிலைப்பேண ஊக்குவிக்கிறது. ஏனெனில் நடுநிலைப் பாதையே மிகச்சிறந்த பாதை. இஸ்லாத்தின் அணைத்துப் போதனைகளிலும் சமநிலைப்போக்கு கலந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். அளவுக்கதிகமான உடலுறவும் சரி, உடலுறவை முற்றிலும் துறப்பதும் சரி இரண்டுமே அறிவான செயலல்ல.
அறிஞர்களில் சிலர் வாரம் ஒருமுறை உடலுறவு கொள்வதற்கு பரிந்துரை செய்கின்றனர். இது சமநிலைப்போக்கின் வட்டத்துக்குள் அமைந்திருப்பதாகக் கருதுகின்றனர். இந்த நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் மேற்கொள்ளும் ஆதாரம்:
அவ்ஸ் இப்னு அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஒரு நபிமொழி:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;"எவர் வெள்ளிக்கிழமையன்று (தன் மனைவியை) குளிக்கச் செய்துவிட்டு, தானும் குளித்துவிட்டு, (வெள்ளிக்கிழமை தொழுகை) நேரத்திலேயே புறப்பட்டு, வாகனத்தில் செல்லாமல் நடந்துசென்று, இமாமுக்கு அருகில் உள்ளதொரு இடத்தில் அமர்ந்து, கவமாக அவரை செவியேற்று, வீண் செயலில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறாரோ, அவருக்கு, அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஓராண்டு காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்" (ஆதாரம்: அபூதாவூத் 349, நஸாஈ 1381). அபூதாவூதின் சொற்களே இங்கு இடம்பெற்றுள்ளன.
இந்த நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "மன் கஸ்ஸல" எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். இதன் நேரடி மொழி பெயர்ப்பு, "இன்னொருவரைக் குளிப்பாட்டும் ஒருவர்" அல்லது "இன்னொருவரைக் குளிக்கச் செய்விக்கும் ஒருவர்". இந்த வாசகத்தை இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸுனன் அல்-நஸாஈயிற்கான தம்முடைய விரிவுரையில் இவ்வாறு விளக்குகிறார்கள்; "கஸ்ஸல (மாற்றொருவரைக் குளிப்பாட்டுதல் அல்லது குளிக்கச்செய்வித்தல்) என்பதன் (உட்)பொருள், ஒருவர் (வெள்ளிக்கிழமை) தொழுகைக்குச் செல்லுமுன் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் இது, வழியில் அவருடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்ள உதவும்..." (ஸுனன் அல்-நஸாஈ பி ஷரஹ் அல்-ஸுயூத்தி 3:95)
இதன்படி, இந்த நபிமொழியின் பொருள்களுல் ஒன்று, எவர் வெள்ளிக்கிழமையன்று தம் மனைவியுடன் உடலுறவுக் கொண்டு பின் தானும் குளித்து, தன் மனைவியையும் குளிக்கச்செய்வித்து, கூறப்பெற்றுள்ள பிற செயல்களை நடைமுறைப்படுத்துகின்றாரோ, அவருக்கு, அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஒரு வருட காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்.
அதற்காக வாரம் ஒருநாள் தான் உடலுறவுகொள்ள வேண்டும் என்று இந்த நபிமொழி கூறுவதாக தப்பர்த்தம் கொண்டுவிட வேண்டாம். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குமுன் மனைவியுடன் உடலுறவு கொள்வது சிறந்ததது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. அதற்கான காரணத்தையும் இமாம் ஸுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி மேலே சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
 உடலுறவுக்கான சிறந்த நேரம் எது?
பொதுவாக, உடலுறவுச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதான் என்று ஷரீஅத் எதையும் வரையறுக்கவில்லை. தம்பதிகள் உடலுறவு கொள்வதற்கு பகலோ, இரவோ; எந்த நேரத்தை வேண்டுமானாலௌம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரவு, பகல் எனப் பல்வேறு நேரங்களில் தம் மனைவிகளுடன் உடலுறவு கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பகமான செய்தியாகும். மேலும், உடலுறவுக்கான தூண்டுதலும், தம்பதியருக்கு போதிய வீரியமும், ஓய்வும் இருந்தாலே உடலுறவுச் செயல்பாடுகள் நடக்கும் என்பதால், உடலுறவுக்கு குறிப்பிட்ட நேரத்தை விதியாகத் திணிப்பது நடைமுறைக்கு ஏற்றதாகாது.
