மயிலாடுதுறை தீவிபத்து! நேரில் கண்டவரின் விரிவான செய்தித்தொகுப்பு
மயிலாடுதுறையில் தீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை!
நேற்று (19.10.11)மாலை 6.30 மணியளவில் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு மற்றும் பெரிய கடைத்தெருவில் சம்பவித்த பெரும் தீ விபத்தில் செருப்புக்கடை ஒன்றும் சில துணிக்கடைகளும் எரிந்து சேதமடைந்தன.
இந்த வருத்தத்துடன் புறமெங்கும் வெப்பமும் அனலும் வாட்டி எடுத்த போதிலும் மயிலாடுதுறை அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒன்று சேர்ந்து உதவி செய்தது மக்கள் மனங்களைக் குளிர வைத்தது.
சுற்றிலும் அநேக கிராமங்களைக் கொண்டிருக்கும் மயிலாடுதுறை எப்போதும் வியாபாரம் களைகட்டும் வணிக நகரமாகும்.
தீபாவளிப் பண்டிகை, உள்ளாட்சி தேர்தல் என்று 'கொண்டாட்டக் காலமாய்' போய்விட இப்போது இன்னும் மும்முரம். உள்ளாட்சித் தேர்தலுக்காக விடுமுறையும் விடப்பட்டிருந்ததால், மினி ரங்கநாதன் தெருவைப் போலவே பெரிய கடைத் தெரு 'காட்சி'யளித்துக் கொண்டிருந்த போது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
மூன்றடுக்கு செருப்புக் கடையான "ஜனதா சப்பல்ஸில்" 'எப்படியோ' தீ பிடித்துவிட, அந்தத் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. தீபாவளி நேரம் என்பதால் பட்டாசுக் கடைகள் வேறு உள்ளுக்குள் 'பயமாய் பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஆனாலும், தீ மேலும் பரவாமல் அணைப்பதில் மயிலாடுதுறை அரசியல்வாதிகள் காட்டிய அக்கறையும் ஒற்றுமையும் மெச்சத் தகுந்த விதத்தில் இருந்தன என்றால், இந்த 'ஆர்வக்கோளாறு' பொதுமக்கள் தான் தீயணைப்பு வண்டிகளின் நடமாட்டத்திற்குத் தடையாக அமைந்திருந்தனர்.
வேதனை நேரத்திலும் வேடிக்கை மட்டுமே பார்க்கவும் சிலர் இருக்கிறார்களே!
உயிரிழப்பு ஏற்படாமல் இருந்தது பெரும் ஆறுதல். அதைப்போலவே, அந்தத் தேர்தல் மும்முரத்திலும் 'தேர்தலாவது, மண்ணாவது' என்று ஓடோடி வந்து உதவிய அதிமுகவின் செந்தமிழன், திமுக வின் செல்வராஜ் (குண்டாமணி), தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பால அருள்செல்வன், திமுகவின் எஸ்கொயர் சாதிக், வர்த்தகர் சங்க பாண்டு, சீமாட்டி கடை உரிமையாளர், பாஜகவின் நாஞ்சில்பாலு, உடனடியாக நேரில் வந்திருந்து, வேண்டிய உதவிகளைத் தனது கைபேசி மூலமே முடுக்கி விட்ட ஒ.பி.எஸ் மணியன் (நாடாளு மன்ற உறுப்பினர்) ஆகிய அரசியல்வாதிகளின் ஒற்றுமை இங்கு நன்றியுடன் குறிப்பிடத்தக்கது.
அசம்பாவிதங்கள் நிகழும் போது மட்டும் அபூர்வமாக வெளிப்படும் இந்த ஒற்றுமை, எல்லா காலங்களிலும் வெளிப்பட்டால் எப்படியிருக்கும்!. பேரிடர் தீயில் பூத்த இந்த ஒற்றுமை உணர்வு, எந்தப் பெருமழையிலும் அடித்துச் செல்லப்படாதிருக்கப் பிரார்த்திப்போம்!. ( - source: http://www.inneram.com )
மயிலாடுதுறை தீவிபத்து!
நேரில் கண்டவரின் விரிவான செய்தித்தொகுப்பு
நேற்று மாலை ஒரு 6.30 இருக்கும். மயிலாடுதுறை கொத்ததெரு தம்பிக்குநல்லான் பட்டிணம் வாக்குசாவடியில் வாக்குப்பதிவு எல்லாம் முடிந்து வாக்கு இயந்திரம் சீல் எல்லாம் வைத்து விட்டு அதை சேகரித்து போகும் லாரி வருகைக்காக எல்லா கட்சியினரும் காத்து கொண்டு இருந்தோம். எப்போது வண்டி வரும் என யாருக்கும் தெரியாது.
