Monday, December 12, 2011

கண்ணீர் மடல்...!

கடல் கடந்து ஒரு கண்ணீர் மடல்
(இது சீதனக் கொடுமையால் கற்பை இழந்து தவிக்கும் ஏழைக்குமரின் கண்னீர் கடிதம்)

என் அன்பான குடும்பத்திற்கு.. அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்...)
தம்பி! உம்மா! நீங்கள் எப்படி? நான் நல்ல சுகம். நீங்கலெல்லாம் சுகத்தோடு வாழ நான் அல்லாஹ்விடம் பிரார்த்திற்கின்றேன். நான் குவைத்திற்கு வந்து சுமார் எட்டு மாதங்களாகின்றது. என்னால் இங்கு வாழ முடியாதுள்ளது. என்னை மிருகத்தை விடக் கேவலமாகவே நடாத்துகின்றார்கள். எனது முதலாலி ஒரு காட்டு மிராண்டி. என்னை பல முறை தகாத உறவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து அனுபவித்துவிட்டான்.
ஒரு நாளைக்கு பல பெண்களும் ஆண்களும் செய்யும் வேலைகளை எனக்கு மட்டும் தருகின்றார்கள். நான் வேலைக்குச் சென்றிருக்கும் இடத்தில் வயது போன ஒரு பைத்தியம் பிடித்த ஒருவன் இருக்கின்றான். எனது ஆடைகளையும் பொருட்களையும் நான் கவனிக்காமல் இருந்தால் நெருப்பால் எரித்துவிடுகின்றான். ஒவ்வெரு நாளும் துன்பத்தோடுதான் எனது வாழ்வை இங்கு கழிக்கின்றேன் உம்மா!
ஏன் என்னை வெளிநாடு வெளிநாடு என்று அனுப்பி வைத்தீர்கள்?

இங்கு நரகத்தையே நான் காணுகின்றேன். உம்மா! ஊரில் இருக்கும்போது எனக்குத் தொழுகை எப்போதும் தவறுவதில்லை. உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் இங்கு ஒரு வக்துக் கூடத் தொழ எனக்கு அனுமதி இல்லை.ஒரு நாள் உங்களோடும் தம்பிமார்களோடும் பேசுவதற்கு அரபியின் வீட்டு போனை நான் அழுத்திய போது எனது எஜமானி என்னைக் கண்டுவிட்டாள். உடனே எனக்குப் பயங்கரமாக அடித்து விட்டு சிறிதாக துவாரமுள்ள ஒரு ரூமுக்குள் என்னைக் கட்டி வைத்தாள். சுமார் ஒரு இரவும் இரண்டு பகல்களும் அந்த ரூமுக்குள் நான் எவ்வித உணவோ குடிநீரோ இன்றித் தவித்துக் கிடந்தேன். அப்போது தற்கொலையாவது செய்து கொண்டால் என்ன என்ற சிந்தனைகூட வந்தது.
உம்மா! பிறகு உங்களது முகங்கள் எனது ஞாபகத்திற்கு வந்தவுடன் அதை நிறுத்திக்கொண்டேன்.நான் இவ்வளவு மிருகத்தனமாக நடாத்தப்படுவது உங்களுக்கெல்லாம் வேதனை அளிக்கும். ஆனால் என்னைப் போன்று மோசமாக எத்தனையோ குமருகள் இங்கு அரபிகளால் நடாத்தப்படுவது உங்களுக்குத் தெரியாது.உம்மா! எனது கூட்டாளி பெளசியாவுக்கு போன மாதம் திருமணம் நடந்ததாக இங்கு ஒரு ட்ரைவர் சொன்னார். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு இப்போது வயது இருபத்தி எட்டு. நான் இங்கு வந்ததே எனது திருமணத்திற்கு வீடு கட்டத்தான். உங்களுக்குத் தெரியும்.
உம்மா! நான் ஒரு முடிவெடுத்துள்ளேன். எனக்கு இனிமேல் திருமணம் வேண்டாம். எனக்கு நீங்கள் எந்த ஆம்பிளையையும் திருமணம் பேச வேண்டாம். மரியாதையும் மார்க்கமும் உள்ள யாராவது முன் வந்து வீடு காணி கைக்கூலி இல்லாமல் என்னை முடிக்க வந்தால் அவரோடு வாழ நான் விரும்புகின்றேன். இல்லாவிட்டால் நான் இப்படியே வாழ்ந்து கொள்கின்றேன்.
உம்மா! எனது தம்பிமார்களுக்கு திருமணம் செய்யும் போது யாரிடத்திலும் வீடோ சொத்துக்களோ வாங்காதீர்கள். அக்கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டுதான் இதனைக் கூறுகின்றேன். அல்லாஹ்வின் அச்சமில்லாத கோழைகளே பெண்களிடத்தில் வீடு வாகனம் சொத்துக்களை வாங்குவார்கள். நம்மட தம்பிமார்களை அவ்வாறான ஆண்களாக ஆக்கிவிடாதீர்கள்.
சீதனக்கொடுமையால் இன்று முஸ்லிம் குமருகள் படும் கஷ்டங்களை ஏன் உம்மா நம்மட உலமாக்கள் புரிகின்றார்களில்லை? உம்மா! நம்மட வாப்பா மரணித்து சுமார் மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. நாம் எங்கு வாழ்ந்தாலும் மானமும் மரியாதையும் தான் முக்கியம். இதை மறந்துவிடாதீர்கள்.எல்லாவற்றிற்கும் அந்த நாயன் இந்த சீதனம் வாங்கும் ஆண்களை சும்மா விடமாட்டான்.உம்மா! இம்மடலில் எனது கஷ்டங்களில் ஒரு பகுதியைத் தான் கூறியுள்ளேன். மிக விரைவில் நான் நாடு திரும்புவதற்கு துஆச் செய்யுங்கள்.சீதனத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் நமது ஊரிலிருக்கும் ‘தாருல் அதருக்கு’ கட்டாயம் ஞாயிற்றுக் கிழமைகளில் பெண்களுக்கான பயானுக்கு போங்கள். இம்மடலை முடிக்கின்றேன். வஸ்ஸலாம்.கண்னீருடன்ஸ ஷர்மிலா.
(அன்பின் இளைஞர்களே! இது கற்பனைக் கடிதமல்ல. பெயர்களை மட்டும் மாற்றியுள்ளோம். நமது ஏழைக்குமருகள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் படும் அவஸ்தைகள் தான் நீங்கள் கண்டது. கடல் கடந்து கற்பையும் இழந்து நடுவீதியில் நிற்கும் இக்குமருகளுக்கு என்ன தீர்வு? வீடுவாங்கும் சீதனக்கொடுமைதானே காரணம்? அல்லாஹ் ஹராமாக்கிய இக்கொடுமையை செய்யும் அத்தனை இளைஞர்களும் அந்த மறுமைநாளில் அல்லாஹ்வின் முன்னால் நிச்சயம் நிறுத்தப் படுவார்கள். சீதனம் எனும் இக்கொடுமையில் இருந்து அல்லாஹ் நம்மனைவர்களையும் பாதுகாத்து அருள்வானாக!)
 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::