அதே சமயம் அனுபவத்தின் அடிப்படையில் அறிஞர்கள் விரும்பத்தக்க நேரங்கள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். இவை இங்கு ஒரு புரிதலுக்காக மட்டுமே தரப்பட்டுள்ளது. கட்டாயமானது என்றோ அல்லது நம்பத்தக்கது என்றோ கருதத்தேவையில்லை.
 விரும்பத்தக்க நேரங்கள் :
உடலுறவுக்கு ஏதுவான நேரம் - ஓய்வாக இருக்கும் வேளை, தம்பதியர் இருவரிடத்திலும் சமமான இயல்புணர்ச்சி நிலவும் வேளை ஓ.கே.! பதற்றம், கவலை அல்லது பசி, தாகம், சோகம், நோய்நொடி போன்றவை இச்சையை குன்றச்செய்துவிடலாம். இதுபோன்ற சமயத்தில் உடலுறவை தவிர்ப்பது நலம்.
சிலருக்கு ஏதுவான நேரம் இரவுதான். அறிஞர்கள் சிலர், இரவின் பிற்பகுதியே உடலுறவுக்கு மிகப் பொருத்தமான நேரம் எனக் கருதுகின்றனர். ஏனெனில், இரவின் முதற்பகுதியில் வயிறு நிறைந்திருக்கும். முழுமையாக உணவு செரிமானம் ஆனபின்பே உடலுறவு கொள்வது மிகப்பொருத்தமாக இடுக்கும். இதுவே அல்லாஹ்வின் தூதருடைய வழக்கமும் கூட! இருப்பினும் மற்ற நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய மனைவிமார்களுடன் உடலுறவு கொண்டுள்ளார்கள்.
அபூ இஸ்ஹாக் அறிவிக்கிறார்கள்; "அல்லாஹ்வின் தூதருடைய (இரவு நேரத்) தொழுகை குறித்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் என்ன கூறினார்கள் என அல்-அஸ்வத் இப்னு யஸீதிடம் கேட்டேன். அதற்கவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறியிருக்கிறார்கள்;
"அவர்கள் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவின் முதல் பகுதியில் உறங்கி, பிற்பகுதியில் (தொழுகைக்காக) எழுந்திரிப்பார்கள். அப்போது அவர்கள் தம் மனைவியுடன் தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நாடினால், விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு உறங்கிவிடுவார்கள். தொழுகைக்கான முதல் அழைப்பு கொடுக்கப்பட்டதும் அவர்கள் குதித்தெழுவார்கள். (அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்கள் குளித்தார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறவில்லை. எனினும் அவர்கள் கூறியதை நான் விளங்கிக்கொண்டேன்.) (எனினும்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் இருக்கவில்லை எனில், (வெறுமனே) தொழுகைக்கான உளூ- கைகால் கழுவி தூய்மை செய்துகொண்டு, இரு ரக் அத்துகள் (ஃபஜ்ர் தொழுகையின் ஸுன்னா) தொழுதார்கள் (நூல்: முஸ்லிம் 739)
விஞ்ஞான ரீதியாகும் ''விடியற்காலை உடலுறவு'' ஆரோக்கியமானாதே என்பதை மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். காலை நேர செக்ஸ் நல்ல 'ஐடியா'தான் என்கிறார்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் ஃபிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பாலியல் உணர்ச்சி எழுவது சகஜம்.
எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, பகலாக இருந்தாலும் சரி, மாலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே தம்பதிகளுக்கு சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.
இங்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது. வெள்ளிக்கிழமை உடலூறவைப்பற்றி சிறப்பித்துக்கூறப்பட்டுள்ளதால் வாரம் ஒருமுறை உடலுறவு போதுமானது என்று முடிவு செய்துகொள்ளாதீர்கள். அவ்வாறு எண்ணுவது தவறு. பொதுவாக உடலுறவுக்கான காலமும் சரி, நேரமும் சரி, எத்தனை முறை என்பது பற்றிய குறிப்புகளும் சரி எதையும் ஷரீ அத் பொருட்படுத்தாத நிலையில் அதை வலியுறுத்தி சொல்வது சரியானதாகாது. தெளிவாகச் சொல்லவேண்டுமானால் நேரம், காலம், இடம் இவற்றை உத்தேசித்து தம்பதிகள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள இஸ்லாம் முழுமையாக அனுமதிக்கிறது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.