ஒரு முறை இரவு 3 மணிக்கு கூட வந்து சேகரித்து சென்றது. அது வரை எல்லா கட்சியினரும் கட்சி பேதம் இன்றி ஒன்றாக டீ சாப்பிடுவதும், எத்தனை சதவீதம் பதிவு ஆனது என்கிற இன்ன பிற விஷயங்கள் பேசிக்கொள்வதுமாக இருப்பர். அதுவும் அந்த எங்கள் வார்டு கொஞ்சம் பதட்டம் வாய்ந்த வார்டு.
திமுக நகரசெயலர் குண்டாமணி என்கிற செல்வராஜும் அதே வார்டு வேட்பாளர். அதே போல அதிமுக நகர செயலர் செந்தமிழனும் அதே வார்டு . செந்தமிழனின் சகோதரி தான் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் அதிமுகவுக்கு. அதனால் எல்லோருமே அங்கே நின்று கொண்டு இருந்தனர். அப்போது தான் என் தம்பி செல்லிடபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கம்பனி ஆள் தான் பேசினான்.
"சார், நான் பெரியகடை தெருவில் தான் இருக்கேன். இங்கே ஜனதா ஃபுட்வேர் கடையில் தீ பிடித்து விட்டது, இப்ப தான் அதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே ஓடி வந்து கொண்டு இருக்கிறார்கள்" என சொன்ன போது அங்கிருந்த எல்லோருக்கும் கிட்ட தட்ட அதே நேரத்தில் அதே போல அழைப்பு.
கடைதெரு என பார்த்தால் இரண்டே தெரு தான். ஒட்டு மொத்த நெரிசலும் அங்கே தான் இருக்கும். அதே தெருவில் தான் மாயவரத்து மகா பெரிய ஜவுளி கடைகளும், உலகப்புகழ் பெற்ற ஏ.ஆர். சி நிறுவன நகைக்கடைகளும், பெரிய மளிகை கடைகளும் , ஹோட்டல்களும், இரும்பு கடைகளும், வெடிக்கடைகளும் என கலந்து கட்டி இருக்கும்.
சுற்று வட்டார எல்லா மக்களும் அங்கே தான் தீபாவளி வியாபாரம் செய்ய வந்திருப்பர். அதும் இன்று நகரத்தில் தேர்தல் நாளாகியதால் காலையில் ஓட்டு போட்டு விட்டு அரசாங்க விடுமுறையை குடும்பத்துடன் உல்லாசமாக கழித்து தீபாவளி "பர்சேஸ்" முடித்து கொண்டு போகலாம் என கடைத்தெருவே ஒரே கூட்ட நெரிசல்.
எள் போட்டால் எள் எடுக்க முடியாது என்பார்களே அப்படி ஒரு கூட்டம். நான் மதியம் அந்த பக்கம் போன போதே அப்படி ஒரு கூட்டம். அதும் தீப்பிடித்ததாக சொல்லப்படும் இந்த கட்டிடம் ஜனதா செருப்புகடை ஒரு மூன்று மாடி கட்டிடம். கேரளாவில் இருந்து பிழைப்புக்காக மாயவரம் வந்த இஸ்லாமிய சமூகத்து மக்கள். ஒரு சின்ன டீக்கடை ஆரம்பித்து இன்று இந்த அளவு முன்னேறி வருபவர்கள். நல்ல உழைப்பாளிகள். அதிலே தீப்பிடித்தால் என்ன ஆகும்? வரிசையாக கடைகள். அதும் பக்கத்து பக்கத்து கடைகள் எல்லாம்... நாகோடா ஜூவல்லரி, கல்யாணி கவரிங் என கடைகள், தவிர பெரியநாயகி மளிகை என்னும் பெரிய கடை, வாசன் காபி தூள் போன்ற கடைகள். அதன் இடது பக்கமோ மிகப்பெரிய "கறார் ஜவுளி கடை" . எதிர் வரிசையில் ஏ ஆர் சி கடைகள் என வரிசையாக கடைகள்.
கடைகள் போகட்டும், அதில் உள்ளே இருக்கும் மக்கள் கதி என்ன என்ற பதட்டம் இங்கே பூத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசியவாதிகளையும் ஆட்டிவிட, ஓட்டு பெட்டியாவது ஒன்றாவது என போட்டு விட்டு எல்லோரும் அங்கே ஓடினர். நான் வீட்டுக்கு வந்து பின்னே அங்கே போகலாம் என நினைக்கும் போதே அமரிக்காவில் இருந்து மயிலாடுதுறை சிவாவின் தொலைபேசி. அடுத்து சீமாச்சு அண்ணன், அண்ணி என வரிசையாக தொலைபேசிகள்.
இவர்களுக்கு எப்படி அதற்குள் தெரியும் என நான் நினைத்து கொண்டிருக்கும் போதே பதிவர் மயில்ராவணனிடம் இருந்து தொலைபேசி. சரியென நினைத்து கலைஞர் செய்திகள் வைத்தால் அதில் பிளாஷ் நியூஸ் என ஓடுகின்றது. அதற்குள் குடந்தையில் இருந்து என் அக்கா விடம் இருந்து தொலைபேசி. கலைஞர் செய்திகளில் "மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மூன்றடுக்கு வணிக வளாகத்தில் தீ... உள்ளிருக்கும் மக்களின் ஓலம். ஒரு தீயணைப்பு வண்டி மட்டுமே இருப்பதால் தீயை அணைக்க சிரமம்...." இப்படியாக செய்தி ஓடுகின்றது. ஆன்லைனில் முகநூலில் இருந்த தோழர் அன்சாரி "அண்ணே எத்தனை சதம் ஓட்டு பதிவு ஆகியது, என கேட்க நான் இந்த விஷயத்தை சொன்னேன், அதற்கு அவர் "அப்படியா முதலில் அங்கே போங்க. உங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்யுங்க" என சொன்னார்.
நான் உடனே அங்கே போன போது பெரியகடை தெரு குஜ்னி பேப்பர் மார்ட் முன்பாகவே வண்டிகள் செல்ல முடியாத அளவு கூட்டம். கடைத்தெருவில் முழுக்க முழுக்க இருட்டு. கிட்ட தட்ட ஒரு பத்தாயிரம் மக்கள் கூட்டம். தீயணைப்பு வண்டிகள் ஒரு பத்து இருக்கும். இத்தனைக்கும் காவிரி ஒரு 200 மீட்டர் தூரம் தான். காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதனால் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. வந்த எல்லா தீயணைப்பு வாகனத்திலும் போதுமான அளவு தண்ணீர் குழாய்கள் இருக்கின்றன.
ஆனால் எந்த வண்டியும் உள்ளே செல்ல முடியா வண்ணம் பாழாய்ப்போன பார்வையாளர்கள். க்யூரியாசிட்டியின் உச்சம். எப்படி எரிகின்றது என பார்க்கும் ஆர்வமும், அதை தன் செல்போனில் படம் பிடித்து அதை நண்பர்களிடம் காட்டி மகிழ அல்லது ஏதோ ஒன்று.. பகிர்ந்துக்கனும் என்கிற ஆர்வம் தான் அதிகமாக தெரிந்தது. அந்த ஜனதா செருப்பு கடை முழுக்க எரிந்து போயிருந்தது.
அதன் மேல் மாடி தகதகவென எரிந்து கொண்டிருக்க அதன் மேல்மாடியில் பற்றிய தீ வடக்கே (காவிரி இருக்கும் திசையில்) பரவி அதே தெருவின் முனையில் பெரியகடைதெரு அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி வரை வந்து விட்டது. அந்த அர்சனா வில் இருந்து நான்காவது கடையில் இருந்து வரிசையாக வெடிக்கடைகள்.
மக்கள் கூட்டம் அதிகம். தீபாவளி பர்சேஸ்க்காக வந்த மக்கள் அலறி ஓடிவிட, வேடிக்கை பார்க்க வந்த மக்கள் தான் மிக அதிக தொல்லை கொடுத்து கொண்டு இருந்தனர். "மேன் லிஃப்டர்" வாகனம் எதும் உள்ளே நுழைய முடியவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி தெருவிளக்கு போட பயன்படுத்தும் "மேன்லிஃப்டர்" வாகனம் அந்த எரியும் கடை முன்னே முதலிலேயே வந்தது கூட்டத்தின் உள்ளே மாட்டிக்கொண்டு நிற்க வந்த தீயணைப்பு வீரர்கள் அதிலே ஏறி அந்த கட்டிடத்தினை நெருங்கும் போது கூட்டம் விசில் அடித்தும் ஆரவாரித்தும் செய்த கூத்துகள் மகா அசிங்கம்.
ஒரு கட்டத்தில் திமுகவின் நகரசெயலர் குண்டாமணி, அதிமுக செந்தமிழன் ஆகியோர் கூட்டத்தினரை வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஒரு பெரிய கம்பை எடுத்து கொண்டு தள்ளி வழி ஏற்படுத்தி கொடுக்க ஒரு நான்கு தீயணைப்பு வாகனம் உள்ளே வந்தது. இத்தனைக்கும் எரியும் கடையின் லெதர் பொருட்கள் ஒருவித துர்நாற்ற புகையை கக்க சிலருக்கு மூச்சு முட்டி மயக்கம் வந்தது. பீய்ச்சி அடித்த தண்ணீரால் சாலைகள் ஒரு சாண் அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனாலும் அதை எல்லாம் யாரும் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமெ குறியாக இருந்து தொலைத்தனர்.
அப்போது ஓ.எஸ் மணியன் அதிமுக எம் பி வர அவர் பின்னால் ஒரு ஐம்பது பேர் வர ஒரு பாழாய் போனவன் வாழ்க கோஷம் போட அவர் அவனை "புட்ரா அவனை புட்ரா" என திட்ட அவன் ஓடிப்போக அவர் தன் கூட வந்தவர்களை வர வேண்டாம் என சொல்லிவிட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு செந்தமிழன், குண்டாமணி ஆகியோர் இருந்த இடத்துக்கு போய்கொண்டே தன் செல்லிட பேசியால் யாருக்கோ பேசிக்கொண்டே இருந்தார்.
சிறிது நேரத்தில் அங்கே ஒரு சுழல் விளக்கு காரில் டவாலி வர கூடவே நாகை ஆட்சியரும் வந்தார். அதற்குள் தேமுதிக எம் எல் ஏ பால அருள்செல்வன், பாஜகவின் நாஞ்சில்பாலு, திமுகவின் எஸ்கொயர் சாதிக், வர்தகர் சங்க பாண்டு, சீமாட்டி பாய் எல்லோரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக கூட்டத்தை ஒழுங்கு செய்ய அதற்குள் அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி பெரும் சத்தத்துடன் கொழுத்து விட்டு எரிய தொடங்கியது. அதற்குள் ஒரு நான்கு தீ வண்டிகள், எரிந்து கொண்டிருக்கும் கடைகளை விடுத்து எரியாத கடைகள் மேல் சுத்தமாக தண்ணீர் ஊற்றி நனைத்து விட்டது. அதனால் தீ பரவுவது முதலில் தடுக்கப்பட்டது.
பின்னர் தன் உயிரை பணயம் வைத்து இரு வீரர்கள் ஒரு வழியாக அந்த ஜனதா செருப்புகடை மாடிக்கு தாவி ஏறி (அதற்கு முன்னதாக தன்னை தானே தண்ணீரால் நனைத்து கொண்டனர்) நெருப்பை அணைக்க, அது வரை தீயின் வெளிச்சத்தில் எரியும் இடமாவது தெரிந்து கொண்டிருந்தது போய் கும்மிருட்டில் ஒரே புகை மண்டலம் ஆகியது.
அதற்குள், ஓ எஸ் மணியன் போனில் பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்து தீ வண்டி வரவழைத்து விட , ஆட்சியர் வந்தவுடன் முதல் வேலையாக அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை எல்லாம் மூட சொன்னார். (நான்கு நாட்கள் பின்னர் மாலை 5 மணிக்கு தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது) பின்னர் காவிரியில் இருந்து எரியும் இடம் வரை அந்த தீ வண்டிகள் சகஜமாக போய் வரும் அளவு வசதியாக "பார்வையாளர்கள்" எவனும் இருக்காதபடி வழி ஏற்படுத்தி கொடுக்க திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, காங்கிரஸ் எல்லாம் கை கோர்த்து யாரையும் விடாமல் நிற்க, பின்னர் தான் தீயணைப்பு வீரர்கள் அங்கே பம்பரமாக சுழண்டு சுழண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நான் மெல்ல வெளியேறி வீட்டுக்கு வந்தேன். மணி இப்போது பத்து. ஆனால் இன்னனும் தீ நின்ற பாடில்லை. ஆனால் உயிரிழப்பு இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நிம்மதி. (திமுக குண்டாமணிக்கு சட்டையே காணும், அது போல எப்போதும் ஜவுளிக்கடை பொம்மை போல அசங்காமல் மொட மொட வெள்ளையில் உலாவரும் செந்தமிழன் மடித்து கட்டிய வேட்டியும் கசங்கிய கரிபிடித்த சட்டையுமாகவும், தேமுதிக அருள்செல்வம் எம் எல் ஏ அலங்கோலமாகவும், நாஞ்சில் பாலு கரிபடிந்த முகத்தோடும், கைகோர்த்து நிற்க....ஒரு இயற்கை பேரிடர் வந்தால் தான் நாங்கள் ஒற்றுமையாக இருந்து தொலைவோம் என நீங்கள் சொன்னால் எத்தனை பேரிடர்களையும் நாங்கள் தாங்குவோம் என நினைத்து கொண்டே வந்து சேர்ந்தேன். என்னைப்போலவே எல்லா மயிலாடுதுறையானும் நினைத்திருப்பான் அதை காணும் போது என்றே நினைக்கிறேன்!
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment