க ட்டாயம் ஹெல்மெட் : 28ஆம் தேதி முதல் போலீஸ் அதிரடி தொடங்கும் !!!!
ஹெல்மெட் அணிவதற்கு போலீசார் விதித்த கெடுவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்துங்கள். ஹெல்மெட் இல்லாதவர்கள் உடனே தரமான ஹெல்மெட் வாங்கி அணிந்து கொண்டு பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன விபத்துகளில் சிக்குவோரில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள்தான் அதிகம் உயிரிழக்கிறார்கள். எனவே உயிரிழப்பை தடுக்க தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
சென்னை நகரில் கடந்த ஆட்சியின்போது போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை சில நாட்கள் மட்டுமே கடுமையாக பிடித்து அபராதம் வசூலித்தனர். அதன் பிறகு விட்டு விட்டனர்.
வாகன ஓட்டிகளும் அசவுகரியம் ஏற்படுவதாக கூறி ஹெல்மெட் அணியாமலேயே செல்கிறார்கள். தற்போது சென்னை நகர போலீசார் மீண்டும் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதேபோல் வாகன பதிவு எண், பலகைகளையும் சரியாக பொருத்த வேண்டும், வாகன எண் பலகையில் படங்களோ அல்லது வேறு எழுத்துக்களோ இருக்ககூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்வதால் ஏற்படும் விபத்துக்களால் அதிகம் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் பாதுகாப்பு கருதி கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.
மேலும் இருசக்கர வாகனங்களில் பதிவு எண் பலகைகள் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படிதான் பொருத்தப்பட வேண்டும். இதில் வேறு சித்திரங்களோ, எழுத்துக்களோ விதிமுறைக்கு புறம்பாக எழுதக்கூடாது. 28ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ள அனைத்து வாகனங்கள் மீதும் மோட்டார் வாகனச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் இந்த அறிவிப்பை நோட்டீசாக அச்சிட்டு வாகன ஓட்டிகளிடம் விநியோகித்து வருகிறார்கள். மேலும் விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.
ஹெல்மெட் அணிவதற்கு போலீசார் விதித்த கெடுவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்துங்கள். ஹெல்மெட் இல்லாதவர்கள் உடனே தரமான ஹெல்மெட் வாங்கி அணிந்து கொண்டு பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. சிக்னலை மீறினால் ரூ.50-ம், இன்சூரன்ஸ் இல்லையென்றால் ரூ.1000-ம், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வாகன பதிவு எண் பலகை முறையாக இல்லை என்றால் அதற்கும் தனியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது:
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களில் இருசக்கர வாகன விபத்துகளில் 108 பேர் இறந்துள்ளனர். அதில் 102 பேர் ஹெல்மெட் அணியாதவர்கள். எனவே ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். 3 அல்லது 4 முறைக்கு மேல் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோரை பிடிக்க 318 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 28 இன்ஸ்பெக்டர்கள், 287 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். சுழற்சி முறையில் இவர்கள் சென்னை முழுவதும் சோதனை நடத்துவார்கள். ஒரு இடத்தில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர் அடுத்த இடத்திலும் பிடிபட வாய்ப்பு உள்ளது.
எனவே இப்போதே ஹெல்மெட் வாங்கி அணிவது நல்லது. போக்குவரத்து போலீசாரும் அபராதம் வசூலிப்பதிலேயே குறியாக இருக்காமல் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியும் வகையில் நடவடிக்கைள் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். (டிஎன்எஸ்)
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment