மதுரை உள்ளிட்ட தமிழக சிறைகளில் உள்ள
சிறைவாசிகள் கடந்த 4 மாதங்களாக பரோல் விடுப்பு செல்ல முடியாமல் தவித்து
வருகின்றனர்.
வயது முதிர்ந்த சிறைவாசிகள், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நோயால்
பாதிக்கப்பட்ட பலர் தங்களது குடும்ப உறவுகளைச் சந்திக்க முடியாத நிலையில்
தற்கொலைக்கு முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் புழல்,கடலூர், சேலம்,
திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை உள்ளிட்ட ஒன்பது மத்திய சிறைகள்,
வேலூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் பெண்களுக்கான சிறப்பு சிறைகள்
மூன்று, 12 சீர்திருத்தப் பள்ளிகள், ஐந்து சிறப்பு கிளைச் சிறைகள், 94
கிளைச் சிறைகள், இரண்டு திறந்தவெளி சிறைகள் என மொத்தம் 134 சிறைகள்
தமிழகத்தில் செயல்படுகின்றன.
பரோல் விடுப்பு
இந்த சிறைகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி,
திருட்டு, வன்புணர்ச்சி, ஆள்கடத்தல், ஆயுதக்கடத்தல், போதை மருந்து கடத்தல்
உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 14 ஆயிரம் பேர்
அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மத்தியச்சிறையில் சுமார் 1400
சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற
மேல்முறையீட்டுக்குப் பின் பரோல் விடுப்பு என்பது வழங்கப்படும். 1 நாள்,
மூன்று நாட்கள், 6 நாட்கள் என்ற வகையில் இந்த விடுப்பு வழங்கப்படும். இதில்
அமைச்சர் சிபாரிசில் 1 மாத விடுப்பும் வழங்கப்படுகிறது. நீண்ட கால தண்டனை
பெற்றவர்களுக்கு அதாவது மூன்றாண்டுகளுக்கு மேல் சிறையில்
இருப்பவர்களுக்குத் தான் இந்த விடுப்பு வழங்கப்படும்.
உறவினர்கள் சுகவீனம் அடைந்தால்,
குடும்பத்தினர் இறந்தால், விசேஷ நிகழ்ச்சிகள் என பல்வேறு காரணங்களுக்காக
இந்த விடுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படுகிறது.
தேவையா காவல்துறை அறிக்கை?
இந்த விடுப்பு பெறுபவர்களுக்கு சிறைக்கு
வெளியில் எதிரி யாருமில்லை என்பதுடன், இவர் வெளியே வருவதால் குடும்பத்தில்
பிரச்சனையில்லை என நன்னடத்தை அலுவலர் அறிக்கை தந்த பின்பே பரோல் விடுப்பு
வழங்கப்படும். முன்பெல்லாம் நன்னடத்தை அலுவலர் அறிக்கை வழங்கினாலே பரோல்
விடுப்பு வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த நான்கு மாதங்களாக நன்னடத்தை
அலுவலர் அறிக்கை, காவல்துறை அறிக்கை ஆகிய இரண்டும் இருந்தால் தான் பரோல்
விடுப்பு வழங்கப்படும் என தமிழக சிறைத்துறை தலைவர் அனுப்பிய
சுற்றறிக்கையால் இப்போது ஏராளமான சிறைவாசிகள் பரோலில் செல்ல முடியாத
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிறையில் இருப்பவரின் குடும்பத்தினர்
நன்னடத்தை அலுவலரின் அறிக்கையைப் பெறுவதே பெரும் சிரமமான நிலையில், இப்போது
காவல்துறையினரின் அறிக்கையும் தேவை என்பது சாத்தியப்பாடற்றது என்பதே
சிறைவாசிகளின் கருத்தாக இருக்கிறது. நன்னடத்தை அலுவலரிடம் சிறையில்
இருப்பவரின் குடும்பத்தினர் விடுப்புக் கோருவதற்கான சான்றிதழ் அதாவது
யாருக்காவது உடல் நலம் குன்றியிருந்தால் அதற்கான மருத்துவச் சான்றிதழ்,
அவர்களின் குடும்ப அட்டை, தேவைப்பட்டால் சொத்துப் பத்திரம் ஆகியவற்றை
ஒப்படைக்க வேண்டும். அதன் பின்பே நன்னடத்தை அலுவரின் அறிக்கை கிடைக்கும்.
