எனது இளமைக்காலங்களில் ஒரு சினிமாப் பைத்தியமாகவே இருந்தேன். எங்கும் எதிலும் சினிமாவைப் பற்றிய எண்ணமே எனது மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கும். இதனால் வீட்டில் என் தாயாரிடம் நிறைய அடி வாங்கியதுண்டு. படிக்கும் காலங்களில் சலங்கை ஒலி என்ற படத்தை ஒரே தியேட்டரில் மூன்று முறை தினமும் சென்று பார்த்தேன் எனறால் எனது வெறி எந்த அளவு இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.
இந்த நிலையில்தான் சவூதி அரேபியாவுக்கு வேலை நிமித்தமாக பயணம் மேற்கொண்டேன். இங்கு வந்தும் வீடியோ மூலமாக தினமும் படமே கதி என்று இருந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை பத்ஹா என்ற ஏரியாவுக்கு செல்ல நேர்ந்தது. ரியாத்தில் வேலை செய்யும் வெளிநாட்டவர் வாரா வாரம் சந்தித்து கொள்ள மெயின் சிட்டியான பத்ஹாவுக்கு வருவது வழககமான ஒன்று.
மாலை நேர தொழுகைக்கான நேரமும் வந்தது. சவுதி சட்டப்படி தொழுகை நேரத்தில் வியாபார கடைகள் மூட வேண்டும் என்ற சட்டம் இருப்பதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அந்த நேரம் பிலிப்பைன் நாட்டவர் ஒன்று கூடும் இடத்துக்கு அருகில் அழைப்பு வழி காட்டல் மையம் ஒன்று இருந்தது. அதன் அருகில் உள்ள பள்ளியில் தொழுது விட்டு அந்த டென்டில் என்ன நடக்கிறது என்பதைப பார்ப்பதற்காக நானும் நண்பரும் உள்ளே சென்றோம்.
உள்ளே நுழைந்தவுடன் அங்கு பெரும்பாலும் பிலிப்பைன் நாட்டவர் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்வதும், தொழுகை எப்படி தொழுவது என்று கற்றுக் கொள்வதுமாக ஆர்வமுடன் உள்ளதை நோட்டமிட்டேன். இவர்கள் அனைவரும் புதிய முஸ்லிம்கள் என்ற செய்தி என்னை மேலும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. முஸ்லிம் தாய் தந்தைக்கு பிறந்து வளர்ந்த என்னை விட நேற்று முஸ்லிமான பிலிப்பைன் நாட்டவர் அதீத ஈடுபாடோடு உள்ளதை நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
அதன் பிறகு வாரா வாரம் இந்த டென்டுக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அதன் பிறகு அங்குள்ள சவுதிகளும் பிலிப்பைனிகளும், சைனீஸ்களும் பழக்கமாயினர். சொந்த வீட்டைப்போல இந்த டென்டை(கூடாரத்தை) பாவிக்க தொடங்கினேன். தூக்கம் வந்தால் இந்த டெண்டிலேயே தூங்கி விடுவேன். பசி எடுத்தால் சாப்பாடு எந்த நேரமும் தயார். எனவே அதற்கும் குறைவில்லை. இஸ்லாத்தை தெரிந்து கொள்வதற்காக 4 மாத கோர்ஸுகளை பல மொழிகளிலும் இங்கு கற்றுக் கொடுக்கிறார்கள். நான் ஆங்கில பிரிவில் சேர்ந்து கொண்டு 4 மாத கோர்ஸையும் முடித்தேன். சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் தந்தனர். புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் ஃபிலிப்பைன் நாட்டவருக்கு இஸ்லாமிய அடிப்படைகளை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பும் எனக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தரப்பட்டது.
அதோடு சவுதி இளைஞர்களும் ஆர்வத்தோடு இங்கு வந்து புதிய முஸ்லிம்களுக்கு குர்ஆன் ஓத கற்றுக் கொடுக்கும் காட்சியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். இவர்களுக்கு இருககும் வசதிக்கு தங்களின் நேரத்தை எப்படி எப்படியெல்லாமோ கழிக்கலாம். ஆனால் மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆவலில் சம்பளம் வாங்காமல் பணி புரியும் இந்த இளைஞர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
. குர்ஆனை விளங்கி ஓத வேண்டும் என்ற ஆவல் இப்பொழுதுதான் வர ஆரம்பித்தது.
இந்த கூடாரத்தின் தொடர்பால் அமெரிக்க பிரசாரகர் யூசுப் எஸ்டை சந்தித்து கைகுலுக்கி பேசவும் முடிந்தது. அதே போல் உலக பணக்காரர்களில் ஒருவரான இளவரசர் தலாலின் சகோதரருடன் கைகுலுக்கி பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இளவரசர் தலாலுக்கு சமமாக மதிக்கப்படுபவர் அவரது சகோதரரும்.
இந்த கூடாரத்தில் ஒரு மனிதன் இறந்து விட்டால் எப்படி குளிப்பாட்டி எவ்வாறு உடலில் துணியை சுற்றி அடக்கம் செய்ய வேண்டும் என்ற பாடம் செய்முறையாக ஒரு நபரை படுக்க வைத்து செய்து காண்பிக்கப்படுகிறது. இஸ்லாத்தின் ஒவ்வொரு செயல்களும் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை மினி தியேட்டர் மூலமாக பாடம் எடுக்கிறார்கள். எதற்க்கெடுத்தாலும இது போன்ற வேலைகளை எல்லாம் மார்க்க அறிஞர்கள்தான் செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவரும் மார்க்க அறிஞர்களாக மாற வேண்டும் என்ற நிலையை கொண்டு வருவதற்காகவே இது போன்ற பயிற்சிகளை நடத்துகின்றனர். அதாவது புரோகிதத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
பெரும் பெரும் கம்பெனிகள் இலவசமாக உணவு, குளிர்பானங்கள், தண்ணீர், விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை இது போன்ற கூடாரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் நபர்களுக்கு இவை எல்லாம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இது போன்ற அழைப்பு வழி காட்டுதல் மையம ஒவ்வொரு நகரத்திலும் அரசு செலவால் நடத்தப்படுகிறது. எங்கு நல்லது நடந்தாலும் அங்கு மூக்கை நுழைக்கும் அமெரிக்கா 'இது போன்ற கூடாரங்களை தடை செய்யுங்கள். இது தீவிரவாதத்தை வளர்க்கிறது' என்ற கோரிக்கையை சவுதி அரசுக்கு வைத்தது. இவர்களின் கோரிக்கையை சவுதி அரசு ஏற்கவில்லை. இதற்கு ஆதாரத்தை கேட்டது சவுதி அரசு. ஆதாரத்தை தர முடியாமல் கடைசியில் மூக்குடைபட்டது அமெரிக்கா.
அதே போல் இரண்டு பெருநாள் விடுமுறைகளிலும் மூன்று நாட்கள் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். பல நாட்டவரும் வயது வித்தியாசம் பாராமல் கலந்து கொள்வர். வெல்பவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் கிடைக்கும். முஸ்லிம் அல்லாதவர்களும் இங்கு பெறுமளவில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் செல்வர். பெரும் கம்பெனிகள் இதன் செலவுகளை ஷேர் செய்து கொள்கின்றன. ஒருக்கால் இதைப் பார்த்துதான் 'தீவிரவாதிகள் பயிற்சி' என்று அமெரிக்கா ஓலமிட்டதோ தெரியவில்லை.
இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் நாம் கூட அறிமுகப்படுத்தலாம். இதற்கு மாற்று மத சகோதரர்களையும் பார்வையாளர்களாக அழைத்து நமது அன்பை பகிர்ந்து கொள்ளலாம். நம் நாட்டில் இரண்டு பெருநாள் தொழுகையிலும் காலை டிபன், மதியம் பிரியாணி. அடுத்து மாலை நேரங்களில் இளைஞர்கள் தியேட்டரையும் பெண்கள் தைக்காலுக்கு சென்று தர்ஹா வழிபாட்டில் மூழ்குவதும் சிலரின் வழக்கமாக இருக்கிறது. இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் அவர்களின் ஆர்வத்தை ஆக்கபூர்வமான வழிகளில் திருப்பி விட ஏதுவாகும்.
ஒரு மனிதன் நேர்வழியை தேர்ந்தெடுக்க இறைவனின் கிருபை தேவைப்படுகிறது. அடுத்து அவனின் சுற்று சூழல் சீரிய முறையில் அமைந்தால்தான் அந்த நேரிய வழி தொடர்கதையாகிறது. அந்த வகையில் நமது வழியை சீரிய முறையில் கொண்டு செல்ல பல வழிகளிலும் உதவி வரும் அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
'இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!' (குர்ஆன் 20:114)
'நாம் நாடியோருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்,' (குர்ஆன் 12:76)
'அவர்கள் மன்னிப்புத் தேடுபவர்கள்; இறைவனைப் புகழ்பவர்கள்: நோன்பு நோற்பவர்கள்: ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப்பவர்கள்: இறைவனின் வரம்புகளைப் பேணிக் கொள்பவர்கள்; இத்தகைய நம்பிக்கைக் கொண்டோருக்கு முஹம்மதே நற்செய்தி கூறுவீராக!' (குர்ஆன் 9:112)
Posted by சுவனப்பிரியன் at 9:16 PM
1 நல்ல கருத்துரைவழங்கியோர்::
மாஸா அல்லாஹ். அல்லஹ் உங்களுக்கு மென்மேலும் கல்வியை அதிகப்படுத்தி அதை மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் ஆக்குவானாக.
Post a Comment