Friday, August 12, 2011

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா...???



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு!!  இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழுவது பற்றி நேரடியாக ஹதீஸ் ஏதும் இல்லை. ஆயினும் அது பற்றி எந்த முடிவுக்கு வரலாம் என்பதற்கான அடிப்படை குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் மக்களுக்கு தொழுகை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் கிப்லாவை நோக்கி எச்சில் துப்பினார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் தொழுது முடித்தவுடன் இனி மேல் அவர் உங்களுக்கு தொழுகை நடத்தக் கூடாது என்று மக்களிடம் கூறினார்கள். அவர் மற்றொறு தடவை தொழுவிக்க முயன்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அவரிடம் தெரிவித்தனர். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது நீ அல்லாஹ்வையும் அவனது துதரையும் துன்புறுத்தி விட்டாய் எனக் கூறினார்கள். அறிப்பவர் : அஹ்மத் (ர) நுற்கள் : அபூதாவூத்(407). அஹ்மத்(15966) நபிகள் நாயகம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிப்லாவின்பால் எச்சில் துப்பியவர் இமாமத் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். வெளிப்படையாக பகிரங்கமாக பாவம் செய்பவர் தொழுகை நடத்தும் தகுதியை இழந்து விடுகிறார் என்பதை இதிருந்து அறியலாம். ஆனால் தொழுத தொழுகையை திருப்பித் தொழுமாறு மக்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லையே என்று சிலர் வாதிடலாம். சட்டம் இயற்றப்படாத நேரத்தில் சட்ட மீறல் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்ட பிறகு தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன் செய்த செயலை திரும்பச் செய்ய வேண்டியதில்லை. கிப்லாவை நோக்கி எச்சில் துப்புவதை விட அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் கடுமையானது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இது குறித்து திருக்குர்ஆன் வசனங்களும் கடும் போக்கை காட்டுங்கின்றன. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளி வாசல்களை நிர்வகிக்க் கூடாது. அந்த உரிமையும் தகுதியும் அவர்களுக்கு இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 9 : 17 தொழுகைக்கு தலைமை தாங்குவது தான் நிர்வகிப்பதில் முக்கியமானதாகும்.. தாங்கள் இணை கற்பிப்பதை பகிரங்கமாக அறிவித்துக் கொண்டுள்ளவர்களை இமாமாக ஏற்கக் கூடாது என்பதை இதிருந்து அறியலாம். மேலும் இணை கற்பிப்பவருக்கு பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது என திருக்குர்ஆன் கூறுகிறது. இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (திருக்குர்ஆன் 9 : 113) இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றும் போது தொழுகையில் நாம் கேட்கும் பாவமன்னிப்பு அவருக்கும் உரியதாகிறது. இந்தக் காரணத்திற்காகவும் இணை கற்பிப்போரை பின்பற்றக் கூடாது. மேலும் இணை கற்பிப்போரை பொறுப்பாளராக ஆக்கக் கூடாது என்று பின் வரும் வசனங்கள் கூறுகின்றன. நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறை வனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது. (திருக்குர்ஆன் 3 : 28) (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 9 : 23) அவர்கள் நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.அவர்களிடம் கண்ணியத்தைத் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. (திருக்குர்ஆன்4 : 139) நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர் களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிரான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா? (திருக்குர்ஆன் 4 : 144) தொழுகை என்பது அமல்களிலேயே மிக சிறந்த அமலாகும். ஒரு முஸ்லிம் அதை சிறந்த முறையில் கடைபிடிக்கும் பட்சத்தில் அது அவருக்கு சிறந்ததாக அமைந்து விடும். ஜமாஅத்தாக தொழும் தொழுகையின் சிறப்புப் பற்றி பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அந்த ஹதீஸ்களையெல்லம் படித்து நிறைய நன்மையை பெறுவோம் என்ற எண்ணத்தில் பள்ளிக்கு செல்லும் தவ்ஹீத் வாதிகளில் பலருக்கு சட்டென்று ஒரு ஊசலாட்டம் மனதில் எழுகிறது. இந்த பள்ளி இமாம் நம் கொள்கையை சார்ந்தவர் அல்லவே! எனவே இவர் பின்னால் நின்று தொழுதால் நம் தொழுகை கூடுமா...? என்று. சிலர் ஊசலாட்டத்தை புறக்கணித்து விட்டு ஜமாஅத்தில் சேர்ந்து விடுகிறார்கள். மற்ற சிலர் ஊசலாட்டத்தை மேலும் வளர்த்துக் கொண்டு ஒதுங்கி - தனித்து விடுகிறார்கள் அல்லது தன் கொள்கைக் உட்பட்டவரையாக தேடி தனி ஜமாஅத் அமைத்துக் கொள்கிறார்கள். எந்த முன்னோக்கமும் இன்றி திறந்த மனதுடன் குர்ஆன் சுன்னாவை அணுகும் போது இணைவைப்பு உட்பட எந்த தீய காரியத்தை செய்பவராக இருந்தாலும் அவரை பின்பற்றி தொழக் கூடாது என்பதற்கு எந்த ஒரு இடத்திலும் தடை வரவில்லை. நாம் ஏற்படுத்திக் கொண்ட ஊசலாட்டம்தான் நமக்கு தடையாக இருக்கிறது. முஸ்லிம் என்ற தன்னை அறிவித்துக் கொண்டு தொழுகைக்கு இமாமத் செய்யும் எவரையும் பின்பற்றி நாம் தொழலாம். ஒருவர் ஷிர்க் - வட்டி போன்ற கடும் குற்றங்களை செய்கிறார். முஸ்லிம் என்ற நிலையில் இமாமத்திற்காக நிற்கிறார் என்றால் அவருடைய பாவம் அவரை பாதிக்கும் நிலையில் அவரை பின்பற்றி தொழுவதால் நம்முடைய தொழுகைக்கு எத்தகைய பாதிப்பும் வரப்போவதில்லை. பாவம் செய்யும் எந்த ஒரு ஆத்மாவும் தனக்கே கெடுதியை தேடிக் கொள்கிறது ஒரு ஆத்மாவின் பாவ சுமையை மற்ற ஆத்மா சுமக்காது. (அல் குர்ஆன் 6:164) நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இந்த ஒரு அறை வசனம் போதும். ஒருவர் சுமையை அடுத்தவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒரு கோட்பாடாகும். எனவே இமாமத் செய்பவர் எத்தகைய பாவத்தில் மூழ்கி இருந்தாலும் அவரது பாவம் நம்முடைய அமல்களை ஒரு போதும் பாதிக்காது என்பதால் அத்தகையோரை பின்பற்றி தொழுவதற்கு தடை எதுவும் இல்லை. எவர் நம் தொழுகையை தொழுது - நம் கிப்லாவை முன்னோக்கி - நாம் அறுத்ததை சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் அவன் தூதரின் பாதுகாப்பிலும் இருக்கிறார். மற்ற முஸ்லிம்களுக்கு இருக்கும் உரிமைகளும் கடமைகளும் இவருக்கும் உண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரலி) புகாரி - திர்மிதி) ஒருவரை முஸ்லிம் என்று தெரிந்துக் கொள்வதற்கு வெளிப்படையான பல அடையாளங்களை இஸ்லாம் காட்டுகிறது. அந்த அடையாளங்களில் சிலது இந்த ஹதீஸில் வந்துள்ளது. நம் - அதாவது முஸ்லிம்களின் தொழுகையை தொழுதல் நம் - முஸ்லிம்களின் கிப்லாவை முன்னோக்குதல் நம் - முஸ்லிம்களின் குர்பானியில் பங்குபெறுதல். ஒருவர் முஸ்லிம்களின் தொழுகையை தொழுவதற்காக நின்று - முஸ்லிம்களின் கிப்லாவை முன்னோக்குகிறார் இந்நிலையில் அவரை பின்பற்றி தொழ மனம் இடங் கொடுக்காமல் ஊசலாட்டம் ஏற்பட்டால் ஊசலாட்டத்தைதான் புறக்கணிக்க வேண்டும் ஏனெனில் ஊசலாட்டம் ஷெய்த்தானின் ஆயுதமாகும். அதே ஹதீஸில் மற்ற முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையும் கடமையும் இவருக்கும் உண்டு என்ற வாசகத்தையும் கவனிக்க வேண்டும். இமாமத் - ஜமாஅத் தொழுகை என்பது கொள்கையின் அடிப்படையில் இஸ்லாத்தில் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவையான சந்தர்பங்களில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து வணங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடேயாகும். தெளிவான வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இமாமத் செய்பவரின் கொள்கையும் பின்பற்றி தொழுபவரின் கொள்கையும் பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இமாமுக்கும் மஃமூம்களுக்கும் உள்ள தொடர்பு முதல் தக்பீரிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரைதான். அதன் பின் அவர் யாரோ, நாம் யாரோ அவ்வளவுதான். அது ஒரு தற்காலிக கூட்டமைப்பிற்குரிய தலைமைதான் என்பதை விளங்கிக் கொண்டால் ஊசலாட்டம் அகன்றுவிடும். எனவே எந்த இமாமையும் பின்பற்றி தொழலாம். நம்முடைய அமல்கள் நம் எண்ண அடிப்படையில் சரியாக இருக்கும் வரை மற்றவர்களால் நம் அமல்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதே உண்மையாகும்..!!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::