Saturday, July 28, 2012

அவர்கள் ஜாதி...!


 காரணம் அவர்கள் ஜாதி...
இணைந்த தொலைநோக்கு, இணைந்த நன்மைகள் என்றெல்லாம் பேசுகிறபோது இதில் என்னுடைய குறைபாடுகளை நான் எண்ணிப்பார்க்கவே செய்கிறேன். என் இதயத்தை நொறுங்கவைத்த நிகழ்வுகளில் ஒன்று திரு. பேஜ்வாடா வில்ஸன், மனித மலத்தை மனிதர்களே அள்ளி அப்புறப்படுத்துவது பற்றிப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.
46 வயதை எட்டிய பிறகுதான் இதை நான் பார்க்கிறேன், இப்படி ஒரு நடைமுறை இருந்துகொண்டிருப்பதை உணர்கிறேன் என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். இத்தனை வயதான பிறகுதான் இதன் கொடுமையையும் மனிதத்தன்மையற்ற நிலையையும் நான் முதல் முறையாக உணர்கிறேன்.
நம் நாட்டின் சக மனிதர்களில் ஒரு பகுதியினர் தங்களது பிழைப்புக்காக மற்றவர்களின் கழிவைத் தங்களது கைகளால் அள்ளி அப்புறப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை இத்தனை காலமாக என்னால் எப்படி இமை கொட்டாமல் ஒப்புக்கொள்ள முடிந்தது?
இதிலிருந்து தப்பிச் செல்ல அவர்களுக்கு வழியில்லை, காரணம் அவர்கள் பிறந்த சாதி என்ற உண்மையை என்னால் எப்படி இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ள முடியாமல் இருந்தது? இதை ஏன் நான் இதற்கு முன்னரே பார்க்கத் தவறினேன், ஏன் எதிர்வினையாற்றத் தவறினேன்?
என் அருகாமையில் இப்படி நடக்கவில்லை என்பதால் அல்ல. ஆனால் சிறுவயதிலிருந்தே இதை நான் பார்த்து வந்திருக்கிறேன் என்பதால், அது ஒரு பழகிப்போன விசயமாகிவிட்டது, அது ஒன்றும் அசாதாரண மான விசயமாக என் மனதை உறுத்தத் தவறிவிட்டது என்பதே உண்மை!
பாதிக்கப்பட்டவன் நான் அல்ல என்பதால் இதன் கொடுமையும் அநீதியும் என் மனதில் உறைக்கவில்லை என்பதே உண்மை. இப்படி உணர்வற்றுப் போன குற்றத்தைச் செய்திருக்கிறேனோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. மனித மலத்தை மனிதர் அகற்றும் நிலை தொடர்கிறவரையில், பொது நலன்களை எல்லோருமாக இணைந்து பகிர்ந்துகொள்வது பற்றி என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியுமா?
இப்போது இது உறைக்கத் தொடங்கி விட்டதால், இது தொடர்பாக ஏதேனும் செய்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். ஒரு பொதுவான நன்மையை, ஒரு பொதுவான தொலைநோக்கை, இந்தியர்கள் எல்லோருக்குமான ஒரு கனவை எல்லோருக்குமாகப் பகிர்ந்து கொள்ளும் நிலையை உருவாக்க நாம் இணைந்து செயல்பட்டாக வேண்டும் என நான் நம்புகிறேன்.
-இந்தி திரைப்பட நடிகர் அமீர் கான்
நன்றி: உண்மை

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::