ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டான். நிரந்தரமாக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.
''(மிக்க வல்லமையும்) கண்ணியமும் சங்கையும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:27)
ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும். அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.
ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.
அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மனைவியான ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.
2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.
கீழங்கி, தலையில்போடும் துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் உம்மு குல்ஸும் ரளியல்லாஹு அன்ஹா மரணமடைந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கி, பின்னர் சட்டை பின்னர் தலையில் போடும் துண்டு, பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணி, பின்னர் அதே மாதிரி இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்'' என லைலா அத்தகபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூ தாவூது)
இமாம் ஷவ்கானி 'நைலுல் அவ்தார், என்னும் நூலில் 4ழூ ழூ42ல் குறிப்பிடுகிறார். கீழங்கி, சட்டை, தலையில் போடும் துணி, முழுவதுமாக உடலை மறைக்கும் ஆடை ஆகியவை பெண்ணிற்கான கஃபன் துணி என சட்டமாக ஆக்கப் பட்டுள்ளது.
3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் போது ''அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்'' என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.
''ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை'' என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது மேற் கண்ட ஹதீஸில் கண்டிப்பான முறையில் தடையில்லாவிட்டாலும், அது விலக்கப்பட்டது அல்ல எனக் கூற முடியாது. ஒரு வேளை அந்தத் தடை கண்டிப்பிற்குரிய தாக இருக்காது என உம்மு அதிய்யா அவர்கள் கருதியி ருக்கலாம். ஆதாரம் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லைக் கொண்டுதான் அமையவேண்டுமே தவிர ஒவ்வொருவரின் எண்ணமும் ஆதாரமாகாது என இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பு 24ழூ ழூ355ல் குறிப்பிடுகிறார்கள்.
5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
''கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்'' என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா குறிப்பிடுகிறார். ''பெண்ணிற்கு இந்த வாசல் திறந்து விடப்படுமானால் அது அவளுடைய பலஹீனத்தின் காரணத்தினாலும், பயம், பொறுமையின்மை ஆகிய காரணத்தினாலும் ஒப்பாரி வைத்தல், பொறுமையிழத்தல் போன்ற பல தவறான காரியங்களின் பால் அவளை இழுத்துச் சென்றுவிடும். மேலும், இவளுடைய ஒப்பாரியினால் மையித்திற்கு வேதனை செய்யப்படும். மேலும், அவளின் சப்தம், கோலம் ஆகியவற்றினால் ஆண்களைக் குழப்பத்திற்கு (ஃபித்னாவிற்கு)ள்ளாக்கி விடுகிறாள்.
''பெண்களாகிய நீங்கள் உங்கள் ஒப்பாரியினால் உயிரோடு உள்ளவர்களை குழப்பத்திற்குள்ளாக்குகிறீர்கள். மையித்தை வேதனைப்படுத்துகிறீர்கள்.'' என ஹதீஸ் உள்ளது.
பெண்களுக்கு கப்ர் ஜியாரத்தை அனுமதிப்பதால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சில விலக்கப்பட்ட செயல்கள் நிகழ்வதற்கு வழிவகுத்துவிடும் என்ற ஒர் அச்சமும் இருக்கிறது. அது விலக்கப்பட்ட காரியங்களின் பால் கொண்டு போய் சேர்க்காது இருப்பதற்கான அளவுகோல் என்ன என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. இந்த முறை கூடும், இந்த முறை கூடாது என வேறு படுத்திக் காட்டவும் முடியாது.
ஒரு செயல் எதனால் தடுக்கப்பட்டது என்பதற்கு காரணம் மறைவாகவோ, பம்ரங்கமாகவோ இருக்கும் போது, எந்தக் காரணத்தை சந்தேம்க்கப்படுகின்றதோ அதை வைத்து சட்டம் அமைக்கப்படும், எனவே விளைவு களைத் தடுப்பதற்காக வேண்டி அது விலக்கப்பட்டதாகக் கருதப்படும்.
உதாரணமாக பெண்களின் அழகலங்காரங்களைப் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு பார்ப்பது தவறிழைப்பதற்குக் காரணமாக அமைந்து விடலாம். இவ்வாறே பிற பெண்களுடன் தனிமையில் இருப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயல்களுக்கு எதிராக எந்த ஒரு பயனும் கப்ரை பெண்கள் சந்திக்கச் செல்வதில் இல்லை. கப்ருக்கு பெண்கள் சென்றால் மையித்திற்காகப் பிரார்த்திப்பார்கள் என்பதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை. இதை அவள் தன் வீட்டில் இருந்து கொண்டே செய்யமுடியும். (ஃபத்வா தொகுப்பு 24ழூ ழூ356)
6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.
''துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேலும், ''சோதனையின்போது சப்தத்தை உயர்துப வளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)
முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.
அல்லாஹ் கூறுகிறான்: ''நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச் சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!''
''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)
அதேநேரத்தில் ஒப்பாரியும், அனுமதிக்கப்படாத செயல்களும், அல்லாஹ்வின் விதியின் மீது கோபப் படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்.
பிரிவு 7 - நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்
ரமளான் மாதம் நோன்பு நோற்பது ஒவ்வோர் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோன்பு இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இது இஸ்லாத்தின் அடிப்படைகளில் உள்ளதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: ''இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையோர்களாக ஆகும் பொருட்டு. உங்களுக்கு முன்பு (இறைநம்பிக்கையாளர்களாக) இருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் (நோன்பு) கடமையாக்கப்பட்டுள்ளது.'' (அல்குர்ஆன் 2:183)
ஒரு பெண் தன் பருவ வயதை அடைந்து விட்டால் அவள் மீது நோன்பு கடமையாகிறது. சில பெண்கள் ஒன்பது வயதிலேயே பருவத்தை அடைந்து விடுகின்றனர். அப்போதிருந்தே அவள் மீது நோன்பு கடமையாகிறது. இதை சிலர் அறியாது இருக்கின்றனர். சில பெண்கள் நான் சிரியவள் தானே என்ற எண்ணத்தில் நோன்பை விட்டு விடுகின்றனர். அவளுடைய பெற்றோரும் அவளை நோன்பு நோற்குமாறு ஏவுவதில்லை. இவ்வாறு செய்வது இஸ்லாத்தின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றை விட்டும் அலட்சியமாக இருப்பதாகும். இதுபோன்ற
நிலை ஏற்படும்போது மாதவிடாய் ஆரம்பமான நாளிலிருந்து விடுபட்ட நோன்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் கடந்துவிட்டாலும் கூட அவள் அதை செய்தே ஆகவேண்டும். நோன்பு களாசெய்வ துடன், விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும்.
யார் மீது நோன்பு கடமை :
ரமளான் மாதம் வந்துவிடுமானால் பருவமடைந்த, சீரிய சிந்தனையுள்ள, ஊரில் தங்கியிருக்கிற ஆண் - பெண் அனைவரின் மீதும் நோன்பு கடமையாகும். இந்த மாதத்தில் யாராவது நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் அந்நாட்களில் நோன்பை விட்டுவிடலாம். ஆனால், அவற்றை மற்ற நாட்களில் நோற்றாக வேண்டும்.
''உங்களில் எவர் ரமளான் மாதத்தில் ஊரில் தங்கி இருக்கிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்.'' (அல்குர்ஆன் 2:185)
அல்லாஹ் கூறுகிறான்: ''(ரமளான் நாட்களில்) உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் நோன்பு நோற்கவேண்டும்.'' (அல்குர்ஆன் 2:184)
ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்துவிட்ட நிலையில் அவர் வயது முதிர்ந்த நோன்பு நோற்க முடியாதவராக இருந்தால், அல்லது எப்போதுமே குணமாக முடியாத நிரந்தர நோயாளியாக இருந்தால் - ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. அவர் நோன்பை விட்டுவிட்டு ஒரு நாளைக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவு கொடுப்பார். அந்தந்த பகுதியிலுள்ள உணவிலிருந்து ஒரு நபருக்கு தேவையான அளவு கொடுப்பார்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்: நோய், குணமாகாது என்ற நிலையில் உள்ளவர்களுக்கும், வயோதிகர்களுக்குமே இந்த சட்டமாகும். அவர்கள் நோன்பை 'களா'ச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில் அவ்வாறு நோன்பு நோற்பது அவர்களால் முடியாத, கஷ்டமான செயலாகும் என அல்லாஹ் கூறியுள்ளான்.
ரமளானில் பெண்கள் நோன்பை விடுவதற்கென சில சலுகைகள் உள்ளன. சில காரணங்களால் ரமளானில் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் அவர்கள் நோற்கவேண்டும்.
பெண்கள் நோன்பை விடுவதற்குரிய காரணங்கள் :
1. மாதவிடாய் மற்றும் பிரசவ தீட்டு :
மாதவிடாயின் போதும், பிரசவ உதிரப்போக்கின் போதும் நோன்பு நோற்பது அவர்களின் மீது தடுக்கப் பட்டுள்ளது. விடுபட்ட நோன்பை அவர்கள் வேறு நாட்களில் நோற்க வேண்டும்.
''மாதவிடாயின் போது விடுபட்ட நோன்பை திரும்ப நோற்கவேண்டும் என்றும், விடுபட்ட தொழுகையை திரும்பத் தொழவேண்டியதில்லை என்றும் நாங்கள் ஏவப்பட்டிருந்தோம்'' என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு பெண் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து, ''மாதவிடாய்க் காரி நோன்பை 'களா'ச் செய்யவேண்டும் தொழுகையை 'களா'ச் செய்யவேண்டியதில்லை (என்று உள்ளதே) இது எதனால்? எனக் கேட்டதற்கு அவர், 'இது போன்ற செய்கைகளில் போதனைகளை நாம் அப்படியே பின்பற்ற வேண்டியதுதான் என்ற அடிப்படையிலேயே ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மேற்கண்ட ஹதீஸைக் கூறினார்.
இதனைப் பற்றி ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா ஃபத்வா தொகுப்பு 25ழூ ழூ251 ல் கூறும்போது,
''ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் இரத்தம் ஏற்படும் போது உடலிலுள்ள இரத்தம் வெளியேறுகிறது என்பது பொருளாகும். அவ்வாறு வெளியேறும்போது அவள் பலவீனமடைகிறாள். அந்நேரத்தில் அவளால் நோன்பை சரியான முறையில் நோற்க முடியாது. நோன்பு நோற்ப தற்கு உடல் வலிமையும் அவசியமாகிறது. எனவேதான் மாதவிடாயின்போது விடுபட்ட நோன்பை மற்ற நாட்களில் நோற்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளாள்.
2. கற்பமும் பாலூட்டலும் :
கற்பகாலத்திலும் பாலூட்டும் நாட்களிலும் நோன்பு நோற்பது அவளுக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக் கக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த நேரங்களில் அவள் நோன்பை விட்டுவிடவேண்டும், குழந்தையை மட்டும் பாதிக்கும் என்ற காரணத்திற்காக நோன்பை விட்டுவிடுவாளானால், அவள் விட்டுவிட்ட நோன்பை நோற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு என்ற அடிப்படையில் உணவு வழங்க வேண்டும். அவள் மீது தீங்கு ஏற்பட்டு விடும் என்பதற்காக நோன்பை விட்டிருந்தால்.திரும்ப நோன்பு நோற்றால் போதுமானது, காரணம் குர்ஆனில் 2:184 வது வசனத்தின் படி கற்பினியும், பாலூட்டுபவளும் அடங்கிவிடுவர்.
இமாம் இப்னு கதீர் தம் தப்ªரில் 1ழூ ழூ379 ல் குறிப்பிடுகிறார். கற்பினி பெண்களும் பாலூட்டும் பெண் களும் தங்களுக்கோ, தங்கள் குழந்தைகளுக்கோ ஆபத்து ஏற்பட்டுவிடும் என பயந்தால் அவர்கள் நோன்பை விட்டுவிட அவர்களுக்கு அனுமதி உள்ளது.
இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பு 25ழூ ழூ318 ல் கூறுகிறார்கள்.
கற்பினிப்பெண் தன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என பயந்தால் அந்நாட்களில் நோன்பை விட்டுவிட்டு வேறு நாட்களில் அதை நோற்பாள். விடுபட்ட நோன்பிற்காக ஒரு நாளைக்கு ஓர் ஏழைவீதம் உணவு வழங்கவேண்டும்.
எச்சரிக்கை :
1. சாதாரனமாக தொடர் உதிரப்போக்குள்ள பெண் நோன்பு நோற்க வேண்டும். அவள் நோன்பை விடுவது அவளுக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா கூறுகிறார். தொடர் உதிரப்போக்கு என்பது எல்லாக் காலத்திலும் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. நோன்பு கடமையாக்கப்படும் நேரம் என்பது அதில் இல்லை. எனவே, அதிலிருந்து அவள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியாது. இது போன்று தான் வாந்தி, காயம் மற்றும் கட்டியிலிருந்து(பருவிலிருந்து) இரத்தம் கசிந்து விடுதல், தூக்கத்தில் விந்துவெளிப்படுதல் ஆகியவை போன்றவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதத்தில் அவை குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதல்ல. எனவே மாதவிடாயைப் போன்று நோன்பு நோற்பதை தடுக்கக் கூடியதாக இவைகள் இல்லை.
2. மாதவிடாய்க் காரி, கற்பினி, பாலூட்டுபவள் ஆகியோர் இக்காலங்களில் விட்டுவிட்ட ரமளான் நோன்பை அடுத்த ரமளானுக்குள் நோற்று விடவேண்டும், விரைவாக நோற்பது சிறந்தது.
சென்ற ரமளானில் கடமையான நோன்பை நோற்காமல் விட்டுவிட்ட பெண் அடுத்த ரமளான் வரும் முன்பாக அதை நோற்றுக் கொள்ள வேண்டும். காரணம் எதுவுமின்றி அடுத்த ரமளான் வரை நோற்காமல் விட்டுவிட்டால், நோன்பை நோற்பதோடு ஒரு நாளைக்கு ஓர் ஏழை வீதம் உணவும் கொடுக்கவேண்டும். காரணத் துடன் நோன்பை விட்டிருந்தால் களா செய்வது மட்டுமே கடமையாகும்.
நோய், பிரயாணம் காரணமாக நோன்பை விட்ட வளுடைய சட்டமும் மேற்கூறப்பட்ட விளக்கத்துடன் மாதவிடாய்க்காக நோன்பை விட்டவளுடைய சட்டத்தை போன்றுதான்.
3. கணவன் ஊரில் தங்கி இருக்கும்போது கணவனின் அனுமதியின்றி உபரியான நோன்புகளை நோற்கக் கூடாது.
''கணவன் ஊரில் தங்கி இருக்கும்போது அவனுடைய மனைவி அவனுடைய அனுமதியின்றி நோன்பு நோற்பது கூடாது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
சில அறிவிப்புகளில், ''ரமளான் நோன்பைத் தவிர'' என இடம் பெற்றுள்ளது. (நூல்: அபூ தாவூது)
ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் அனுமதித் தால் அல்லது கணவன் ஊரில் இல்லாமலிருந்தால் அவள் உபரியான நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம். அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு, ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு, முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் நோன்பு, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள், துல்ஹஜ் மாதம் பத்துநாட்கள், ஒரு நாள் அதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ சேர்த்து அரஃபா நோன்பு போன்ற சுன்னத்தான நோன்புகளை நோற்கலாம். என்றாலும் ரமளான் மாதத்தில் அவளுக்கு விடுபட்டுப் போன நோன்பு இருக்கும் போது, அதை 'களா'ச் செய்யும் வரை உபரியான நோன்பு களை நோற்பது கூடாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
4. மாதவிடாய்ப் பெண் ரமளானுடைய நடுப்பகலில் தூய்மையாகி விட்டால் அம்மாதத்தைக் கண்ணியப் படுத்தும் முகமாக அந்நாளின் மீதியுள்ள நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் இருந்துவிட்டு, அந்த நாளுக்குப் பகரமாக வேறு ஒருநாள் அவள் நோன்புநோற்க வேண்டும்.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment