(உண்மைக் சம்பவம்) அஸ்ஸலாமு அலைக்கும், மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர் கேட்டார். (அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக) அண்ணே எனக்கு ரெடிமேடு லைனில் நல்ல அனுபவமுண்ணே எண்றேன். அதிலும் வந்தது சோதனை. சுடிதார் செக்ஷனில் நின்னுக்கே அந்த செக்ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free size சுடிதார் செக்ஷன் அதற்கு புடவை பிரிவே எவ்வளவோ மேல் அங்கு வருகிற பெண்கள் கூட்டம் இங்கும் வருவார்கள் சரி சமாளிப்போம் என்று கவுண்டருக்குள் இறங்கினேன். 2001ல் சாரி மெட்டீரியல் வகை சுடிதார்கள் புதிய மாடலாக அறிமுகமாகிய காலகட்டம் சாரியை பிரிச்சு காட்டுகிற மாதிரியே சுடிதார்களையும் பிரித்து கையில்,கழுத்தில் என்ன டிசைன் வருகிறது என்று விளக்க வேண்டும். இரண்டே மாதத்தில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பெண்கள் எந்த வகையான மாடல் சுடிதார்கள் விரும்புகிறார்கள், அவர்களிடம் எப்படி பேச வேண்டும் எந்தவகையான சுடிதார்கள் அதிக சேல்ஸ் இப்படி அனைத்தையும் கவணித்து நல்ல சேல்ஸ்மேனாக மாறினேன். எப்படிப்பட்ட் நல்ல சேல்ஸ்மேன் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். அதிலே நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். கல்லூரியில் படிக்கும் பெண்கள் ஒரு குரூப்பாக சுடிதார் எடுக்க வந்தார்கள். இவர்களிடம் விற்க வேண்டும் என்றால் துணியின் தரம், டிஷைன் மெட்டீரியல் இவைகளை விடிய விடிய சொன்னாலும் வேலைக்காகாது. அந்த வருடம் வந்த திரைப்படத்தின் பெயரைச் சொல்லி இந்த படத்தில் இந்த காட்சியில் அந்த நடிகை அனிந்திருந்த சுடிதார் என்று ஒரு பொய்யை அடித்து விட்டால் போதும் விழுந்தடித்து வாங்கி விட்டு போவார்கள். அன்றும் அதே கதை தான். இதை பாருங்க இது ரன் படத்தில் மீரா ஜாஸ்மீன் போட்டிருந்த சுடிதார் என்று ஆரம்பித்தேன்.இந்த கலரில் ரன் படத்தில் ஒரு கட்டத்தில் கூட மீரா ஜாஸ்மீன் சுடிதார் போடவில்லை என்று அந்த குரூப்பில் கொஞ்சம் விவரமான பெண்ணிடமிருந்து குரல் வந்தது . அடுத்த விநாடியே யோசிக்காமல் மாதவன் கூட கையை பிடிச்சுகிட்டு ஓடிப்போகிற சீனை மறுபடிக்கும் நல்ல பாருங்க. லைட் வைலட் கலரில் இந்த கலரில் சுடிதார் போட்டு இருப்பார் என்று மடக்கி விற்று நல்ல சேல்ஸ்மேன் என்று பெயரெடுத்தேன். நல்ல விற்பனையாளர் என்று பெயரெடுக்காத பலர் அந்த கடையில் வேலை பார்த்தார்கள். அவர்களில் ஒருவர்தான் புடவை பிரிவில் இருந்த அண்ணன் காதர் அவருக்கு 65 வயதிற்கும் மேலிருக்கும். நேர்மையாக விற்பனை செய்ய நினைப்பவர் புடவையின் தரம், ரகம், முந்தியில் பாருங்க, அழகான டிசைன் இப்படித்தான் பேசுவாரே தவிர நடிகைகளை இழுக்க மாட்டார். அதனால் அவர் முதலாளியின் பார்வையில் திறமையற்ற சேல்ஸ்மேன். ஒரு முறை இப்படித்தான் ரொம்ப காஸ்ட்லியான வாடிக்கையான கஸ்டமர் புடவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவரும் சளைக்காமல் இறக்கி ரகங்களை காட்டிக் கொண்டும் அதன் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்கள் திருப்தியடையாமல் போய் விடக்கூடிய சூழலை உணர்ந்த சூப்பர்வைசர் (முதலாளியின் மச்சான்) வேகமாக என்னிடம் வந்து டேய் கஸ்டமர் போயிருவாங்க போல நீ போ என்றார். பழைய சேல்ஸ்மேனை நம்பாமல் நம்மை கூப்பிடுகிறார் என்றால் ம்ம்ம் நீ பெரிய ஆளுடா என்ற அகம்பாவம் தலைக்கு ஏற உள்ளே போய் புதுசா வந்திருக்கிற சேலை ரகங்கள் உள்ளே இருக்கு. இந்தா எடுத்து தருகிறேன். மெளனம் பேசியதே திரைப்படத்தில் த்ரிஷா கட்டின சேலை இருக்கு, பாபாவில் மனீஷா கொய்ராலா கட்டுன டிசைன் சேலை இருக்கு பாருங்க என்றதும் எங்கே எங்கே காட்டுங்கள் பார்ப்போம் என்று அந்த பெண்களிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. கொஞ்சம் நேரத்தில் வெற்றிகரமாக பல சேலைகளை வாங்கி செல்ல வைத்தேன். வாடிக்கையாளர் வெளியே போனதும் நேராக சூப்பர்வைஸர் காதர் பாயிடம் வந்து திட்ட ஆரமித்தார். அவன பாருங்க சின்ன பையன் அவனுக்கு இருக்குற புத்தி ஒங்களுக்கு ஏன் இல்லை. அவனுடைய ''.......'' வாங்கி குடிங்க என்று அசிங்கமாக ஏசியதை எதிர்த்து பேசமால் தலைகுனிந்து திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அப்பதான் எனக்கு அறிவு வந்தது. ஒரு நேர்மையான பெரிய மனிதரை திட்டு வாங்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மனதை அறுத்தது. தணிப்பட்ட முறையில் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். விடுடா நான் மனதில் எதுவும் நினைக்கவில்லை என்று சாதாரணமாக சொன்னார். அப்போது தான் அவரைப் பற்றி விசாரிக்க தோன்றியது. ''அண்ணே எத்தனை வருஷமாக இங்கு வேலை பார்க்கிறீர்கள். இதற்கு முன் எங்கிருந்தீர்கள்?'' ''அஞ்சு வருஷமாக இங்கு வேலை பார்க்கிறேன். 28 வயசுலே சவூதிக்கு போனேன் 60 வயது வரை அங்குதான் வேலை பார்த்தேன்'' என்றார். 32 வருடம் சவூதியில் சம்பாதிக்கவில்லையா? பணத்தை சேர்க்கவில்லையா? ஏன்ணே 32 வருடம் உழைத்த பணத்தை வைத்து வீட்டில் பேரன் பேத்தியோடு நிம்மதியாக இருக்குறத விட்டுபுட்டு இவிய்ங்ககிட்ட வந்து திட்டு வாங்கிட்டு கெடக்குறீகளே?'' என்றேன். அதற்கவர் ''அடப் போடா 32 வருடம் சம்பாதித்தேன். பசங்களை நல்ல பெரிய படிப்பு படிக்க வைத்தேன். குமர்களை கட்டிக் கொடுத்தேன், வீடு கட்டினேன். அவ்வளவுதான் கையிலே சல்லி காசு இல்லே.கல்யாணம் ஆகி பசங்க வெளிநாட்டில் இருக்குற நாளே மனைவிமார்கள் அம்மா வீட்டில் இருக்க விரும்புறாங்கன்னு சொல்லி அங்கே விட்டுட்டு போயிட்டாய்ங்கே. எனக்கு பணமும் அனுப்புவதில்லை. 32 வருடம் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வரும்போது சர்க்கரை வியாதி,பிளாட் பிரஷர் இப்படி பல வியாதிகளையும் கொண்டு வந்திட்டேன். மருந்துக்கே எனக்கும் என் மனைவிக்கும் மாதம் 2500 ரூபாய் வேண்டும். நான் எங்கே போவேன் அதான் இங்கு இவிய்ங்ககிட்ட திட்டு வாங்கி கொண்டு குப்ப கொட்டிக் கிட்டு இருக்கிறேன்'' என்று சொல்லிக் கொண்டே விரக்தியான சிரிப்பை உதிர்த்தார். சத்தியமாக என்னால் அந்த சிரிப்பை ரசிக்க முடியவில்லை அதற்கு பிறகு 2004ல் விசா கிடைத்து சவூதிக்கு போகிறேன் என்று அவரிடம் போனில் சொன்னபோது அடுத்த பலிஆடா என்று சிரித்தார். என்னிடமிருந்தும் விரக்தியான ஒரு சிரிப்பு அத்துமீறி வெளிப்பட்டது. நன்றி: வலையுகம் Dr. ஹைதர் அலி ( கட்டுரையின் முகப்பில் உள்ள புகைப்படத்தில் உள்ளது மயிலாடுதுறை மணிக்கூண்டு ) |
Sunday, February 12, 2012
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment