முதலில் ஓர் உண்மை நிகழ்வு. சித்தாள் வேலை செய்யும் அந்தப் பையனுக்கு இருபது வயது இருக்கும். அடிக்கடி சிறுநீர் ரத்தமாகப் போகிறது என்று என்னிடம் சிகிச்சைக்கு வந்தான்.
பல பரிசோதனைகள் செய்து பார்த்தும் காரணம் புரியவில்லை. சிகிச்சை தரும்போது பிரச்னை சரியாவதும், சில வாரங்களில் மீண்டும் அதே பிரச்னையுடன் அவன் சிகிச்சைக்கு வருவதும் தொடர்ந்தது.
இறுதியில், அவனுடைய உணவுப்பழக்கத்தைத் தீர விசாரித்தபோது, ஓர் உண்மை புரிந்தது. அவன் தினமும் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, வழியில் ஒரு சாலையோர உணவுக்கடையில் சில்லிச் சிக்கன் சாப்பிடுவது வழக்கம் என்பது தெரிந்தது. அந்த உணவில் செயற்கை நிறத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கலப்பட வேதிப்பொருள் அவனுடைய சிறுநீரகத்தைப் புண்ணாக்கி ரத்தம் கசியக் காரணமாகிவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், அந்தச் சாலையோரக் கடையில் உணவு சாப்பிட வேண்டாம் என்று சொன்னதும், அவனுக்கு அந்தச் பிரச்னை சரியாகிவிட்டது. இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
குடிநீர் சுத்தமில்லாதது, சமைத்த உணவைச் சுத்தமாகப் பாதுகாக்கத் தவறுவது, உணவுக் கலப்படம் போன்றவற்றால் இந்தத் தொற்றுநோய்களின் ஆதிக்கம் மக்களை ஆட்டிப்படைக்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள பல பிரச்னைகள் சாலையோர உணவகங்களில் மக்கள் சாப்பிடுவதால்தான் ஏற்படுகின்றன. இதற்கு மத்திய சுகாதாரத்துறை முறைப்படி நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், தொற்றுநோய்த் தடுப்புக்கு இப்போது செய்யும் செலவைவிட இன்னும் பல நூறு கோடிகளை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அத்தோடு நாட்டின் சுகாதாரக் குறியீடுகள் இன்னும் மோசமாகும் எனும் அதிர்ச்சித் தகவலைத் தந்துள்ளது.
சாலையோர உணவகங்களால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஏழைகள்தான். இவர்கள் மலிவு விலை என்பதால் அங்கு விரும்பிச் சாப்பிட்டுவிட்டு, பின்னர் மொத்தமாக மருத்துவமனையில் செலவு செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
சுகாதாரமற்ற முறையில் காபி, பால், தேநீர், வடை, பஜ்ஜி, போண்டா, இட்லி, தோசை, பிரியாணி, புரோட்டா, இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து உணவுகளையும் விற்பனை செய்கிறார்கள். அங்கு சுத்தமான தண்ணீர் கிடையாது.
பெரும்பாலான கடைகளில் தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்கள் அழுக்கடைந்துபோன பிளாஸ்டிக் குடங்களாகத்தான் இருக்கும். சமைக்க அல்லது சாப்பிடப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களும், தட்டுகளும் அவ்வளவு சுத்தமாக இருப்பதில்லை. உணவு வழியாக நமக்கு நோய்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமானால், உணவு, பாத்திரம், குடிநீர் இவை மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டியது முக்கியம்.
தள்ளு வண்டிகளில் உணவு வியாபாரம் செய்வோர் சமைத்த உணவுகளை மூடி பாதுகாப்பதில்லை. நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில்தான் உணவுகளை வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக, மீன், இறைச்சி போன்றவற்றைப் பல துண்டுகளாக்கி, அவற்றில் மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை நிறமூட்டியைப் பூசி, எண்ணெயில் வறுப்பதற்குத் தயாராக வைத்திருப்பார்கள்.
அப்போதுதான் அவர்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். அதேநேரத்தில் சாலைகளில் கிளம்பும் புழுதியும், வாகனங்கள் கக்கும் புகையும், மாசு நிறைந்த காற்றும் இந்த உணவுகளில் பட்டுப் புதைந்து, நச்சுக்கிருமிகளைத் தந்துவிடும்.
நாம் உண்ணும் உணவில் சுகாதாரம் இல்லையென்றால், பாக்டீரியா மூலம் டைபாய்டு, காலரா, வாந்திபேதி ஏற்படும். வைரஸ் கிருமிகளால் மஞ்சள்காமாலை உண்டாகும். அமீபா கிருமிகளால் சீதபேதி ஏற்படும். குடல்புழுத் தொல்லை தரும். உணவில் தரமில்லை என்றால், செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாயுக்கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படும். சமைக்கும் முறையில் சுத்தமில்லை என்றால், உணவே நஞ்சாகிவிடும். அல்சர் எனும் இரைப்பைப் புண்ணில் தொடங்கி, குடலில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயம் வரை பல உடல்நலப் பிரச்னைகள் சங்கிலிப் பின்னல் போல் தொடர்ந்து வரும்.
அடுத்து நம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது. சாலையோர உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தரம் குறைந்தவை, கலப்படம் மிகுந்தவை. உதாரணமாக, இவர்கள் சமையலுக்கு ஆகும் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, தேங்காய் எண்ணெயையும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் (இது பெண்களின் அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படும் ஒரு வகை எண்ணெய்) கலந்து உணவைச் சமைக்கவும், இறைச்சியை வறுக்கவும், பொரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். நெய்க்குப் பதிலாக டால்டாவையும், நல்லெண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பு அதிகம்.
இதன் காரணமாக சாலையோர உணவகங்களில் அடிக்கடி சாப்பிடுவோருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது.
இன்னொரு முக்கிய விஷயம். சாலையோர உணவகங்களில் சமையல் எண்ணெயைச் சிக்கனப்படுத்துவதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைத்து உணவு தயாரிப்பார்கள், பலகாரம் சுடுவார்கள். இதில் மிகப் பெரிய ஆபத்து உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைக்கும்போது டிரான்ஸ் கொழுப்பு அமிலம் உற்பத்தியாகிறது. இதுதான் இருக்கின்ற கொழுப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை நேரடியாகவும், விரைவாகவும் அடைத்து, மாரடைப்பை உடனடியாக வரவழைக்கும் ஆபத்து நிறைந்தது.
மேலும், இனிப்புப் பண்டங்களின் சுவையைக் கூட்டவும், அவற்றைக் கவர்ச்சிகரமாகக் காட்டவும் தேசிய உணவு மற்றும் மருந்துத்தரக் கட்டுப்பாட்டுத்துறை அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகளையும், தரமில்லாத எசன்ஸ், அஜினோமோட்டோ போன்றவற்றையும் கலப்பதுண்டு. இந்த ரசாயனங்கள் கலந்த உணவைச் சாப்பிடும்போது ஆரம்பத்தில் அஜீரணம், வயிற்றுப் போக்கு, ரத்தசோகை ஏற்படும். அதே உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது சிறுநீரகம் கெட்டுவிடும். இரைப்பை, குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் உண்டு.
அடுத்து ஓர் அதிர்ச்சித் தகவல் என்ன தெரியுமா? சில கடைகளில் இறைச்சிகளைச் சீக்கிரமாக வேக வைப்பதற்குக் காய்ச்சலுக்குத் தரப்படும் பாராசிட்டமால் மாத்திரையைக் கலந்துவிடுகிறார்களாம். என்ன கொடுமை இது?
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில்கூட சாலையோர உணவகங்கள் உள்ளன. ஆனால், அங்கு அவர்கள் உணவைச் சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் எவ்வளவு சுத்தம் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
அங்கு உணவுக்கடை இருப்பது ஒரு சாலையோரம்தான் என்றாலும் அந்த இடம் ஒரு நட்சத்திர ஹோட்டல் அளவுக்குச் சுத்தமாக இருக்கும். மினரல் வாட்டர் தான் அங்கு குடிநீர். சமைத்த உணவுகளை எப்போதும் சூடாக வைத்திருப்பார்கள். உணவின் மீது ஈக்கள் மொய்ப்பதைத் தடுக்க அவற்றைக் கண்ணாடிப் பெட்டிகளில் மூடி வைத்திருப்பார்கள். கடைப்பணியாளர்கள் கையுறை அணிந்துதான் உணவுகளைப் பரிமாறுவார்கள்.
சிறு நாடுகளில்கூட இவ்வளவு சுத்தமும் சுகாதாரமும் கடைப்பிடிக்கப்படும்போது, நம்மால் முடியாதா என்ன, முடியும். கண்டிப்பாக முடியும். அதற்குத் தேவை சரியான திட்டமிடல், தெளிவான சட்ட திட்டம், மக்கள் ஆரோக்கியத்தின் மேல் அரசுக்கு அக்கறை, சமுதாயக் கடமை உணர்வு, மக்களிடம் உடல்நலன் குறித்த விழிப்புணர்வு. சாலையோரங்களில் புற்றீசல்போல பார்க்குமிடங்களில் எல்லாம் உணவுக்கடைகளை ஆரம்பித்து, போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, முதலில் ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனை உணவுக் கடைகள், எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். முக்கியமாக, சாக்கடை, வாறுகால், கழிவுநீர் ஓடைகள் இல்லாத இடங்களில்தான் உணவுக்கடைகள் இருக்க வேண்டும். உணவகத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வது, சாலையோர மாசுக்களிடமிருந்து உணவைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது, எண்ணெய், இறைச்சி போன்றவற்றில் கலப்படம் செய்வதைத் தடுப்பது, உணவைப் பரிமாறப் பணியாளர்கள் கையுறை அணிவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இரவில் வியாபாரம் முடிந்ததும் உணவுக்கழிவுகளை பொறுப்பில்லாமல் சாலையில் கொட்டிவிட்டுச் செல்லக்கூடாது. அவற்றை அப்புறப்படுத்தத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒருவர் சாலையோர உணவுக்கடை ஆரம்பிக்க விரும்பினால் அதற்கு உரிமம் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அங்கு தரப்படும் உணவின் தரத்தைக் கண்காணிக்கவும், உணவுக் கலப்படத்தைத் தவிர்க்கவும் சுகாதார அதிகாரிகள் முறையான இடைவெளிகளில் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்க வேண்டும். இவற்றில் குறைபாடு காணப்படுமானால், கடையின் உரிமம் ரத்து செய்யப்பட வழி செய்ய வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவுக்கடைகள் மூலம் நம் ஆரோக்கியம் கெடுவதைத் தடுக்க முடியும்.
நகர்ப்புறப் பகுதிகளில் சுகாதாரத் திட்டங்களை அமல்படுத்த, புதிய தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம் தொடங்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக அண்மையில் புதுச்சேரியில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியிருக்கிறார்.
இத்திட்டத்தில் சாலையோர உணவகங்களை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் நல்ல வழிகாட்டுமுறைகளைக் கொண்டுவந்து, அவற்றைத் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்தி, நாட்டு மக்களுக்குச் சுகாதாரக்குறைவால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுதலை பெற்றுத் தர வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும்.
- டாக்டர் கு. கணேசன்
நன்றி: தினமணி
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment