Wednesday, July 6, 2011

முதலில் யார் சாப்பிட வேண்டும்?

சா ப்பாடு!!!!!!




( Don't miss it ) 
லியாகத் அலி மன்பஈ
[ சமையல்காரன் சமைத்துப் போடுவது கடமை அதற்காக அவன் சம்பளம் வாங்குகின்றான் அவ்வளவு தான். அவனுக்கு சாப்பாடு போட வேண்டுமா? என்ன? தேவையே இல்லை" என்போரும் "போனால் போகிறது மிச்சம் மீதி இருந்தால் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் ஆனால் நம்மோடு ஒன்றாக அமர்ந்தால் நம்மரியாதை என்னாகும்?" என்போரும் தான் உலகில் அதிகம்.]
"உங்களில் ஒருவருக்கு அவரின் பணியாளர் உணவு சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடக் கொடுத்தால் அவரையும் தன்னுடன் அமரச் செய்து உண்ண வைக்க வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் இல்லையெனில் குறைந்தபட்சம் ஒரு கவளம் அல்லது இரு கவளம் உணவை அவரது காலத்தில் வைத்து உண்ணச் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த உணவை சமைப்பதற்காக அவர்தானே நெருப்பின் சூட்டில் கஷ்டப்பட்டார்." என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு பதிவு : ஸஹிஹ் முஸ்லிம்). மனித உரிமைகள் பற்றியும் தொழிலாளரின் கடமைகள் பற்றியும் உரத்து முழங்கப்படும் இந்த யுகத்திலும் இது போன்ற ஒரு பிரகடனம் எங்காவது பிறந்திருக்கின்றதா உண்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.
உங்களுக்காக சமையல் செய்து சாப்பாடு போடுபவர் உங்கள் பணியாளராகவோ உங்கள் மனைவியாகவோ இருக்கலாம். இங்கே நபிகளார் குறிப்பிடுவது உங்களின் வாழ்க்கைத் துணைவியாக இருந்து உங்களின் வாழ்வில் ஒன்றிவிட்ட மனைவியைப் பற்றி அல்ல. சம்பளம் பெறுவதைத் தவிர வேறு எந்த உரிமையும் பெறாத எந்த நேரமும், எந்த வேலைக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரவேண்டிய வேலைக்காரர்களைப் பற்றியே இங்கே குறிப்பிடுகின்றார்கள்.
சமையல்காரன் சமைத்துப் போடுவது கடமை அதற்காக அவன் சம்பளம் வாங்குகின்றான் அவ்வளவு தான். அவனுக்கு சாப்பாடு போட வேண்டுமா? என்ன? தேவையே இல்லை" என்போரும் "போனால் போகிறது மிச்சம் மீதி இருந்தால் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் ஆனால் நம்மோடு ஒன்றாக அமர்ந்தால் நம்மரியாதை என்னாகும்?" என்போரும் தான் உலகில் அதிகம்.
ஆனால் இங்கே நபிகளார் கூறும் அற்புதமான சமதர்மத்தையும் மனிதநேயத்தையும் சற்று சிந்தித்துப் பார்த்தால் இது போன்ற தத்துவங்கள் ஓர் இறைத்தூதரிடமிருந்தேயன்றி வெளிவர வாய்ப்பில்லை என்பதை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
அன்றைய அடிமைகள் : பணியாளர் என்று நபிகளார் குறிப்பிடுவது இன்றைய கால கட்டத்தில் ஊழியர்களையல்ல, உச்சி முதல் உள்ளங்கால் வரை தனக்கே உரிமையுள்ள அடிமைகள் பற்றியதாகும். ஏனெனில் அப்பொழுது வேலைக்காரர்களாக இருந்தவர்கள் விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகள் தாம். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது சம்பளமும் கிடையாது ஒரு பைசாவைக் கூடத்தம் கையில் வைத்துக் கொள்ளும் உரிமையோ அதை சேமிக்கவோ தம் இஷ்டப்படி செலவிடவோ எந்த அனுமதியும் வழங்கப்படாது. அந்தக் கற்காலத்தில் தான் வேலைக்காரனை ஒன்றாக வைத்து சாப்பிடச் சொல்கிறார்கள் காருண்ய நபியவர்கள்.
நெருப்பில் நின்றது நீயா? : அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தைக் கவனித்தீர்களா? சமையல் செய்வதற்கான நெருப்பைப்பற்ற வைத்ததிலிருந்து அதைப்பதை அரைத்து ஆட்டுவதை ஆட்டி இடிப்பதை இடித்து அடேயப்பா எத்தனை எத்தனை கஷ்டங்கள்.. நெருப்பின் அருகிலேயே நீண்ட நேரம் நின்று.. ஒவ்வொன்றாக கவனமுடன் செயல்பட்டதால் தானே உங்களுக்கு முன்னால் உணவு வந்தது? அவன் பட்ட கஷ்டத்திற்கு நீங்கள் கொடுக்கின்ற சில ஆயிரம் ரூபாய் கூலி நன்றியாகுமா?
அவன் பட்டபாடு அவனது உடலையும் உள்ளத்தையும் நெருப்பாக வாட்டி எடுத்திருக்கும் அந்த நேரத்தில் அவனையும் உங்களோடு உட்கார வைத்து அவன் சமைத்த உணவை முதன் முதலில் அவனையே சுவைத்துச் சாப்பிடச் செய்தால் அவன் எவ்வளவு மகிழ்ச்சி அடைவான்? காலமெல்லாம் இவரின் காலடியிலேயே நாம் கிடக்கவேண்டும் என்று எண்ண மாட்டானா? இந்த மகிழ்ச்சியை ஏன் அவனுக்கு வழங்கக்கூடாது. அந்த சமைமயலில் ஏதும் குறை இருப்பின் உடனே அவன் சரிசெய்து விடுவானல்லவா? நம் வீட்டில் நடப்பதென்ன? இப்பழப்பட்ட உயரிய தத்துவத்தை இன்று செயல்படுத்துவோர் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை நாம் கணக்கெடுப்பதற்கு முன்னர் நம்முடைய இல்லங்களில் நமக்கு சமைத்துப்போடும் நம் வாழ்க்கைத்துணைவியுடம் இந்தப் பண்பாட்டை நாம் காட்டுகின்றோமோ என்பதைக் கொஞ்சம் எடைபோடுங்கள்.
கரண்டி பிடிப்பது யார்? : பெரும்பாலான குடும்பங்களில் வீட்டிலுள்ள கிழவர் முதல் குழந்தை வரை அத்தனை பேரும் வயிறார உண்டு கடைசியில் ஏதாவது மீதியிருந்தால் தான் சமையல் செய்தவர் சாப்பிட வேண்டும். அதுவும் வீட்டுக்குப் புதிதாக வந்த "மருமகள்" விஷயத்தில் மாமியார்களுக்கு ரொம்ப தாராள மனசுதான். சோறும் கறியும் சுடச்சுட ஆக்கிப் போட்ட மருமகள், எலும்பைக் கூட ருசிபார்க்க முடியாது சமையல் செய்த கையோடு அவள் சட்டிபானை கழுவர் போய்விட வேண்டும்.
குடும்பத்தலைவியான மாமியார் கரண்டியைப் பிடிக்க ஆரம்பித்தால் குடும்பத்திலுள்ளோருக்கு மட்டுமின்றி மூன்றாவது, நான்காவது தெருவிலுள்ள தன் பெண்மக்கள் வீட்டுக்கு கறிசால்னா அனுப்பி விட்டு, கடைசியில் வெறும் பானையைக் காட்டி "கறி சால்னா இன்றைக்குத் தீர்ந்து போய்விட்டது. அதனாலென்ன? அடுத்த வாரம் நாம் சாப்பிட்டுக் கொள்ளலாம். நீ ரசத்தையும் ஊறுகாயையும் வைத்து வயிறாரச் சாப்பிட்டுக் கொள்" என்று "தானம்" செய்கின்ற மாமியார்கள் நிச்சயம் உண்டு. தனிக்குடித்தனம் ஏன்? : திருமணம் ஆகின்ற வரையில் தன் தாய்வீட்டில் அடுப்பில் கறி வேகும் பொழுதே முதல் ஆளாய்ப் போட்டுச் சாப்பிட்ட செல்லப் பிள்ளையான அவள் தன் மாமியார் வீட்டில் தான் சமைத்துப் போட்ட கறிசால்னாவை முகர்ந்து பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில் மனம் வெதும்பிக் கொண்டிருந்தால் கூடிய விரைவில் தனிக்குடித்தனம் போவதற்குத் திட்டம் போடாமல் வேறு என்ன செய்வார்கள்? (சில வீடுகளில் மாமியாருக்கு இப்படி நடப்பது உண்டு).
இனி என்ன? :
"நீ சாப்பிடும் பொழுது அவளைச் சாப்பிடச் செய்வதும் நீ உடை எடுக்கும் பொழுது அவளுக்கும் உடை எடுத்துக் கொடுப்பதும் உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளாகும்" என்று கூறிய ஏந்தல் நபியவர்கள் உன் மனைவியின் வாயில் நீ ஊட்டி விடும் உணவிற்காக இறைவனிடம் நீ நற்கூலி பெறுவாய்" என்றும் உணர்த்தி கணவன் சாப்பிடும் பொழுதே மனைவியையும் ஒன்றாக அமரச் செய்து அவர்களுக்கு ஊட்டியும் விட வேண்டும் என்று சொல்கிறார்கள். சரி...சரி..! இனிமேல் குறைந்தபட்சம் நாம் சாப்பிடும் பொழுது நம் மனைவியையும் நம்முடன் சாப்பிடச் சொல்ல முன் வருவோமா? கூட்டுக் குடும்பங்களில் இன்றைக்கு இதுவே பெரிய விஷயம் தான்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::