சிறைவாசி சிறைக்குத் திரும்பிய பிறகே குடும்ப அட்டை, சொத்துப் பத்திரம்
திரும்ப ஒப்படைக்கப்படும். இதில் சொத்து இல்லாதவர்கள் என்றால் அவர்கள் பாடு
திண்டாட்டம் தான்.
தமிழக சிறைகளில் தண்டனை பெற்றவர்கள்
பெரும்பாலும் கல்வியறிவு குறைந்தவர்களாகவும், கிராமப்புறத்தைச்
சேர்ந்தவர்களாகவும் இருப்பதால் அவர்களுடைய குடும்பத்தினர் நன்னடத்தை
அலுவலரைச் சந்தித்து அறிக்கை பெறுவதே பெரும் சிரமமாக உள்ள நிலையில்,
ஆண்களற்ற குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனியாக காவல்நிலையம் சென்று
அறிக்கை பெற்று வருவது என்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது. விசாரணைக்கு
அழைத்து வரப்படும் பெண்களுக்கு காவல்நிலையங்களில் நடத்தப்படும் அநியாயங்கள்
வெட்ட வெளிச்சமாகி வரும் சூழலில், தனது குடும்பத்தினருக்காக பரோல்
விடுப்பு பெற காவல்நிலையத்திற்கு வரும் பெண்கள் எப்படி நடத்தப்படுவார்கள்
என்பதைச் சொல்லத் தேவையில்லை.
தற்கொலைக்கு தள்ளும் முடிவு
காவல் நிலையத்தில் அறிக்கை பெறுவதில்
மற்றுமொரு குளறுபடி உள்ளது. குற்றவழக்கில் சிறை சென்ற போது,
காவல்நிலையத்தில் இருந்த அதிகாரியோ, காவலரோ அதே சரகத்தில் இல்லாவிட்டால்,
சம்பந்தப்பட்டவரின் வழக்கு நிலை என்பது புதிதாக வந்தவர்களுக்குத் தெரிய
வாய்ப்பிருக்காது. ஆகவே, இதனாலும் காவல்துறையின் அறிக்கை வாங்குவதில்
சிரமம் உள்ளது.
ஆனால், அதே நேரத்தில் சிறையில்
இருப்பவர்கள் சமூகத்தில் செல்வாக்கும், பொருளாதாரப் பின்னணியும் உள்ளவர்கள்
என்றால் உடனடியாக அவர்களுக்கு நன்னடத்தை அலுவரின் அறிக்கை, காவல்துறையின்
அறிக்கை பெறுவதில் சிரமம் ஏற்படுவதில்லை. உடனடியாக அவர்களுக்குப் பரோல்
விடுப்பு கிடைத்து விடுகிறது. காவல்துறையின் அறிக்கை பெறுவதால் அவர்
தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என்ற வாதம் எடுத்து வைக்கப்படும். அது
உண்மையில்லை என்பதற்கு மதுரை மத்தியச்சிறையில் அப்படி காவல்துறை அறிக்கை
வாங்கிய ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிறைவாசி ஒருவரும், தூத்துக்குடியைச்
சேர்ந்த சிறைவாசி ஒருவரும் பரோலில் சென்று இதுவரை சிறைக்குத்
திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சிறையில் குடும்பங்களைத் தொலைத்து
விட்டு விரக்தியின் விளிம்பில் இருப்பவர்களுக்கு பரோல் என்பது
சட்டப்பூர்வமாக வழங்கப்படும் சலுகையாக இருக்கிறது. அந்த சலுகையையும்
பறிக்கும் வகையில் தமிழக சிறைத்துறை தலைவரின் அறிக்கை இருப்பதாக
சிறைவாசிகள் குமுறுகின்றனர். பரோல் விடுப்பு கிடைக்காத காரணத்தால் மேலும்
மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முடிவுக்குச் செல்லும் நிலை சிறைகளில்
அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருதய நோயாளிகள் இந்த பரோல் கிடைக்காத
சோகத்தில் இறக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முழுவதும்
சிறைக்கூடங்களில் இருந்து ஒலிக்கும் பரோல் விடுப்பிற்கான கோரிக்கைகளை தமிழக
முதல்வர் ஜெயலலிதா உதாசீனப்படுத்தி விடக்கூடாது. ஏனெனில், சிறைக்கூடங்கள்
தான், தவறு செய்த மனித சமூகத்தை திருத்தி அமைக்கும் உலைக்களங்களாகும்.
அதில் உயிரிழப்பு ஏற்பட்டு விடாமல் தடுப்பது முதல்வரின் கடமையாகும்.
- ப.கவிதா குமார்
நன்றி.......http://www.keetru.com/
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment